May 24, 2014

எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி: காலத்தின் குரல்

நட்சத்திரத் தகுதி: ✰✰✰✰✰

வெளியீடு: உயிர்மை
மூன்றாம் பதிப்பு: ஆகஸ்ட் 2011
விலை ரூபாய்: 350
பக்கங்கள்: 472
கட்டமைப்பு: கெட்டி அட்டை
வடிவம்: டெம்மி


நாகு என்ற ஒன்பது வயதுச் சிறுவனை மையப்படுத்தி அவனது தலைமுறை கதையைச் சொல்வதன் மூலம் வேம்பலை என்ற கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது நெடுங்குருதி. நாவல் கோடைக் காலம், காற்றடிக் காலம், மழைக் காலம், பனிக் காலம் என்று நான்கு பகுதிகளாக பகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கால மாற்றமும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுவதன் மூலம் காலத்தையும் நாவலில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நாவலை வாசிக்கும் கணம் தோறும் காலம் நாவலின் பின்னே பிரக்ஞ்சையாக விழித்தபடி இருக்கிறது. தூரத்தையும் காலத்தையும் பிரிக்க முடியாதது போல மனிதர்களின் வாழ்க்கையையும் காலத்தையும் பிரிக்க இயலாதாகையால், காலம் நாவல் முழுதும் கட்டற்றதாக, அபோதமானதாகப் படர்ந்திருக்கிறது.

நாவலைப் படிக்கும்போது ஒவ்வொரு அத்தியாயமும் ஏனோ ஒரு ஓவியமாக கண்முன் தோன்றம் கொண்டபடியே இருக்கிறது. காட்சிகள் ஒவ்வொரு சட்டமாக நம் மனக் கண்ணில் நகர்ந்துகொண்டே செல்ல, கதை தன் போக்கில் இயல்பாக வளர்ந்து, படர்ந்து, விரிந்து செல்கிறது. நாவல் முழுக்க உரையாடல்கள் சொற்பமான அளவிலேயே இடம் பெறுவதால் நாவலை நாம் வாசிக்கும் உணர்வு எழுவதற்கு மாறாக வாய்மொழிக் கதை கேட்கும் உணர்வே நமக்கு மிகுந்திருக்கிறது. ஆக, நாவலை வாசிப்பதில் எந்தவிதமான அயர்ச்சியோ தளர்ச்சியோ இல்லாமல் கதை கேட்கும் மனோநிலையில் நம் மனம் லயித்திருக்கிறது.

