March 13, 2014

வெல்லிங்டன் -சுகுமாரன்

நட்சத்திரத் தகுதி: ✰✰½

வெளியீடு: காலச்சுவடு
முதல் பதிப்பு: டிசம்பர் 2013
விலை: ரூபாய் 275
பக்கங்கள்: 344
கட்டமைப்பு: மெல்லிய அட்டை
வடிவம்: டெம்மி


ஆதி மனிதன் இயற்கையோடு இயைந்து வாழவேண்டும் என்று விரும்பினான். எனவே இயற்கையை வெல்வது என்ற கேள்வியே அவனிடம் எழவில்லை. ஆனால் நாகரிக மனிதன் இயற்கையை தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற விரும்பினான். எனவே காடுகளை அழித்தான் நகரங்களை உருவாக்கினான். மனிதன் இயற்கையின் முன் சிறு துரும்பு என்பதும் அவனால் இயற்கையை தன் விருப்பம்போல் முழுதுமாக மாற்றி அமைத்திட முடியாது என்பதும் இதுவரையான மனித வாழ்க்கை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஆனாலும் கூட அவன் இயற்கையை மாற்ற விரும்பியது அதனோடு சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசையில்தான். அதற்கான நாகரிக வசதிகளை அவன் ஏற்படுத்தினான். அதன் உச்சகட்டம்தான் அவன் அமைத்திட்ட மலைவாச ஸ்தளங்கள். அப்படியான ஒன்றுதான் உதகமண்டலம். அந்த நகரம் உருவான வரலாற்றை கற்பனை கலந்து நாவலாக வழங்கியிருக்கிறார் கவிஞர் சுகுமாரன்.

இது சுகுமாரனின் முதல் நாவல் என்று தோன்றாதபடிக்கு நாவலின் ஆரம்பம் அற்புதமாக அமைந்து, வாசிப்பதற்கு மன எழுச்சி தருவதாக உள்ளது. கலக்டர் ஜான் சல்லிவன் பாத்திரம் கச்சிதமாகவும் சிறப்பாகவும் அமைந்து நாவலை மேற்கொண்டு வாசிக்கத் தூண்டுகிறது. கோயமுத்தூர் ஜில்லாவின் கலக்டரான அவர் பிரித்தானிய அரசாங்கத்துக்கு வருமானம் ஏற்படுத்தும் முகமாக அந்த மலைவாச ஸ்தளத்தை அமைக்கத் தீர்மானிக்கிறார். ஆனால் அதுவே அவரது கனவாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதன் கொள்ளும் பெரும் கனவுகளே வரலாறாக ஆகின்றன. அப்படியாக ஒரு கனவு காணும் மனிதன் ஜான் சல்லிவன். உதகமண்டலத்தைக் கண்டடைந்து அங்கே வசிக்கவேண்டும் என்ற பெரும் ஆசையே அவரை இந்த நடவடிக்கையில் ஈடுபடச் செய்கிறது.

மலையின் வசீகரமும் ஈர்ப்பும், மலைவாழ் மக்களின் வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு, ஜான் சல்லிவனை உதகை நகரை நிறுவச்செய்கிறது. அதற்காக அவர்களின் நம்பிக்கைகளையும், காலங்காலமாக அவர்கள் தங்களின் தெய்வமாகக் கருதும் மலைகளையும் காடுகளையும் சேதப்படுத்துவது என்பது வெள்ளையர்கள் நம்மீது தொடுத்த ஆக்ரமிப்பின் அடையாளம் அன்றி வேறில்லை. ஜான் சல்லிவனுக்குப் பிறகு உதகமண்டலத்தின் முகம் மாறிவிடுகிறது. மரங்கள் அழிக்கப்பட்டு, ராணுவத்திற்கான ஒரு கேந்திரமாக ஜகதளா மாற்றப்பட்டு வெல்லிங்டன் என்று பெயர் சூட்டப்படுகிறது.

ஜான் சல்லிவன் பாத்திரத்திற்குப் பிறகு நாவலில் மனம் ஒன்றாமல் போய்விடுவது என்னவோ உண்மைதான். அதன் பிறகு நாவல், பாபு என்ற பதிமூன்று வயதுச் சிறுவனை மையமாகக் கொண்டு, அவன் குடியிருக்கும் தெருவிலிருக்கும் மூன்று நான்கு குடும்பங்களின் கதையைச் சொல்கிறது. அந்தக் கதைகளின் மூலம் நாம் கண்டடைவது ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. காட்சிகளின் சித்தரிப்பும் கதைக்களன்களும் நம்முள் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. ஒரு சராசரி கதையாகவே நாவல் நம்முன் விரிகிறது. எனவே நாவலின் வாசிப்பின் மூலம் கண்டடையும் தரிசனம், எழும் கேள்விகள், மனப்போராட்டம் என்று எதுவும் வாசகனிடத்து நேர்வதில்லை.

சுருங்கச் சொன்னால் வெல்லிங்டன் வெற்றி பெறவில்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...