சிந்தனைகள்: துன்பமும் இன்பமே

வாழ்க்கையில் நடந்து முடிந்துபோன பல துயரமான காலகட்டங்களை தற்போது நினைத்துப் பார்க்கும்போது, அந்த துன்பத்திலும் ஓர் இன்பமிருப்பதை இப்போது உணரமுடியும். அந்த துன்பங்களை நாம் அப்போது எப்படி எதிர்கொண்டோம் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கும். இன்று அத்தகைய ஒரு துன்பத்தை கற்பனையிலும் நாம் எதிர்கொள்ள இயலாது என்றே தோன்றும்.

எந்த ஒரு துன்பமும் அதை நாம் எதிர்கொள்ளும் வரைதான் அச்சமாக இருக்கும். எதிர்கொண்ட பிறகோ, அந்த துன்பத்திலிருந்து பெற்ற பாடம் அந்த துன்பத்தை ஒர் அனுபவமாக மாற்றிவிடுகிறது. எனவே அதை நிகழ் காலத்தில் நினைக்கும்போது, அதன் துயரத்திற்கு மாறாக நாம் அதைக் கடந்துவந்த பாதை தெரிகிறது. எனவேதான் கடந்தவை துன்பமாக இராமல் அதிலும் ஓர் இன்பம் இருப்பதாக மனம் கருதுகிறது. அந்த துயரத்துடனான போராட்டத்தில் நாம் வென்றிருக்காலம் அல்லது தோற்றிருக்கலாம் அது ஒரு பொருட்டல்ல.

இதைப் பார்க்கும்போது வெற்றி தோல்வி அல்ல நம் வாழ்வை நிர்ணயிப்பது. மாறாக நாம் வாழ்க்கையை கடந்த காலத்தில் எதிர்கொண்ட தருணங்களின் நினைவுகளும், நிகழும் கணத்தில் நாம் ஒன்றை அணுகும் முறையுமே நம் வாழ்வை நிர்ணயிக்கிறது. காலம் என்ற அருமருந்து நம் எல்லாத் துன்பங்களுக்கும் மருந்திட்டு குணப்படுத்திவிடுகிறது. எனவே மனதிலிருக்கும் தழும்புகளை வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்பட்ட வீரத் தழும்புகளாக எண்ணி மனம் பெருமிதம் கொள்கிறது. எனவேதான் கடந்த கால துன்பத்திலும் இன்பமிருக்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...