February 8, 2014

துயில் -எஸ்.ராமகிருஷ்ணன்

எல்லா செயல்களுக்கும் ஆரம்பம் என்பது கடினமானது. எப்போது எப்படி ஆரம்பிப்பது என்பது எப்போதுமே பிடிபடாத விசயம். நாவலை வாசிக்கத் தொடங்குவதும் அப்படித்தான். ஆனால் படிக்க ஆரம்பித்த பிறகு அந்த நாவலே நம்மை உள்ளே இழுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நாமாக முயன்றாலும் அதிலிருந்து வெளியேற முடியக்கூடாது. அதுதான் ஒரு நல்ல நாவலுக்கான அடையாளம்.

துயில் வசீகரம் இல்லாத வறட்சியான நாவல் என்று படிக்கும் போது தோன்றுகிறது. கதை நம்மை ஈர்க்காதது போலத் தெரிகிறது. கதை எங்கேயாவது ஏதாவது ஒரு தருணத்தில் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் என நினைத்து வாசித்துச் செல்கிறோம். அது 150 பக்கங்களுக்குப் பிறகு நிகழ்கிறது. அதன் பிறகு நாவலிலிருந்து நாம் விலக நினைத்தாலும் அது நம்மை விடாது பிடித்துக்கொள்கிறது. துயில் மேலோட்டமான வாசிப்பைப் பழக்கமாக கொண்டவர்களுக்கானது அல்ல. வழக்கமாக நாம் வாசித்து ரசிக்கும் நாவலுமல்ல. அதன் தளம் வேறானது. அதை நாவலை படிக்கப் படிக்கத்தான் நாம் உணர முடியும்.

கதை நடக்கும் காலம் 1982. அழகர் தன் மனைவி சின்னராணியுடனும், மகள் செல்வியுடனும் தெக்கோடு நோக்கி செல்லும் ரயிலுக்காகக் காத்திருக்கிறான் என்று கதை தொடங்குகிறது. அவர்கள் மூவரும் தெக்கோடு சென்று சேரும் வரையிலான காலவெளியில் அழகரின் கதை விஸ்தாரமாக சொல்லப்படுகிறது. தாய் இல்லாமல் தந்தையின் பராமரிப்பில் வளரும் அவன், அவரிடம் வெறுப்புக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவந்து இப்பிரபஞ்சத்தில் அல்லற்பட்டு அவதியுறும் கதையை தனக்கேயான பாணியில் முன்னும் பின்னும் பின்னிப் பிணையும் பல கதைகளினூடே எஸ்.ராமகிருஷ்ணன் நம் கண்முன் விரித்துக் காட்சியாக்குகிறார். அழகர் வாழ்க்கை தரதரவென்று கால் போன போக்கில் இழுத்துச் செல்வதாகவே இருக்கிறது. வாழ்க்கை நாளை எங்கே எப்படி இருக்கப்போகிறது என்று தெரியாமல் இருப்பதைவிடக் கொடுமை வேறு இல்லை. பதின்பருவத்து வாழ்க்கை எல்லோருக்கும் பிடிபடாத் தன்மையுடன் இருப்பது இயல்புதான். அப்போது அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதையைக் கொண்டே பின்னாளைய வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. தாய் தந்தை இன்றி அனாதையாகச் சுற்றித் திரியும் அழகர் போன்ற சிறுவர்கள் எத்தனை எத்தனை பேர் இந்த உலகத்தில் வாழ்வதற்காக தினமும் போராடுகிறார்கள். அவர்கள் நாளை எவ்வாறு எப்படி மாறப்போகிறார்கள் என்ற ஆதங்கத்தை அழகரின் வாழ்க்கை நமக்கு ஏற்படுத்துகிறது.

இதன் ஊடாக, 1873-ல் கல்கத்தாவிலிருந்து பாதிரியார் லகோம்பை, ஏலன் பவர் என்ற பெண் மருத்துவரை மருத்துவச் சேவைக்காக தெக்கோடு கிராமத்திற்கு பணியாற்ற அனுப்பிய வரலாற்று பின்னனியைக் கொண்ட கதை சொல்லப்படுகிறது. பல்வேறு சிரமங்களுக்கிடையே தன் மருத்துவ சேவை செய்யும் ஏலன் எதிர்கொள்ளும் சமூக, கலாச்சார மற்றும் மதச் சிக்கல்கள் நாவலில் சிறப்பாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

அழகர் தன் பிழைப்பைத் தேடி தெக்கோடு மாதா கோவில் திருவிழாவிற்குச் செல்கிறான். அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து திரண்டு வரும் ரோகிகளோ தங்கள் நோய் குணமாக தெக்கோடு செல்கிறார்கள். எல்லோரும் திரண்டு அங்கே செல்வது நோய் எனும் கொடிய ஜந்து நம்மை இறைவனை நோக்கி அழைத்துச் செல்வதான கற்பனையைத் தருகிறது. இனி வரும் தலைமுறையினர் நோயினால் எத்தனை இன்னல்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது. இரண்டு ரயிலுக்கு இடையேயான காத்திருப்பின் இடைவெளியில் நாவலின் கதை நடந்து முடிகிறது. திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் போல நாவலின் முடிவு அமைந்திருக்கிறது. சின்னராணி கொலையாளி ஆனதையும், ஏலன் கொலையானதையும் வாசித்து முடித்ததும் மனித மனங்கள் குறித்தும், மனித வாழக்கை குறித்தும் எண்ணற்ற கேள்விகள் மனதில் முட்டி மோதுகிறது.

