அறிவியல் புனைகதைகளின் கூறுகள் -சுஜாதா

முதலில், ‘சைன்ஸ் ஃபிக்சன்’ என்பதற்கான சரியான தமிழ்ச் சொல் பார்க்கலாம். விஞ்ஞானக் கதை அல்லது அறிவியல் புனைகதை இரண்டையும் கலந்து பயன்படுத்தப் போகிறேன், எது நிலைக்கும் என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும்.

ஆங்கிலத்திலேயே 1930–ல்தான் இந்தப் பிரயோகம் நிலைத்தது. அதற்குமுன் சைன்டிஃபிக்சன், சைன்டிஃபிக் ரொமான்ஸ் போன்றவை புழக்கத்தில் இருந்தன. தமிழில் அறிவியல் சார்ந்த புனைகதைகள் மிகவும் குறைவு. ஆனால், சைன்ஸ் ஃபிக்சன் என்னும் பொதுவகையில் சேர்க்கக் கூடிய நூல்களும், சிறுகதைகளும், சில நாவல்களும் தமிழில் இருக்கின்றன.

சைன்ஸ் ஃபிக்சன் எழுதுகிறோம் என்பதை அறியாமலேயே எழுதிய கதைகளைத்தான் ஆரம்பகாலத் தமிழ்ச் சிறுகதைகளில் காண்கிறோம். இதற்கு முக்கியக் காரணம் இதன் மேல்நாட்டு வரையறைகள் நமக்குத் தெரியாமல் இருந்ததே. அவை மிகவும் விஸ்தாரமாக இருந்ததால் பல தமிழ்ச் சிறுகதைகள் தம்மை அறியாமால் இந்த வரையறைக்குள் வந்து விழுகின்றன. மேரி ஷெல்லி 1818–ல் ப்ரான்கன்ஸ்டன் எழுதி வெளியிட்டபோது சைன்ஸ் ஃபிக்சனின் ஆரம்ப விதைகளை விதைக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அதே நிலையில்தான் நம் முதல் தமிழ் விஞ்ஞானக் கதைகளும் உருவாகியுள்ளன. அறிவியல் புனைகதை என்பது என்ன என்பதை அறுதியிட்டுவிடலாம்.

ப்ரையன் ஆல்டிஸ்ஸின் (Brain Aldiss) கூற்று எனக்குப் பிடித்தது. Science fiction is the search for a definition of mankind and his status in the universe in the advanced but confused state of knowledge (science).

‘அறிவியல் புனைகதை என்பது, முன்னேற்றமும் குழப்பமும் நிறைந்த (அறிவியல்) சூழ்நிலையில் மனித இனத்தை வரையறை செய்து பிரபஞ்சத்தில் மனிதனின் இடத்தைத் தேடும் இலக்கியம்.’ இந்த வரையறைதான் மேல்நாட்டில் இந்த ஜாதியில் பிரசுரமாகும் எல்லாக் கதைகளுக்கும் பொருந்துகிறது.

‘காத்திக்’ 'gothic' வகைக் கதைகளில் இருந்துதான் விஞ்ஞானக் கதைகள் வந்தன என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். ‘காத்திக்’ என்றால் இயற்கையை மீறின, அதற்கு மேற்பட்ட அல்லது விநோதமான என்று பொருள். மூன்றுமே இந்த வகைக் கதைகளில் உள்ளன. கதை மாந்தருக்கு இயற்கைக்கு மேற்பட்ட சக்திகள் அதிகமாக இருந்தால், அதை ‘வன்மையான அறிவியல் புனைகதை’ (ஹார்டு சைன்ஸ் ஃபிக்சன்) என்கிறார்கள். கதை மாந்தர்கள் சாதாரண மனிதர்களாக, ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்களாக இருந்து இவர்களுக்கு அசாதாரணமான சம்பவங்கள் நிகழ்வதாக இருந்தால், அதை ‘மென்மையான அறிவியல் புனைகதை’ (ஸாஃப்ட் ஸைஃபி) என்கிறார்கள்.

