மகாநடிகன் –பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

“இன்று மதியம் மிகச் சரியாக மூன்று மணிக்கு ராதா பிச்சர்ஸ் பேலஸின் வெள்ளித் திரையில், தென்னிந்தியத திரைப்பட நடிப்புச் சக்ரவர்த்தி, தமிழ் நாட்டின் நாட்டியப் பெருமையின் புகழ்க் கொடி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் தங்கப் பதக்கம்.”

நீங்கள் இப்போது கேட்ட இந்த விளம்பரம், முப்பது வருடங்களுக்கு முன்பு கேரளத்தின் மிக முக்கியமான நகரத்தின் தெருக்களில் ஆட்டோ ரிக்க்ஷாவின் மேல், தடித்த உச்சஸ்தாயியில் முழங்கிய ஒரு இளைஞனின் குரல். ஒரு நேரச் சாப்பாட்டுக்காகவும், ஐந்து ரூபாய் கூலிக்காகவும் சினிமா விளம்பரம் செய்து, உதய அஸ்தமனம் வரை ஊர் சுற்றிக் கொண்டிருந்த அந்த 18 வயது பையனின் பெயர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

இருபது வருடங்களுக்குப் பிறகு, மெட்ராஸில், அரண்மனை போன்ற வீட்டிற்குள் ராஜ கம்பீரமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த மதுபான அறையில் இத்தாலியன் ஸ்படிகப் பாத்திரத்தில் தன் கைகளாலேயே, சாட்சாத் சிவாஜி கணேசன் எனக்கு ப்ளாக் லேபிள் ஸ்காட்ச் விஸ்கி ஊற்றிக் கொடுத்தபோது, கேரள நகரின் வீதிகளில், குரல் விற்றுப் பிழைத்த அந்தப் பழைய பையன் என் நினைவலைகளில் மிதந்தான்.

1986–ல் தான் நான் சிவாஜி கணேசனை முதன் முதலில் பார்த்தேன். மெட்ராஸில் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் என் நண்பர் பிரதாப் போத்தன் இயக்கிய எம்.டி.யின் திரைக் கதையான “ருதுபேதம்” என்ற திரைப்படத்தின் ஐம்பதாம் நாள் விழா நடந்துகொண்டிருந்தது. சிவாஜி கணேசன்தான் அந்த நிகழ்ச்சிக்குத தலைமை. எம்.டி.வாசுதேவன் நாயர், கமலஹாசன், ஆகியவர்களோடு அன்றைக்கு நானும் ஒரு பேச்சாளராக இருந்தேன்.

1995–ல் என் நண்பர் வி.பி.கெ.மேனோன் ஒரு படம் எடுக்கத் தீர்மானித்தார். முக்கியமான வேடமேற்று நடிக்க சிவாஜி கணேசனும், மோகன்லாலும் சம்மதித்திருந்தார்கள். திரைக்கதை ஜான்பால். ராஜீவ்நாத் தான் படத்தை இயக்குவது என்று தீர்மானித்ததில், ஒரு நாள் கதை டிஸ்கஷனுக்காக நானும் மெட்ராஸ் போக வேண்டி வந்தது.

ஒரு நாள் காலையில் ராஜீவ்நாத் என்னிடம் சொன்னார்.

“இன்னக்கிச் சாயங்காலம் சிவாஜி கணேசன் அவருடைய வீட்டுக்கு இரவு விருந்துக்கு நம்மைக் கூப்பிட்டிருக்கார்.”

அன்று மாலை ஜான்பாலும் நானும் ராஜீவ்நாத்துடன் சிவாஜி கணேசனின் வீட்டுக்குப் போனோம்.

வீடென்றா சொன்னேன். இல்லை. அது ஓர் அரண்மனை.

