திருக்குறள் உரை: வெகுளாமை

குறள் பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 31. வெகுளாமை.

மனம் ஒரு விசித்திரமான வஸ்து. அது செயல்படும் விதத்தை நுணுக்கமாக ஆராய்ந்தால் பல வியப்பான செய்திகள் கிட்டும். கோபம் கொள்பவன் அந்த கோபத்திற்குப் பிறகு சாந்தம் கொள்வது இயல்பு. ஆனால் அவன் ஏன் சாந்தமடைகிறான் அல்லது சமாதானமாகிறான் என்று பார்த்தால் மீண்டும் கோபம் கொள்வதற்கான சக்தியை திரட்டிக்கொண்டிருக்கிறான் என்றுதான் அர்த்தம். கோபம் கொள்பவன் அதே கோபத்துடன் இருக்கும்போதுதான் அவன் கோபத்தை நெருக்கமாக அணுகி ஆராய முடியும். இல்லையேல் கோபம் சமாதானம் என்ற பெண்டுலத்திற்கிடையே அவன் ஆடியபடிதான் இருப்பான். வெளியே இருந்து வந்து யாரும் கோபத்தை நமக்குள் கொட்டவில்லை. மாறாக கோபம் எப்போதும் நம்முடனேதான் இருக்கிறது. வெளியே இருப்பவர்கள் அதை வெளிப்படுத்தும் கருவிகள்தாம். இதை உணரும்போதுதான் கோபத்தை விட முடியும். அப்படி முடிந்துவிட்டால் அதைவிட இந்த உலகத்தில் நாம் பெறும் பேறு வேறு எதுவுமில்லை.

குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.
உரை:
செல்லிடம் சினம் கொள்ளாதவனே அதை வென்றவன்
செல்லாவிடம் சினம் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் என்ன?

குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.
உரை:
செல்லாவிடம் கொள்ளும் சினம் தீங்கு எனில் செல்லிடம்
கொள்ளும் சினமோ அதைவிடத் தீங்கானது.

குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
உரை:
யாரிடமும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும்
தீமைகள் அனைத்தும் அதனால் வருமென்பதால்.

குறள் 304:
நகையும் உவகையுங் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
உரை:
சிரிப்பையும் மகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தின்
பகையைப் போல வேறு என்ன இருக்கிறது?

குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
உரை:
தன்னைத்தான் காக்க சினம் காக்க காக்காவிட்டால்
சினம் அவனையே அழித்துவிடும்.

குறள் 306:
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
உரை:
சினமென்ற நெருப்பு பற்றுகிறவனையும் துணையான
சுற்றத்தையும் சுட்டுப் பொசுக்கும்.

குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
உரை:
சினத்தை குணமாகக் கொண்டவன் கெடுவது
நிலத்தை அறைந்தவன் கை தப்பாதது போலாகும்.

குறள் 308:
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
உரை:
நெருப்பாகச் சுடும் துன்பத்தை ஒருவன் செய்தாலும்
கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது.

குறள் 309:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
உரை:
நினைத்ததெல்லாம் உடனடியாக நடக்கும் உள்ளத்தாலும்
கோபத்தை நினைக்காது இருந்தால்.

குறள் 310:
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
உரை:
சினத்துடன் வாழ்பவர் இறந்தவரெனில் சினத்தை
துறந்தவர் துறவிக்கு நிகராவார்.
Related Posts Plugin for WordPress, Blogger...