ஏறத்தாழ உண்மைக்கு மிக அருகிலே நடைபெறக்கூடியதாக, அறிவியல் விதிகளுக்குள் அடங்கும்படியான கதைகளும் எழுதுகிறார்கள். இந்த மூன்றாம் வகை, ஒரு முனை என்றால், மறுமுனையில் எது விஞ்ஞானம், எது மந்தரச் செயல் என்று தெரியாமல் கலந்துவரும். எல்லாக் கலவைகளையும் இந்த இயல் அனுமதிக்கிறது. இதனால்தான் இது மேல்நாடுகளில் மிகப் பிரபலமாகி, குறிப்பாக அமெரிக்காவில் அதிகமாக எழுதப்படுகிறது. சிறகதையின் மற்ற வடிவங்கள் அங்கே மெல்ல மெல்ல வழக்கொழிந்து வரும்போது இவ்வகை மட்டும் செழிப்பதற்குக் காரணம் இந்தக் கலவைச் சுதந்திரம்தான்.

சென்ற நூற்றாண்டின் கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய ‘ஃப்ராங்கன்ஸ்டைன் ஆர் தி மாடர்ன் ப்ரொமீத்தியஸ்’ (Frankenstein or the Modern Prometheus) என்னும் காத்திக் நாவலில்தான் இந்த இயல் துவங்கியது. இதன் கதைச் சுருக்கத்தைச் சொல்வது இந்தக் கட்டுரைக்கு அவசியமாகிறது.

விக்டர் ஃப்ராங்கன்ஸ்டைன் பல புதிய பிரேதங்களின் பல பாகங்களிலிருந்து ஓர் உயிரைத் தாயாரித்து அதற்கு உயிர் ஊட்டுகிறார். அதை உடனே நிராகரித்தும் விடுகிறார். ஆனால், அது தப்பிச் சென்று அவரையும் மற்றவர்களையும் அழிக்க முயலும் அபாயம் வந்துவிடுகிறது. அதற்கு ஒரு ஜோடி தயாரிக்க வேண்டியிருக்கிறது. இறுதியில் அது அழிக்கப்படுகிறது.

இந்தச் சுருக்கத்திலும் ஆரம்பத்தில் நாம் பார்த்த வரையறை பொருந்துவதை-சைன்ஸ் ஃபிக்சனின் முக்கியமான ஒரு கருப்பொருளான ‘விபரீதமாகும் பரிசோதனை’ இருப்பதை உடனே நீங்கள் உணரலாம். (இந்தக் கதையைப் புதுமைப்பித்தன் ‘பிரேத மனிதன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்). தமிழில் முதல் காத்திக் கதை ‘சீவகசிந்தாமணி’ என்று கூறலாம். சச்சந்தனின் கர்ப்பிணி மனைவி மயிற்பொறி மேல் ஆகாய வழியில் சென்று ஒரு சுடுகாட்டில் இறங்கிச் சீவகனைப் பெற்றாள் என்று படிக்கும்போது இதில் காத்திக் கூறுகள் அனைத்தும் உள்ளதை உணரலாம். சீவகன், காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கனகமாலை என்று அழகான பெயர்கள் கொண்ட மங்கையரை ஒவ்வொரு நாட்டுக்கு ஒருத்தியாக ஏறக்குறைய ஒரு டஜன் ராஜகுமாரிகளைக் கல்யாணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு கதையிலும் ‘காத்திக்’ கூறுகள் நிறையவே உள்ளன. டெலிவிஷன்கூட வருகிறது.

அதேபோல் மணிமேகலையிலும் கம்பராமாயணத்திலும் உள்ள அற்புத விஷயங்கள் அனைத்தும் சைன்ஸ் ஃபிக்சன் வகையைச் சேர்ந்தவை. புஷ்பக விமானம், ஏரோப்ளேன் போலவே கொஞ்ச தூரம் ஓடிவிட்டு டேக் ஆஃப் ஆனதைப் பற்றிக்கூடச் சொல்கிறார் கம்பர்.

மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலாம் மாய
விண்ணின் ஓங்கிய தொருநிலை மெய்யுற

என்று புனைந்திருக்கிறார்.