சிற்ப வேலைப்பாடுகள் செய்த மிகப்பெரிய கதவைத் தாண்டி உள்ளே நடந்ததும் விசாலமான ஒரு தளம் நம்மை வரவேற்கிறது. அங்கே தங்கத்தால் இழைத்த இரண்டு பெரிய யானைத் தந்தங்கள் இருந்தன. இடப்புறத்தில் மேலே செல்ல பெரிய மாடிப்படிகள்.

வேலைக்காரன் எங்களை மேலே வருமாறு பணித்தான். இயல்பாய் மாடி ஏறிய நான் ஒரு திருப்பத்தில் நடுங்கிப்போய் கையெடுத்து தலை குனிந்து வணங்க முற்பட்டேன். அங்கே சுவரி்ல் வீரபாண்டிய கட்டபொம்மனின் வேடத்தில் வீரத்தையும் கம்பீரத்தையும் கொட்டி முழங்கிய சிவாஜி கணேசனின் ஆயில் பெயிண்ட செய்யப்பட்ட படம். அடுத்த திருப்பத்தில் உடைவாள் உருவின நிலையில் சத்ரபதி சிவாஜி. வலது பெருவிரலால் மீசை முறுக்கி மந்தகாசப் புன்னகையுடன் நிற்கும் ராஜராஜசோழன் ஒரு புறம்.

மேல் மாடியில் பெர்ஷிய கம்பளம் விரித்த விசாலமான தளம். அதன் நடுவில் ஒரு சிம்மாசனம். சுற்றிலும் விலை உயர்ந்த சோஃபாக்கள். வெளி நாடுகளில் செய்த ஸ்படிக தூக்கு விளக்குகள் மேலிருந்து தொங்கி்க் கொண்டிருந்தன. அங்கங்கே விலை மதிக்க முடியாத சிற்பங்கள். ஒரு புறம் கண்ணாடி அறைக்குள் ப்ரெஞ்சு கவர்மெண்ட் சிவாஜி கணேசனின் நடிப்பைப் பாராட்டி அளித்த செவாலியர் விருதுடன் கூடிய மிகப் பெரிய வெள்ளைக்குதிரை.

எல்லாம் பார்த்து ரசித்தபடியே நாங்கள் சோஃபாக்களில் அமர்ந்தோம். வேலைக்காரன் திராட்சைக் கொடிகள் போல அலங்கரிக்கப்பட்ட ஸ்படிக பாத்திரங்களில் மாம்பழச்சாறு கொண்டு வந்தான். அதைக் குடித்து முடித்தபோது…

தூரத்தில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த கதவு திறக்கப்பட்டது. மனைவியும் வேலையாட்களும் இருபுறமும் நடந்து வர, சாட்சாத் சிவாஜி கணேசன் எங்களைப் பார்த்து நடந்து வந்து கொண்டிருந்தார். வெள்ளையில் கதர்ச் சட்டையும் வேஷ்டியும் அணிந்து, நெற்றியில் விபூதித்தீற்றல் இட்டு வந்தவரின் முடியிலும் தாடியிலும் நரை ஓடியிருந்தது. கழுத்தில் தங்கம் கட்டிய ருத்திராட்சம் அணிந்திருந்தார்.

ஒரே சீராய் அடி எடுத்துவைத்து, ஒவ்வொரு பாத அடி வைக்கும்போதும், மறுதோள் முன்னோக்கி சாய, தலை நிமிர்ந்து, நெஞ்சு விரித்து, இசைக்கு அசைப்பதுபோலக் கைகள் வீசி, பார்வை இமை அசையாது மெல்ல மெல்ல சிங்க நடை நடந்து வரும், அந்தத் திராவிட மகா நடிகனைப் பார்த்தபோது ராஜராஜசோழனின் வருகையைப் பார்த்த தமிழ்நாட்டுத் தெருப்பிள்ளைகளைப்போல நான் துள்ளி எழுந்தேன். அவர் ஒரு ராஜநடை நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து, இடது கால் மேல் வலது காலை ஏற்றி வைத்து, இடது கையை இடுப்பில் ஊன்றி, வலது கால் முட்டில் வலது கையைத் தாங்கி நிமிர்ந்து உட்கார்ந்தார். பிறகு வலது புருவக் கோடியைச் சுழித்து ஒரே ஒரு சலனம், மனைவியும் வேலைக்காரனும் மறைந்தே போனார்கள்.

