துடைப்பக் குப்பை -இளையராஜா

துன்பம் என்பது உடல்.
உடல் என்பது வெறும் எண்ணம்.
ஓர் இடத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்றிச் சுத்தப்படுத்த
நிச்சயமாக ஒரு துடைப்பம் தேவை.
ஆனால் துடைப்பமும் ஒரு குப்பையே.
அந்தக் குப்பைகளை அகற்ற இந்தக் குப்பை உதவுகிறது
அதன் உபயோகம் அவ்வளவே.மனம் என்ற இடத்தில் அடைந்து கிடக்கும்
எண்ணக் குப்பைகளை அகற்ற நல்ல எண்ணம் அல்லது
தெய்வச் சிந்தனை என்ற எண்ணம் தேவைப்படுகிறது. ஆனால்
எண்ணம் என்பதே குப்பைதான் என்பதை மறந்து விடக்கூடாது.
கெட்ட எண்ணங்களை அகற்ற ஒரு நல்ல எண்ணத்தை
உபயோகிப்பதால், எண்ணுவது உயர்ந்ததாக ஆகாது.
எல்லா எண்ணங்களும் சலனமே.

தெய்வம் ஒன்று என்பதை ஒத்துக்கொண்டவர்கள்
அதை வணங்கவோ வழிபடவோ கூடாது.
வணங்குபவன்-வணங்கப்படும் பொருள்-என இரண்டாக
ஆகிவிடுவதால்.
நமக்கு எந்த மகான்களின்
அறிவுரைகளும் மணிமொழிகளும் தேவையில்லை.
தேவராம் படித்தோம், திருவாசகமும் படித்தோம்
புறநானூறும், அகநானூறும் படித்தோம், குறளும் படித்தோம்.
இன்னும் எவ்வளவோ படித்தோம். இவற்றையெல்லாம்
எவ்வளவுதான் படித்தாலும் கரைத்துக் குடித்தாலும் அதனால்
என்ன உபயோகம் என்று பார்த்தால்-நம் மனம்
மாறுபட்டிருக்கிறதா? அல்லது நாம் முன்னேறி இருக்கிறோமா?
என்று பார்ததால் அது ஒன்றுமே இல்லை என்று தெரிகிறது.
அவற்றை நாம் பேசும் போது மேற்கோள் காட்ட மட்டுமே
உபயோகித்திருக்கிறோம். நம் முன்னேற்றத்திற்கு
உபயோகிக்கவில்லை என்றும் தெரிகிறது. எனவே-நமக்கு எந்த
மகான்களின் அறிவுரைகளும்-மணிமொழிகளும் தேவையில்லை.

தாமரை இலைத் தண்ணீர் போல உலக விஷயங்களில் ஒட்டாது
வாழவேண்டும் எனப் பெரியோர்கள் கூறி இருக்கிறார்கள்.
தண்ணீர் தாமரை இலையில் ஒட்டாது என்பதாலோ? ஒட்டுகிறது
என்பதாலோ? தண்ணீருக்கும் தாமரை இலைக்கும் தனிச் சிறப்பு
எதுவுமே இல்லை. அவை இயல்பாக இருக்கின்றன. தாமரை
இலையில் தண்ணீர் ஒட்டாவிட்டாலும் தண்ணீருக்குள்தானே
தாமரை இலை இருந்தாக வேண்டியிருக்கிறது. அவை இயல்பாக
இருப்பதைப் போல மனிதனும் இயல்பாக இருந்துவிட்டுப் போக
வேண்டியதுதான்.

