நீராலானது -மனுஷ்ய புத்திரன்

னுஷ்ய புத்திரனின் நீராலானது கவிதைத் தொகுப்பை வாசித்த பிறகு, கவிதைப் படைப்பின் உத்வேகமான காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகளைக் கொண்டதாக முன்னுரையில் அவர் குறிப்பிடுவது சரிதான் என்று தோன்றியது. இக்கவிதைத் தொகுப்பின் வசீகரம் அவர் அதை மூன்று பகுதிகளாகப் பிரித்திருப்பதுதான். 

உன்னோடிருத்தல்
தன்னோடிருத்தல்
பிறரோடு இருத்தல். 

மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பதற்கு அடையாளம்தான் இந்த மூன்றும். இந்த மூன்று பகுதிகளும் இணைந்த முக்கோணம்தான் வாழ்க்கை. இந்த முக்கோணத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். தான் என்பதைக் கூர்மையான பகுதியாகக் கொண்டால் அதன் எதிரான பகுதிகளை தனக்கு நெருக்கமான உறவையும், அடுத்தவரையும் வைத்துப் பார்க்கலாம். மாறாக சமதளமான பகுதியில் ஒன்றை தான் என்றும், மற்றொன்றை நெருங்கிய உறவாகவும் கொண்டால் அதன் எதிரான கூர்மையான பகுதி அடுத்தவர் என்றாகிறது. இப்படி வாழ்க்கையில் நாம் உறவு கொள்ளும் தன்மைக்கேற்ப இம்முக்கோணம் அர்த்தம் கொள்கிறது.

கவிதைகளில் வெளிப்படும் வார்த்தைகளும் சரி, வாக்கியங்களும் சரி மிகவும் எளிமையானவை. ஆனால் அவை தரும் வாசிப்பின் அனுபவங்கள் நம்மைப் பல்வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்பவை. எளிமை என்பது தோன்றம்தான் என்பதை நாம் கவிதைகளை வாசி்க்க வாசிக்க உணர முடியும்.

ருவன் இவ்வுலகிலிருந்து மறைந்து போகவேண்டும் என்றால் அவன் தனது சுயத்தைத் தொலைத்தாலே போதும் அவன் காணாமல் போய்விடுவான். அவன் பிறரின் கண்களிலிருந்து மறைந்து வாழவேண்டிய அவசியமில்லை. பிறர் கண்களுக்குத் தென்படாமல் மறைந்திருப்பதுதான் தலைமறைவு என்கிறோம். ஆனால் மனுஷ்ய புத்திரன் அப்படி இல்லை என்கிறார்.

தலைமறைவாகப் போகச் சொன்னார்கள் 

நான் தலையை மழிக்கவில்லை
முகத்தை மாற்றவில்லை 

முதலில் வீட்டை மாற்றினேன்
பிறகு தொலைபேசி எண்களை 

வேலையை மாற்றிக்கொண்டேன்
பிறகு சில பழக்கங்களை 

வருத்தம் தருவதாக இருந்தபோதும்
சார்ந்திருக்கும் மனநிலையினை
கைவிட்டேன் 

இப்போது வாழ்ந்து வருகிறேன்
அதே நகரத்தின்
வேறொரு நகரத்தில் 

அவன் தன் சுயத்தைத் தொலைத்ததால் அதே நகரம் இப்போது வேறு நகரமாக அவனுக்காகிவிட்டது. அந்த நகரமும் அவனை வேறொருவனாக பார்க்கத் தொடங்கிவிட்டது. 

லகத்திலேயே கடினமானது, நாம் பிறர் மீது கொண்டுள்ள நேசத்தை, அதன் தாக்கத்தை, நிரூபிக்க முற்படுவதுதான். நான் அன்போடிருக்கிறேன், பிரியத்தோடு இருக்கிறேன் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? எவ்வளவுதான் முயன்றாலும் எதிர்த்தரப்பினர் அதில் குற்றம் காண்பார்கள். அன்பு என்பது subtle-லானது. அதை நிரூபிப்பது கடினம். ஆனால் நாம் கொண்டுள்ள வெறுப்பை, வஞ்சகத்தை, கசப்பை, மிகச்சுலபமாக வெளிப்படுத்த முடியும். எதிர்தரப்பும் நாம் சிறிது முயன்றாலே இவற்றை அதிகமும் புரிந்துகொள்ளும் சாத்தியம் உண்டு. இதை வைத்து நீராலானது என்று அற்புதமான ஒரு கவிதையைப் படைத்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன். 

வெறுப்பைப்போல திடமாக
வஞ்சகம்போல சந்தேகிக்க முடியாததாக
தீமையைப்போல தொடர்ந்து வருவதாக
கசப்பைப்போல நெஞ்சோடு அடைப்பதாக
குற்றத்தின் கறைகளைப்போல கழுவித் தீராததாக
ஒரு பொய்யைப்போல வாக்குறுதி அளிப்பதாக 

இல்லை
உனதிந்தப்
பிரியங்கள் 

எதிர்மறையான சிந்தனைகள், செயல்கள் போல வலிமையானதாக நேர்மறையான சிந்தனைகளும் செயல்களும் இருப்பதில்லை என்பது மிகப்பெரிய உண்மை. அதை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட இக்கவிதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அபரிமிதமானது. 