நானும் ராஜீவ்நாத்தும் அவரின் காலில் விழுந்து வணங்கினோம். உடல் பருமனும் தொப்பையும் காரணமாக குனிய முடியாத ஜான்பால் நின்றபடியே வணங்கினார்.

வலது கையால் ஆசீர்வாதம் செய்த சிவாஜி கணேசன், சாந்த கம்பீரமான குரலில் சொன்னார்.

“உட்காருங்கோ.”

நாங்கள் உட்கார்ந்தோம். கண் மலர்ந்து எங்களை நன்றாகப் பார்த்த பிறகு ராஜீவ்நாத்திடம் கேட்டார்.

“என்ன ராஜீவ் என்ன சாமாச்சாரம்? கதை ரெடியாயிடிச்சா?”

அவர்கள் கதையைப் பற்றியும் கதாபாத்திரத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க நான் சிவாஜி கணேசனின் புருவங்களையும் கண்களையும் முக அபிநயங்களையம் உதடுகளையும் கைவிரல்களின் தாள, லய அபிநயங்களையும், சலனங்களையும் பார்த்துக்கொண்டு நிசப்தனாய் அமர்ந்திருந்தேன்.

ஊழித் தாண்டவமாடும் ருத்ரன், செஞ்சோற்றுக் கடன் தீர்த்துக் கவச குண்டலம் கொடுத்த கர்ணன், காளமேகத்தின் கவிதை ததும்பச் செய்த கவிகுல குரு காளிதாசன், அமிழ்தத் தமிழ் மொழியின் உன்னதக் கவியான பாரதி, தாய்த் தமிழ் மண்ணின் வீர தீரச் சந்ததியான வீரபாண்டிய கட்டபொம்மன், சோழ குலோத்துங்கச் சூரியனான ராஜராஜசோழன்.

சிவாஜி கணேசன் பரிபூர்ணமாய் நடித்துப் புகழின் உச்சியில் வலம்வந்து என் சிறு வயது முதல் என்னால் ஆகர்ஷிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என் மன அடுக்குகளில் மின்னி மறைந்தன.

திரைக்கதை பற்றிய விளக்கங்கள் முடிந்தபோது இடது கண்ணால் என்னை அலட்சியமாய்ப் பார்த்து ராஜீவ்நாத்திடம் கேட்டார்.

“இந்தப் பையன் யாரு?”

நான் ஒரு மலையாளக் கவிஞன் என்று ராஜீவ்நாத் என்னை அறிமுகப்படுத்தினார்.

சட்டென சிவாஜி கணேசனின் பாவம் மாறியது. கண்களில் சாந்தம் பரவ, முகம் மரியாதை கலந்த பக்தியில் ஆழந்தது. தலையை ஒரு புறமாய்ச் சரித்து, தன்னை அப்படியே கொஞ்சம் சுருக்கி, என் முன்னால் இருகைகளையும் கூப்பி அவர் மென்மையாய் சொன்னார்.

“கவிஞரா? வணக்கம்.”

எனக்கான மரியாதை அல்ல அது, காவியக் கலையிடம் மூத்த திராவிடனுக்கு இருக்கும் ஆழ்ந்த ஆதரவையும், மரியாதையையும் தான் அவர் காண்பித்தது என்பதைப் புரிந்து கொள்ளும் தெளிவு எனக்கு இருந்தது.

“உள்ளே போகலாம்.”

அவர் எழுந்தார். நாங்கள் பின் தொடர்ந்தோம்.