கலிங்கத்துப் பரணியில் நிணக்கூழை எல்லோருக்கும் நிறைய ஊற்றுங்கள் என்று என்று ஏகதேசம் ஒரு பேய் மகாநாடே சொல்லப்பட்டிருக்கிறது. பேய்களிலேயே பார்ப்பனர்கள், புத்தப் பேய்கள், சமணப் பேய்கள் என்று சாதி வித்தியாசம் காட்டி,

உயிரைக் கொல்லா சமணப் பேய்கள்
ஒருபோழ்து உண்ணும் அவை உண்ண
மயிரைப் பார்த்து நிணந்துகிலால்
வடித்து கூழை வாரீரே

உயிர்களைக் கொல்லாத சமணப் பேய்கள் ஒருவேளைதான் சாப்பிடும். அதனால் மயிரை வடிகட்டி அவற்றுக்குக் கூழாக்கி நிணத்தைக் கொடுக்கவும் என்று பாடும்போது செயங்கொண்டார் தமிழின் ஆரம்பகால ‘காத்திக்’ கதை எழுதியவர் ஆகிறார்.

விக்ரமாதித்தன் கதைகள் பல சைஃபி தகுதி பெறுகின்றன. இரு நண்பர்களிடையே தலையும் உடலும் மாறிப்போய் யார் உண்மையான கணவன் என்று மனைவி தடுமாறும் விக்ரமாதித்தன் கதை உண்மையான ஸைன்ஸ் ஃபிக்சன். (இதை கிரீஸ் கர்னாட் ‘ஹயவதனா’ என்ற அற்புதமான நாடகமாக மாற்றினார்). ‘உர்சூலா லா குவைன்’ (Ursula La Guin) சென்ற வருடம் எழுதிய ‘ஐலண்ட் ஆஃப் இம்மார்டல்ஸ்’ என்னும் கதை விக்ரமாதித்தன் கதை போலத்தான் இருக்கிறது. ஒரு வகை கொசு கடிப்பதால் ஒரு தீவில் உள்ளோர் சாகாவரம் பெறுகிறார்கள் என்பது கதையின் கரு. அதைச் சொல்லும் முறை நவீனச் சிறுகதை பாணியில் யதார்த்தத்துக்கு அருகில் இருக்கும்.

கதை என்னவோ அதே மந்திர-தந்திரக் கதைதான். இந்த வகைக் கதைகள் நிறைய உள்ளன. தமிழக நாட்டுப்புறக் கதைகள் சிலவற்றிலும் காத்திக் கூறுகள் இருக்கின்றன.

இரண்டாம் வகையைச் சேர்ந்த மென்மையான அறிவியல் புனைகதைகள்தாம் தமிழ் இலக்கியத்தில் பஞ்சம். மெல்லிய உள்ளம் கொண்ட சாதாரண கதை மாந்தர்களை வைத்த எந்த அற்புதச் செயலும், பேய் பிசாசும் இல்லாமல் உண்மைக்கு அருகிலிருக்கும் கதைகள் பலவற்றை அவர்கள் எழுதுகிறார்கள். இதை ‘எ டச் ஆஃப் ஸ்ட்ரேஞ்’ என்பார்கள். எல்லாம் நலமாகத்தான் இருக்கும். ஏதோ ஒரு மூலையில் விநோதமான ஒரு முரண்பாடு இருக்கும். தியோடோர் ஸ்டர்ஜியன், க்ளிஃபோர்டு சைமாக், ஐரா லெவின் போன்றவர்கள் இதில் விற்பன்னர்கள். இந்த வகைக் கதைகள் தமிழில் குறைவு. இந்த வகையில் முதல் சைன்ஸ் ஃபிக்சன் கதை தமிழில் பாரதியின் ‘காக்காய் பார்லிமென்ட்’ என்று சொல்லத் தோன்றுகிறது.

