திருக்குறள் உரை: ஆள்வினையுடைமை

குறள் பால்: பொருட்பால்.
அதிகாரம்: 62. ஆள்வினையுடைமை .

இந்த உலகமும் அதன் மனிதர்களும் இயங்கிக்கொண்டிருப்பது செயலால். செயல் இல்லையேல் இந்த உலகம் ஸ்தம்பித்துவிடும். அதனாலேயே பகவான் கிருஷ்ணன் கீதையில் கர்மயோகத்தை உயர்வாகப் பேசுகிறான். செயல் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் மனிதர்கள் யாரும் இந்த உலகிற்கு சொந்தமில்லை. நாம் வாழ்வது செயலால்தான். அந்தச் செயலைச் செய்ய முயற்சி வேண்டும். முயற்சி இல்லாமல் ஒன்றைச் செய்ய முடியாது அடையவும் இயலாது. தனிநபர் சார்ந்த தனிப்பட்ட திறன் என்பது ஒரு செயலைச் செய்யும் முயற்சியிலேயே அமைந்திருக்கிறது. ஒரு செயலைச் செய்ய நாம் எத்தகைய முயற்சிகளைச் செய்யவேண்டும் என்பதை இந்த ஆள்வினையுடைமை நமக்குக் காட்டுகிறது.

குறள் 611:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
உரை:
முடியாது என்று விட்டுவிடாத மனந்தளராத
முயற்சியே செயலை முடித்து பெருமையைத் தரும்.

குறள் 612:
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
உரை:
செயலைச் செய்யாமல் பாதியில் விடுவோரை
இந்த உலகத்தார் விட்டு விலகுவார்.

குறள் 613:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
உரை:
முயற்சி எனும் உயர்ந்த குணம் உடையவரிடம்தான்
பிறருக்கு உதவும் செருக்கு இருக்கும்.

குறள் 614:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
உரை:
முயற்சி இல்லாதான் பிறருக்கு உதவுவது
கோழையின் கை வாளைப் போல வீணானது.

குறள் 615:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
உரை:
தன்னலம் கருதாத முயற்சி உடையவனே
சுற்றத்தாரின் துன்பத்தைத் தாங்கும் தூணாவான்.

குறள் 616:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
உரை:
முயற்சியே செயலுக்குப் பெருமை சேர்க்கும்
முயலாமை இயலாமையைக் கொண்டு வரும்.

குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
உரை:
முயற்சி இல்லாதவனிடம் மூதேவியும்
முயற்சி உடையவனிடம் சீதேவியும் தங்குவார்கள்.

குறள் 618:
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
உரை:
உடல் ஊனம் செயலுக்குத் தடையன்று மாறாக
அறிவதை அறிந்து முயற்சியின்றி இருப்பதுதான் தவறு.

குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
உரை:
தெய்வத்தால் ஆகாது என்றபின் முயற்சியே
உழைப்புக்கேற்ற பலனைக் கொடுக்கும்.

குறள் 620:
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
உரை:
விதியைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் ஆற்றல்
இடைவிடாது முயல்பவர்க்கே இருக்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...