எறும்புகள் சாரிசாரியாக ஊரைவிட்டுச் செல்லும் காட்சியின் நுட்பமான சித்தரிப்புகளோடு நாவல் தொடங்குகிறது. எறும்புகள் கூட வசிக்க முடியாத அளவிற்குக் கோடை அவ்வளவு கொடுமையாக, இரக்கமற்றதாக இருப்பதாகக் காட்டி மனிதர்களும் இனி இவ்வூரைவிட்டுச் செல்லப்போகிறார்கள் எனும் குறிப்புடன் நாவல் நம்மை உள்ளே பிரவேசிக்கச் செய்கிறது. குடிக்கும் தண்ணீருக்காக வேம்பலை மனிதர்கள் படும்பாட்டை, கோடை அவர்களை உடல் ரீதியாகவும் மனதளவிலும் பெரிதும் பாதிப்பதை வாழ்வின் அன்றாட செயல்பாடுகளின் சித்தரிப்புகளுடன் தனக்கேயான தனித்துவமிக்க நடையில் வெளிப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர். சூரியனின் வெம்மை மனிதர்களின் மனங்களிலும் புழுக்கத்தை ஏற்படுத்த, அவர்கள் தத்தம் மனதில் வெப்ப மூச்சுடன், வேம்பின் கசப்பு மனம் முழுதும் நிரம்பியவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் கள்ளர்களாக இருந்த வேம்பர்கள் பின்பு வெல்சி என்ற வெள்ளைக்கார துரையின் அடக்குமுறையால் அடங்கி, அவரவர்களுக்கேற்ப தொழிலைச் செய்யத் தலைப்படுகிறார்கள். அந்த காட்சிகளின் சித்தரிப்பை அபாரமான கற்பனை வளத்துடன் நம் மனத் திரையில் உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். தாங்கள் பிடித்த வேம்பன் ஒருவனைக் கொல்லும்போது, குரங்குடன் வரும் வேம்பன் ஒருவன் வெல்சி துரையின் குரல்வளையைக் கத்தியால் அறுத்துவிட்டுத் தப்பிவிடுகிறான். அதனால் அவர்கள் மீது கடும் வஞ்சினம் கொள்ளும் துரை கொட்டும் ஒரு மழை நாளில் குதிரைகளில் வந்து வேம்பலையில் புகுந்து அவர்களை வளைத்தப் பிடிப்பதும், பின் அனைவரையும் வேம்பு மரமொன்றில் தூக்கில் தொங்கவிடுவதுமான காட்சிகள், நாம் மறைவிலிருந்து பார்ப்பதான ஒரு பிரமையைத் தோற்றுவிக்கிறது. அதற்குப் பிறகு இறந்து போன அந்த குரங்காட்டியின் உருவம் எப்போதும் கண்முன் தோற்றம் தரும் பயத்தில் துரை பித்துப்பிடித்தவனாக மாறி கப்பலில் பயணிக்கும்போது கடலில் குதித்து மர்மமான முறையில் இறந்துவிடுவதுமான பகுதிகளின் புனைவுகள் நாவலை நாம் ஆவலுடனும், ரசனையுடனும் படிக்க ஏதுவாகிறது.

நாகுவின் பொழுதுகள் வேம்பலையின் தெருவில் குச்சியால் கோடு கிழித்தபடி ஓடுவதிலும் கால் ஊனமுற்ற ஆதிலட்சுமியிடம் கதைகளைக் கேட்பதிலும் கழிகிறது. அவள் சொல்லும் விசித்திரமான, சிறுவர்களுக்கேயான, கற்பனைகள் நாகுவை ஆச்சர்யத்திலும் பயத்திலும் ஆழ்த்துகின்றன. அவளின் கற்பனைகளும், கதைகளும், அவள் பரதேசிகளிடம் காட்டும் அனுதாபமும், அவளை ஒரு வசீகரம் கொண்ட பாத்திரமாக ஆக்குகிறது. நாகுவின் உடன்பிறந்த அக்காக்கள் வேணி, நீலா இருவர். இதில் நீலா நாகுவுடன் அனுசரனையாக இருப்பவள். குடும்பத்தைச் சரியாகக் கவனிக்காமல் வீட்டைவிட்டு பல நாட்கள் காணாமல் போவதே நாகுவின் அப்பாவிற்கு வேலையாக இருக்கிறது. ஒரு நாள் பக்கீர் என்ற ஒருவன் அவருடன் வியாபாரம் செய்ய வந்து சேர்கிறான். ஆனால் அவனுக்கும் அவருக்கும் ஏனோ ஆகாமல்போகிறது. அங்கிருந்து சென்றுவிடும் அவன் அதன் பிறகு என்ன ஆனான் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

சாயம் காய்ச்சும் வயதான சென்னம்மா தன் வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளை பிடித்துத் தின்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாள். ஒரு நாள் அவள் உடல் நலம் கெட்டு படுத்தபடுக்கையாகக் கிடக்கிறாள். அப்போது அவளை பழிவாங்கும்விதமாக எறும்புகள் பல அவள் உடல் மீது ஏறிக்கொள்கிறது. சாகும் தருவாயில் இருக்கும் அவள் உடலைத் தானியக் குலுக்கையில் இறக்கி வைக்கிறார்கள். இறந்த பிறகும் வேம்பலையில் அமானுஷ்யமாக அவள் நடமாடிக்கொண்டிருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். அவள் வீட்டை பயம் கலந்த வியப்புடன் அவ்வப்போது பார்ப்பது நாகுவிற்கு ஒரு பொழுதுபோக்கு. வெல்சி துரையால் வேம்பர்களை தூக்கிலிட்ட வேம்பு மரம் பூக்காமல் போகிறது. எனவே அதை ஊமை வேம்பு என்கிறார்கள். அந்த மரத்தைப் பற்றியும் ஊருக்குள் பல கதைகள் உலவுகின்றன. நாவலின் இத்தகைய சித்தரிப்புகள் நம்மை ஒருவகையான விசித்திரமான கற்பனைக்கு இட்டுச்செல்கிறது. நம்மை நம் இயல்பிலிருந்து திரிந்து கற்பனையின் மனவெளியில் இலக்கின்றி பறக்கும் நம் மனோபாவத்தைக் கோரும் இவ்வாறான புனைவுகள் பல நாவல் நெடுகிலும் வியாபித்திருக்கிறது.