பல சமயம் நோய்க்கான காரணம் நமக்குப் பிடுபடுவதில்லை. எவ்வளவோ வைத்தியங்கள் செய்தும் குணமாகாத வியாதிகள் ஏதோ ஒரு கணத்தில் சட்டென நம்மைவிட்டு நீங்கிவிடுவதும் உண்டு. காரணமே இல்லாமல் சில நோய்கள் நம்மை பீடிப்பதும் உண்டு. எல்லாவற்றுக்கும் காரணம் நம் மனம். ஒரு நோய் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக துன்பத்தைத் தருகிறது. காரணம் நம் மனம். நம் மனமே நோயை வளர்த்து ஆளாக்குகிறது. நோயின் தாய் மனம்தான். நோயை வெல்லவும் இதே மனம்தான் தேவை என்பது விசித்திரம்தான். சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி நம் உடலை மறக்கச் செய்கிறது. மாறாக நோய் சதா நம் உடலை ஞாபகப்படுத்தியபடியே உள்ளது. எல்லா மனிதர்களுக்கும் அவசியமான ஒன்று உறக்கம். ஆனால் துயில் நோயாளிகளுக்கு வராத ஒன்று. உறக்கம் இல்லாத மனிதனுக்கு சீக்கிரமே பித்துப் பிடித்துவிடும். நம் உடல் ஸ்திரமானது. உள்ளமோ ஸ்தூலமானது. இரண்டுக்கும் இடையே உயிர் படும் அவஸ்தைதான் நோய்.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஆயுள் பரியந்தம் மனிதனுடன் அவனைத் தொடர்ந்து வருவது அவனது நோய்தான். சிலருக்கு அது பிறக்கும் போதே தொடரும் துரதிருஷ்டமாக ஆகிவிடுவதும் உண்டு. நோயில்லா மனிதன் என்று உலகில் யாரும் இல்லை. நோயைவிட, நோய் நம் மனதில் ஏற்படுத்தும் வடுக்கள் ஆழமானவை. நோயைப் பற்றிய நினைவுகள் நம் மனதில் சதா பயத்தையும் சஞ்சலத்தையும் கொடுக்கிறது. நோயைத் தீர்மானிப்பதில் கிருமிகள் எனும் புறக்காரணிகள் ஒரு வகையில் காரணமாகிறது என்றாலும் நாம் வாழும் வாழ்க்கையே நோயுறுவதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதுதான் உண்மை. பிறர் மீது கொள்ளும் வெறுப்பு, சுயநலம், குற்ற உணர்வு, நிறைவேறாத ஆசைகள், புறக்கணிப்பு, பயம் ஆகியனவே நம் ஆழ் மனதில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி நோயை உண்டுபண்ணுகிறது. வெறும் மருந்து மாத்திரைகள் நோயை விரட்டிவிடாது. அதையும் தாண்டி பலவும் நோய் குணமாக அவசியம் என்பதை நாவல் நமக்குப் புரியவைக்கிறது. கொண்டலு அக்கா என்ற பாத்திரத்தின் மூலம் இதை பல இடங்களில் நாவலாசிரியர் சொல்கிறார். கொண்டலு அக்காவின் மறுவடிவம்தான் ஏலன் என்றும் சொல்லலாம். காலந்தோறும் மனிதனைக் கடைத்தேற்ற இவ்வாறான மனிதர்கள் தோற்றியபடியேதான் இருக்கிறாாகள் என்பது நம்மை ஆசுவாசப்படுத்துகிறது.

நோய் தீவிரமாகும்போது, “கடவுளே! நான் என்ன பாவம் செய்தேன்?” என்றுதான் நோயாளி புலம்புகிறான். பாவம்தான் நோயை உருவாக்குகிறது என்பதை அவன் மனதில் விதைத்தது எது? சமூகமா? மதமா? நோய்மை கடவுளின் விருப்பமா? பாவத்தின் தண்டனையா? மதம், கடவுளுக்கு எதிரான குற்றத்தின் விளைவா? நோயாளி குணமாவது மருத்துவத்தினாலா அல்லது மதம், கடவுளின் கருணையினாலா? போன்ற பல சிக்கலான கேள்வியை நாவல் நம்மிடம் எழுப்புகிறது.

நாவலின் முக்கியப் பகுதி விசாரணையின் போது ஏலன் கொடுக்கும் வாக்குமூலம். மொத்த நாவலின் இறுதி முடிச்சு அதில் உள்ளதாகக் காண்கிறேன். மருத்துவர், நோயாளி, சமூகம், மதம், கலாச்சாரம் என்றனைத்தும் இணைந்தே மனிதனை நோய்மை கொள்ள வைக்கிறது. ஒரு நோய்க்கு மருத்துவம் எப்படி இருக்கவேண்டும்? ஒரு மருத்துவன் எப்படி இருக்கவேண்டும்? இரண்டும் எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறது? போன்ற பலவற்றுக்கும் ஏலனின் வாதம் நமக்கு பதிலைத்தருகிறது.

நாவலின் குறையாக நாவலின் பக்கங்களைச் சொல்லலாம். பக்கத்தைக் கணிசமாக குறைத்திருந்தால் நாவல் இன்னும் செறிவாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அழகர் பற்றிய கதையும் ரோகிகள் பற்றிய கதையும் விரிவாக விஸ்தாரமாகச் சொல்லியிருப்பது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பையும் ஆயாசத்தையும் ஏற்படுத்திவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

நோயைக் குறித்து இவ்வளவு விரிவான நாவல் இதுவரை எழுதப்பட்டதில்லை. நோய்மை பற்றியும், நோயாளிகள் பற்றியும் நம் மனதில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்தும் நாவல் துயில். அந்த வகையில் துயில் ஒரு குறிப்பிடத்தக்க, நாம் கவனிக்க வேண்டிய ஒரு நாவல்.
Related Posts Plugin for WordPress, Blogger...