April 11, 2014

இன்று -அசோகமித்திரன்

நட்சத்திரத் தகுதி: ✰✰✰

வெளியீடு: நற்றிணை
பதிப்பு: டிசம்பர் 2013
விலை: ரூபாய் 75
பக்கங்கள்: 88
கட்டமைப்பு: மெல்லிய அட்டை
வடிவம்: டெம்மி


பல்வேறு வடிவங்களின் கதம்பமாக அசோகமித்திரனின் இன்று நாவல் அமைந்திருக்கிறது. கட்டுரை, கடிதம், கதை, உரையாடல், பத்திரிக்கைச் செய்திகள் என பல வடிவங்களில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பல கதைகள் நாவலில் சொல்லப்படுகிறது. 1988-லேயே இப்படியான ஒரு வடிவத்தை அவர் தேர்ந்திருப்பது வியப்பளிக்கிறது. படித்து வரும்போதே இவற்றுக்கெல்லாம் என்ன தொடர்பு என்று கேள்வி மனதில் ஓடியபடியே இருக்கிறது.

இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி ஒன்றுபோல் இருப்பதில்லையோ அப்படித்தான் அவர்களின் வாழ்க்கையும் ஒன்றுபோல் இருப்பதில்லை; இருக்கவும் முடியாது. அவரவர்க்கு அவரவர் வாழ்வின் சிக்கல்களும், பிரச்சினைகளும் இருக்கின்றன. ஆனால் காலம் எல்லோருக்கும் ஒன்றுதான். நேற்று இன்று நாளை. அதில் மாறுதல் ஒன்றும் இல்லை. ஒரு தினத்தின் இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி அமைகிறது என்பதையும், அன்றைய தினத்தில் அவர்கள் எத்தகைய முடிவை எடுக்கிறார்கள் என்பதையும் விவரிக்கும் விதமாக மனித வாழ்வின் விசித்திரத்தை வெளிப்படுத்துவதே அசோகமித்திரனின் இன்று. அப்படி எடுக்கும் முடிவுகளின் சாதக பாதகங்கள் அந்த மனிதனை மட்டும் சார்ந்ததா அன்றி அதில் இந்த சமூகத்திற்கும் பொறுப்பு உண்டா என்ற சிந்தனையையும் நம் மனதில் விதைத்துச் செல்லும் நாவல்.

வாழக்கை என்பது நேற்று இன்று நாளையோடு தொடர்புடையதால், நம் வாழ்க்கையின் லகான் இப்பிரபஞ்சத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இன்று நாம் எடுக்கும் தீர்வுகள் நேற்றைய தினத்தின் வெளிப்பாடு; நாளைய தினத்தின் ஆரம்பம் அல்லது முடிவு. ஆக எடுக்கும் சிறு முடிவும் சமூகத்தையும் இப்பிரபஞ்சத்தையும் சார்ந்திருக்கிறது. வேறு வகையில் சொல்வதானால் சமூகமும், பிரபஞ்சமும் நம்மை, நம் வாழ்வை இயக்குகிறது; பாதிக்கிறது.

இவற்றையெல்லாம் சிந்திப்பதால் அல்லது ஆராய்வதால் என்ன கிடைக்கப்போகிறது? நாவலின் இறுதியில் சோமு சொல்வது போல், “அர்த்தம்! நாம் தேடத்தேட அது நழுவிக்கொண்டே போகிறது.” மொத்தத்தில் இந்த சமூகத்தில் நாம் வாழ்கிறோம். ஒவ்வொருவரும் அதன் அமைப்பாலும் செயலாலும் பாதிக்கப்படுகிறோம். எங்குமே தனி மனிதனின் திருப்தியையோ, அவனது வசதிகளையோ அமைப்புகள் பார்ப்பதில்லை. மாறாக இந்த சமூகத்திற்காகவே நம்மால் உருவாக்கப்பட்ட அமைப்பு இயங்குகிறது. அந்த அமைப்பு இயங்கும்போது தனி மனிதர்கள் பாதிப்படைகிறார்கள். ஆனால் அமைப்பிற்கு அவர்கள் ஒரு பொருட்டல்ல. எனவே அதன் மீது தனி ஒரு மனிதன் கட்டுப்பாடு ஏதும் இல்லாமலிருக்கிறான். அவன் செய்யக்கூடியதெல்லாம் இன்றைய தினத்தை வாழ்வது மட்டுமே. அசோகமித்திரனின் மொழி நடை வெகு சரளமாக நாவலைக் கொண்டு செல்கிறது. ஆனால் நாவலின் உள்ளடக்கம்தான் சிலரைக் குழப்பத்தில் ஆழ்த்தி, என்னதான் சொல்கிறார் மனிதர் என்ற கேள்வியை எழுப்புவது தவிர்க்க முடியாதது. இந்நாவல் தரும் வாசிப்பனுபவத்தை கண்டடையவது அனைவராலும் சாத்தியப்படும் என்று சொல்வதற்கில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...