April 9, 2014

சட்டி சுட்டது -ஆர்.ஷண்முகசுந்தரம்

நட்சத்திரத் தகுதி: ✰✰✰✰

வெளியீடு: நற்றிணை
பதிப்பு: நவம்பர் 2013
விலை: ரூபாய் 150
பக்கங்கள்: 176
கட்டமைப்பு: மெல்லிய அட்டை
வடிவம்: டெம்மி


சில நாவல்கள் படிக்க ஆரம்பித்தவுடனேயே நமக்குப் பிடித்துப்போகின்றன. சட்டி சுட்டதும் அப்படித்தான். கிராமம் என்றாலே அழகு, அமைதி. ஆனால் மனித உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் அந்த அழகையும் அமைதியையும் சிதறடித்துவிடுகின்றன. ஒரத்தபாளையம் கிராமத்தில் தனது அமைதியையும் நிம்மதியையம் தொலைத்த சாமிக்கவுண்டர் என்ற பண்ணாடியின் கதைதான் சட்டி சுட்டது. சாமிக்கவுண்டருக்கும், அவர் மகன்கள் இருவருக்குமிடையே நடக்கும் உறவின் மோதலைச் சொல்கிறது கதை. உறவுகளின் போராட்டத்தை வெளிக்காட்டும் ஆர்.ஷண்முகசுந்தரத்தின் சிறந்த படைப்பு இது. 

உறவு என்பதன் அர்த்தம் என்ன? அது சுயநலமா? அன்றி பிறருக்கு உதவும் மனம் படைத்த பொதுநலமா? உறவுகள் சதையும் ரத்தமுமாக உள்ள மனிதனையும் அவன் உள்ளத்தையும் ஆதாரமாகக் கொண்டதா அன்றி அது வெறும் உயிரற்ற ஜடப்பொருட்களைச் சார்ந்ததா? வளர்ந்ததும் பறந்து செல்வனவா உறவுகள்? அவற்றிற்கு வேர்களும் கிளைகளும் இல்லையா? வேரைப் புறக்கணிக்கும் கிளைகளும் விழுதுகளும் என்றாவது நன்றாக இருக்குமா? போன்ற எண்ணற்ற கேள்விகளை நம் மனம் முழுதும் நிரப்பும் நாவல் சட்டி சுட்டது.

எளிமையான நடையில் கிராமத்து வாழ்க்கையையும், அம் மனிதர்களின் ஆசாபாசங்களையும் விவரிக்கும் விதமாக, உறவுகளின் உன்னதங்களையும் உடைசல்களையும் சித்தரிக்கும் அற்புதமான படைப்பு. நாகம்மாவை விட சட்டி சுட்டது சிறந்தது என்று சொல்லலாம். நாகம்மாவில் சொத்தைக் கைப்பற்றும் முயற்சியின் ஒற்றை இழையைப் பற்றிக்கொண்டு நாவல் பயணிக்கிறது. ஆனால் சட்டி சுட்டது வாழ்வின், மனிதர்களின் பல்வேறு உணர்வுகளைச் சித்தரிப்பதாக இருக்கிறது. சாமிக்கவுண்டர் மற்றும் அவர் மகள் வேலாத்தாளின் நினைவுகளனூடே பழைய நினைவுகள் நிழ்காலத்தின் சம்பவங்களுடன் கைகோர்த்து வரிவதாக நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல விசயங்கள் தெளிவுபடுத்தப் படாமல் நாவல் செல்வது நாவலில் வாசகன் பங்கினைக் கோருகிறது. இது நாவலுக்கு வலு சேர்க்கிறது.

ஆசைகளும், விருப்புகளும், வெறுப்புகளும், சுயநலமும் உறவுகளில் எத்தகைய சிக்கல்களை கொண்டு சேர்த்துவிடுகின்றன என்பதை விவரிப்பதன் வாயிலாக அப்பா மகன் உறவின் சிக்கல்களை நாவல் ஆராய்கிறது. முன்னெரெல்லாம் அவர்களுக்கிடையே ஒரு இடைவெளி இருந்தது. இருவரும் தள்ளியே இருந்தார்கள். ஒருவேளை அந்த இடைவெளிதான் அவர்களைப் பிணைத்தும் வைத்திருந்ததோ என்னவோ? இன்று இவர்களுக்கிடையே நெருக்கம் இருக்கிறது. அந்த இடைவெளி இல்லாமல் போய்விட்டது. அதுவே இன்று பிரிவுக்கும், குரோதத்துக்கும், வெறுப்புக்கும் காரணமாகிவிடுகிறது என்று தோன்றுகிறது.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஆண் சலிப்பும், சோர்வும் கொண்டுவிடுகிறான். எல்லாவற்றையும் உதறிவிடும் மனப்பான்மை அவனை எளிதாகப் பற்றிக்கொள்கிறது. ஆனால் இறுதிவரை குடும்பத்தைக் கட்டிக்காக்கப் பாடுபடுபவள் பெண்தான். தன் மகன்கள் வளர வளர அவர்கள் மீது அவநம்பிக்கையும் நிராசையுமே சாமிக்கவுண்டரிடம் வெளிப்படுகிறது. சாமிக்கவுண்டர் தன் மகன் மாரப்பன் திருமணத்தில் மனமுடைந்துபோவது இதை நமக்கு உணர்த்துகிறது. இரு மகன்களிடையே ஒத்துவராமை கடைசியில் அவரை தனது மகள் வேலாத்தாளுடன் தனியாக சென்று வசிக்க வைக்கிறது. அவர்களுக்கிடையே என்ன சிக்கல் எது சிக்கல் என்பதை ஷண்முகசுந்தரம் இலாவகமாக தவிர்த்து, பூடகமாகச் சொல்லும் முறையால் நாவல் வேறோர் கட்டத்துக்குத் தாவிவிடுகிறது.

உறவுகளிடமிருந்து கடைசியில் தனித்து நிற்கும் சாமிக்கவுண்டர் பாத்திரம் நம் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு அழுத்தமாகப் பதிந்தும் விடுகிறது. அது, நாம் நமது குடும்பத்தாரோடு கொண்டுள்ள உறவைக் குறித்து பல கேள்விகளை எழுப்பி நமக்கும் அவர்களுக்குமிடையேயான பந்த பாசங்களைப் பற்றிய மறுபரீசீலனையில் நம்மை ஈடுபடத் தூண்டுகிறது.

எவ்வளவுதான் ஜாக்கிரதையாகக் கையாண்டாலும் சட்டி எப்படியும் சுடத்தான் செய்யும். அப்படிச் சுட்டதின் வடுவாக மிஞ்சி நிற்பதுதான் ஷண்முகசுந்தரத்தின் இந்த சட்டி சுட்டது. சுட்டதும் விட்டுவிடாமல் தாங்கிப் பிடிப்பதினாலேயே சட்டியை உடையாமல் பாதுகாக்க முடியும் என்பது இந்நாவல் தரும் வாசிப்பின் அனுபவம்.
Related Posts Plugin for WordPress, Blogger...