சிங்கிக் கிழவன் கதை அவன் மீது பரிதாபத்தையும், இரக்கத்தையும் வரவழைக்கிறது. அவன் திருடனாக இருந்தபோது இருந்த இருப்பும், தற்போது நடக்க முடியாமல், குடும்பத்தில் அனைவரையும் இழந்து தனியனாய் நிற்பதும் நம் மனதில் சோகத்தை நிறைக்கிறது. அவன் இறந்தவிட்ட தன் சகா குருவனோடு, அவ்வப்போது மனவெளியில் ஆடும் ஆடு-புலி ஆட்டம் அவன் தனிமைத் துயரைப் பறைசாற்றுகிறது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கனவிலும், நினைவின் மன வீதியிலும் சஞ்சரிப்பவர்களாக இருக்கிறார்கள். 

ஒரு நாள் பக்கீரின் இரு பெண்களும், நீலாவும் பருத்தி பறிக்கும்போது நீலா பாம்பு தீண்டி இறந்துபோகிறாள். அந்த மரணத்தின் வடு மறையும்முன் இரண்டாம் முறையாக வீட்டைவிட்டுப் போய்விடுகிறார் நாகுவின் அப்பா. நீலாவின் மரணம், அப்பாவின் தலைமறைவு இரண்டையும் தாண்டி வேணியின் திருமணம் நடந்து முடிகிறது. திருமணம் முடிந்த கையோடு நாகுவையும் அவன் அம்மாவையும் தாத்தா தன் ஊரான தாதன்பட்டிக்கே அழைத்துச்சென்றுவிடுகிறார். அவன் அம்மா ஊருக்கு வந்த சில நாட்களிலேயே இறந்துபோகிறாள். கோடைக் காலம் முடிந்து காற்றடிக் காலம் தொடங்கும் ஒரு நாளில் நாகுவுக்கு 21 வயது ஆகிவிடுகிறது. தன் தாத்தாவுடன் சேர்ந்து மாட்டுத் தரகு வேலையைச் செய்கிறான். வாலிபனான அவன் குடி, விபச்சாரம், சீட்டாட்டம் என்று வாழ்கிறான். வீட்டைவிட்டுச் சென்ற தன் அப்பாவை ஒரு நாள் கோயில் ஒன்றில் பிச்சைக்காரனாகப் பார்த்து வீட்டுக்கு அழைத்து வருகிறான். அவர் மீது வெறுப்பில் இருக்கும் தாத்தா நாகுவின் அப்பாவை வீட்டில் சேர்க்கக்கூடாது என்கிறார். அதனால் நாகு தன் அப்பாவுடன் வேம்பலைக்கே திரும்பிச் செல்கிறான். 

