யாமம்: கதைக்கும் எனக்கும் இடையில் -எஸ்.ராமகிருஷ்ணன்

எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன. தெருக்களும் வீடுகளும் அக்கதையை தனக்குத்தானே சொல்லிக் கொண்டுமிருக்கின்றன. மரத்திலிருக்கும் வரை பூமியறியாத இலைகள் உதிர்ந்து பூமிக்கு வந்த பிறகு ஆகாசத்தை நோக்கிப் பறக்க எத்தனித்துக் கொண்டேயிருப்பதை போல என்றோ நடந்து முடிந்துவிட்ட இக்கதைகள் மீண்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொள்வதற்காக எவரெவர் வழியாகவோ எத்தனிக்கின்றன. கதைகள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல, நினைவுகளும் கற்பனையும் ரகசியமும் நிராசைகளும் வலியும் சந்தோஷமும் ஒன்று கலந்தே கதையென உருக்கொள்கின்றன.

இந்தியாவின் பழமையான நகரங்களில் சுற்றித் திரிகையில் யாரோ தெரிந்த மனிதன் அழைப்பது போல தெளிவான குரலில் இடிபாடு கொண்ட கோட்டைகளும் துறைமுகங்களும் இருண்ட வீதிகளும் என்னை அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். கடந்த காலத்தின் திரையில் சிறிய துளை விழுந்து, அதன் வழியாகக் காட்சிகள் பீறிட்டு வருகிறதோ என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

லக்னோவின் தெருக்களில் சுற்றியலைந்தபோது குதிரையின் கால் எலும்பு ஒன்றைக் கண்டெடுத்தேன். எந்தக் குதிரையின் கால் எலும்பு அது எனத் தெரியாது. ஆனால் ஓடி ஓடி சலித்த குதிரையொன்றின் கால் எலும்பு என்பது அதைக் கையில் தொட்டுப் பார்த்தபோது தெரிந்தது. எந்த நூற்றாண்டின் குதிரை அது, எங்கு பிறந்த குதிரையது, யார் அதில் சவாரி செய்திருப்பார்கள், எவ்வளவு தூரம் அது ஓடிக் கடந்திருக்கும் என்று மனது எதையெதையோ கற்பனை செய்துகொள்ளத் துவங்கியது.

குதிரையின் உடல் இல்லை. ஆனால் காலம் அதன் கால் எலும்புகளை மட்டும் மிச்சம் வைத்திருக்கிறது. அநேகமாக இது குதிரைக்கு மட்டுமில்லை. மனித வாழ்க்கைக்கும் அப்படிதான் காலம் ஏதோவொரு சிறு துண்டை மிச்சம் வைத்திருக்கிறது. ஒரு துண்டாக மிஞ்சியிருப்பதற்குக்கூட பாக்கியம் வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் தூசியாகி காற்றில் கலந்துவிட்டிருக்கக்கூடும். ஆயிரமாயிரம் மனிதர்கள் வாழந்து மடிந்த நகரங்களில் இன்று அதன் சுவடுகளே இல்லை. அரண்மணைகளும், அதன் மனிதர்களும் காற்றில் மறைந்து போய்விட்டார்கள். காலத்தின் கரங்கள் கருணையற்றவை. அது கலைகளைத் தவிர மாமனிதர்களைக்கூட அழித்து விடுவதில் தயக்கம் காட்டுவதேயில்லை.

சொல்லப்படாத மனித ரகசியங்கள் என்னவாகின்றன என்று எத்தனையோ இரவுகள் யோசித்து இருந்திருக்கிறேன். எவ்வளவு மனிதர்கள் ரகசியங்களோடு இறந்து போயிருக்கிறார்கள். எல்லா ரகசியங்களும் வலியும் வேதனையாலும் உருவாக்கப்பட்டதுதானே. ரகசியங்கள் தானே உருவாவதில்லை. நாம் உருவாக்கிக்கொள்கிறோம். பின்பு அதை வெளிப்படுத்த முடியாமல் வாழ்நாள் முழுவதும் சுமந்து திரிகிறோம். மனிதர்களை போலவே நிலப்பரப்பும் இயற்கையும் எவ்வளவோ ரகசியங்களைக் கொண்டிருக்கின்றன.