செவிக்கு உணவு இல்லாத பொழுது...
அப்படி ஒரு பொழுது எங்கே இருக்கிறது?ஒரு விந்து சக்தி
புத்தனாகவும்
ஏசுவாகவும்
காந்தியாகவும்
குப்பனாகவும் உருவாகியிருக்கிறது என்பதை எண்ணும்போது
அந்த விந்தைமிகு சக்தியை அளவிடமுடியாமை உணரப்படுகிறது.
இவர்களுக்குள் வித்தியாசம் இருப்பதாக
என் கண்ணுக்குப்பட்டாலும் வித்தியாசம் எதுவும் இல்லை என்பதை
என் அறிவு உணருகிறது. புத்தன் ஞானம் தேடிப் புறப்பட்ட
நேரத்தில் குப்பன் உழுது கொண்டிருந்தான்.
புத்தன் ஒவ்வோர் அனுபவமாகப் பெற்றுக்கொண்டிருந்தபோது
விதைத்து குப்பன் விளைச்சலைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
புத்தன் ஞானம் அடைந்த போது
எல்லாமே ஒன்றுதான் என்பதை உணர்ந்து கொண்டான்.
புத்தன் தேடிப் புறப்பட்டதைப் பெற்றான்.
குப்பனும் அவனுக்கு வேண்டியதையும் அடைந்தான்.
புத்தன் ஞானம் என்பது ஒன்றுமில்லை என்றுணர்ந்தபோது
குப்பன் கையில் மிஞ்சியது ஒன்றுமில்லை என்று தெரிந்து
கொண்டான்.
புத்தனும் குப்பனும் அடையப்போவது அல்லது
அடைந்தது ஒன்றுமில்லை என்பதால்
இவர்களில் யாருக்கும் எச்சிறப்பும் இல்லை.

1943-ம் வருடம் வைகாசி மாதம் இருபதாம் நாளன்று
நான் பிறந்ததாகச் சொன்னார்கள்.
நான் என்று பிறந்தேன் என்று நான் அறியேன்.
நான் குடிகொண்ட இந்த உடல் என்று இறக்கும்
என்றும் எனக்குத் தெரியாது.
எனது பிறப்பையும் இறப்பையும் அறியாத நான் யார்?
ஆதி அந்தம் இல்லாதவனா?

ஓதுவதும் ஓதப்படுவதும் பொய்.
அது எவ்வளவு உயர்ந்த வேதமாக இருப்பினும்-
அந்த வேதத்தின் உட்பொருள் வேதம் இல்லை.
இறைவனைப் பற்றி வேதம் சொல்லலாம்
ஆனால் வேதம் இறைவன் இல்லை.
உணரவேண்டிய ஒன்றை
ஓதுவதாலும் ஓதப்படுவதாலும் உணர முடியாது.
உணரப்படவேண்டியது ‘ஒன்றேயாக‘ இருப்பதால்
உணருகிறவன் உணரப்படுகின்ற பொருள் என்ற
இருமையும் அங்கு இல்லை என்பதால் ஓதுவதும்
ஓதப்படுவதும் பொய் எனப்பட்டன.

இது என் ஆத்மா என் உடம்பைப் பார்த்துச் சொல்லிக் கொண்டது:
என்னாலும் உன்னாலும் இந்த நாட்டிற்கோ உலகிற்கோ ஒரு
பிரயோஜனமும் இல்லையென்றாலும் நாம் இருவரும்
பிறந்திருக்கிறோமே இதுதான் விதி என்பது.
என்னால் நான் படும் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
இருந்தாலும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது.
விதி.

பசித்தால் தின்றுவிட்டு
களைத்தால் தூக்கம் போட்டுவிட்டு
உடல் தினவெடுத்தால் காமத்தை தணித்துக்கொண்டுவிட்டு
துன்பம் வந்தால் தாங்க முடியாது
தெய்வங்களென்று நாம் எண்ணிக் கொண்டிருப்பவற்றிடம்
கொஞ்ச நேரம் அழுது முறையிடுவதற்கு பெயர்தான்
பக்தி. வாழ்க வாழ்க.

யாருக்கு யார் எழுதுவது? இளையராஜா. கவிதா பப்ளிகேஷன் இரண்டாம் பதிப்பு நவம்பர் 2010. பக்கம் 505-507.
Related Posts Plugin for WordPress, Blogger...