எகிப்தின் முன்னாள் பிரெசிடெண்டான நாசர், நடிகர்களான பால் ம்யூனி, ஓமர் ஷெரீப், ரிச்சர்ட் பர்ட்டன், ப்ரதீப், ராஜ்கபூர் போன்ற உன்னதமான நண்பர்கள் வரும்போது தங்கும் அறைகளையும், அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சிவாஜி கணேசன் எங்களுக்கு ஒவ்வொன்றாய்க் காண்பித்தார். பிறகு அவர் எங்களை வேறு ஓர் அறைக்கு அழைத்தார். புராதனமாக அலங்கரிக்கப்பட்ட அவரது ரகசிய மதுபான அறையாக இருந்தது அது. நடுவே உயர்ந்த ஒரு சிம்மாசனம், சுற்றிலும் விலை உயர்ந்த சோஃபாக்கள். இளம் நீலமும், இளஞ்சிவப்புமாக மங்கிய வெளிச்சங்கள். சீரான வாத்தியச் சங்கீதம். விலை உயர்ந்த பலதரப்பட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள்.

சிம்மாசனத்தில் சிவாஜி கணேசனும், சுற்றிலும் நாங்களும் உட்கார்ந்தோம். வேலைக்காரன் சோடா, ஐஸ், மது அருந்த டம்ளர்கள், பொன்னிறமாய் வறுத்த முந்திரிப் பருப்பு, ஆப்பிள் துண்டுகள் எல்லாம் கொண்டுவந்து வைத்தான்.

சிவாஜி கணேசன் எழுந்து, ஒரு பாட்டில் ஜானிவாக்கர் ப்ளாக் லேபில் விஸ்கி எடுத்து, சீல் உடைத்து அவர் கைகளினாலேயே ஊற்றிக் கொடுத்தார். விஸ்கி குடித்துக் கொண்டே அவர் வாழ்வின் சில விஷயங்கள் குறித்து எங்களோடு பகிர்ந்து கொண்டார்.

1925–ல்தான் கணேசன் பிறந்தது விழுப்புரம். சின்னய்ய கணேசன் என்பதுதான் பெயர். கணேசன் பிறந்தபோது அப்பா ஜெயிலில் இருந்தார். திண்டுக்கல் குண்டுவெடிப்பு கேஸில் பிரதியாகி, ராஜதுரோகக் குற்றத்திற்காக வெள்ளைக்காரன் ஜெயிலில் அடைத்துவிட்டான். ஒன்பதாவது வயதில்தான் கணேசன் அப்பாவை முதன் முதலாய்ப் பார்க்கிறார்.

கணேசன் பள்ளிக்கூடத்தில் படித்ததேயில்லை. ஐந்து வயதாகும்போதே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ப்ஃரொபஷனல் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். இளம் பருவத்திலேயே தமிழ் நாட்டின் மிகச்சிறந்த நாடக நடிகன் என்று பெயரெடுத்தார். அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தார். அதைப்பார்த்த பெரியார் ராமசாமி நாயக்கர்தான், வி.சி.கணேசனுக்கு ‘சிவாஜி கணேசன்‘ என்று பெயரிட்டார். அந்தப் பெயரே நிலைத்தும் விட்டது.

இளம் வயதிலேயே தன் சகோதரியின் மகளான கமலாவைச் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டார்.

அந்தக் காலத்தில் பாலக்காடு, கொச்சின், திருவனந்தபுரம் போன்ற கேரள நகரங்களில் எல்லாம் சிவாஜி கணேசன் நாடகம் நடித்துள்ளார்.

பத்தொன்பதாவது வயதில்தான், பராசக்தி என்ற திரைப்படத்தில் நடிக்க, முதன் முதலாய் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வருகிறார். கள்ளர் இனத்தைச் சேர்ந்த சிவாஜி கணேசனை, அந்தக் காலத்தில் சினிமா உலகைத் தன் அதிகாரப்பிடியில் இறுக்கியிருந்த பிராமண மேதாவித்தனம் மிக அதிகமாக வேதனைப்படுத்தியது. ஆனாலும் பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்படத்துறையின், உச்சாணிக் கொம்பில் மலரச் செய்து அழகு பார்த்தது.

