லா.ச.ரா. என்கிற கைவினைஞர் -மலர் மன்னன்

லா.ச. ரா. என அறியப்படும் லா.ச. ராமாமிருதம் காலமாகிவிட்டார் என்னும் செய்தியை 2007 அக்டோபர் மாதம் 30ம்தேதி காலை திருப்பூர் கிருஷ்ணன் தொலைபேசியின் மூலம் அறிந்தேன்.

ஒரு காலகட்டத்தில் பித்தனைப் போல அவரது எழுத்துக்களைத் தேடித் தேடிப் படித்து, அவற்றில் கிறங்கிப்போனதுதான் முதலில் நினைவுக்கு வந்தது. அது ஒரு பருவம். பின்னர் அதே லா.ச.ராவின் எழுத்தில் சில வரிகளைக்கூடப் படிக்க இயலாமல் சலிப்பு ஏற்பட்டது இன்னொரு கால கட்டம். கால் இதழில் அவர் அப்போது எழுதத் தொடங்கியிருந்த நாவலின் சில பகுதிகளை விரும்பி வாங்கி வெளியிட்டதும் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் எப்படியும் அவர் தவிர்க்கப்பட முடியாதவர் என்பதால்தான்.

லா.ச.ராவின் எழுத்து எனக்கு முதலில் அறிமுகமானது அவர் இதழ்கள் என்கிற ஒரே தலைப்பில் கலைமகள், சுதேசமித்திரன், கல்கி முதலான இதழ்களில் சிறுகதைகளை எழுதத் தொடங்கியபோதுதான். அதன் பிறகு அவரது ஜனனி சிறுகதைத் தொகுப்பின் முதற் பதிப்பைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ஜனனி என்னும் சிறுகதையைப் படித்ததுமே ஜுரக் கனவில் பிரக்ஞை தவறி மிதக்கிற மாதிரி ஆகிவிட்டது. அந்தச் சிறுகதைக்குள் அப்படியொரு சக்தி பொதிந்திருந்தது. ராமாமிருதம் ஏதோவொரு ஆவேசத்தில்தான் அந்தச் சிறுகதையை எழுதியிருக்க வேண்டும் என்று அப்போதே தோன்றியது. பல வருடங்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்க நேர்ந்தபோது ஜனனியை அவர் எழுதியது பற்றிய எனது அனுமானத்தைச் சொன்னபோது, ஆமாம், எல்லாச் சிறுகதைகளுமே ஒரு வேகத்திலிருந்துதான் என்னிடமிருந்து வருகின்றன. ஆனால் ஜனனியை எழுதியது நீங்கள் சொல்கிற மாதிரி ஒரு ஆவேச வெறியில்தான். இதைச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்களே என்று சிலாகித்தார்.

லா.ச.ராவை அல்லாது, அவரது எழுத்தின் அறிமுகம் கிடைத்துப் பல ஆண்டுகள் கழிந்த பின் ஏதோவொரு ரயில் நிலையத்தின் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் கங்கா என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் அது. லா.ச. ராவின் சிறுகதைத் தொகுதிகளைக் கலைஞன் பதிப்பகந்தான் முதலில் தொடர்ந்து வெளியிட்டது. அதன் காரணமாகவே எனக்கு அந்தப் பதிப்பகத்தின் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1966 இறுதிவாக்கில் மாசிலாமணி அறிமுகமானார். கலைஞன் பதிப்பகம் நான் ஏதாவது எழுதிக் கொடுத்தால் வெளியிடுமா என்று அவரிடம் கேட்டேன். கட்டாயம் வெளியிடுகிறேன் என்று சொன்னார். ஆனால், என் பதிப்பகத்தைத் தேடி வந்து இவ்வாறு கேட்கத் தூண்டியது எது, எனக் கேட்டார். நீங்கள் லா.ச.ராவின் சிறுகதைகளைத் தொடர்ந்து தொகுப்பாக வெளியிடுகிறீர்களே அதனால்தான். ஒரு ரசனையுள்ள வாசகர் என்கிற முறையில்தான் நீங்கள் புத்தகங்களைத் தேர்வுசெய்து வெளியிட்டு வருகிறீர்கள். ஒரு வியாபாரியாக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள இது போதாதா? எனவேதான் நானாக உங்கள் பதிப்பகத்தைத் தேடிவந்தேன் எனச் சொன்னேன். அதன் பிறகு சறுக்கு மரம் என்னும் குறுநாவலை அவருக்கு எழுதிக் கொடுக்க, அது கலைஞன் பதிப்பக வெளியீடாக வந்தது. இவ்வாறாக, எனது சறுக்கு மரத்தை வெளியிட்ட கலைஞன் பதிப்பகமும் அதன் உரிமையாளர் மாசிலாமணியும் எனக்கு அறிமுகம் ஆகக் காரணமாக இருந்தவர் லா.ச.ராதான்.

