ஜெயமோகனின் வெள்ளை யானை: பஞ்சக் காட்சிகள்

வண்டி ‘கிரீச்‘சிட்டபடி நின்றது. குதிரைகள் செருக்கடித்தன. “செர்” என்றான் ஜோசப்.

“என்ன?”

“பஞ்சத்தின் முதல்காட்சியை நீங்கள் காணலாம்” என்றான். சாதாரணமாக ஒருவரை அறிமுகம் செய்யும் பாவனை.

“என்ன சொல்கிறாய்?”

“வலப்பக்கம் அந்த ஆலமரத்தடியைப் பாருங்கள்”

ஏய்டன் கதவைச் சற்றே திறந்து எட்டிப்பார்த்தான். ஒரு கணத்துக்குப்பின் அமிலத்துளி விழுந்த புழுபோல அவன் பிரக்ஞை துள்ளித்துடித்து தாளமுடியாத உயிர்வதையுடன் நெளிந்து முறுக்கி உதறிச் சொடுக்கி விதிர்த்தது. பெரிய ஆலமரத்தின் அடியில் பிணங்கள் அள்ளிக்கொட்டியவை போலக் கிடந்தன. பாதிக்குமேல் குழந்தைகள். நாலைந்து நாய்கள் பிணங்களைக் கிழித்து குடலைக்கவ்வி இழுத்து வெளியே எடுத்து தின்றுகொண்டிருந்தன. அவற்றின் உறுமல்களும் கடித்து சப்புக்கொட்டி இழுக்கும் முனகல்களும் உரக்கக் கேட்டன. மரக்கிளைகளில் காகங்களும் பிற பறவைகளும் பெரிய சந்தைபோல இரைச்சலிட்டன. காகங்கள் துணிந்து கீழே இறங்க நாய்கள் உறுமியபடி அவற்றைத் துரத்தின. அவை பறந்தெழுந்து மீண்டும் அமர்ந்தன.

இரு நாய்கள் தலைதூக்கிக் காதுகளை முன்னால் குவித்து வண்டியை ஏறிட்டுப்பார்த்தன. ஏய்டன் கதவைத் திறந்ததும் அவை உடலைக்குறுக்கி முன் காலை துக்கிப் பின்வைத்து பின்னகர்ந்தபின் எச்சரிக்கையுடன் மூக்கைத் தாழ்த்தின. அவை எழுப்பின ஒலி கேட்டு மற்ற நாய்களும் திரும்பிப்பார்த்தன. ஏய்டன் கால்கள் நடுங்க வண்டியைப் பிடித்துக்கொண்டான். நாய்கள் அவனை மதிப்பிட்ட பின்னர் காதுகள் எச்சரிக்கையுடன் நிற்க, மீண்டும் கடித்து இழுக்க ஆரம்பித்தன. அவற்றால் கடிபட்ட குழந்தைச் சடலத்தின் கால்கள் அசைய அது உயிருடன் இருப்பதுபோலப் பிரமை எழுந்தது.

20131216_083742 குழந்தைகளின் கைகள். கால்கள். மெலிந்து உலர்ந்துவிட்டிருந்தாலும் அவற்றில் குழந்தைத் தன்மை மிச்சமிருந்தது. அவற்றில் கால்கட்டைவிரல் நெளிந்து விலகியிருந்தது. தொட்டிலில் தூங்குவதுபோல. உதடு உரிக்கப்பட்ட குழந்தை முகம் உரக்கச்சிரிப்பது போல ஆடியது. தன் வயிற்றிலிருந்து நீண்டுசென்ற குடலைப் பிடிக்க முனைவதுபோல குப்புறச் சரிந்து அசைந்தது ஒன்று. அதை இழுத்த நாய் அதை முன்கையால் பற்றியபடி அமர்ந்து மெல்ல ஆரம்பித்தது. அப்பகுதியெங்கும் அழுகிய சதை வாடை மண்டியிருந்தது. ஏய்டன் குமட்டல் வந்து உடலை உலுக்கிக்கொண்டான்.

“ஏறுங்கள் சார்” என்று ஜோசப் கடிவாளத்தை இழுத்தான். ஏய்டன் கதவைப் பற்றிக்கொண்டான். உள்ளே ஆண்ட்ரூ வெள்ளைக் கைக்குட்டையால் முகத்தை மூடி மௌனமாகக் குலுங்கி அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தான். ஏய்டன் படியில் காலைத் தூக்கி வைத்த கணம் ஒரு மெல்லிய முனகலைக் கேட்டான். நாய்கள், காகங்களின் ஒலிகள் நடுவே அவனால் அதைப்பிரித்துக் கேட்க முடிந்தது.

