புத்தக அலமாரி விமர்சனம் குறித்து சில வார்த்தைகள்

இனி, நான் விமர்சனம் எழுதப்போகும் நாவல்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்க முடிவுசெய்துள்ளேன். நாவலில் முக்கியமான பத்து விதமான கூறுகள் இருக்கவேண்டும் எனக் கருதி, ஒவ்வொன்றுக்கும் அரைப் புள்ளி வீதம் மொத்தம் பத்து புள்ளிகளுக்கு ஐந்து நட்சத்திரத் தகுதியும், அதற்கும் குறைவான புள்ளிகளுக்கு அதற்கேற்ப தகுதிகளும் கிடைக்கும். ஜெயமோகனின் ‘நாவல்‘ கட்டுரை நூலிலிருந்து சிலவற்றையும் நாவலின் சில தகுதிகளாகச் சேர்த்திருக்கிறேன்.

நான் நாவலில் முக்கியமாக இருக்கவேண்டும் என நினைக்கும் பத்து விதத் தகுதிகள் குறித்து சில வார்த்தைகள் சொல்லலாமென நினைக்கிறேன்.

முதலாவதாக, நாவலின் வடிவம் அல்லது உத்தி. ஒரு நாவலுக்கு இது அத்தியாவசியமானது. இது இல்லாத நாவல்கள் வெறும் கதைப் புத்தகமாகத்தான் இருக்கும்.

இரண்டாவதாக, கதையும் கதைக் களன்களும். நாவல் எதைப்பற்றிய கதை என்பது முக்கியமானது. அந்த கதையிலிருந்து வாசகன் புதிதாக என்ன கற்றுக்கொள்ளப்போகிறான் என்பதைப் பொருத்தே ஒரு நாவல் வெற்றி அடைகிறது. கதையில் வரும் களன்களும் அவ்வாறே இன்றியமையாதது. திரைப்படத்தின் திரைக்காட்சிகளுக்கு இணையானது இது. இதில் காணும் எழுத்தாளனின் வித்தியாசமான, பலவிதமான களன்களுக்கு ஏற்பவே ஒரு நாவல், வழக்கமானது என்று முத்திரை குத்தப்படுவதிலிருந்து தனித்து நிற்கிறது.

மூன்றாவதாக, கதைக் களனின் தேர்வுக்கு ஏற்ப காட்சிகள் எவ்வாறு வார்த்தைகளில் சித்தரிக்கப்படுகிறது என்பது. ஒரு வாசகனை மேலும் மேலும் நாவலைப் படிக்கவும், திரும்பத் திரும்பப் படிக்கவும் வைக்கும் ஒரு அம்சம் இதன் வெற்றியிலேயே இருக்கிறது.

நான்காவதாக, நாவலைப் படிக்கும்போது வாசகனிடம் ஏற்படும் மன எழுச்சி அல்லது நெகிழ்ச்சி. இவையில்லாத நாவல்கள் வாசிப்புக்குப் பெறுமானமற்றவை.

ஐந்தாவதாக, பாத்திரங்களின் சித்தரிப்பு. நாவலில் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்தே, வாசகன் அந்தப் பாத்திரங்களுடன் தன்னை இணைத்துக்கொள்ள முடியும்.

ஆறாவதாக, நடை அல்லது பாணி. நாவலின் வாசிப்பில் இவை சரளமாக இருக்கும்போதுதான் ஒரு படைப்பைப் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது. இவற்றில் ஏற்படும் தொய்வு மொத்த நாவலையும் சிதை்துவிடும். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு நடை, பாணி இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், நாவலுக்கு ஏற்ப தன் நடையை எழுத்தாளன் சற்றே மாற்றிக்கொள்ளும்போதுதான் ஒரு படைப்பு சிறந்ததாக ஆகமுடியும்.

ஏழாவதாக, நாவலின் பக்கம். நாவலின் பக்கம் எவ்வாறு ஒரு படைப்புக்கு அவசியம் என்று நினைக்கலாம். தான் எழுதிய வேண்டாத பக்கங்களை தாட்சண்யமின்றி வெட்டி நீக்கும் எழுத்தாளர்கள்தான் வெற்றிப் படைப்புகளைத் தருகிறார்கள். மாறாக வேண்டாத பக்கங்களையும் தான் எழுதியே ஒரே காரணத்திற்காக தக்க வைத்துக்கொள்ளும் எழுத்தாளனின் படைப்புகள் நீர்த்துப்போகின்றன என்பது மிகப்பெரிய உண்மை.

எட்டாவதாக, காலம். ஒரு நாவலில் வாசகன் தான் சஞ்சாரம் செய்ததாக உணரும் காலத்தின் விரிவுக்கேற்பவே மன எழுச்சி அல்லது மன நெகிழ்ச்சி கூடுகிறது.

ஒன்பதாவதாக, வாசக இடைவெளி. எழுத்தாளன் விடாமல் பாத்திரங்களின் பின்னால் சென்றுகொண்டிருக்காது வாசகன் அந்தப் பாத்திரங்களின் செயல்பாடுகள் குறித்து தான் கொள்ளும் யூகங்களை மேற்கொள்ளும் இடைவெளிகள் நாவலில் அவசியம் வேண்டும். எண்ணற்ற கேள்விகளால் வாசகன் சூழப்படும்போதுதான் ஒரு நாவல் வெற்றி அடைகிறது.

பத்தாவதாக, நாவலின் தரிசனம். நாவலைப் படித்து முடித்ததும் ஒரு வாசகன் அந்நாவலிலிருந்து பெறுவது என்ன? அவன் கண்டடைவது என்ன? அதைப் பற்றி அவன் கொள்ளும் மனப்போராட்டங்கள், சஞ்சலங்கள், கேள்விகள் ஆகியன இதில் அடங்கும்.

இப்போதைக்கு இவ்வளவு போதும் என்று கருதுகிறேன். இன்னும் போகப்போக அதில் மாற்றங்கள் வரலாம். இவைகள் மட்டுமே இறுதி அல்ல. இவை முழுக்க முழுக்க என் பார்வை. என் கோணம்.

வ.எண்நாவலின் கூறுகள்புள்ளி
1வடிவம், உத்தி0.5
2கதை, கதைக்களன்0.5
3காட்சிகளின் சித்தரிப்பு0.5
4மன எழுச்சி, நெகிழ்ச்சி0.5
5பாத்திரங்களின் சித்தரிப்பு0.5
6நடை, பாணி0.5
7நாவலின் பக்கம்0.5
8காலம்0.5
9வாசக இடைவெளி, யூகம்0.5
10தரிசனம்0.5
புத்தக அலமாரி விமர்சனம்✰✰✰✰✰

Related Posts Plugin for WordPress, Blogger...