திருக்குறள் உரை: இனியவை கூறல்

குறள் பால்: அறத்துப்பால்.
அதிகாரம்: 10. இனியவை கூறல்.

இனிமையாகப் பேசுவது ஒரு கலை. அது எல்லோருக்கும் கைவருவதில்லை. சுற்றத்தார் சக மனிதர்கள் என்றில்லை தன் மனைவி, மக்கள் அனைவருடனும் இனிமையாகப் பேசும்போதுதான் உறவை தக்கவைக்க முடியும். சமூகத்தில் சிக்கல்கள் இன்றி வாழவும் இது அவசியம். இன்றைய வேகமான உலகத்தில் அவரவர்க்கு ஆயிரம் பிரச்சினைகள், சிக்கல்கள். எனவே செயலில் நாம் காட்டும் வேகத்தை இன்சொல் பேசுவதில் காட்டத் தவறிவிட்டோம். சொல்லப்போனால் இன்சொல் என்றால் என்ன என்பதையே நாம் மறந்துவிட்டோம். இந்நிலையில் இனிய சொற்களைப் பேசுவது எப்படி? எனவே இன்சொல் என்றால் என்னவென்றும் அவற்றைப் பேசும்போது நாம் அடையும் பயன்கள் என்னென்ன என்பதையும் இனியவை கூறலில் வள்ளுவர் பட்டியலிடுகிறார். நாம் இவற்றைப் படிப்பதோடு நில்லாமல் பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்.

குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
உரை:
பேசும் சொற்கள் அன்பும் வாய்மையும் உடையதாய்
வஞ்சனையற்றதாய் இருப்பின் அதுவே இன்சொலாகும்.

குறள் 92:
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
உரை:
உள்ளம் உவந்து கொடுப்பதைவிட முகம் மலர்ந்து
இனிமையாகப் பேசுவது மேலானதாகும்.

குறள் 93:
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
உரை:
முகம் மலர விருப்புடன் பார்த்து உள்ளன்புடன்
இனிமையாகப் பேசுவதே அறம்.

குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
உரை:
துன்புறுத்தும் வறுமை வராது யாரிடத்தும்
இன்பம் தரும் இனிய சொல் பேசுவோர்க்கு.

குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
உரை:
பணிவும் இன்சொல்லும் உடையவற்கு அவற்றைவிட
சிறந்த அணிகலன் வேறோன்றுமில்லை.

குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
உரை:
பாவங்கள் தீர்ந்து அறம் வளரும் நல்லதை
விரும்பி இனியன சொன்னால்.

குறள் 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
உரை:
நன்மையோடு இன்பத்தையும் பயனையும் கொடுக்கும்
நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள்.

குறள் 98:
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
உரை:
பிறருக்குத் துன்பம் தராத இன்சொல்
இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
உரை:
இனிய சொற்கள் இனிமை தருவதைக் காண்பவன்
கடுஞ் சொற்களைப் பேசுவது என்ன பயனாலோ?

குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
உரை:
இனிய சொற்கள் இருக்கும்போது கடுமையாகப் பேசுவது
கனிகளை விடுத்துக் காய்களைத் தின்பதற்கு ஒப்பாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...