அதன் ஒரு பகுதி இது

‘கா’ என்றால், சோறு வேண்டும் என்று அர்த்தம். ‘கக்கா’ என்றால், என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே’ என்று அர்த்தம். ‘காக்கா’ என்றால் எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே! என்று அர்த்தம். ‘காஹகா’ என்றால், சண்டை போடுவேன் என்று அர்த்தம். ‘ஹாகா’ என்றால், உதைப்பேன் என்று அர்த்தம்.’

ஆர்வெலின் 1984–ல் உள்ள ‘நியூஸ்பீக்’கை இது நினைவுபடுத்துகிறது. சைன்ஸ் ஃபிக்சனுக்கு முக்கியத்தேவை ஒரு புதிய உலகத்தை, புதிய சூழலை அமைத்து அதன் விதிகளையும் தெளிவாக்குவதுதான். புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ கதையை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். சைன்ஸ் ஃபிக்சனுக்கு உள்ள எல்லாத் தகுதிகளும் பெற்ற கதை இது. கால முரண்பாடு-சிவபெருமான் நாற்பதுகளில் வருவது.

இடமுரண்பாடு-கைலாசத்திலிருந்து சென்னை பிராட்வே. வாகன முரண்பாடு-விடைபெறும் சிவன் ட்ராம் ரிக்க்ஷா ஏறவது. (என்ன ரிக்க்ஷா இவ்வளவு லேசாக இருக்கிறதே). கலாசார முரண்பாடு-ரிக்க்ஷாக்காரர் பாஷையும், திருநெல்வேலி பிள்ளைமார் பாஷையும், சிவனின் தூய தமிழும், ருத்ரதாண்டவமும் சினிமா டான்ஸீம், கந்தசாமிப்பிள்ளை போன்ற குறைபட்ட சாதாரண கதாபாத்திரங்கள் அசாதரணமான, மேல்லோகத் தனமான சூழ்நிலையைச் சந்திக்கும் 'Cognitive Estrangement' என்பது, விஞ்ஞானப் புனைகதைகளுக்கு முக்கியமானத் தகுதி. அது இதில் முழுமையாக உள்ளது. இந்த வகைக் கதைகள்தான் பல, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வருகின்றன. தமிழில் புதுமைப்பித்தன் முதல்வர்.

ஆஸ்பத்திரிக் கட்டில் சொல்வதாக விக்ரமாதித்தன் கதைப் பாணியில் அவர் எழுதியுள்ள சிறுகதைகளையும் ஸைஃபியில் சேர்க்கலாம். அதுபோல பிரம்மராஷஸ், கயிற்றரவு போன்றவற்றையும் ஃபேன்டஸி என்னும் ஜானரில் (genre) வரும்.

கல்கியின் குறுநாவல்களான ‘மோகனித் தீவு’ ‘சோலைமலை இளவரசி’ இரண்டையும் சைன்ஸ்ஃபிக்சனில் சேர்க்கலாம். மோகினித் தீவில் ஒரு கடல் விபத்தில், ஒரு தீவில், இந்தக் கால மனிதன் இறங்கிப்போய் அங்கே பல்லவர் போன்ற பழைய அரசாட்சி ஒன்று நடந்துகொண்டிக்க, அதன் அரண்மனைச் சூழ்ச்சிகளில் கதாபாத்திரம் மாட்டிக்கொள்கிறது. இது மார்க் ட்வெய்னின் A Connecticut Yankee in King Arthur's court-ஐ நினைவுபடுத்தும் கதை. சோலைமலை இளவரசியில் ஒரு தீவிரவாதி தண்டனைக்குப் பயந்து, ஒரு மலைக்குகையில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒவ்வோர் இரவும் கனவு காண்கிறான்.

கனவில் அவன் தின வேளைகளில் பார்த்த சம்பவங்கள் வேறு வடிவில் வேறு பெயர்களுடன் திரும்ப வருகின்றன. அபாயம் மட்டும் பொது. கல்கியின் இந்த இரண்டு அற்புதமான குறுநாவல்களும் அவருடைய மற்ற கதைகளின் அளவுக்குப் பிரபலமாகாததற்குக் காரணம் இரண்டிலும் இருந்த விஞ்ஞானக் கதைக் கூறுகளை உணர்ந்துகொள்ளும் பக்குவம் வாசகர்களுக்கு ஏற்படாது, அவர்கள் குழம்பிப்போனதுதான். போதுமான உதாரணங்களும் ஊக்கமும் அப்போது இருந்திருக்கவில்லை என எண்ணுகிறேன்.

