January 18, 2014

யாமம் -எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை படிக்கத் தேர்வு செய்வதை எப்போதும் நாமே தீர்மானிக்க முடியாது. மாறாக அதை அந்தப் புத்தகங்களே தீர்மானிக்க முடியும். எழுத்தாளனின் ஆன்மா அமானுஷ்யமாக புத்தகங்களில் குடிகொண்டிருக்கிறது. அதுவே நம்மைத் தூண்டிவிட்டு அந்தப் புத்தகத்தை வாசிக்க வைக்கிறது. புத்தக அலமாரியில் சதா தூங்கும் புத்தகங்களைவிட, எப்போதும் விழித்திருக்கும் புத்தகமே நம் மூலமாக தன்னைத் தேர்ந்தெடுக்கச் செய்து, தன்னைத் தானே வாசித்துக் கொள்கிறது.

புத்தக அலமாரியில் இருக்கும் எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்ற யோசனையில் இருந்தபோது என்னுள் தோன்றிய விசித்திர எண்ணமிது. ஆச்சர்யமாக நான் படிக்கத் தேர்ந்தெடுத்த எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் இதேபோன்ற ஒரு லயிப்பில், கட்டமைப்பில், புனையப்பட்ட நாவலாக அமைந்திருக்கிறது.

கதைகள் சொல்வதற்கும் சரி, கேட்பதற்கும் சரி இருட்டுதான் சரியான நேரம். கதைகளை உற்பத்தி செய்யும் நேரமாக இருள் மட்டுமே இருக்கிறது. கனவுக்கும், தூக்கத்துக்கும், இரவுக்கும் இடையேதான் கதைகள் உருவம் கொள்ளத்தொடங்குகின்றன. இந்த வகையிலேயே யாமத்தில் வரும் கதைகள் உருக்கொண்டு நம்முன் விரிகின்றன.

நாவலின் முதல் பகுதி, வியாபாரத்திற்காகக் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் நுழைந்து நம்மை மெல்ல மெல்ல அடிமைப்படுத்திய கதையையும், மதராசபட்டிணம் உருவான கதையையும் சொல்கிறது. ஒரு நகரம் உருவாகும் விதம் விந்தையானதுதான். நகரம் உருவாவதன் பின்னே எண்ணற்ற மனிதர்களின் எண்ணற்ற கனவுகளும் தேவைகளும் நிறைந்திருக்கின்றன. அவையே நகரமாக உருக்கொள்கின்றன என்பதை இப்பகுதி நமக்குப் புரியவைக்கிறது.

அடுத்து வரும் பகுதியில் நான்கு கதைகள் சொல்லப்படுகிறது. 1. அத்தர் எனும் வாசனை திரவியம் தயாரித்து விற்கும் அப்துல் கரீம் மற்றும் அவன் மனைவிகள் மூவரின் கதை. 2. வெள்ளைக்காரர்களிடம் நில அளவை பணியில் ஈடுபடும் பத்ரகிரி, லண்டணில் சென்று கணிதம் கற்கும் அவன் தம்பி திருச்சிற்றம்பலம் மற்றும் அவர்களின் மனைவிகள் பற்றிய கதை. 3. தனக்கும் தன் தம்பிக்கும் இடையே சொத்துக்காக நீதி மன்றம் அலையும் கிருஷ்ணப்பா, அவனுடன் இருக்கும் எலிசெபத் என்ற விலைமாதுவின் கதை. 4. நாய் செல்லும் திசையெல்லாம் அதைத் தொடர்ந்து சென்று தன் வாழ்க்கையைத் தேடும் சதாசிவப் பண்டாரத்தின் கதை. இந்தக் கதைகள் மாறிமாறி வரும்படியாக நாவல் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஆசரியர் இந்தக் கதைகளை எவ்வாறு தொடர்புபடுத்தப்போகிறார் அல்லது தொடர்புபடுத்தாமல் விடப்போகிறார் எனும் கேள்வியுடனே நாவலைப் படிக்கிறோம். இந்த நான்கு கதைகளினூடே வரலாறும் நுட்பமாகச் சொல்லப்படுகிறது. ஒரு வகையில் அந்த வரலாற்றுப் பார்வைதான் ராமகிருஷ்ணனின் பலமாக இருந்து நாவலை நடத்துகிறது எனலாம்.