“இரு” என்றபின் அவன் திரும்பிப்பார்த்தான். அந்த தீனமான முனகல் அவனை அழைப்பது பேலவே ஒலித்தது. ‘பிரமையா?‘ சடலங்களில் சில உதடுகள் பிய்த்து உரிக்கப்பட்டு சிரித்துக்கிடந்தன. ‘அவற்றின் அழைப்பா?‘ சட்டென்று பிரண்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘மரணத்தின் அழைப்பா? சாத்தானா?‘ பற்கள் கிட்டித்துககொண்டன. கைகால்கள் எல்லாமே கருங்கல்லாலனவையாக மாறி அவனை விட்டு எங்கோ இருந்தன. மீண்டும் அந்த தீனமான அழைப்பு. ‘ஆம். மனிதக்குரல்தான்‘,

“வேண்டாம்! வேண்டாம்! காப்டன்” என்று ஆண்ட்ரூ உடைந்த குரலில் அழைத்தான். ஏய்டன் தன் துப்பாக்கியை நுனிவிரலால் தொட்டபடி புதர்களைத் தாண்டி காலெடுத்து வைத்தான். நாய்களில் ஒன்று எழுந்து சிவந்த ஊன் படிந்த வாயில் பீங்கான் முட்கள் போன்ற பற்களுடன் ‘ர்ர்ர்..‘ என்றது. ஏய்டன் கையைத் தூக்கி வீசி “போ. போ.” என்றபடி முன்னகர்ந்தான். ஆனால் நாய் அஞ்சுவதாகத் தெரியவில்லை. அவன் மேலும் முன்னகர்ந்த போது அது எழுந்து வயிற்றை நிலம் நோக்கித் தாழ்த்தியபடி அவனை நோக்கித் தாழ்ந்த தொனியில் உறுமியது.

பின்பக்கம் ஆண்டரூ “காப்டன். கவனம்!” என்று கூச்சலிட்டான். ஏய்டன் திரும்பிப் பார்த்தான். புதர்களுக்குள் இருந்து பல நாய்களின் தலைகள் விடைத்த காதுகளுடன் எழுந்தன. நூறு நாய்களாவது இருக்கும். அவை தாக்குவதற்குச் சில கணங்கள் போதுமென்று உணர்ந்தான். சட்டென்று துப்பாக்கியை எடுத்து முதல் நாயைச் சுட்டான். ‘ஹீக்‘ என்ற ஒலியுடன் அது சரிய மலைகள் அந்த வெடியோசையை பலமுறை முழங்கின. நாய்கள் ஊளையிட்டபடி நான்கு பக்கமும் பாயந்து விலகியோடின. கல் விழுந்த இடத்தில் நீரலை விலகுவது போல.

ஏய்டன் நிதானப்படுத்திக் கொண்டபின் முன்னால் சென்றான். கிழிபட்ட, குதறப்பட்ட சடலங்கள். எல்லா வயதிலும் ஆண்கள் பெண்கள். அவர்களின் கந்தலாடைகளும் குடல்களும் பின்னிக் குழம்பி மண்ணில் இழுபட்டுக்கிடந்தன. கைகால்கள் பிய்ந்து பரவிக்கிடந்தன. புதர்களுக்குள் ஏராளமான சடலங்கள். மண்ணைக் குப்புற அணைத்தவை போல. ஒருவரை ஒருவர் இறுகப்பற்றிக்கொண்டது போல. ஆழ்ந்த உறக்கம் போல. வெள்ளெலும்புகள் கால்களில் மிதிபட்டன. பழைய பீங்கான் ஓடுகள் போல மண்டை ஓடுகள். சதை இன்னும் மிஞ்சியிருக்கும் இடுப்பெழும்புகள். மண்ணில் கலந்து மண்ணால் செய்யப்பட்டவை போன்ற எலும்புகள். எத்தனைபேர்!