மேல்நாட்டு இலக்கியங்களுடன் அதிகம் பரிச்சயம் கொண்டிருந்த புதுமைப்பித்தன், கல்கி போன்றவர்கள் இந்தப் பரிசோதனை செய்திருக்கிறதில் ஆச்சர்யமில்லை. அதேபோல், க.நா.சு-வும் ‘பொய்த்தேவு’ போன்ற புதினங்களில் பரிசோதனைகள் செய்திருக்கிறார். ஆனால், பொய்த்தேவு விஞ்ஞானக் கதை என்று சொல்லமாட்டேன். புதுமைப்பித்தன், கல்கி தவிர இவர்கள் காலகட்டத்தில் வாழ்ந்த மற்ற சிறந்த எழுத்தாளர்கள் யாரும் இதை முயற்சிக்கவில்லை. எல்லோரும் உருவகக் கதைகள் என்று ஒரு வகை எழுதினார்கள். அதை சைன்ஸ்ஃபிக்சனில் சேர்த்துக்கொள்ள இயலவில்லை. ‘யுடோபியா’ வகை நாவல் ஒன்று மு.வரதராசனார் ‘கி.பி.2000’ என்று எழுதியுள்ளார்.

கலைமகளில் ஆனை சு.குஞ்சிதபாதம் எழுதிய ‘நல்ல பிசாசு’ என்ற கதை ஓர் அரிய விதிவிலக்கு. விந்தன் ஒரு கதையில் தீபாவளியில் பணமில்லாமல் தவிக்கும் ஏழைக் குடும்பத்தின் அவல நிலையை வருணித்துவிட்டு கடைசியில் ‘இவர்கள் கஷ்டம் தீருவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே கடவுள் அவன் முன் தோன்றினார். ‘பக்தா, உனக்கு என்ன வேணும்?’ என்றார். அவன் தன் தீபாவளிக் கஷ்டங்களைச் சொல்ல, எல்லாவற்றையும் தீர்த்து வைத்தார்’ என்று முடித்திருக்கிறார்.

இது துல்லியமான சைன்ஸ் ஃபிக்சன். தமிழ்த் திரைப்படங்களில் மாய மந்திரக் காட்சிகளை ஃபேன்டஸி அற்புத வகை சைன்ஸ் ஃபிக்சன்களில் சேர்க்கலாம். மோகனி, மர்மயோகி, வேதாள உலகம், பாதாள பைரவி போன்ற படங்கள் இந்த வகையில் சேரும். தற்போது கிராஃபிக்ஸ் கலக்கல்களுடன் வரும் அம்மன் படங்கள் கூட ஒரு முரட்டுத்தனமான முயற்சிதான்.

சைன்ஸ் ஃபிக்சன் எழுதுவதற்கு சைன்ஸ், ராக்கெட், விண்வெளிப் பயணம் தேவையில்லை. எதிர்காலத்தைத்தான் எழுத வேண்டும் எனும் கட்டாயமில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அதையெல்லாம் அது எப்போதோ கடந்துவிட்டது. இன்றைய காலகட்டத்து எழுத்தாளர்களில் ஜெயமோகனின் ‘பேய்ச்சிப் பாறை’, ‘விஷ்ணுபுரம்’ போன்ற படைப்புகளில் விஞ்ஞானக் கதைக் கூறுகள் இருப்பதைப் பார்க்கிறேன். ஜெயமோகன் இதை ஒப்புக்கொள்வாரா தெரியவில்லை. ‘விஷ்ணுபுரம்’ என்பது ஒரு ‘காத்திக்’ வகை நாவல்தான். கோணங்கியின் சில கதைகளை மாஜிக் ரியலிஸக்காரர்கள் விட்டுவைத்தால் சைன்ஸ் ஃபிக்சனில் சேர்க்கலாம். உதாரணம், ‘ஆதி விருட்சம்’. கிருஷ்ணன் நம்பி, ஒரு ஷீவுக்குள் ஒரு குடும்பமே வாழ்வதைப் பற்றி எழுதிய சிறுகதையைக் காலச்சுவடு கண்ணன் எனக்கு அனுப்பியிருந்தார். மாலன் எழுதிய ‘வித்வான்’ என்ற கதை விஞ்ஞானப் புனைகதை. இந்த வகையில் தேடும்போது மிக அரிதாகவே சைன்ஸ் ஃபிக்சன் கதைகள் கிடைகின்றன. நான் படிக்காது தப்பவிட்ட கதைகள் சில இருக்கலாம். இருப்பினும் பற்றாக்குறைதான்.

