திருக்குறள் உரை: நடுவு நிலைமை

குறள் பால்: அறத்துப்பால்.
அதிகாரம்: 12. நடுவு நிலைமை.

தான் சொல்வதுதான் சரி தன் பக்கத்து நியாயம்தான் சரி என்ற போக்கு இன்று தனிமனிதனிடம் மட்டுமல்ல, இனம், நாடு, மொழி, மதம், என்ற எல்லாவற்றிலும் இருக்கிறது. தன் பக்கத்து அநியாயத்தையும் நியாயமாக மாற்றும் போக்கு மலிந்துவிட்டது. மனிதன் தன் மனசாட்சியைக் கொன்றுவிட்டதன் அடையாளம்தான் இது. மனசாட்சி இல்லாத போது நடுவுநிலைமை தவறுவது மனிதன் இயல்பாகிவிடுகிறது. நடுவுநிலைமைக்கு இருக்கும் அளவுகோள்களை இந்த அதிகாரத்தில் வள்ளுவர் சுட்டுகிறார். அவற்றை அறிவதன் மூலம் நடுவுநிலைமையின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். அதன்படி செய்படுவது அவரவர் மனசாட்சியைப் பொறுத்திருக்கிறது.

குறள் 111:
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.
உரை:
நல்ல நடுவுநிலைமை என்பது நண்பர் பகைவர் அயலார்
முப்பிரிவினரையும் சமமாக அணுகுவதாகும்.

குறள் 112:
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.
உரை:
நடுவுநிலைமை உடையவன் செல்வம் அழியாமல்
அவன் சந்ததிக்கும் பாதுகாப்பாக வரும்.

குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
உரை:
நன்மை தருவதாயினும் நடுவுநிலைமை தவறுவதால்
வரும் பயனை அப்போதே விட்டுவிடவேண்டும்.

குறள் 114:
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
உரை:
நேர்மையானவர் நேர்மையற்றவர் என்பதை அவரவருக்கு
பின் நிலைக்கும் புகழ் அல்லது பழி நிர்ணயிக்கும்.

குறள் 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
உரை:
உயர்வும் தாழ்வும் இருந்தபோதும் மனத்தின்
நடுவுநிலைமை தவறாமை சான்றோர்க்கு அழகாகும்.

குறள் 116:
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
உரை:
நான் கெடுவேன் என்பதன் அறிகுறி நெஞ்சத்தில்
வந்துவிட்ட நடுவுநிலைமை தவறும் நினைப்பேயாகும்.

குறள் 117:
கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
உரை:
கெட்டுவிட்டான் என்று உலகம் ஒருவனை தூற்றாது
அவன் நடுவுநிலையில் நின்று வறுமையில் வாழ்ந்தபோதும்.

குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி.
உரை:
சமமாக பாவித்து எடை காட்டும் தராசுபோல் ஒருபக்கமாக
சாயாமல் நிற்பது சான்றோர்க்கு அழகாகும்.

குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
உரை:
சொல்லில் கோணுதல் இல்லாத நடுவுநிலைமை
மனதில் கோணுதல் இல்லாத போதே வரும்.

குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
உரை:
வாணிகம் செய்வார்க்கு நெறி பிறர் பொருளையும்
தம்பொருளாக பாவித்து வாணிகம் செய்வதாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...