அவன் எப்போது தாத்தாவானான் –விக்ரமாதித்யன்

விக்கரமாதித்யன் கவிதைகள் மிகவும் எளிமையானவை. வார்த்தைகளும் சரி வாக்கியங்களும் சரி படிப்பதற்கு சிரமம் தராதவை. சம்பிரதாயமாக உரையாடுவது போல அமைந்திருப்பது அவரது கவிதைகளின் சிறப்பு. கவிதையின் கருப்பொருட்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவை அல்லது சந்திக்க விழைபவை. தன்னையே கவிதைக்குள் கொண்டுவருவது அவரது பல கவிதைகளில் காணக்கிடைக்கும் ஒரு அம்சம். அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு அவன் எப்போது தாத்தாவானான். 1999-லிருந்து 2011 வரையான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

என்னைக் கவர்ந்த, எனக்குப் பிடித்த சில கவிதைகளை புத்தக அலமாரி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

1. எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு

எப்பொழுதும்போல
இருக்கிறேன்

எப்பொழுதும்போல
என்றால்?

எப்பொழுதும்
போலத்தான்

அதாவது
பசித்தால் சாப்பிடுகிறேன்

தூக்கம் வந்தால்
தூங்குகிறேன்

காசு கிடைத்தால்
குடிக்கிறேன்

வெளியில் சொல்லமுடியாதபடி
வாழ்கிறேன்

ஏதாவது படிக்கத்தோன்றினால்
படிக்கிறேன்

எழுதத் தோன்றினால்
எழுதுகிறேன்

நண்பர்களைப் பார்க்க விரும்பினால்
தேடிப்போய் பார்க்கிறேன்

அமைதியாக இருக்கலாமெனப் பட்டால்
அமைதியாக இருக்கிறேன்

ஊர் சுற்றும் எண்ணம் வந்தாக்கால்
ஊர் சுற்றுகிறேன்

கோயில்களுக்குப் போய்வரநினைத்தால்
போயில் கோயிலாகப் போய்வருகிறேன்

இப்படி இப்படித்தான்
எப்பொழுதும் போலவே

வேறென்னவாவது செய்யத்தான்
வழிவகை வாய்க்கால் உண்டா சொல்லுங்கள்

2. நீளம் அகலம் உயரம்

ஒரு விஷயத்திற்கு முன்பாக
ஆயிரத்தேழு விஷயங்கள்
நடந்து முடிந்துவிட்டிருக்கக் கூடும்

நீயோ
ஆயிரத்தெட்டாவது விஷயத்தைமட்டுமே காணநேர்கிறது

அந்த விஷயத்தையே
உன் துலாக்கோலில் வைத்து
எடைபோட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்