வேம்பலையில் தன் சகாவோடு ஏற்படும் தகராறு ஒன்றில் அவனைக் கத்தியால் குத்திவிடுகிறான் நாகு. அன்றைய இரவு அவன் புழுக்கம் தாங்காமல் ஓடைக் கரையில் இரவின் நிசப்தத்தில் தனிமையில் இருப்பதும், நீரில் நீராடும்போது குருவிகள் நீருக்குள் பறப்பதுமான காட்சிகள் புனைவின் உச்சம் எனலாம். அதன் பிறகு அவன் மனதில் ஏற்படும் பய உணர்வு அவனை மனப்பிறழ்வு நிலைக்கு இட்டுச்செல்லும் பகுதிகள் நம்மில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. பல நாட்கள் வைத்தியத்திற்குப் பின் ஒருவாறு குணமடையும் அவனுக்கு மல்லிகா என்ற பெண்ணை மணமுடிக்கிறார்கள். அவன் மனதில் ரத்னாவதியின் உருவம் அழியாமல் பதிந்திருக்கிறது. அவளோ ஏழு மாத கர்ப்பத்துடன் பிள்ளையைப் பெற்றெடுக்க தன் அத்தை வீட்டைத் தஞ்சம் அடைகிறாள். நாகுவின் திருமணம் முடிந்த பின்னர் வேம்பலையில் போலீஸ்காரர்கள் எடுக்கும் நடவடிக்கையும், வேம்பர்களின் தவிப்பையும் சிறப்பான சித்தரிப்புகளாகக் காண முடிகிறது. அப்போது நாம் சற்றும் எதிர்பாராத வகையில் போலீஸால் சுட்டுக் கொல்லப்படும் நாகுவின் துர்மரணம் நிகழ்கிறது. மல்லிகா வயிற்றில் சுமந்த குழந்தையுடன் விதவையாக நிற்க, ரத்னாவதி நாகுவைப் போலவே ஆண் மகவு ஒன்றை பெற்று அதற்குத் திருமால் என்று பெயரும் சூட்டுகிறாள். 

மழைக் காலம் திருமாலின் அற்புதமான குழந்தைப் பருவத்தின் தருணத்தோடு தொடங்குகிறது. அவன் பூனை, தவளை, மீன்களுடன் பேசுவதும், வண்ணச் சாக்கட்டி கொண்டு தரையெங்கும் படம் வரைவதும், அவனது சுட்டித் தனமும் நம் மனதில் அலாதியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ரத்னாவதி கடைவீதியில் கடை ஒன்று ஆரம்பித்து, மதியநேரங்களில் கோயில் கோபுரத்தின் சிற்பங்களைப் பார்த்திருப்பதும், மழை பெய்வதுமான காட்சிகள் நம் மனத்தை மயிலிறகால் வருடுவது போல சுகமாக இருக்கிறது. என்னதான் அசௌகரியங்கள் பல இருப்பினும் மழையை நம் மனம் ரசிக்கிறது; விரும்புகிறது. ஆனால் பல சௌகரியங்கள் இருந்தும் வெயிலை நம் மனம் வெறுக்கிறது; எரிச்சல் படுகிறது. எனவே வாசிப்பில் மழைக் காலம் நமக்கு இனிமையானதாக இருக்கிறது. ஆனால் அந்த இனிமையை கசப்பாக்கும்படியாக நாவலில் பல மரணங்கள் நிகழ்வது இக்கால கட்டத்தில்தான். ஆசிரியர் குறிப்பிடுவது போல மரணங்கள் மலிந்த காலமாக இது இருக்கிறது.

மிஷன் பள்ளியில் சேர்ந்து படிக்கும் திருமால் வாலிபனாகிறான். ஞான ஸ்நானம் செய்விக்கப்பட்டு பிரான்ஸிஸ் என்று பெயர் மாற்றம் பெறுகிறான். கிருத்துவத்தின் பிரசிங்கி ஆகிறான். ஆனால் அவனோடு நட்பு கொள்ளும் பவுல் வெறும் பிரசங்கத்தின் மூலம் அன்பைப் பரப்ப முடியாது மாறாக மனிதர்கள் அனைவரும் பொருளாதார சமத்துவம் பெறுவது அவசியம் என்கிறான். புவுலிடமிருந்து வாங்கிப் படிக்கும் பல புத்தகங்கள் திருமாலின் அறிவை விசாலப்படுத்துகிறது. அவன் அம்மா ரத்னாவதி அலைக்கழிக்கப்பட்டு, விரக்தியுற்று கடைசியில் தூக்கிட்டுக்கொண்டு இறந்து போகிறாள். அவளைக் கடைசி முறையாக பார்க்கக்கூட முடியாமல் போய்விட்டது திருமாலை பெரிதும் துயரம் கொள்ளவைக்கிறது. எங்கேயாவது தூரமான இடத்திற்கு போய்விடலாம் என்று நினைக்கிறான். லயோனல் என்ற கிருத்துவரின் உதவியினால் பெல்காமில் உள்ள சுகாதார மையம் ஒன்றிற்குச் சென்றுவிடுகிறான். மல்லிகாவின் பெண் குழந்தையான வசந்தா வளர்ந்து திருமணம் செய்து கொள்கிறாள். அவள் வாழ்க்கையும் அப்படி ஒன்றும் சொல்லும்படியாக அமையவில்லை. நாகுவின் சந்ததிகளான இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை யார் அறியக்கூடும்?