காரணம், இந்த வகையை யாரும் விஸ்தரித்து விளக்கி விமர்சனக் கட்டுரை எழுதாததுதான். யோசித்தால் இந்தக் கட்டுரைதான் முதல் கட்டுரை என்று தோன்றுகிறது. ஆனால் கோவை பாரதியார், மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களில் எம்ஃபில்., பட்டத்துக்கு விஞ்ஞானக் கதைகளைப் பலர் ஆராய்ந்து பட்டம் பெற்றிருக்கிறார்கள். சிற்பி பாலசுப்ரமணியம் இதில் ஒரு முன்னோடியான வழிகாட்டி. விஞ்ஞானக் கதை என்றால், ராக்கெட், விண்வெளிப் பயணம் என்ற அஸிமோவ்த்தனமான குறுகிய கற்பனைகள்தான் என, பலர் எண்ணிக்கொண்டிருந்தார்கள். ‘ஒரு தையல் இயந்திரமோ, ரேடியோவோ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாத நமக்கு எதற்கு வம்பு, நாம் ஏதாவது எழுதப் போய் யாராவது மத்ய சர்க்கார் டி.ஆர்.டி.ஓ. உயர் விஞ்ஞானி அதை அபத்தம் என்று எழுதி, தேவைதானா, இருக்கவே இருக்கிறது சாய்வு நாற்காலி, மத்யான தூக்கம், நினைவுத்திரகள் பின்னோக்கிச் செல்வது, சமையலறைச் சண்டை, சாதிச் சண்டை, வட்டார வழக்கு என்றும், மாறாத காதல் போதும் என்ற பொன் செய் மனோபாவத்தால்தான் தமிழில் இந்த முக்கியமான வகையில் கதைகள் அதிகம் எழுதப்படவில்லை. இல்லையேல் கற்பனை வளத்தில் உலக எழுத்தாளர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத நம் எழுத்தாளர்களில் பலர் இதை முயன்று பார்த்திருப்பார்கள். லா.ச.ரா. சில கதைகளில் அருகில் வருகிறார். (ஜனனி, யோகம்).

புதுக்கவிதைகளில் சிலவற்றில் சைஃபி கூறுகளையும் பார்க்கிறேன். குறிப்பாக, மீராவின் ‘எனக்கும் உனக்கும் ஒரே ஊர், வாசுதேவநல்லூர்’ என்பது தமிழில் முதல் சைன்ஸ் ஃபிக்சன் புதுக்கவிதை. ஞானக்கூத்தனின் ‘மோசிகீரன்’ கவிதையும் அஃதே. விருட்சம், ழ கவிதைத் தொகுப்புகளில் ஒரு சில சைன்ஸ் ஃபிக்சன் கவிதைகளைச் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் நானும் அரவிந்தனும் நடத்திய உரையாடலில் படித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது. ரூமியின் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை கணிப்பொறி ‘பேசிக்’ மொழியில் இருந்தது. இன்டர் நெட்டில் பல ‘ஹைகூ’ கவிதைகள் கிடைக்கின்றன.