லா.ச.ராவை முதன்முதலில் நேரில் சந்தித்ததும் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணியின் இல்லத்தில்தான். அப்போது நூலகம் என்னும் பெயரில் வந்துகொண்டிருந்த மாத இதழில் லா.ச.ரா.வின் நேர்காணலை வெளியிட மாசிலாமணி விரும்பினார். தென்காசியிலோ வேறு ஏதேனுமொரு தென்மாவட்ட நகரிலோ பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி வந்த லா.ச.ரா. விடுமுறையில் சென்னைக்கு வந்த சந்தர்ப்பத்தை மாசிலாமணி பயன்படுத்திக்கொண்டார். நேர்காணலின்போது நானும் இருக்க வேண்டும் என மாசிலாமணி விரும்பினார். ஒரு காலகட்டத்தில் என்னைப் பித்தனாகக் கிறங்க வைத்தவர் லா.ச.ரா. என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் அவரைச் சந்திக்கச் சென்றேன்.

அந்தச் சமயத்தில் லா.ச.ரா. புத்ர என்னும் தலைப்பில் தனது முதல் நாவலை எழுதியிருந்தார். லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் அதனை வெளியிட்டிருந்தது. மகன் இல்லாதவர்களுக்கு புத் என்னும் நரக வாசம் கிட்டும் என்று எழுதிவைக்கப்பட்டிருப்பதைக் குறியீடாகக் கொள்ளும் உத்தேசத்தில்தான் இவ்வாறு தலைப்பிட்டிருக்கிறீர்களா எனக்கேட்டேன். அதனை அவர் எதிர் பார்க்கவில்லை. சமுதாயத்தில் பெண்ணை இரண்டாம் இடத்தில் வைக்கக்கூட அல்லாமல் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்காத இத்தகைய கருத் தோட்டத்தை ஆமோதிப்பதுபோல இவ்வாறான தலைப்பைச் சூட்டியது நியாயந்தானா என்றும் தொடர்ந்து கேட்டேன். அவர் முகம் வாடிப்போனார். எடுத்த எடுப்பிலேயே அவரிடம் அந்த விஷயத்தைப் பேசியிருக்கக் கூடாது என்பதை உணர்ந்து உள்ளூர வருந்தினேன். என்னோடு பேசுவதில் அவருக்கு உற்சாகம் பிறக்குமாறு, அவரது தொடக்ககாலச் சிறுகதையான ஜனனி பற்றிக் குறிப்பிட்டதும் முகம் பிரகாசமானார். மிகவும் சரளமாக என்னுடன் பேசலானார்.

