நானும் புத்தகங்களும்

புத்தகங்கள் பல படித்து அவற்றைப் பற்றி எழுதுவது ஒரு சுகம் என்றால், புத்தகங்களைப் பற்றியே எழுதுவது வேறோர் சுகம்தான். பாலமித்ரா, அம்புலிமாமாவில் ஆரம்பித்த புத்தகப் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மாதந்தோரும் காத்திருந்து அந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்த காலங்களை நினைக்கும்போது இன்றும் இனிக்கிறது. சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவை புத்தகங்களே என்று சொல்லவேண்டும். சேமிப்பதும் செலவழிப்பதும் புத்தகங்களுக்காவே என்றான காலங்கள் அவை.

வாழ்க்கையில் பிடிப்பு என்பது பிடித்த விசயங்களைச் செய்வதாலேயே வரமுடியும். எனக்கு படிப்பு ஒன்றே பிடித்ததாக இருந்தது. அந்தப் பிடித்த விசயங்களைச் செய்வதையே  நாம் வாழ்க்கையில் பிடிப்பு என்கிறோம். ஒவ்வொருவருக்கும் பிடித்த விசயங்கள் வேறுபடும். புத்தகம், சினிமா, தொழில், வேலை என்று எதில் வேண்டுமானாலும் அது இருக்கலாம். இவைகள் வெறும் பிழைப்பாக மட்டுமில்லாது பிடித்ததாகவும் இருக்கும்போது வாழ்க்கை ரசிக்கிறது. ஒரு கட்டத்தில் வெறும் பொழுதைப் போக்கவும், கதைகளைப் படிக்கவும் இருந்த புத்தகங்கள் வாழ்க்கை பற்றிய பல கேள்விகளுக்கு விடை காணும் தீவிர வாசிப்பாகியபோது, புத்தகங்கள்தான் எனக்குத் துணை செய்தன. நான் ஆசான், குரு இவர்களைத் தேடி எங்கும் அலைந்ததில்லை. மாறாக வாழவும், வாழ்க்கையை கற்றுத்தரும் ஆசானாகவும் குருவாகவும் புத்தகங்களே ஆயிற்று. வாழ்வில் நிகழ்ந்த துக்கம், மகிழ்ச்சி, சோர்வு அனைத்திற்கும் மருந்தாகப் புத்தகங்களே ஆயின.

புத்தகங்களைப் படிப்பவனும் சரி எழுதுபவனும் சரி வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்கள் என்ற கருத்தே பிறரிடத்தில் மிகுந்திருக்கிறது. “படித்துப் படித்து என்னத்தைக் கிழிச்ச?” என்று கேட்பவர்கள்தான் அதிகம். எப்போதும் சினிமா பார்ப்பவன், குடிப்பவன் இவாகள் கூட நல்லவர்கள், உருப்படக் கூடியவர்கள். ஆனால் புத்தகமும் கையுமாக இருப்பவன் உருப்படாதவன் என்ற முத்திரை எளிதாகக் குத்தப்பட்டு விடுகிறது. திருமணத்திற்குப் பிறகு வாசிப்பு தொடருமா? என்ற சந்தேகம் வருமளவிற்கு, சுற்றங்கள் நம்மைப் பார்க்கிறார்கள். தெய்வாதீனமாக அப்படியே தொடரும் என்றால், புத்தகங்களைப் பாதுகாப்பது பெரிய சிக்கலாகிறது. வாங்குவதே சிக்கலாக இருக்கும்போது பாதுகாப்பதைப் பற்றி என்ன சொல்ல? புத்தகங்களுடன் கொள்ளும் உறவை, தகாத உறவாகவே பல குடும்பங்கள் பார்க்கின்றன. எங்கே கணவன் மனைவியிடையே விரிசலைக் கொண்டுவந்துவிடுமோ என்று அஞ்சுமளவிற்கு சில சமயங்கள் அவைகள் காரணமாகிவிடுகின்றன. குடும்பத்தில் சண்டைகள் நேரும்போது தாக்குதலுக்கான ஒரு காரணமாகவும் அவைகள் இருந்துவிடுகின்றன.