உதாரணம்,

அகழ்வாராய்ச்சியின் போது
தோண்டி எடுத்த
டென்னிஸ் ஷீக்கள்

சிறு சிறுகதைகளும் ஏராளமாக எழுதியுள்ளார்கள். உலகிலேயே மிகச் சிறிய ஸைஃபி கதை கதாநாயகன் நெடுந்தூரம் பயணம் செய்து இறுதியில் பிரபஞ்சத்தின் எல்லைக்கு வருகிறான். அவன் காலடியில் எழுதியிருக்கும் ஒரு வரிதான்:

“இதுதான் பிரபஞ்சத்தின் எல்லை!”

ஆனால் இந்த வரி தலைகீழாக அச்சடிக்கப்பட்டிருக்கும்! தமிழில் கதைகள் எழுத ஆரம்பத்ததிலிருந்து இந்த மாதிரி முயற்சிகளால் வசீகரிக்கப்பட்டு பிடிவாதமாக சைன்ஸ் ஃபிக்சனை எழுதிவரும் சில எழுத்தாளர்களில் அடியேனும் ஒருவன். ‘திசைகள்’ என்ற ஓர் இளைஞர் பத்திரிக்கை எண்பதுகளில் துவங்கியபோது அதன் ஆசிரியராக இருந்த மாலன் என்னை, சைன்ஸ் ஃபிக்சன் எழுதச் சொன்னார். திமலா, ஜில்லு போன்ற கதைகள் உங்களில் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ‘திமலா’ அடுத்த நூற்றாண்டில் திருப்பதி கோயிலுக்குச் செல்லும் ஹைடெக் தம்பதிகளைப் பற்றியது. ஏறக்குறைய 25 வருடத்துக்கு முன் எழுதியது. எல்லாமே இப்போது நடைமுறையில் வந்துவிட்டது.

‘ஜில்லு’-வில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நிகழ்ந்தது. அதன் பின்விளைவாகக் கதிரியக்கத்தைத் தவிர்க்க ஒரு நகரத்திலிருந்து அவசரமாக ஒரு குடும்பம் தப்பும்போது ஒரு சிறுவனும் அவன் நாயும் போய் மாட்டிக்கொள்வதைப் பற்றி எழுதியிருந்தேன். இது உண்மையாக வேண்டாம் என்று ஸ்ரீரங்கநாதனைப் பிரார்த்திக்கிறேன். உண்மைக்கு அருகில் எழுதப்படும் ‘ஸாஃப்ட்’ வகை சைன்ஸ் ஃபிக்சன் கதைகள் எதிர்காலத்தில் சாத்தியமாகக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆர்தர் கிளார்க் பூமியுடன் விண்வெளியில் உடன் சுற்றும் செய்தித் தொடர்பு ஜியோ ஸ்டேஷனரி சாட்டிலைட்டுகளைப் பற்றி ஒரு கட்டுரையிலும், வில்லியம் கிப்ஸன் ஸைபர் ஸ்பேஸ் பற்றி ‘நியூரோமான்ஸர்’ என்னும் நாவலிலும் எழுதியிருப்பதை உதாரணமாகச் சொல்லலாம். தொடர்ந்து நான் பிடிவாதமாக இந்தக் கதைகளை அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். ‘சொர்க்கத் தீவு’, ‘என் இனிய இயந்திரா’ போன்ற நாவல்களையும் சமயமும் சந்தர்ப்பமும் கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகிறேன்.

