May 9, 2014

ஜெயமோகனின் ரப்பர்: மன எழுச்சி

நட்சத்திரத் தகுதி: ✰✰✰✰

வெளியீடு: கவிதா
ஐந்தாம் பதிப்பு: ஆகஸ்ட் 2011
விலை ரூபாய்: 75
பக்கங்கள்: 176
கட்டமைப்பு: மெல்லிய அட்டை
வடிவம்: டெம்மி


நாவலின் ஆரம்பத்தில் கார் ஒன்று வருவதும், அதன் பாதைகளும், சுற்றுப் புறமும், பிரம்மாண்டமான வீட்டின் அமைப்பும் அதைப்பற்றிய வர்ணனைகளும், காரில் வந்தவர் இறங்கி அழைப்பு மணியை அடித்து உள்ளே செல்வதும், மாடியில் வயதான முதியவர் படுக்கையில் கிடப்பதுமான சித்தரிப்புகள் திரைப்படம் ஒன்றின் ஆரம்பக் காட்சிகளுக்கு இணையான உருவெளித் தோற்றத்தை நம் மனக்கண்ணில் தோற்றுவிக்கிறது. இவைகள் ஒருவகையான மனத்தூண்டுதலை ஏற்படுத்தி நாவலை மேலும் ஆவலுடன் வாசிக்கும்படி செய்கின்றன.

எல்லா மனிதர்களின் வாழ்க்கையையும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி பெரும் மாற்றத்திற்கு உள்ளாக்கிவிடுகிறது. எனவே இருக்கும் இடத்தைவிட்டு பெயர்ந்து வேறு இடத்தில் காலூன்றி வாழ்வதென்பது காலங்காலமாக மனிதனுக்கு விதிக்கப்பட்ட சாபமென்று சொல்லலாம். அப்படியான ஒரு குடிபெயர்தலின் போது ஏற்பட்ட கலவரத்தில் தனது குடும்பத்தினர் அனைவரும் வெட்டிக்கொல்லப்பட பொன்னு பெருவட்டர் மட்டும் எஞ்சியவராக தனது வாழ்க்கையைத் தொடங்குகிறார். அந்தக் கலவரம் அவர் மனதில் அழியாத வடுவாகப் பதிந்துவிடுகிறது. அது இறுதிக் காலத்தில் அவரை நிம்மதியிழக்கச் செய்கிறது. தனது நான்கு வயதிலிருந்து ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லாது அவர் ஆரம்பித்த வாழ்க்கை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவரை உயர்த்துகிறது. அவரது பெரும் ஆகிருதியும், நரம்புகள் முறுக்கேறிய கைகளும் நம் மனம் முழுதும் அவர் தோற்றத்தை நிரப்பிவிடுகிறது. அவரைப் பற்றிய சித்தரிப்புகளும், இடைவெட்டாக வரும் அவர் வாழ்க்கைக் கதையும் அவரை நம்மிடம் நெருக்கம் கொள்ளவைக்கிறது. அவரின் கிளைகள்தான் செல்லையா பெருவட்டர், பிரான்ஸிஸ் மற்றும் லிவி.

தனது சிறு வயதுமுதலே திரேஸ் பிறர் மீது ஆளுமையும், ஆக்ரமிப்பும் கொண்ட பெண்ணாக வளர்கிறாள். அவளது குணவார்ப்பையும், மனவோட்டங்களையும் நுட்பமான உளவியல் தன்மையுடன் நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன். எபனுடன் அவளுக்கு ஏற்படும் காதல் சீக்கிரத்திலேயே முடிவுக்கு வந்துவிட, அவள் செல்லையாவை மணக்கிறாள். ஆக்ரமிப்பும், பணமும் அவள் வாழ்க்கையின் பிரதான அம்சமாகின்றன. அவளின் மகன்களான லிவி, பிரான்ஸிஸ் இருவரும் இருவேறு துருவங்களாக இருக்கிறார்கள். குடும்பத்தில் யாருடனும் ஒட்டுதலும் பற்றுதலும் ஏற்படுத்திக்கொள்ளாத பிரான்ஸிஸ், தனது தாத்தா மட்டிலுமே தனக்கு இணக்கமானவராக அறிகிறான். அவரது பிம்பத்தின் பிரதிபளிப்பு தான் என உணர்கிறான். தன் தாயின் நடத்தையிலும் போக்கிலும் அதிருப்தியடையும் பிரான்ஸிஸ் அவளிடம் வெறுப்பைக் கொட்டுகிறான்.