மிகவும் பிஸியான திரைப்பட நடிகனாக இருந்தபோதும், அவர் அதே ஈடுபாட்டுடன் நாடக நடிகனாகவும் தொடர்ந்து வந்தார். ஐம்பது வயதுவரைச் சொந்தமாக நாடகக் கம்பெனி நடத்தி, அரங்கங்களில் நடித்தும் வந்தார்.

“சரித்திர நாடகங்களிலும், புராண நாடகங்களிலும் மாகபுருஷர்களை அரங்கங்களில் அவதார புருஷர்களாய் நடமாடவிடத்தான் கடவுள் என்னைப் படைத்தான். அரங்கத்துக்கு நடிப்போடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது என்னுடைய சினிமா நடிப்பு ஒண்ணுமேயில்லை. சரித்திரத்திலும் புராணங்களிலும் வரும் வீர புருஷர்களைத் தத்ரூபமாய் நடித்து அவர்களை எங்கள் நாட்டின் சாமானியப்பட்டவர்களும், ஏழைகளுமான மக்களின் இதயத்தில் குடிபுகச் செய்தேன். அப்படி என்னைப் பெற்ற தாய் நாட்டினுடையதும் எங்கள் மக்களுடையதும் ஆத்ம வீர்யத்தையும், ஆத்ம அபிமானத்தையும், அந்தஸ்தையும் நான் ஜொலித்து நிலைநிற்கச் செய்தேன். இதுதான் இந்த நாட்டிற்கு நான் செய்த கலாச்சாரப் பங்களிப்பு. என் நாடு என்னை ஒரு நாளும் மறக்காது.”

இப்படிப் பேசி நிறுத்திய போது, அறுபத்தி ஐந்து வருஷங்கள் அபிநயக் கலையின் அபார சமுத்திரத்தில் கப்பலோட்டிய அந்தத் தமிழனின் முகத்தில் தெரிந்த ஆத்ம திருப்தியை வர்ணிக்க என்னுடைய எளிய வார்த்தைக்கு சக்தியில்லை.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படம் தான் சிவாஜி கணேசனை உலக பிரசித்திபெற்ற நடிகனாய் மாற்றியது. ஆனாலும் அவர், “கட்டபொம்மன் நாடகம்தான் பிரமாதம். படம் ஒண்ணுமேயில்லை” என்றார்.

அரங்கை அடக்கி வாழந்த, அந்தக் காலத்தின் ஞாபகங்கள் அவருடைய கண்களில் பளீரென மின்னிப் பனித்தன.

“அந்த நாடகத்தின் டயலாக் ஏதும் ஞாபகம் இருக்கிறதா?”

ராஜீவ்நாத்தான் அந்தக் கேள்வியை கேட்டு விட்டார்.

“தலை போனாலும் மறக்க முடியுமா?”

“ஒரு டயலாக் எங்களுக்காகச் சொல்ல முடியுமா?”

ராஜீவ்நாத் கேட்ட கேள்வியால் நான் பயந்துபோனேன். யாரிடம் இதைக் கேட்கிறோம் என்று ராஜீவ் யோசிக்கவில்லையா? அவரை சிவாஜி கணேசன் கோபித்துக் கொள்வார் என்றே நான் நினைத்தேன். ஆனால் நம்பமுடியாத அந்த அதிசயம்தான் அப்பட்டமாய் நிகழந்தேறியது.

சிவாஜி கணேசன் சிறிது நேரம் கண்மூடிக் கைகூப்பி அமர்ந்திருந்தார். பிறகு மெதுவாகக் குனிந்து, இடது கையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து, மெதுவாக நிமிர்ந்தெழுந்து, சட்டென விஸ்வரூபமெடுத்தது போலத் திரும்பி நின்றார். நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான, வயதான, எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசனல்ல அது. மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீரபாண்டிய கட்டபொம்மன்தான் அது. சூரியன் அஸ்தமனம் ஆகாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரைக்கு நேராக ஆதித் தமிழக வீர பௌருஷத்தின் சிங்கக் கர்ஜனை முழங்கியது.