அதேபோல் தமிழில் மாலன், இரா.முருகன், நளினி சாஸ்திரி, ஆர்னிகா நாஸர் போன்றவர்களும் அவ்வப்போது எழுதி வருகிறார்கள். விகடன், கல்கி பத்திரிக்கைகள் அரிதாக சைன்ஸ் ஃபிக்சன் கதைகளுக்குப் போட்டி வைக்கிறார்கள். ஆனால், தேர்ந்ததெடுக்கபட்ட கதைகளை ‘ஸைஃபி’ என்று சொல்வது கஷ்டமாக இருக்கிறது. தமிழில் இந்த வடிவம் முழுமையாக வருவதற்கு இதற்கு இலக்கிய அந்தஸ்தும் அங்கீகாரமும் கொடுக்க வேண்டும். அதற்கு விமர்சகர்களும் மற்ற எழுத்தாளர்களும், பத்திரிக்கை ஆசிரியர்களும் இந்த வீச்சைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான விஞ்ஞானக் கதை என்பது, என்ன என்பதில் குழப்பம் நீங்க வேண்டும். விஞ்ஞானக் கதைக்கு விஞ்ஞானம் தெரிந்திருக்கவோ, அது சரியாக இருக்க வேண்டியதோ அவசியம் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆங்கிலத்தில் ஒரு சிறந்த வி.க. அல்லது அ.பு. எழுத்தாளர்கள் சைன்ஸ் படித்தவர்கள் அல்ல. இதன் விட்டு விடுதலையான சாத்திரங்கள் மகத்தானவை. கதாபாத்திரங்களுடன் அவர்கள் தமக்குள் புழங்கும் சமூக விதிகளையும் முதலில் அமைத்துக் கொண்டு அதற்கேற்ப கதையை அமைக்க வேண்டும். மனிதன், மனிதனுடன் பழகும் சம்பிரதாய விதிகளை மாற்றி அமைக்கும் சுதந்திரத்தை இது தருகிறது. இதில் நாய் பேசலாம், ஒரு சலவை இயந்திரம் நீட்ஷேயை விளக்கலாம். சமூகத்தை விமர்சிப்பதிலுள்ள சன்னமான மறைமுக முறைகளை இதில் கொண்டு வரலாம். பிடிக்காதவர்களையும், பிடிக்காத விதிகளையும் கழற்றி விடலாம்.

‘தாமஸ் டிஷ்’ என்னும் ஒர் அமெரிக்க ஆசிரியர் அண்மையில் எழுதிய ‘ஸபீக் ஈஸி’ எனும் கதையில் அரசின் பொது இடத்தில் யாரும் பேசக் கூடாது என்பது புதிய விதி. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கென்று அமைக்கப்பட்ட கூட்டமான அறைகளில் போய் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். வெளியே வந்ததும் கப்சிப். இந்த விதி மெள்ள மெள்ள மெகா நகரங்களில் வந்து கொண்டிருப்பதை உணரலாம்.

இனி நிறைய விஞ்ஞானக் கதைகளை எழுதுங்கள். உங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. தினசரி அவலங்களை நாம் மீள முடியாது. நம் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைத் தவிர்க்க முடியாது. ஆனால், அவற்றையே வேறு களத்தில் வேறு விதிகள் அமைத்து மறுபரிசீலனை செய்து பார்க்கும் வாய்ப்பை சைன்ஸ் ஃபிக்சன் தருகிறது. இதுபற்றித் தேவைப்பட்டால் ஒரு பயிலரங்கம் நடத்த நான் உதவுகிறேன். மற்ற இந்திய மொழிகளில் குறிப்பாக மராத்தி, பெங்காலி போன்றவற்றில் இது வேகமாக வளர்ந்திருக்கிறது. மராத்தியில் தனிப் பத்திரிக்கையே இருக்கிறது. முதல் இந்திய சைஃபி கதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்து, 'It Happened Tomorrow' என்ற தலைப்பில் ‘கொண்டகே’ (Kondke) என்கிற மராத்திய எழுத்தாளர் வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்க் கதைகள் இரண்டு உள்ளன. அரைத்த மாவையே நிறைய அரைத்துவிட்டோம் என்று தோன்றுகிறது. புதுசாக ஏதாவது என்றால், கிரைண்டரைச் சிலர் பயன்படுத்துகிறோம். மாவு அதேதான். எத்தனை காலம்தான் குண்டுசட்டியி்ல் குதிரை (இதுகூட ஒரு சைஃபி உருவகம்தான்). ஓட்டுவது? புதிய கதைகள் படைக்க வாருங்கள்.

இதற்கு ஒரே ஒரு விதிதான். நீங்கள் படைக்கும் உலகத்தில் இன்றைய உலகத்தின் அடையாளங்களை முழுவதும் மறைக்க இயலாது; கூடாது.

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900-2010, தமிழ்மகன். விகடன் பிரசுரம், முதல் பதிப்பு, ஆகஸ்ட் 2013, பக்கம் 263-273.
Related Posts Plugin for WordPress, Blogger...