ஏய்டன் காலெடுத்து வைத்து முன் சென்றபோது அந்த அசைவைப் பார்த்தான். ஆலமரத்தின் பொந்துக்குள் இருந்து ஒரு கை அசைந்தது. முனகல் ஒலி அங்குதான் கேட்டது. ‘ஆம், அது உயிரசைவு. இல்லை. அது ஒரு மாயம். சாத்தானின் மாயம். என் கண்களின் மாயம்‘. அந்தக் குரல் மீண்டும் எழுந்தது. ஆம், அது அவனைத்தான் அழைக்கிறது. சந்தேகமே இல்லை.

20131215_101828 ஏய்டன் தன் தொடைகள் தடதடவென்று ஆடுவதை உணர்ந்தான். விழுந்துவிடக்கூடும் என்று தோன்றியது. மெல்ல அந்த மரப்பொந்தை அணுகினான். மரணத்தருணத்தில் ஒலிப்பது போன்ற குரல். “தொர தொர”. அவன் அந்த முகத்தைக் கண்டான். அது ஒரு பையன். எட்டு வயதிருக்கும். உடலின் ஒட்டுமொத்த திரவத்தையும் சதையையும் பிரம்மாண்டமான ஊசி ஒன்றால் உறிஞ்சி எடுத்துவிட்டதைப் போன்ற உருவம். எலும்புகள் மீது ஓடும் நரம்புகள் புடைத்து தெரிந்தன. ஒவ்வொரு எலும்பு முட்டும் கனத்து அந்தக் கனத்தை உடல் தாளமுடியாததுபோலத் தெரிந்தது. காய்ச்சல் கண்டவை போல வெறிக்கும் கண்கள். உலர்ந்து சேற்றுத்தடம் போல ஆன வாய்க்குள் சேற்றுக்கற்கள் போன்ற பற்கள். புழுப்போலத தொங்கிக் கிடக்கும் உலர்ந்த நாக்கு.

ஏய்டன் அந்த உடல் ஒன்றல்ல என்று கண்டான். நான்கு குழந்தைகள். ஒரு பெண் குழந்தைக்கு இரண்டு வயதிருக்கலாம். நான்கும் சேர்ந்து ஒரு உடலளவுக்கே இருந்தன. ஒன்றுடன் ஒன்று புழுக்களைப்போல ஒட்டியிருந்தன. கால-இடத்துக்கு அப்பால் சென்றுவிட்ட விழிகளில் விபரீதமான ஒரு வெறிப்புதான் இருந்தது. அவை அவனை நோக்கிப் புன்னகைப்பது போலத் தோன்றியது. அவைத் தங்கள் உடல்களில் அசையக் கூடிய கைகளையும் கால்களையும் ஆட்டின. “தொர தொர.”

“ஒன்றும் செய்ய முடியாது” என்றான் ஜோசப் பின்னாலிருந்து. “இவை பிழைப்பதற்கான வாய்ப்பே இல்லை. கண்ணில் இருப்பது கடைசி ஜன்னி.”

ஏய்டன் அவற்றைப் பார்த்து எந்த எண்ணமும் இல்லாமல் அப்படியே நின்றான்.

குழந்தைகளின் உடல்களில் இருந்து கைகள் நீண்டு விரல்கள் அசைந்து யாசித்தன.

“சர், திரும்பிவிடுங்கள். அவர்களை பிழைக்கவைக்க முடியாது. இந்தக் குழந்தைகள் நெடுநாள் முன்னரே கைவிடப்பட்டவை.”

“என்னிடம் உணவு இருக்கிறது” என்று ஏய்டன் திரும்பினான்.

“ஃபாதர் உங்களிடம் சொல்லியிருப்பார். உணர்ச்சிவசப்படுவதில் அர்த்தமே இல்லை. இவற்றின் கைகால்ளைப் பாருங்கள். ஏற்கனவே நாய்கள் கடித்துக் குதறிவிட்டன. அந்தப் புண்ணை ஆற்றிக்கொள்ளும் சக்தி உடலில் இருக்காது. இவற்றை என்ன செய்தாலும் மீட்க முடியாது.”

“அப்படியென்றால் என்ன செய்வது? இப்படியே விட்டுவிட்டுச் செல்வதா?”

“அதை மட்டும்தான் செய்ய முடியும். இவர்களை விட நம் உதவி தேவைப்படுபவர்கள் ஆயிரக்கணக்கானவாகள் உண்டு. நம் உதவியால் உண்மையிலேயே பிழைத்துக்கொள்ளக் கூடியவர்கள் அவர்கள். நாம் இவர்களுக்கு அந்த உதவியைக் கொடுத்து வீணாக்கிவிட்டு அவர்களைக் கைவிடுவதுதான் பாவம். வாருங்கள்.”