நம் இதயத்தை கனக்கச்செய்துவிட்டு நாவலின் பக்கங்கள் முடிந்துவிடுகின்றன. நம் மனம் நாவலை ஆரம்பத்திலிருந்து அசைபோட்டு, எல்லா பாத்திரங்களையும் ஒரு முறை நினைவுக்குக் கொண்டுவருகிறது. வேம்பலை மனிதர்களின் வாழ்க்கை வேம்பாகக் கசந்தபடி இருப்பதேன்? அவர்களின் வாழ்க்கையில் இனிப்பு என்ற சுவைக்கே இடமில்லையா? காலம் அவர்களின் வாழ்க்கைக்கு எப்போது சுவைகூட்டும்? மனதில் எழும் இத்தகைய கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை.

முதல் பகுதியான கோடையில் நிகழும் பக்கீர் கொலையும், நீலாவின் துர்மரணமும் நம்மைப் பெரிதும் பாதிக்கிறது. நாவலில் நிகழும் எத்தனையோ மரணங்களில் இவையும் ஒன்று என்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பக்கீர் உண்மையில் கொலை செய்யப்பட்டானா, நாகுவின் அப்பாதான் அவனைக் கொன்றதா என்பது பூடகமாகவே நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. நாகுவின் அப்பா செய்த பாவத்தின் தண்டணைதான் நீலாவின் மரணம் என்று தோன்றுகிறது. நாம் செய்யும் தீமையின் விளைவுகள் நம்மை வந்தடைய சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே நாம் முன்னர் செய்த தீவினையின் பலன்தான் அது என்பது நமக்கு உறைப்பதில்லை. மனிதர்களின் பொதுவான குணமான இதை நாகுவின் அப்பா தொடர்ந்து படும் இன்னல்களின் மூலம் நம் மனதில் பதியுமாறு செய்திருக்கிறார் ஆசிரியர். ஆனால் பின் நாளில் நீலாவின் சமாதியின் மண்ணிலிருந்த புழு ஒன்றை தன் வீட்டிற்கு எடுத்து வந்து, “வீட்ல இருந்துக்க தாயி” என புழுவை நீலாவாகவே பாவிப்பதும், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வதும் அவர் தன் மீதான தவறுகளை உணர்ந்து நாளும் வருந்தியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. நம் மனதில் அவர் மீதான அனுதாபமும் நெகிழ்ச்சியும் கூடும் பகுதிகள் இவை.

சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களின் வாழ்வை எப்படி மாற்றிவிடுகிறது என்பதையும், காலம் மெல்லமெல்ல ஒரு ஊரையும் அதன் மனிதர்களையும் எவ்வாறு முற்றிலுமாக மாறிப்போகச் செய்துவிடுகிறது என்பதையும் ஒரு காவியத்தின் அழகுடனும், கவித்துவமான பல புனைவுகளுடனும் நெடுங்குருதி படம் பிடிக்கிறது. பணம், புகழ் இவற்றை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர்களாக இல்லாமல் தங்கள் அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற பிரயத்தனப்படும் இத்தகைய மனிதர்களின் வாழ்வு தொடர்ந்து இன்னல்களுக்கு ஆட்படுவது, காலத்தின் கரம் வலிமையானது, அது மனிதர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாமோ எழுதிச்செல்கிறது என்பதையே காட்டுகிறது. 

