April 10, 2014

நிழல்கள் -நகுலன்

நட்சத்திரத் தகுதி: ✰✰✰

வெளியீடு: நற்றிணை
பதிப்பு: நவம்பர் 2013
விலை: ரூபாய் 50
பக்கங்கள்: 64
கட்டமைப்பு: மெல்லிய அட்டை
வடிவம்: டெம்மி


தந்தை, மகன் உறவுக்கிடையே உள்ள சிக்கலை ஆராய்வதன் மூலம் மனித வாழ்வின் அர்த்தத்தைப் பற்றிய தேடலாக உள்ளது நகுலனின் நிழல்கள். நவீனன், சாரதி, கேசவமாதவன் மூவரும் நண்பர்கள். எழுத்தாளர்களும் கூட. தங்கள் எழுத்தைப் பற்றிய விவாதம் அவர்களிடையே நடப்பது எப்போதும் வழக்கமான ஒன்று. ஒரு முறை சாரதி தன் வாழ்க்கைக் கதையை நவீனனிடம் சொல்கிறான். நவீனன் அதை நிழல்கள் என்ற நாவலாக எழுதுகிறான். நாவல் அவர்களின் சந்திப்புக்கும், சாரதியின் கதைக்குமிடையே மாறிமாறிப் பயணிக்கிறது.

மனித வாழ்க்கை தலைமுறைகளாக வாழ்ந்துகொண்டும் வளர்ந்துகொண்டும்தான் இருக்கிறது. ஒரு பக்கம் வேலை, தொழில், பணம். மற்றொரு பக்கம் மனைவி, கணவன், மகன், மகள், உறவுகளின் சங்கலிகள். இவை இரண்டையும் இணைக்கும் இணைப்பாக சமூகம் என்ற அமைப்பு. இவையெல்லாம் மனிதனின் மரணத்திற்குப் பின் அர்த்தமற்றுப்போகின்றன. மனிதன் இருக்கும் வரை அவன் நிழலாக இவைகள் பின்தொடருகின்றன. அவனுக்குப் பிறகோ நிழல் மறைந்துவிடுகிறது. இந்நாவலை வாசித்து முடித்ததும் நாம் பெறும் உணர்வு இதுவென்று சொல்லலாம்.

சாரதிக்கும் அவன் தந்தைக்குமிடையேயான ஒத்து வராமை, சாரதியின் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது. அவன் தந்தை தாய் அனைவரும் அவனுக்குக் குரங்காகவே படுகிறார்கள். அந்த அளவிற்கு அவனுக்கு வெறுப்பு இருக்கிறது. எங்கெங்கோ அலைந்து திரிந்து அவ்வப்போது வீடு திரும்பும் அவனுக்கு ஒரு கட்டத்தில் அவன் அப்பா வேதவல்லியை மணமுடித்து வைக்கிறார். மணமுடித்த கையோடு தனியாகவும் வசிக்கிறான். எதிலிலும் நிலையில்லாமல் அலைந்து திரிந்த சாரதிக்கு இனி என்ன செய்யவேண்டும் என்ற திகைப்பு ஏற்படுகிறது. அப்போது அவன் அப்பா மாரடைப்பால் மரணமடைகிறார்.

இருக்கும் போது அவரிடம் வெறுப்பும் பகையுமாக இருந்த சாரதிக்கு அவரின் இல்லாமை அவனுள் இனம் புரியாத வெறுமையைக் கொண்டுசேர்க்கிறது. நாவலின் இறுதியில் அவன் வாழ்க்கையைத் தொகுக்கும் விதமாக சாரதியின் எண்ணவோட்டங்கள் வாழ்வு குறித்து பற்பல கேள்விகளை நம்முள் விதைக்கிறது. அவைகள் விடைதெரியாத கேள்விகள். வாழ்க்கையை நாம் வாழத்தான் முடியும். அதைக்குறித்து, அதன் நோக்கங்கள் குறித்து ஆராய முடியுமா? இல்லை அப்படி ஆராய்வதில்தான் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது?

64 பக்கங்கள் கொண்ட சிறிய நாவல் நிழல்கள். இது நகுலனின் முதல் நாவல். சிறிய நாவலாக இருந்தாலும் படித்து முடித்ததும் ஒரு கனமான நாவலை வாசித்த உணர்வு ஏற்படுவதாக நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். ஒரு வித்தியாசமான நாவலை படித்த அனுபவம் நாவலின் நடையாலும் அமைப்பாலும், கதைகூறும் முறையாலும் நமக்குக் கிடைக்கிறது. அதை நாம் உணர நாவலில் சொன்னவற்றை விடுத்து சொல்லாமல் மறைந்து நிற்கும் பலவற்றையும் நம்முள் தொகுக்கும்போதே அந்த அனுபவம் நமக்கு ஏற்பட முடியும். இல்லையேல் இது ஒரு சாதாரண கதை என்று நாம் புறக்கணிக்கவே நேரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...