January 2, 2014

பூமியை வாசிக்கும் சிறுமி -சுகுமாரன்

‘பூமியை வாசிக்கும் சிறுமி’ 2006–வரை சுகுமாரன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. அவர் கவிதைகளை மொத்தமாக வாசிக்கும் வாய்ப்பு தற்போதே கிட்டியது. அதில் பல கவிதைகள் என் வாசிப்பனுபவத்திற்கு அப்பாற்பட்டவை. அவற்றில் நான் நுழையவும் விரும்பவில்லை. எனக்கு உறவு முக்கியம். மனிதன் உறவுகளால் பின்னப்பட்டவன். நான், நீ, பிறர் என்ற மூன்றையும் பற்றி சொல்லும் கவிதைகளையே நான் அதிகமும் விரும்புகிறேன். என்னை நான் கற்றுக்கொண்டால், நீயுடன் சுமுகமாக உறவாட முடியும். நானும் நீயும் இணக்கமாக இருந்தால், பிறருடன் சேர்ந்து பயணிக்கும் வாழ்க்கை இலகுவாகும். கவிதை என்றில்லை கட்டுரை, நாடகம், நாவல், சிறுகதை அனைத்திலும் நாம் கண்டடைய வேண்டிய இலக்கு அதுவே. இலக்கியத்தின் இலக்கு அதுவன்றி வேறு என்ன?

பூமியை வாசிக்கும் சிறுமி எனும் தலைப்பிலேயே ஒரு கவிதை உள்ளது. அது படிப்பதற்கு எளிமையான கவிதையாகவும், இதில் என்ன இருக்கிறது என்றும் கேட்கத்தோன்றும். ஆனால் அது ஒரு முக்கியமான கவிதை. நம் வாழ்க்கை முழுதும் ஏதோவொன்றைக் கற்றுக் கொள்வதில் கழிந்து விடுகிறது. ஆனால் நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது மற்றொன்றை இழந்துவிடுகிறோம். கற்றுக்கொண்டது நம் கண்களுக்கு கடிவாளம் இட்டதாக ஆகிவிடுகிறது. எனவே கற்றலும் ஒரு வகையில் தெளிவது அல்ல. தெரிவது என்று வேண்டுமானால் சொல்லலாம். நம்மைப் பலவற்றிலிருந்தும் விலக்கி வைப்பதாகவே கற்றல் ஆகிவிடுவது மிகப்பெரிய சோகம்.

மடியிலிருத்தி
அரிசிபரப்பிய தாம்பாளத்தில்
பிஞ்சுவிரல் பிடித்து நான்
பயிற்றுவித்த குட்டிப் பெண்
வாழ்க்கையின் முதல் கடிதம் எழுதியிருந்தாள்
நாலுவரி நீளம்

‘அன்புள்ள சுகுமாரன் சாருக்கு
சுகம். நீங்கள் சுகமா?
இங்கே நேற்றைக்கும் மழை பெய்கிறது
வேறு விசேஷமில்லை
சர்க்கரை முத்தங்களுடன்...’

பட்டுப் பூச்சியைத் தொட்ட
சுட்டுவிரலைப் போல
வடிவமெய்தாத ஒவ்வொரு எழுத்திலும்
நிழல் படியாத ஒளியின் வர்ணம்

அரிசிதாம்பாளத்திலிருந்து
காகித வெளியை அடைய
எழுத்தைத் திறந்து
சொற்களைத் திறந்து
வரிகளைத் திறந்து
வந்திருந்தாள் குட்டிப் பெண்

மகிழந்து கசிந்தேன்
எனினும்
வார்த்தைகளாலேயே இனி
பூமியை வாசிப்பாள் என்பதால்
மனவெளியில் ஏதோ நெக்குவிடும் பேரோசை

நாம் அமாவாசை, பௌர்ணமி எல்லாவற்றையும் நேரில் பார்த்தா தெரிந்து கொள்கிறோம்? நாம் வானத்தை அண்ணாந்து பார்த்து எத்தனை காலங்கள் இருக்கும்? நம்மைப் போல் அவளும் இனி பட்டுப் பூச்சியை, மழையை, ஏன் அனைத்தையும் காகிதங்களிலிருந்தே அறிந்துகொள்வாள். கற்றலில் குறைபாடு இல்லாதபோது, அது இப்படியாக கற்றலின் குறைபாடாகிறது.

இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த ஐந்து கவிதைகளைத் தருகிறேன். மனிதர்களிடையேயான உறவை, உறவின் சிக்கலை நுட்பமாகச் சொல்லும் கவிதைகள் இவை.


1. அவரவர் வீடு

ஒரே வீட்டில் வாழ்கிறோம் நாம்
ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்
ஒரே வீட்டிலும்
ஒவ்வொரு வீட்டில் வாழ்கிறோம்

என் வீட்டுச் சுவரில் உன் படம்
எனினும்
உன்னுடையதல்ல எனது வீடு
உன் வீட்டுச் சுவரில் என் படம்
எனினும்
என்னுடையதல்ல உனது வீடு

எனக்கு என் வீடு
உனக்கு உன் வீடு

என் வீட்டுக் கதவு வழியாக
நீ நுழைய முடிவதில்லை
உன் வீட்டுக் கதவு வழியாக
நானும்

நாம் வீடுகளில் வாழ்கிறோமா?
அல்லது
வீடுகளின் காவலில் இருக்கிறோமா?
எனக்குப் புரியவில்லை
உனக்கு?

2. நீரின்றி அமையாது

திடமென்றால் இயங்குவது சிரமம்
ஆவியென்றால் அடங்குவது கடினம்
எனவே
திரவங்களால் பிணைத்தேன் உறவுகளை

ஒவ்வொரு உறவுக்கும்
ஒவ்வொரு திரவம்

தாய்மைக்கு முலைப்பால்
சகோதரத்துவத்துக்கு இரத்தம்
காதலுக்கு உமிழ் நீர்
தோழமைக்கு வியர்வை
பகைக்குச் சீழ்
தாம்பத்தியத்துக்கு ஸ்கலிதம்
துரோகத்துக்குக் கண்ணீர்

பிணைத்து முடிந்ததும் கை கழுவினேன்
தண்ணீரால்
மீண்டும்
அதே நீரால் பிணைத்தேன்
உன்னையும் என்னையும்

தெரியுமா உனக்கு?
உறவுகளைப் பிணைக்க
தண்ணீர் தவிர தரமான திரவம்
வேறில்லை

என் உறவுகள் எல்லாம்
தண்ணீரால் ஆனவை

ஏனெனில்
நீரின்றி அமையாது உறவு

3. கனிவு

நாள் கணக்காய்
பக்குவப்படாமல் வெம்பும் கேள்வி
‘உறவில் கனிவது எப்படி?’

சொற்கள் புகைந்த மனதில்
வாழையானேன்
மிஞ்சியது சருமம்

ஸ்பரிசங்களின் தவிட்டுச் சூட்டில்
மாங்காயானேன்
எஞ்சியது கொட்டை

உடற்காயத்தில் சுண்ணாம்பு தகிக்கப்
பலாவானேன்
மீந்தது பிசின்

இப்படிப் பழுப்பது
இயல்பல்ல

எனவே
கனியத் தொடங்குகிறேன் இப்போது
ஒட்டுறவு இல்லாத புளியம்பழமாக

4. காத்திருத்தல்

‘அங்கே வருகிறேன்’ என்று
அவர் சொன்ன இடத்தில்
காத்திருந்தார் இவர்

வரவில்லை அவர்

‘இங்கே வருகிறேன்’ என்று
இவர் சொன்ன இடத்தில்
காத்திருந்தார் அவர்

வரவில்லை இவர்

‘எதிர்பாராமல் சந்திக்கலாம்’ என்று
காத்துக்கொண்டேயிருக்கிறார்கள்
அவரும் இவரும்
அவரவர் இடத்தில்

5. சாத்தியங்கள்

கிளையிலிருந்து உதிரும்
இலையின் முனகல் புரியுமா?
எனில்
மரத்தின் வரலாறு தெரியும் உனக்கு

சிறகிலிருந்து பிரியும்
இறகின் அலைச்சல் அகப்படுமா?
எனில்
பறவையின் சுதந்திரம் வசப்படும் உனக்கு

மேகத்திலிருந்து விலகும்
துளியின் நீர்மை உணரக் கூடுமா?
எனில்
நதியின் ஜாதகம் சாத்தியம் உனக்கு

சொல்லிலிருந்து வெளியேறும்
மௌனத்தின் குரல் கேட்கலாகுமா?
எனில்
கவிதையின் ஜீவிதம் புரியும் உனக்கு
Related Posts Plugin for WordPress, Blogger...