வாழ்க்கை ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துவிடுகிறது. கடந்த காலத்தின் துயரம் அல்லது இன்பம், எதிர்காலத்தின் அச்சம் அல்லது எதிர்பார்ப்பு இவையே மனிதனின் நிகழ் கால வாழ்க்கையை வடிவமைக்கிறது. நாவலில் வரும் பல்வேறு பாத்திரங்கள் இதை ஒட்டியே துன்பத்திலும் இன்பத்திலும் உழல்கிறார்கள். வாழ்க்கை, காலம் இரண்டுமே விடைதெரியாத பல புதிர்களையும், மறைபொருளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவைகள் ஒருவகையில் பரமபத விளையாட்டை ஒத்திருக்கின்றன. ஏணியும் பாம்புகளுமே நமது வாழ்வை நிர்ணயிக்கின்றன. நாம் செய்யக்கூடியதெல்லாம் பகடைக் காய்களை உருட்டுவது மட்டுமே. அதில் விழும் எண்ணிக்கைகளின் மீது நமக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. நம் விருப்பம் போல அவற்றை உருளச்செய்ய நாம் ஒன்றும் சகுனி அல்ல சாதாரண மனிதர்கள்.

ஆகவே, நாவலில் வரும் எல்லோரும் ஏதோ ஒருவகையில் துன்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களுக்கு தத்தம் வாழ்க்கை சுமக்க முடியாத பெரும் பாரமாகக் கணக்கிறது. நன்றாக வாழ்க்கையை நடத்தும் ரத்னாவதிகூட தான் மணந்துகொண்ட பூபாலன் இறந்த பிறகு, மீண்டும் விபச்சாரத்தில் விழுந்து தன் வாழ்வை நரகமாக்கிக் கொள்கிறாள். ஆனால் ஆதிலட்சுமியின் பாத்திரத்தை நாம் விதிவிலக்கான ஒரு சித்தரிப்பாகவே காண முடிகிறது. கல்யாணம் முடிந்து பிள்ளை ஒன்றைப் பெற்ற பின்னரும், நாகுவை சந்திக்கும் அவள் ஒரு கல்லை எடுத்து முகர்ந்து பார்த்து அதன் வாசனையைச் சொல்லுமாறு கேட்பது அவளின் இலகுவான வாழ்க்கையின் வெளிப்பாடு எனலாம். அவளை அவ்வாறு இருக்கச் செய்தது எது? மற்றவர்களுக்கு ஏன் அது வாய்க்கவில்லை? “நீங்கள் மனந்திரும்பி குழந்தைகளைப் போல ஆகாவிடில் பரலோக ராஜ்ஜியத்திற்குத் தூரமாக இருக்கிறீர்கள்” என்கிறார் யேசு. பரலோக ராஜ்ஜியத்திற்கு மட்டுமல்ல பூலோக ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சியாக வாழவும் அனைவருக்கும் இத்தகைய மனோபாவம் கூடவேண்டும்.

நெடுங்குருதி நாம் அவசியம் படிக்கவேண்டிய அற்புதமான நாவல். நாவல் ஆரம்பித்து முடியும்வரை காலத்தின் பிடியில் நாம் கட்டுண்டு கிடக்கிறோம். எத்தனை விதமான மனிதர்கள்! எத்தனை விதமான மனங்கள்! எத்தனை விதமான வாழ்க்கை! எத்தனை விதமான உணர்வுகள்! எத்தனை விதமான காட்சிகள்! நம் நாடி நரம்புகள் முழுதும் குருதியாக நெடுங்குருதி கலந்துவிடுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் சிறப்பான புனைவு நெடுங்குருதியை நாம் எப்போதும் மறக்க முடியாதபடி செய்துவிடுகிறது. வேம்பலையும் அதன் மனிதர்களும் நம் கனவிலும் நினைவிலும் என்றென்றும் நிலைத்திருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...