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் நீங்கள் ஒரு ஆசான் என்கிற ஸ்தானத்தில் இருப்பவர். ஆனால், சாகித்திய அகாதமி தற்காலத் தமிழ் இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்கிற பிரக்ஞையே இன்றி, தகுதியற்றவர்களுக்கெல்லாம் விருது வழங்கிக்கொண்டிருக்கிறது. எனவே, இனி அது உங்களுக்கு விருதுவழங்கினால் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனச் சொன்னேன். விருதோடுகூட ஐந்தாயிரம் ரூபாயும் தருகிறார்களே அதை ஏன் விட வேண்டும்? அதைக்கொண்டு ஒரு மனை வாங்கிப்போடலாமே எனச் சொல்லிப் புன்னகைத்தார். அப்போதெல்லாம் சாகித்திய அகாதமி விருதுடன் ரூபாய் ஐந்தாயிரந்தான் அளித்துவந்தார்கள். வீட்டுமனைகளும் அதே அளவு தொகைக்குக் கிடைத்து வந்தன. அவரது பதில் அவர் ஒரு வங்கியில் பணிபுரிகிறவர் என்பதை எனக்கு நினைவூட்டியது.

அதன் பிறகு சில வருடங்கள் கழிந்து, லா.ச.ரா. ஓய்வுபெற்றபின் அவர் வசித்துவந்த அம்பத்தூருக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். நான் சென்றது, அவர் அப்போது எழுதிவந்த நாவலின் சில பக்கங்களை அவரிடமிருந்து பெற்று கால் இதழில் நாவல் அறிமுகமாக வெளியிடலாமா எனக் கேட்பதற்கு.

லா.ச.ரா. வீட்டில் மிகவும் எச்சரிக்கையுடன் அவரது எழுத்து பற்றிப் பேசாமல் எனது தேவையை மட்டும் சொன்னேன். கால் இதழின் முதல் இதழை அளித்தேன். புரட்டிப் பார்த்துவிட்டு மிகவும் கனமாக இருக்கும் போலிருக்கிறது என்றார். வெங்கட் சாமிநாதன், ந. முத்துசாமி, சா. கந்தசாமி, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், கோமல் சாமிநாதன் எனப் பலரும் அதில் எழுதியிருந்தனர். சுந்தர ராமசாமி அச்சமயம் தாம் எழுதிவந்த ஜே.ஜே: சில குறிப்புகள் என்னும் நாவலிலிருந்து சில தொடக்கப் பக்கங்களைக் கொடுத்திருக்க, அவையும் முதல் இதழில் பிரசுரமாகியிருந்தன. லா.ச.ரா. அவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, அப்போது தாம் எழுதிக்கொண்டிருந்த நாவலின் சில பக்கங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் பிரசுரத்திற்கு அளித்தார்.

லா.ச.ராவை நான் இறுதியாகச் சந்தித்தது எஸ். வைத்தியநாதன் வீட்டில். வைத்தியநாதன் அருமையான கவிதைகள் பல எழுதியவர். ழ கவிதை இதழ் ராஜகோபாலன், ஞானக்கூத்தன் முதலானவர்களுக்கு என் மூலமாக அறிமுகமாகி அவர்களுடன் ஐக்கியமாகிப் போனவர். ராதாகிருஷ்ணன் சாலை என்று தற்போது அறியப்படுகிற எட்வர்ட் எலியட் சாலையில்தான் வைத்யாவின் வீடு. அங்கு லா.ச.ராவை அழைத்துச் சில நாள்கள் விருந்தினராக உபசரித்து, ஒவ்வொரு நாளும் மாலையில் பலரை அழைத்து லா.ச.ராவுடனான இலக்கியச் சந்திப்பை நடத்திவந்தார். தமக்குத் தெரிந்த, தாம் மதிக்கிற எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகைக்காரர்களை அந்தச் சந்திப்புக்கு அழைத்தார். அப்படித்தான் என்னையும் லா.ச.ராவுடனான சந்திப்புக்கு வைத்யா அழைத்தார்.

வைத்யா வீட்டு மாடியில், காற்றோட்டம் மிக்க விசாலமான பால்கனியில் லா.ச. ராவுடன் நாங்கள் சிலர் பேசலானோம். மாலனும் உடன் இருந்ததாக நினைவு. பொதுப்படையான இலக்கியப் போக்குகள் குறித்துப் பேசியபின் அவருடைய எழுத்து பற்றிக் குறிப்பாகப் பேச்சு மையம் கொண்டது. நான் சிறிது கடுமையாக எனது விமர்சனத்தை வைக்கலானேன்.