திருச்சிற்றம்பலம் கப்பலில் லண்டன் செல்லும் காட்சிகள் நம் மனதில் திரைப்படத்திற்கு நிகரான காட்சியாக விரியச்செய்ததின் மூலம் சிறப்பானதொரு புனைவைத் தந்திருக்கிறார் நாவலாசிரியர். தேவதைக் கதைகளுக்கான அம்சம், யதார்த்தம், வரலாறு, ஆன்மீகம் என்ற பலவும் இணைந்த ஒரு கலவையாக நாவல் பின்னப்பட்டிருக்கிறது. நாமும் புத்தகத்தின் உள்ளே நுழைந்து அதன் கதை மாந்தர்களுக்குப் பின்னே பயணிப்பதான ஒரு மன மயக்கத்தை நாவல் நமக்குத் தருகிறது. யாமம் திரவமாக இந்த உலகத்தில் வியாபிப்பதுபோல் நாமும் திரவமாக மாறிப் புத்தகத்தின் உள்ளே நுழைந்து அதன் வரிகளில் ஏறிச் செல்வதான ஒரு பிரமை ஏற்படுகிறது. கரீமின் அத்தரின் மணம் நம் நாசிகளில் ஏறி, அது நம்மைச் சுற்றிலும் வியாபித்து நம்மை ஆழ் துயில் கொள்ளச் செய்வதாகவும், நம் கடந்த ஜன்மத்தின் வாழ்க்கையைக் கண்டடைந்ததாகவும் நமக்குத் தோன்றுகிறது. கனவு வெளியில் சஞ்சரிப்பதான ஒரு உணர்வு நாவல் முழுதும், அத்தரின் மணம்போல பரிமளித்துக் கொண்டேயிருப்பது இந்நாவலின் சிறப்பு. நாவலை வாசித்து முடித்ததும் கனவிலிருந்து விழித்தெழுந்தது போன்ற உணர்வைப் பெறுகிறோம்.

இந்நாவலின் குறிப்பிடத்தக்க, மலைப்பூட்டும் ஒரு அம்சம் ராமகிருஷ்ணனின் கற்பனை வளம். எத்தனை எத்தனை கதைக்களன்கள், காட்சிகளின் சித்தரிப்புகள்! ஊடும் பாவுமாக எண்ணற்ற காட்சிகளின் சித்தரிப்புகள் நாவல் முழுதும் பரந்து விரிந்திருக்கிறது. நாவலில் அவைகள் தம்மைத்தாமே வளர்த்தும், விரித்தும் கொள்வதான ஒரு தோற்றம் நமக்குள் எழுகிறது. அவரின் கற்பனை வளம் வற்றாத ஊற்றாக பீறிட்டுக் கிளம்பி நாவலைச் செழுமைப்படுத்துகிறது. மேலும் கவித்துவமான வார்த்தைகளும் வாக்கியங்களும் நாவலின் வாசிப்பிற்கு ரசனையூட்டுகிறது. இதுவரை நாம் கண்டும் கேட்டுமிராத புனைவின் வெளியில் நாவல் நம்மை இட்டுச்செல்கிறது.

வாழ்க்கையில் நடக்கும் பலவற்றிற்கு நமக்குக் காரணம் தெரிவதில்லை. ஏன் எதற்காக என்று தெரியாமலேயே பலவற்றையும் நாம் செய்கிறோம். செயலின் பலன் கிட்டும்போதுதான் சந்தோசம் அல்லது துக்கம் அடைகிறோம். இப்படியான காரணம் புரியாத பல செயல்களே நம் வாழ்வை நடத்திச்செல்கின்றன. பிரபஞ்சத்தின் சிறு துளியான நாம், இம் மகாபிரபஞ்சம் நம்மை இயக்கும் காரணத்தை அறிய முடியாது என்பது மட்டுமல்ல அறிய முயற்சிப்பதும் மடமையாகும். நமக்காக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய இத்தகைய காரணம் புரியாத செயல்களை நாம் செய்கிறோம் அல்லது செய்விக்கப்படுகிறோம். இதுவே நாவலைப் படிக்கும்போதும் படித்து முடித்த பின்னரும் நாம் அடையும் உணர்வு.

யாமம் வாசிக்கவேண்டிய அவசியமான நாவல். யாமம் தரும் வாசிப்பின் அனுபவம் சுகமானது. அந்த சுகத்திற்காகவே நாம் அதை வாசிக்கலாம். ஆனால் வாசித்து முடித்ததும் இனம்புரியாத பாரம் மனதை அழுத்துகிறது. மனித வாழ்க்கை இவ்வளவு அலைக்கழிப்புகளும், வேதனையும் நிரம்பியதாக ஏன் இருக்கவேண்டும்? இலகுவானதாக, எளிமையானதாக ஏன் இல்லை? அப்படி இந்த வாழ்க்கையை வாழவேண்டிய அவசியம் என்ன? வாழ்வதின் அர்த்தம்தான் என்ன? என்ற கேள்விகள் மனதில் எழுந்து இரவின் நிசப்தத்தில் கரைந்துபோகிறது.

இந்நாவலின் கதையைப் பற்றிச் சொல்வதைவிட, அது தரும் வாசிப்பனுபவத்தைச் சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால், கதையைப் பற்றி விரிவாக ஏதும் சொல்லவில்லை. அவ்வளவு சுலபமாக கதையைச் சுருக்கிச் சொல்லிவிட முடியாது என்பதும் ஒரு காரணம். யாமம் தாகூரின் இலக்கிய விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Posts Plugin for WordPress, Blogger...