இஃது
எவ்வாறு
சரியாய் இருக்கும்

ஆனால் யதார்த்தம்
என்னவோ

அப்படித்தான்
அன்று நான் நடந்துகொண்டதும்

இதை
புரிந்துகொள்ள முடியாதா உன்னால்

எல்லாவற்றையும்
எப்படித்தான் விளக்கிக்கொண்டிருக்க முடியும்

நடந்தது நிகழ்ந்தது என்பதை விடவும்
நேர்ந்தது என்பதுதான் உண்மை

இஃது ஒன்றும்
தன்னிலை விளக்கம் அல்ல

சமாதானமும்
இல்லைதான்

வாக்குமூலம்
மட்டிலுமே

வாழ்வியல் குறித்து
வக்கணையாய்ப் பேசலாம்

ஒரு விஷயத்தின் முப்பரிமாணத்தையும்
காணமுடிவதுதான் கடினம்

கவிதை
எழுதலாம்

மனசைப் புரிந்துகொள்வது
சுலபம் இல்லை

வேறென்ன
சொல்ல

3. எங்கள் புதிய வாடகை வீடு

தெருவிலிருந்து
முதலில் ஒரு முடுக்கு

‘காம்பவுண்டு‘க்குள் வந்தபிறகு
இன்னொரு முடுக்கு

வளவின் பின்புறத்தில்
தெற்கு பார்த்த தனி வீடு

மேல்புறம்
ஓர் இடிந்த வீடு

கீழ்புறம்
பெரிய காலி மணை

அங்கே அண்டைவீட்டார்
கொட்டும் குப்பை

காற்றில் குப்பைகள்
பறந்து வந்துகொண்டிருக்கும்

குறிப்பாக பாலிதின் பைகள்
பிளாஸ்டிக் கோப்பைகள் பேப்பர்கள்

குப்பை பொறுக்கிப்போட்டுக்கொண்டு
இருக்க வேண்டும்

குடியிருக்க வந்தோமா
குப்பை பொறுக்க வந்தோமா

காலி மனையில் ஒரு
தூர் வாரப்படாத கிணறு

அதிலிருந்துதான்
செலவுக்குத் தண்ணீர்

வீடும்கூட
முடுக்கு மாதிரிதான்

பட்டாளை அடுக்களை மற்றும்
ஒரு சிறு அறை கீழே

மாடியில்
இரண்டு அறைகளும் கழிப்பறையும்

குளியலறை
கீழே தனியே

கழிப்பறைக்கு மாடியில்
கிணற்றுத் தண்ணீர் வரத்துண்டு

குளியலறையோடு இணைந்த கழிப்பறைக்கு
குற்றாலம் தண்ணீர்

ஆனால் குளிப்பதற்கான
தண்ணீர் இல்லை

வாளிகளில் பிடித்துவைத்து
எடுத்துக்கொண்டு போகவேண்டும்

வாடகை
ஆயிரத்து ஐநூறு

மின் கட்டணம்
தனி

பகலில் ஈக்களுக்கும்
இரவில் கொசுக்களுக்கும் பஞ்சமேயில்லை

தென்காசி ஊரில்
வீடு கிடைப்பதே கஷ்டம்

புதிதாக
கட்டினால்தானே

கவிஞனென்று தெரியாமல்போனாலும்
குடிகாரனென்று விளம்பரமுண்டுதானே

ரதவீதி வீடுகளின் முன்புறமெல்லாம்
கடைகளாக மாறிவருகின்றன

வீடுகளெல்லாம் மருத்துவமனைகளாக வங்கிகள்
வணிக வளாகங்களாக அலுவலகங்களாக
உருவெடுக்கின்றன

பணம்தான்
விஷயம்

நாவல் எழுதச் சொல்கிறார்கள்
நண்பர்கள்

ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுத
அவசியம் சொந்த வீடு வேண்டும்

ஏதோ நம்மால் முடிந்தது
எளிய கவிதைகள்தாம் பாலு சார்

4. அவன் எப்போது தாத்தாவானான்

தெருவில்
விளையாடிக்கொண்டிருந்தான்

பள்ளிக்கூடம்
போய்க்கொண்டிருந்தான்

வேலை
பார்த்துக்கொண்டிருந்தான்

ஊர்
சுற்றிக்கொண்டிருந்தான்

கவிதை
எழுதிக்கொண்டிருந்தான்

குடித்துக்
கொண்டிருந்தான்

பிள்ளைகளை ஆளாக்க
பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தான்

ஜோதிஷம்
கற்றுக்கொண்டிருந்தான்

ஸ்தலயாத்திரை
செய்துகொண்டிருந்தான்

என்னவெல்லாமோ
பண்ணிக்கொண்டிருந்தான்

எப்படியெல்லாமோ
இருந்துகொண்டிருந்தான்

இப்போது பார்த்தால்
தாத்தா என்கிறார்கள்

இன்னும் அவன்
கல்லத்திமுடுக்குத் தெருவிலேயே நின்றுகொண்டிருக்கிறான்
Related Posts Plugin for WordPress, Blogger...