பாஷையைப் பற்றிக் கவலைப்படாமல், அது பற்றி அலட்டிக்கொண்டிருக்காமல் இயல்பாக விஷயத்தைச் சொல்வதில்தான் படைப்பிலக்கியத்தின் வெற்றி இருப்பதாகச் சொல்லி லா.ச.ரா. சொல்ல வேண்டிய விஷயத்தைவிட, சொல்லப்படும் விதத்தில்தான் கவனம் செலுத்துகிறார்; அதிலேயே அவரது பொழுது கழிந்துவிடுகிறது என்றேன்.

“நான் பொற்கொல்லனைப் போல நகாசு வேலை செய்கிறேன்” என லா.ச.ரா. அதற்கு விளக்கம் அளித்தார். “அப்படியானால் நீங்கள் படைப்பாளியல்ல, கைவினைஞர்தான். ஒன்லி எ க்ராஃப்ட்ஸ்மேன், நாட் எ க்ரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்” எனச் சொன்னேன். லா.ச.ரா. அதனைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. “க்ராஃப்ட்ஸ்மேனாக இருப்பதும் ஒரு அங்கீகாரந்தான் அல்லவா” எனச் சொன்னார்.

எழுத வேண்டிய விஷயத்தை விட்டுவிட்டு எழுதுகிற முறையை மேலும் மேலும் செம்மைப்படுத்துவதிலேயே கவனமாக இருப்பதும் தனக்கு அழகாகத் தோன்றும் சொற்கட்டிலும் வாக்கிய அமைப்பிலும் தானே சொக்கிப்போவதும் படைப்பிலக்கியத்திற்கு ஒவ்வாது என்று நான் சொன்னபோது, சொல்கிற விதத்தின் அழகும் முக்கியந்தானே என்று வைத்யா வாதிட்டார்.

அதற்கு அசோகமித்திரனை நான் சிலாகிப்பதற்குக் காரணம் அவர் தமது எழுத்து நடையைப் பற்றிக் கவலைப்படாமல் தாம் சொல்ல விரும்பும் விஷயத்தைச் சொல்லிக்கொண்டு போவதுதான் என்றேன். மேலும் இதனை விளக்க, சில்பி கோவில் கோவிலாகச் சென்று மூலவர் சந்நதிகளில் நாள் கணக்கில் அமர்ந்து படிமங்களை நகல் எடுத்தார். அவை அச்சு அசலாக அந்தப் படிமங்களைப் பிரதிபலிக்கும். ஓவியர் மணியமும் அஜந்தா ஓவியங்களை வரைந்தார். ஆனால், அவற்றில் மணியத்தின் சுயம் வெளிப்படும். சில்பி கைவினைஞர், மணியம் கலைஞர் என்று சொன்னேன். ஆனாலும், என்ன இருந்தாலும், நீங்கள் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கவனத்தை ஈர்க்கும் எழுத்தை அறிமுகம் செய்தவர்தான், அந்த வகையில் நீங்கள் ஒரு மாஸ்டர், ஒரு நிலை, ஒரு படிக்கட்டு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று நான் எனது வாதத்தை முடித்தபோது, லா.ச.ரா. மிகவும் மகிழ்ச்சியடைந்தவராய், இதைச் சொன்னதற்காக உங்களுக்கு நன்றி என்றார்.

லா.ச.ராவை எப்போது நினைத்துக்கொண்டாலும் அவரது அடர்த்தியான வெண்ணிறப் புருவங்கள்தாம் கண்ணெதிரே தோன்றுகின்றன. கூடவே சிங்கத்தின் பிடரி போன்ற அவரது சிகையும். இந்தச் சித்திரம் என்றும் அழியாது.

நன்றி: காலச்சுவடு இதழ் 96
Related Posts Plugin for WordPress, Blogger...