கோபத்திற்குப் பின் சாந்தமும், சாந்தத்திற்குப் பிறகு கோபமுமாக வெளிப்படும் பிரான்ஸிஸின் மனநிலைகள், ஒருவகையில் அவன் தன் மீதே கொண்ட வெறுப்பின் வெளிப்பாடு எனலாம். விபச்சாரம், குடி, சோம்பல் என்று செல்லும் அவன் வாழ்க்கை எந்த இலக்கும் அற்றதாக இருக்கிறது. தன் குடும்பத்தில் அனைவரையும் அல்பர்கள் என்று கருதும் அவன், அவர்களுக்குப் பிடிக்காததைச் செய்வதும், பிடித்ததைச் செய்யாதிருப்பதன் மூலமாகவும் அவர்கள் மனங்களைக் காயப்படுத்தித் தன்னைத் திருப்தி அடைச்செய்துகொள்கிறான். அவனது மன நிலையையும், அவன் செயல்பாடுகளையும் நுணுக்கமான சித்தரிப்புகள் மூலம் வெளிப்படுத்தும் ஜெயமோகன் பிரான்ஸிஸ் பாத்திரத்தை நாம் என்றென்றும் மறக்க இயலாதபடி செய்துவிடுகிறார். அவனைப்போன்ற மனோபாவம் கொண்டவர்கள் எப்போதும் குழம்பித் தவித்து, அல்லலுற்று வாழ்வதே அவர்களுக்கான விதியாக இருக்கிறது.

மந்திரி சபை மாற்றத்தினால் தான் போட்டிருக்கும் ரப்பர் ஏற்றுமதி ஒப்பந்தங்கள், தன்னை நடுவீதியில் நிறுத்திவிடும் என்ற பயம் செல்லையா பெருவட்டரை மிகவும் கவலைப்படுத்துகிறது. அதைத் தடுக்க அவர் எடுக்கும் முயற்சிகள் மேலும் அவருக்கு நட்டத்தையே ஏற்படுத்துகிறது. தன் தந்தை சாகக்கிடக்கும் தருவாயில் அவர் இப்படியான சூழ்நிலையில் இருதலைக் கொள்ளியாகத் தவிக்கிறார். பொன்னு பெருவட்டர் அப்புக்குட்டன் என்ற நாயரின் நிலத்தைக் அபகரித்துக்கொண்டதால் வந்த சாபத்தின் விளைவோ இது என்று அவர் மனம் கலங்குகிறது. 

மனித வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் சதா நிகழந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு காலத்தில் ஓஹோ என்று வாழ்ந்தவர்கள் சில காலங்களில் ஒன்றுமில்லாதவர்களாக தெருவில் நிற்கவேண்டிய நிலை சர்வசாதாரணமாக ஏற்பட்டுவிடுகிறது. இந்த உலகில் எதுவும் நிலையல்ல என்பதை வாழ்க்கைத் திரும்பத் திரும்ப உணர்த்தினாலும் யாரும் அதிலிருந்து பாடம் பெறுவதாக இல்லை. மாறாக தவறுகளையும், அநீதிகளையும் செய்து முன்னேறுவதையே தன் இலட்சியமாகக் கொள்கிறார்கள். அதன் விளைவுகள் தலைமுறை கடந்தேனும் விடாமல் தொடர்ந்து வந்து அழித்துவிடுகிறது. ஆனால் இந்த உலகில் எந்த மனிதனும் யாரேனும் ஒருவருக்கேனும் அநீதி இழைக்காமல் வாழ முடியாது என்பது அதைவிட நிதர்சனமான உண்மை எனும் போது, அந்த முரண் நம்மைத் தடுமாறச்செய்கிறது.

குடும்பத்தின் சொத்துக்கள் அனைத்தையும் இழக்கவேண்டிய சூழல் செல்லையா பெருவட்டருக்கு ஏற்படுகிறது. அதுவரை பொறுப்பற்று சுற்றிக்கொண்டிருந்த பிரான்ஸிஸ் ஏதாவது செய்து தன் குடும்பத்தை இழப்பிலிருந்து மீட்க முடியுமா என்று பார்க்கிறான். அவன் அம்மாவும் தம்பியும் ஒரு கட்சியாக சேர்ந்து கொண்டு சொத்துக்களை அபகரிக்க நினைப்பது அவனுக்கு வெறுப்பைத் தருகிறது. தாத்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது அவனுள் ஏதோ ஒன்றை இழந்துவிட்ட துயரத்தைத் தருகிறது. கடைசிக்கால மரணத்தின் நொடிகள் பெருவட்டரை பெரிதும் இம்சிக்கின்றன. ஒரு மனிதன் படுக்கையிலேயே அனைத்தையும் செய்வது மரணத்தருவாயில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சித்ரவதை. தன்னை அதிலிருந்த காப்பாற்ற கொன்றுவிடும்படி தன் வேலைக்காரனைக் கெஞ்சுகிறார் பெருவட்டர்.

கண்டன் காணி உடல் நலமில்லாமலிருக்கும் பெருவெட்டரை சந்திக்கும் காட்சிகள் பொருள்பொதிந்தவை. இருவரும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் இயற்கையும் செயற்கையும் போல. இருவரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகளைவிட, பேசாமலிருக்கும் மவுனத்தில் வெளிப்படும் அர்த்தங்கள் அநேகம். மனிதன் உண்மையில் வாழவேண்டிய வாழ்க்கை எத்தகையது என்பதை இருவர் சந்திப்பும் நமக்கு உணர்த்துகிறது.

எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்துகொள்ளும் பிரான்ஸிஸ் காரில் பயணிக்கும்போது வேகமாகப் பாறையில் மோதி தன் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறான். பணத்தின் இழப்பு அவனை பாதிக்கவில்லை மாறாக சுற்றியிருந்த மனிதர்கள் அவனை பெரிதும் பாதிக்கிறார்கள். மனிதன் என்ன செய்து என்ன? ஒவ்வொரு மனித வாழ்வும் எப்படியோ ஆரம்பித்து எப்படியோ முடிந்து விடுகிறது. ஆனால் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் தருணங்கள் மனிதன் கையில் இல்லை. முடிவெடுக்கும் கணத்தில் ஏதோ ஒன்று முடிவை மாற்றிவிடுகிறது. திடீரென வெறுப்பு விருப்பாகவும், வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற சிந்தனையும் ஏற்பட்டுவிடுகிறது. இந்த இரண்டு கணங்களும் எது? அது எவ்வாறு மனித மனத்தில் நிகழ்கிறது என்பது புரியாத புதிர்.

அப்படியான ஒரு கணத்தைக் குழந்தைகள் பலர் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் காட்சியில் காண்கிறான் பிரான்ஸிஸ். அவன் மனம் இலகுவாகிவிட்டது போல் தோன்றுகிறது. அந்த ஒரு கணத்தில் உலகம் அவன் கண் முன் வேறுவகையான தோற்றம் கொள்கிறது. மேலும் அவனைச் சந்திக்கும் லாரன்ஸ், “ஆகாயத்துப் பறவைகள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை” என்று சொல்லும் வாக்கியம் அவனுள் புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறது. இதுவரை இல்லாத ஒரு மன நிம்மதி, எழுச்சி அவனுள் எழுகிறது. நாம் காணும் காட்சிகளும், கேட்கும் வார்த்தைகளும் எப்போதும் நமக்கு ஒரே மாதிரியான பொருளைத் தருவதில்லை. கணத்துக்குக் கணம் அது மாறிக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிலிருந்தும் விலகி மனிதன் முழுமையாக அவற்றில் தன்னை ஒப்படைத்துக்கொள்ளும்போதுதான் அதன் உண்மையான பொருளை நாம் உணர்ந்துகொள்ள முடியும். அத்தகைய தருணத்தையே நாம் தரிசனம் என்கிறோம். அது பிரான்ஸிஸீக்கு நிகழ்கிறது.

ரப்பர் மரங்கள் மனிதனின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் ஆனால் அவை மண்ணுக்கும் மனிதர்க்கும் நன்மை செய்வதில்லை. இயற்கையான மரங்கள் அழிக்கப்பட்டு எங்கும் வியாபிக்கும் ரப்பர் மரங்கள் ஒரு குறியீடு. ரப்பர் மரங்கள் இயற்கையை அழிப்பதுபோல் மனித மனங்களும் தத்தம் இனத்தை அழித்துக்கொண்டிருக்கின்றன. மனிதர்களில் நல்லவர்கள் அருகிவிட்டார்கள். மாறாக தங்கள் சுயநலத்தைப் பெரிதாகப் பேணும் மனிதர்களே ரப்பர் மரங்களாக பரந்து விரிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே உணரும் தருணம் வாய்க்காதவரை இந்த உலகில் மனிதர்களுக்கு என்றும் நிம்மதி இல்லை.

ரப்பர் செறிவான அடர்த்தியான நாவல். பல்வேறு தளங்களில் நம் மனத்தை விகாசப்படுத்தும் நாவல். நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களின் சித்தரிப்பும் நம்முள் புதுவகையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. நாவல் மனதுக்குத் தரும் வாசிப்பனுபவமும், நம்முள் ஏற்படுத்தும் தரிசனமும் மேலானது; அலாதியானது. அந்த தரிசனத்தின் வீச்சை எப்போதும் நம்முள்ளே இருத்திவைக்கும்போது நாம் மனிதர்களாக இந்த உலகத்தில் நீண்ட காலம் நடமாடமுடியும்.

ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல். ஆற்றின் குறுக்காக காரைக் கொண்டுசெல்லும்போது கூச்சலிடும் குழந்தைகளின் குதூகலம் கண்டு அவன் மலரும் கணம். இந்நாவலுக்கு உந்துதலாக இருந்ததே நான் என் இளமையில் மாறப்பாடி ஆற்றின் குறுக்காகச் சென்ற சாலையில் கண்ட ஒரு காட்சிதான். கார் மறுபக்கம் சென்றபின் சன்னல் வழியாக குழந்தைகளுக்குக் கையாட்டிச் சிரித்த அந்த இளைஞன், அவன் ஒரு நாவலாக மாறியிருப்பதை அறிந்திருக்கமாட்டான்.” - ஜெயமோகன்
Related Posts Plugin for WordPress, Blogger...