வாங்கிய புத்தகங்களைத் தூசி, கரையான் இன்னும் பிற சேதாறங்களிலிருந்து காப்பது பெரிய சவால். அவற்றை வாங்குவதற்கான பிரயத்தனங்களைவிட, பாதுகாப்பதற்கு மிகவும் மெனக்கெட வேண்டும் என்பது உண்மைதான். அதே போல் கடன் கொடுத்த புத்கங்களைத் திரும்பப் பெறுவதும் கடினமான பணிதான். பலர் போனால் போகுது புத்தகங்கள்தானே என்கிறார்கள். நமக்கும் புத்தகங்களுக்குமான உறவு அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது? நாம் இதுவரை நம் வாழ்க்கையை வாழந்ததற்கான தடயங்களாக புத்தகங்களே இருக்கின்றன என்பது நமக்கு மட்டுமே புரிந்த ஒன்று.

புத்தகங்களை என்ன செய்வது? என்று எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதலிருந்து சில பகுதிகள்:

1. வாசிக்க விருப்பமுள்ளவர்கள் அத்தனை பேரின் கனவும் வீட்டில் ஒரு நல்ல நூலகம் அமைக்க வேண்டும் என்பதுதான், ஆனால் அதை எங்கே வைப்பது, யார் பராமரிப்பது, எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருக்கின்றன.

2. உண்மையில் நமக்கு விருப்பமான ஒரு நூறு புத்தகங்களே போதுமானதுதான், அது எந்த நூறு என்று தெரியாமல் தான் பலநூறு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

3. வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை தேர்வு செய்வது ஒரு குறிப்பிட்ட மனநிலையே. அப்படிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகின்ற மனநிலையில் விரும்பிய புத்தகம் கிடைக்காமல் போய்விட்டால் அடையும் வேதனைக்காகவே புத்தகங்கள் பாதுகாக்கபடுகின்றன. இன்னொன்று புத்தகங்கள் கூட இருப்பது ஏதோவொரு பாதுகாப்பு உணர்வைத் தருகின்றன, அதுவும் ஒரு காரணம் தான்.

4. பழைய உடைகள், வீட்டுஉபயோகப்பொருள்கள், பொம்மைகள், நாற்காலிகள், மெத்தைகள், கரண்டி, டம்ளர்கள் என்று வேண்டாத பலநூறு பொருட்கள் எல்லோருடைய வீட்டிலும் நிரம்பியிருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் என்றாவது உதவும் என்று நம்புகிறார்கள், புத்தகத்தை அப்படி நினைக்கவேயில்லை.

5. ஆனால் புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது  ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவனைப்பற்றிக் கொள்கிறது. அவன் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை. ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறான். அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறான். ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறான். புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக, நண்பனாகவே கருதுகிறான். ஆகவே புத்தகவாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான். உலகின் கண்களில் புத்தகங்கள் வெறும் அச்சிடப்பட்ட காகிதங்கள், ஆனால் வாசகன் கண்ணில் அது ஒளிரும் ஒரு வைரக்கல். அதன் மதிப்பை காலம் தான் முடிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள்ளிருக்கிறது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஆன்மாயிருக்கிறது, அதை வாசகனால் நன்றாகவே உணர முடிகிறது. புத்தகத்தோடு உள்ள உறவு எப்போதுமே தனித்துவமான நினைவாகிவிடுகிறது. பலநேரங்களில் வாழ்க்கை அனுபவத்தை விடவும் புத்தகங்களே நம்மை வழிநடத்துகின்றன, ஆறுதல்படுத்துகின்றன.

6. புத்தகங்களை இரவல் கொடுப்பதைப் பற்றி எழுத்தாளர் அனதோலியா பிரான்சு வேடிக்கையாக குறிப்பிட்டது தான் நினைவிற்கு வருகிறது. Never lend books, for no one ever returns them; the only books I have in my library are books that other people have lent me. ஆனால் கைவிடப்பட்ட புத்தகங்களை விடவும் படிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்ற புத்தகங்கள் வேதனைமிக்கவை. இதைக் கேலி செய்து ஸ்விப்ட் பேடில் ஆப் புக்ஸ் என்ற ஒரு புனைவு எழுதியிருக்கிறார். வர்ஜீனியா வுல்ப் கூட நடைபாதைக்கடைகளில் விற்கப்படும் புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்கிறார். புத்தகங்களை கண்ணாடி அலமாரியில் வைத்துப் பூட்டி சவமாக்கிவிடுவதை விட அவற்றை யாரோ படிக்கட்டும் என்று உலகின் கைகளுக்கே திரும்ப தந்துவிடுவது நல்லது என்றே தோன்றுகிறது. அதுதான்  எப்போதும் புத்தகங்களின் விதிவசம் போலும்.
Related Posts Plugin for WordPress, Blogger...