திருக்குறள் உரை: இன்னா செய்யாமை

குறள் பால்: அறத்துப்பால்.
அதிகாரம்: 32. இன்னா செய்யாமை.

நாம் இந்த உலகில் எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். ஆனால் செய்யக்கூடாத காரியம் ஒன்று உண்டென்றால் அது பிறருக்குக் கெடுதல் செய்யாமைதான். அறங்களில் எல்லாம் தலையாய அறம் இதுவென்று சொல்லலாம். நாம் மனிதர்கள் என்றும் ஆறறிவு படைத்தவர்கள் என்றும் சொல்லிக்கொள்வதற்கு நமக்கு இருக்கவேண்டிய முதல் தகுதி இதுதான். இது இல்லாதவர்கள் தங்களை மனிதர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். எத்தனையோ மகான்களும் ஞானிகளும் இந்த பூமியில் அவதரித்தது இதை பறைசாற்றத்தான். நாம் கடவுளை வணங்க வேண்டியதில்லை. கோவிலுக்குச் செல்ல வேண்டியதில்லை. மாறாக பிறருக்குக் கெடுதல் செய்யாமலிருத்தலே இவைகளைச் செய்வதற்கு இணையாகும். அந்த வகையில் இன்னா செய்யாமை எனும் அதிகாரத்தையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு என் உரையைத் தொடங்குகிறேன்.

குறள் 311: 
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா 
செய்யாமை மாசற்றார் கோள்.
உரை:
சிறப்பைத் தரும் செல்வம் கிடைப்பதாயினும் பிறர்க்கு
கெடுதல் செய்யாமை உயர்ந்தோர் பண்பாகும்.

குறள் 312: 
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா 
செய்யாமை மாசற்றார் கோள்.
உரை:
சினத்தால் நமக்குக் கெடுதல் செய்தார்க்கும்
கெடுதல் செய்யாமை மேலோர் குணமாகும்.

குறள் 313: 
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் 
உய்யா விழுமந் தரும்.
உரை:
யாருக்கும் கெடுதல் செய்யாதவர்க்கு கேடு
செய்பவர்கள் மீளாத் துன்பம் அடைவார்கள்.

குறள் 314: 
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்.
உரை:
கெடுதல் செய்தவருக்கு சரியான தண்டணை அவரே
வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்வதுதான்.

குறள் 315: 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
தந்நோய்போல் போற்றாக் கடை.
உரை:
அறிவினால் செய்யக்கூடுவது என்னவெனில் பிறர்
துன்பத்தைத் தன் துன்பமாக பாவித்து காப்பதுதான்.

குறள் 316: 
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை 
வேண்டும் பிறன்கண் செயல்.
உரை:
கெடுதல் எனத் தான் உணர்ந்தவற்றை
பிறர்க்கு செய்யாமலிருக்க வேண்டும்.

குறள் 317: 
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் 
மாணாசெய் யாமை தலை.
உரை:
சிறு கெடுதலையும் எப்போதும் யாருக்கும் மனதாலும்
செய்ய நினையாதிருப்பது தலை சிறந்ததாகும்.

குறள் 318: 
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ 
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
உரை:
பிறரால் தனக்கு நேர்ந்த துன்பங்களை அறிந்தவன்
பிறருக்கு அவற்றைச் செய்வது ஏனோ?

குறள் 319: 
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
பிற்பகல் தாமே வரும்.
உரை:
முன் பகலில் பிறருக்குச் செய்யும் கெடுதல்
பின் பகலில் அவருக்கே திரும்பி வரும்.

குறள் 320: 
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
நோயின்மை வேண்டு பவர்.
உரை:
கெடுதல் செய்தவர்க்கே கெடுதல் நேருமென்பதால்
கெடுதல் செய்யார் கெடுதலை விரும்பாதவர்.
Related Posts Plugin for WordPress, Blogger...