ம் வாழ்க்கையில் எத்தனையோ குறைகள் இருக்கலாம். இருந்தும் எல்லாம் ஒரு நாள் சரியாய்விடும் எனும் நம்பிக்கையில்தான் வாழந்துகொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு அற்புதம் நடந்து நமது எல்லாக் குறைகளும் தீர்ந்துபோகும் என்று கனவுகாண்கிறோம். ஆனால் உண்மை என்ன? ஏதாவது அற்புதம் நடக்கப்போகிறதா? ஒர் அற்புதத்திற்காக மனுஷ்ய புத்திரன் சொல்வதைப் பார்க்கலாம். 

ஓர் அற்புதத்திற்காகக் காத்திருக்கிறேன்
அது நிகழவேயில்லை 

அற்புதங்கள் இனி நிகழாதென்றே
சகுனங்கள் சொல்கின்றன 

ஆனால்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
அற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம் 

இன்னும் ஒரே ஒரு கணம்தான்
என்று சொல்லிக்கொண்டேயிருக்கும்
ஒரு கணம் 

நாம் கனவிலிருந்து விழித்து நிதர்சனத்திற்கு வரவேண்டும் என்பதை இக்கவிதை வலியுறுத்துகிறது. 

நாம் கண்டுபிடித்த பலவற்றுக்கும் நாம் அடிமையாகிவிடுகிறோம். பிறகு அதன் சொற்படி நாம் நடக்க ஆரம்பிக்கிறோம். வாழ்க்கை என்பது இயல்பாய் இல்லாமல், இப்படியாக நாம் கண்டிபிடித்த பலவற்றிற்கும் ஏற்ப நடப்பதாக, இயந்திர கதியாக, மாறிவிடுகிறது. ஒரு நாளில், கிழமையில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லைதான். ஆனால் நாம் ஒவ்வொரு நாளுக்கும் பெயரைச் சூட்டியிருக்கிறோம். எனவே அந்தந்த நாட்களுக்கென ஒரு தனிக்குணம் வந்துவிடுகிறது. பிறகு அதற்கேற்ப நம் வாழ்க்கை நடக்கிறது. இதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கவிதைதான் மனுஷ்ய புத்திரனின் நாளும் கிழமையும். 

ஒரு வியாழக்கிழமை
அது ஒரு சனிக்கிழமையென்று
எப்படியோ தோன்றிவிட்டது
எனக்கு 

இந்தக் காலை வெளிச்சத்தின் நிறம்
ஒரு முகத்தை நினைவூட்டும் வாசனை
ரத்தத்தில் இன்னும் மிச்சமிருந்த நேற்றைய மது
எந்தத் தடயங்களாலோ
வேறொரு சனிக்கிழமையின் எல்லாச் சம்பவங்களும்
ஒரு வியாழக்கிழமையில் நிகழ்ந்துகொண்டிருந்தன 

எனது சனிக்கிழமை நடவடிக்கைகள்
வியாழக்கிழமைக்காரர்களை
மிகவும் குழப்பமடையச் செய்துவிட்டன 

ஒரு வியாழக்கிழமைக்கான
எந்தக் கடமையும் நிறைவேற்றப்படாததாலும்
ஒரு சனிக்கிழமைக்கான
பிரியங்களைத் தெரிவித்துக்கொண்டிருந்ததாலும்
அவர்களின் கோபம் அதிகரித்தது
எனக்குத் தெரியவேயில்லை 

வேலை பார்ப்பவர்கள்
டி.வி.பார்ப்பவர்கள்
பேப்பர் பார்ப்பவர்கள்
காலண்டர் பார்ப்பவர்கள்
எல்லோரும்
அவரவர் வியாழக்கிழமைக்குள்
பாதுகாப்பாக இருந்தனர்
முழு நகரமே பாதுகாப்பாக இருந்தது 

போக்குவரத்து
தெருக்களின் பெயர்கள்
தொலைபேசிக் குரல்கள்
இயற்கை உபாதைகள்
எல்லாக் கிழமைகளிலும்
அநேகமாக
ஒன்றுபோல இருப்பதால்
ஒருவனுக்கு இதைப்பற்றி
சந்தேகம் தோன்றாமல் போவது இயற்கைதான் 

கடைசியில்
சனிக்கிழமை எழுத வேண்டிய
ஒரு வாக்கியத்தை
வியாழக்கிழமை நான் எழுத உட்கார்ந்தபோதுதான்
எனது தவறு புரியத் தொடங்கியது 

இப்போதைய பிரச்சினை
எனது வியாழக்கிழமை
என்னவானது என்பதைக்
கண்டுபிடிப்பதல்ல
ஏற்கனவே வாழ்ந்துவிட்ட
ஒரு சனிக்கிழமையை
மீண்டும்
எப்படி வாழ்வதென்பதே 

நுட்டபமாகக் கவனித்தால், மனிதன் ஒரு நம்பிக்கையிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டே இருக்கிறான். அது மதம், கடவுள் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் எல்லா மாற்றங்களையும் தாண்டி மனிதனே ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறான், வெளிப்படுகிறான் எனவே மாற்றங்களால் பயனொன்றும் இல்லை, உண்மையில் மாறவேண்டியது மனிதனே என்பதை இக்கவிதை சொல்கிறது. 

முதல் பதிப்பாக 2001-லும், இரண்டாம் பதிப்பாக 2007-லும் வெளியான இத்தொகுப்பை இவ்வளவு காலங்கள் பிந்தி படிக்க நேர்ந்தது குறித்து வெட்கமும், வருத்தமும் ஏற்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...