May 2, 2014

12 Angry Men (1957)

Run time: 1 hr 36 min (96 min)
Sound Mix: Mono
Color: Black and White
Release Dates : April 1957
Director: Sidney Lumet
Writer: Reginald Rose (story)
Stars: Henry Fonda, Lee J. Cobb, Martin Balsam
IMDB Ratings: 8.9


இது ஒரு அற்புதமான விறுவிறுப்பான action திரைப்படம் என்றால் எல்லோருக்கும் வியப்பாக இருக்கும். action என்பதை திரையில் காணும் காட்சிகளை வைத்துச் சொல்வது ஏற்புடையது அல்ல. மாறாக அது கதையில் இருக்கவேண்டும். கதையில் இருக்கும் விறுவிறுப்பும் பரபரப்பும்தான் action. அது இந்தப் படத்திற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது. 

பதின் பருவத்து இஞைன் ஒருவன் தன் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த விவகாரம் ஒன்று விசாரணைக்கு வருகிறது. அரசாங்கத் தரப்பு வக்கீல் அவன் குற்றவாளிதான் என்று சாட்சியங்களைக் கொண்டு நிரூபிக்கிறார். இருந்தும் குற்றவாளி தரப்பில் வாதாட யாரும் இல்லையாதலாலும் அவன் வயதைக் கருத்தில்கொண்டும் வழக்கை 12 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அவர்களும் அதை விசாரணை செய்ய அறையொன்றில் கூடுகிறார்கள். 12 பேரில் ஒருவர் அந்த குழுவுக்கு நடுவராக பொறுப்பேற்கிறார். படம் முழுதும் அந்த அறையில்தான் நடக்கிறது. இருந்தும் சற்றும் சலிப்பும் அலுப்பும் தெரியாமல் படம் நகர்கிறது.

அந்த இளைஞன் வழக்கு முதல் பார்வையில் முடிவுக்கு வந்த ஒன்றாகவே தெரிகிறது. எனவே அதைப் பற்றி விசாரிக்க என்ன இருக்கிறது என்று நினைக்கிறார்கள். இருந்தும் அனைவரின் கருத்தை அறிய அதைப்பற்றி கை தூக்குவதன் மூலமாக ஓட்டெடுப்பு நடக்கிறது. 11 பேர் குற்றவாளி என்று கையை உயர்த்த, டேவிஸ் என்பவர் மட்டும் குற்றவாளி அல்ல என்று கை உயர்த்துகிறார். வழக்கைப் பற்றி விவாதிக்காமல், கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பளிப்பது சரியல்ல. இது ஒருவரின் வாழ்க்கை எனவே முதலில் விவாதிப்போம் பிறகு முடிவு செய்வோம் என்கிறார் அவர். தெளிவாக சாட்சியங்களுடன் ஏற்கனவே குற்றவாளி என முடிவசெய்த வழக்கில் மேலும் விவாதிக்க ஏதுமில்லை என்று அனைவரும் டேவிஸ் மீது கோபம் கொள்கிறார்கள். நடுவர் விவாதத்திற்குச் சம்மதிக்க, டேவிஸ் தன் முதல் சந்தேகத்தை எழுப்புகிறார். அதைப்பற்றி அனைவரும் விவாதிக்கிறார்கள். 

விவாதித்த பின்னர் மீண்டும் ஒரு ஓட்டெடுப்பு நடக்கிறது. இம்முறை துண்டுச் சீட்டில் குற்றவாளி, குற்றவாளி அல்ல என்று எழுதச் சொல்லி ஓட்டெடுப்பு நடக்கிறது. அதில் மேலும் ஒருவர் குற்றவாளி அல்ல என்ற கட்சியில் சேர்கிறார். யார் அவர் என்று எஞ்சியிருக்கும் 10 பேரும் அவ்வாறு எழுதியவர் மீது கோபம் கொள்ள, ஒரு வயதானவர் நான்தான் அவ்வாறு எழுதினேன் என்கிறார். டேவிஸ் சொல்வது சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த இளைஞன் எவ்வாறு குற்றவாளியாக இருக்க முடியும் என்கிறார் அவர். அவரும் அந்தச் சிறுவன் குற்றவாளி அல்ல என்பதற்கான தனது சந்தேகத்தைத் தெரிவிக்கிறார். இப்போது குற்றவாளி அல்ல என்று இருவரும், குற்றவாளி என்று பத்துபேரும் கருதுகிறார்கள். எனவே மேற்கொண்டு வழக்கு சூடான விவாதத்திற்கு உள்ளாகிறது.