“நீ ஏர் பிடித்தாயா? களை வெட்டினாயா? கஞ்சிக்கலயம் சுமந்தாயா? அங்கு, கொஞ்சி விளையாடும் எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? நீ என்ன எனக்கு மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே.”

தமிழக மக்களை சிலிர்த்தெழச் செய்த உலகப் பிரசித்திபெற்ற அந்த டயலாக்கைக் கொஞ்சமும் மறக்காமல், ஏற்ற இறக்கத்துடன், ஒரே மூச்சில் சொல்லி முடித்து, நெற்றியின் வியர்வையை வடித்துவிட்டு சிவாஜி கணேசனாய்ச் சுருங்கி சோஃபாவில் திரும்பி வந்து உட்கார்ந்து விஸ்கி எடுத்துக் குடித்துக்கொண்டு எங்களை ஆழமாக ஒரு முறை பார்த்தார்.

ஜான்பாலும் ராஜீவ்நாத்தும் மௌனத்தில் ஆழந்திருந்தார்கள். ஓர் இளம் சூட்டினை லஜ்ஜையோடு நான் உணர்ந்தபோதுதான், என்னுடைய உள்ளாடைகள் நனைந்தது எனக்குத் தெரிய வந்தது.

“மலையாளத்தில் சரித்திர புராண நாடகங்கள் இல்லையா?”

சிவாஜி கணேசன் கேட்டபோது ஜான்பாலும் ராஜீவ்நாத்தும் நானும் ஒரு நிமிடம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தோம். சொந்த மொழியை விரும்பாமல் அன்னிய ஆங்கில மொழிக்கும், சிந்தனைக்கும், தூபம் போடுவதில் சந்தோஷம் கொள்ளும் அல்பனான சராசரி மலையாளியை நினைத்து நாங்கள் வெட்கினோம்.

“இராமயணத்தை அடிப்படையாகக் கொண்டு சி.என்.ஸ்ரீ கண்டன் நாயர் சாகேதம், காஞ்சன சீதா, லங்காலஷ்மி என்று மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறார்.”

மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள ராஜீவ்நாத் சொன்னார்.

“லங்காலஷ்மியில் ராவணனின் டயலாக் முழுவதும் பாலன் பாக்காம சொல்லுவான்”-என்னைப் பார்த்து ஜான்பால் சொன்னார்.

“ராவணனின் இரண்டு டயலாக்கை எடுத்து விடுடா பாலா, சிவாஜி சார் கேட்கட்டும்.”

ராஜீவ்நாத் ஆவேசத்தோடு சொன்னார்.

நான் பதறிப்போனேன். சிவாஜி கணேசனின் வீட்டிற்குப்போய் அவரிடமே நாடக டயலாக் சொல்வதா?

“சும்மா எடுத்து விடறா, இங்க என்ன பார்க்கறே.”

ராஜீவ்நாத் மறுபடியும் என்னைத் தூண்டினார். நான் பதுங்கிப் பதுங்கி அமர்ந்து பார்த்தேன்.

“சொல்லய்யா, இங்க நாம ஃப்ரண்ட்ஸ் ம்ட்டும்தானே இருக்கோம். எதுக்கு வெட்கப்படறே?”

சிவாஜி கணேசன் வாத்சல்யத்தோடு உற்சாகப்படுத்தினார். அதில் எனக்குத் தைரியம் வந்தது. கிளாஸில் மீதி இருந்த விஸ்கியை ஒரே இழுப்பில் குடித்து முடித்தேன். பிறகு எழுந்து நடிப்புச் சக்ரவர்த்தி சிவாஜி கணேசனின் காலைத் தொட்டு வணங்கினேன். அவர் என் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

திருவிளையாடலில் ருத்ர தாண்டவமாடிய சிவாஜி கணேசனை இதயத்தில் தியானித்து, சிவ பக்தனான ராவணனின் ஆக்ரோஷமான உத்தரவுகளைக் கீழ்ஸ்தாயியில் நான் ஆரம்பித்தேன். மெல்ல, மெல்ல ராவணன் என்னை ஆகர்ஷித்து ஆவேசப்படுத்தினான்.