ஆக்ராவின் அருகில் ஒரு பழைய மண்பாதையை பார்த்தேன். அது ஒரு காலத்தில் மிகப் பெரிய ராஜபாட்டை என்று சொன்னார்கள். இன்று அந்த பாதையில் போக்குவரத்தேயில்லை. பாதை அழிந்து போயிருக்கிறது. அந்தப் பாதையின் ஓரமாக தூர்ந்து கிடந்த குளமும், விருட்சங்களும் காலத்தால் கைவிட்டதைப் போன்று உருக்குலைந்திருந்தன. புழுதி பறக்கும் அந்தப் பாதை தன் கதையைச் சொல்ல யாருமின்றி முனங்கிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. உலகின் சொல்லித் தீராத கதைகளில் ஒன்று பாதைகளின் கதை.

கிராமத்தில் உள்ள வீடுகளில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கின் சுடர்கள் இரவில் மக்கள் உறங்க துவங்கியபிறகு யாவும் தனியே ஒரு இடத்தில் ஒன்று கூடுகின்றன என்றும் அவை அந்தந்த வீட்டில் வாழும் மனிதர்களின் அன்றாட செயல்களை, கோபதாபங்களைப் பகிர்ந்து கொண்டுவிட்டு இருட்டில் மறைந்துவிடுகின்றன என்றும் சிறுவயதில் ஒரு கதையைக் கேட்டிருக்கிறேன்.

பின்னொரு நாள் என் பயணத்தில் அது உண்மை என்றே தோணியது. விளக்குகள் பகலில் அணைக்கப்படுவதற்கான காரணம் இரவில் அவை கேட்டும் கண்டுமிருந்த ரகசியங்களாகத்தான் இருக்கக்கூடும் என.

கதைகளின் கூடாரமாக விரிந்திருக்கிறது இரவு. பகலைப் போல விஸ்தாரமாக இரவை நாம் அறிந்திருக்கவில்லை. தண்ணீரைப் போல நம்மை எல்லா பக்கங்களிலும் சூழந்துகொண்டு இதம் தரும் இரவின் நறுமணம் இன்னும் முழுமையாக உணரப்படவேயில்லை. எல்லா இரவுகளும் எதையெதையோ நினைவுபடுத்துகிறது.

இந்த நாவல் இரவில் கரைந்துபோன மனிதர்களின் வாழ்வைப் பற்றியதே. அவர்கள் நறுமணத்தைப் போல சில நிமிடங்கள் பரிமளத்தோடிருந்து பின்பு கரைந்துபோய்விட்டார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த கணங்கள் முக்கியமானவை. கையில் கிடைத்த எலும்புத் துண்டிலிருந்து குதிரையைக் கற்பனை செய்துகொள்வது போல ஏதோ சில நினைவுகளிலிருந்து முன்னும் பின்னுமாக வலைபின்னி வளர்ந்திருக்கிறது இந்தக் கதை.

சென்னையில் அலைந்து திரிந்த இரவுகளும், தலைசாய்க்க இடம் தந்த அறைகளும் அங்கிருந்த திரவம் போன்ற இருளும், தனிமையும், மனிதர்களின் விசித்திர குணபாவங்களும், அழிந்த பாதைகளுமே இந்த நாவலை எழுதத் தூண்டியவை. அவ்வகையில் இது இரவின் கதை.

யாமம், எஸ்.ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம், இரண்டாம் பதிப்பு, ஜீன் 2011. பக்கம் 5–6


Related Posts Plugin for WordPress, Blogger...