ஆரம்பத்தில் கொலை நடந்திருக்கும் என்று உறுதியாக நம்பியவர்களைக்கூட இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு விவாதம் கொண்டு செல்கிறது. விவாதித்த படியே இடையிடையே ஓட்டெடுப்பும் நடக்கிறது. ஒவ்வொரு ஓட்டெடுப்பின் போதும் அந்த இளைஞன் குற்றவாளி அல்ல என்பதற்கான ஓட்டு அதிகரித்தபடியே இருக்கிறது. இரண்டு பேர் மட்டும் அவன் குற்றவாளிதான் என்று மிகத் தீவிரமாக கடைசிவரை வாதிடுகிறார்கள். அதிலும்கூட ஒருவர் மாறிவிடுகிறார். ஆனால் தன் பையன் மீது அபரிமிதமான கோபத்தில் இருக்கும் மற்றவர் மட்டும், பையன்களே மோசமானவர்கள் எனும் கருத்தில், அந்த இளைஞன் குற்றவாளியே என்கிறார். பிறகு கடைசி கட்டத்தில் அவரும் குற்றவாளி அல்ல என்ற முடிவுக்கு வருகிறார். 

படம் பார்க்க பார்க்க நம் மனதில் ஏற்படும் பரபரப்பும் விறுவிறுப்பும் அசாதாரணமானது. நீதிபதிகள் ஒரு வழக்கை எப்படிக் கையாள வேண்டும் என்பதை இத்திரைப்படம் அற்புதமாக நமக்குக் காட்டுகிறது. தனது சொந்த அனுபவத்தைக் கொண்டும், தான் வளர்ந்த சூழ்நிலையைக்கொண்டும், தனது தனிப்பட்ட கோபதாபங்களைக் கொண்டும் ஒரு வழக்கின் விசாரணை இருக்கலாகாது என்பதை இப்படம் அறுதியிட்டுச் சொல்கிறது. வழக்கின் நுட்பமான பல்வேறு விசயங்களிலும் கவனம் செலுத்தும்போது எப்படி ஒரு வழக்கு திசை திரும்பிவிடுகிறது என்பதை நம்மை உணரும்படி செய்கிறது இப்படம்.


ஒரே அறையில் நடக்கும் திரைப்படம் என்பதே நமக்கு மறந்துபோகிறது. மாறாக நாம் வழக்குடனும், நீதிபதிகளின் விவாதங்களுடனும் ஒன்றிவிடுகிறோம். ஒவ்வொரு நீதிபதியும் தனக்கு ஏற்பட்ட எந்த சந்தேகத்தினால் அந்த இளைஞன் குற்றவாளி அல்ல என்று தீர்மானிக்கிறார் என்பது இத்திரைப் படத்தைச் சுவாரஸ்யமானதாகவும், விறுவிறுப்பானதாகவும் ஆக்கியிருக்கிறது. மொத்தத்தில் இத்திரைப்படம் நமக்கு புதுவிதமான திரை அனுபவத்தைத் தருகிறது. 

ஒரு தவறான ஒரு தீர்ப்புக்கு, தீவிரமான விவாதத்திற்குப் பின், 12 பேரும் சரியான மாற்றுத் தீர்ப்பைக்கொடுத்து ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்றி விடுகிறார்கள் என்பதை நாம் உணரும்போது நம் மனம் நெகிழ்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதைவிடவும் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்ற நீதியின் அர்த்தம் நமக்கு விளங்குகிறது.


படத்தில் நடித்த அனைவரும் தங்கள் பங்கை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவரும் அனல் பறக்கும் விவாதங்களுக்கிடையே அவ்வப்போது தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வதும், வெளியே மழை பெய்வதும் அதன் ஓசை விடாமல் கேட்டுக்கொண்டிருப்பதுமான காட்சிகள் திரைப்படத்திற்கு அழகையும், மெருகையும் ஏற்றுகிறது. இதே திரைப்படம் பல வருடங்களுக்குப் பிறகு வண்ணத்தில் வெளியாயிற்று. ஆனால் கருப்பு, வெள்ளையில் இருந்த பழைய படமும், நடிகர்களும் நம்முள் ஏற்படுத்திய தாக்கத்தை புதிய படம் ஏற்படுத்தவில்லை. பார்க்கத் தவறியவர்கள் இத்திரைப்படத்தை அவசியம் பார்க்கவேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...