“லங்கையில் போர்க்கொடிகள் பறக்கட்டும். எதிரிகளைத் தடுக்க ஆயத்தமாகலாம், கோட்டையைப் பத்திரப் படுத்துங்கள், வடக்குக் கோட்டை வாயிலில் மகராட்சன், கிழக்கிலும் மேற்கிலும் சுகசாரணர்கள் நிற்கட்டும், தெற்கில் நிகும்பன், அகம்பனன் முன்னணியில், படைபோக ஆரம்பிக்கட்டும். பிரகஸ்தன் படையின் பின்னால் வந்து யுத்த நிலையை கணிக்கட்டும், தூம்ராட்சன் எதிரிப் படைகளின் பின்னாலிருந்து அழித்து வரட்டும், வலதில் மாக பார்ஷ்வன். இடதில் மகோதரன், யானை ஆயிரம், ரதம் ஆயிரம், குதிரைகள் இரண்டாயிரம் காலட்படை ஒரு கோடி, ஆ… நானே வெல்வேன்.”

அரைப் போதையிலும் நான் விடாமல் சொல்லி முடித்தேன். அதைக்கேட்டு, தான் ஒரு மாபெரும் நடிகன் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு முதன் முதலாய் ஒரு நாடக டயலாக்கைக் கேட்டு ஆகர்ஷிக்கப்பட்ட சாதாரண மனிதனைப்போலக் கை தட்டினார் சிவாஜி கணேசன். என் குரல் நன்றாக இருப்பதாகப் பாராட்டவும் செய்தார்.

“ராவண வேடத்தில் நீங்கள் நடித்தால் ப்ரமாதமாக இருக்கும்.” -ராஜீவ்நாத் சிவாஜி கணேசனிடம் சொன்னார்.

“என்ன பண்றது? மலையாளம் தெரியாதே. வயசும் ஆயிடிச்சு.”

ஒரு கதாபாத்திரத்தை இழந்த நடிகனின் நிராசை உதட்டிலும், குரலிலும் படர சிவாஜி கணேசன் சொன்னார்.

பிறகு அவர் எங்களை விசாலமான சாப்பாட்டறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர் மனைவி கமலா பல விதமான, தரமானதொரு விருந்தினை ஏற்பாடு செய்துவிட்டு எங்களுக்காய்க் காத்திருந்தார்.

சிவாஜி கணேசனும் எங்களோடு அமர்ந்தார். கமலா அம்மா எங்களுக்குப் பரிமாறினார்.

திரும்பி வரும்போது, வாசல் வரை வந்து அந்தத் திராவிடத் தம்பதிகள் எங்களை வழியனுப்பினார்கள். எங்களுக்கு சுபராத்திரி சொல்லிக் கையசைத்து நிற்கும் சிவாஜி கணேசனையும் அவரின் சரிபாதியாய் சேர்ந்து நிற்கும் மனைவியையும் பார்வையிலிருந்து மறையும்வரைப் பார்த்துக்கொண்டே வந்தேன்.

சீறிப் பாயும் காரில் உட்கார்ந்திருக்கும் போது, என் இதயத்தில் தெருக்களில் குரல் விற்றுப் பிழைத்த அந்தப் பழைய பையனின் சப்தம்…

“தென்னிந்திய நடிப்புச் சக்கரவர்த்தி, தமிழ் நாட்டின் நாட்டியப் பெருமையின் புகழ்க் கொடி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும்…”

சிதம்பர நினைவுகள், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. வம்சி புக்ஸ், மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2009, பக்கம் 97-105. 
Related Posts Plugin for WordPress, Blogger...