திருக்குறள் உரை: இல்வாழ்க்கை

குறள் பால்: அறத்துப்பால்.
அதிகாரம்: 5. இல்வாழ்க்கை.

வீடு, மனைவி, மக்கள் மற்றும் செல்வம் அனைத்தோடும் வாழும் வாழ்க்கை இல்வாழ்க்கையாகும். இல்லறமல்லது நல்லறமன்று என்பது ஔவையார் வாக்கு. எந்த அறத்தையும் செய்வதற்கு வேண்டும் துணிவைவிட இல்லறம் நடத்த அதிகத் துணிவு தேவை. ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டு வெல்வதென்பது அவ்வளவு எளிதன்று. மனிதன் மட்டும் இல்வாழ்க்கையில் ஈடுபடாவிட்டால் இந்த உலகம் இயங்காது நின்றுவிடும். இல்வாழ்க்கை எவ்வளவு கடினமானதோ அதைப்போல அதிலிருந்து விலகி வாழ்வதும். இல்வாழ்வான் யார்? அவன் குணங்கள் என்ன? இல்வாழ்க்கையின் பெருமை என்ன? அனைத்தையும் இந்த அதிகாரம் சொல்கிறது.

குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
உரை:
இல்லறத்தான் மனைவி மக்கள் பெற்றோர் மூவருக்கும்
நல்ல வழித் துணையாக நிற்பவன்.

குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
உரை:
துறவிகளுக்கும் வறியவர்க்கும் ஆதரவில்லாதவர்க்கும்
இல்லறத்தான் என்பானே துணை.

குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
உரை:
முன்னோர்கள் கடவுள் விருந்தோம்பல் சுற்றத்தார் தானென்ற
ஐவகையிடத்தும் அறநெறி தவறாதிருப்பது சிறப்பு.

குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
உரை:
பழிக்கு அஞ்சி பிறர்க்குக் கொடுத்து வாழும்
பண்புடையோன் வாழ்க்கைக்கு ஒரு குறையும் இல்லை.

குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
உரை:
அன்பும் அறனும் இணைந்திருப்பதே இல்வாழ்க்கையின்
பண்பும் பயனும் ஆகும்.

குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்.
உரை:
அறநெறியில் இல்வாழ்வை நடத்தினால் வேறுவழியில்
சென்று ஒருவன் பெறுவற்கு என்ன இருக்கிறது?

குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
உரை:
இல்வாழ்வை அதற்கான இயல்போடு வாழ்பவன்
வாழ முயலும் எல்லோரிலும் சிறந்தவன்.

குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
உரை:
பிறரை நல்வழிப்படுத்தி தானும் அறவழி தவறாத இல்வாழ்க்கை
துறவிகளின் தவத்தைவி்ட வலிமையானது.

குறள் 49:
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
உரை:
அறத்திற்கு நிகரானது இல்வாழ்க்கை அதைப்
பிறர் பழிக்காதபடி வாழ்வது நல்லது.

குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
உரை:
உலகத்தில் வாழும் நெறிப்படி வாழ்பவன் வானத்து
தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்படுவான்.
Related Posts Plugin for WordPress, Blogger...