ஏய்டன் அந்தக் கண்களைப் பார்த்தபடி நின்றிருந்தான். சின்னப் பெண் குழந்தை புழுப்போல் நெளிந்து கால்கள் கைகளுக்கிடையே இருந்து வெளியே வந்தது. நூற்றுக்கிழவியின் கை போல மெலிந்து தோல் சுருங்கி நரம்பெடுத்த கையை நீட்டி “தொர! தொர!” என்றது. ஒரு புழு முனகுவது போல.

“அதிகபட்சம் இன்னும் ஒரு நாள் உயிரோடிருக்கும். இதைப் பிழைக்கச் செய்ய உங்களால் முடியாது. வாருங்கள்” என்றான் ஜோசப்.

ஏய்டனுக்கு தன் கால்கள் தரையுடன் உருகியிணைந்திருப்பதாகத் தோன்றியது. அதுவரை அக்குழந்தைகளின் கண்களில் இருந்த வெறுமை அந்த விழிகளில் இருக்கவில்லை. அவை இறைஞ்சின. அவனை நம்பிக்கையுடன், எதிர்பார்ப்புடன் பார்த்தன. சற்றே பின் திரும்புவதுபோல மெல்லிய அசைவு அவனுடலில் கூடியபோது சட்டென்று உக்கிரமான தவிப்பை அடைந்தன. அவன் மீண்டும் அவற்றைச் சந்தித்ததும் புது நம்பிக்கை கொண்டன. அந்தச் சில கணங்களில் ஓர் ஆன்மா இன்னொரு ஆன்மாவிடம் இறைஞ்சக்கூடிய அனைத்தையும் அவை சொல்லிவிட்டன.

‘சாத்தான்‘ ஏய்டன் பிரண்ணனின் சொற்களை நினைவு கூர்ந்தான். ‘மிக உன்னதமான உணர்ச்சிகளே அவன் ஆயுதம். கிறிஸ்துவின் அங்கியே அவனுக்குப் பிரியமான உடை. ஆனால் அவன் கிறிஸ்துவின் சேவகர்களை தன் இருண்ட ஆழத்திற்குள் இழுத்துப்போட்டுக் கொண்டே இருக்கிறான்”. ஏய்டனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சற்றுமுன்புவரை காலியாக இருந்த இந்தக் கண்களுக்கு அப்பால் இப்போது வந்து குடியேறியிருப்பது யார்? சாத்தானா? மானுடத்தை பசியிலும் பிணியிலுமாழ்த்தும் பெருவல்லமையா? இருத்தலின் கடைசி முனகலாக, வாழ்வாசையின் உச்சகட்ட பேரோலமாக அவனிடம் பேசுவது சாத்தானின் ஜாலமா? ஆம். அவனை அது அழைக்கிறது. அவனைத் தன் அடியற்ற ஆழம் மின்னும் வாய்க்குள் அள்ளிப்போட முயல்கிறது.

“சார், கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள். பின்னால் நகர்ந்து வந்துவிடுங்கள்” ஜோசப் சொன்னான்.

ஆர்ட்டிக் பனி மலைகளில் பனிப்பாறை சரிந்து கால்கள் மாட்டிக்கொள்ள பனிக்கோடாரியால் தன் காலை வெட்டி தன்னை விடுவித்துக்கொண்டு தப்பும் மாலுமிகளைப் பற்றிய கதைகளை ஏய்டன் வாசித்ததுண்டு. அக்கணத்தில் தானும் அதைத்தான் செய்கிறோம் என்று பட்டது. தன் உடலையே அவன் வெட்டி குருதி வழிய வலி துடிக்க துண்டாக்குகிறான். கால்களைத் தூக்கி வைதது அணுஅணுவாக நகர்ந்தான். பல நாள் பயணத்துக்கு அப்பால் எங்கோ நி்ன்று கொண்டிருந்தது அவனுடைய வண்டி. காற்றே இல்லை. வானமும் பூமியும் உறைந்து நின்றிருந்தன.

பின்பக்கம் புழுவின் மென்குரல் மன்றாடியது. மீண்டும் மீண்டும். ஒரு சக மனித உயிரின் அழைப்பு. அதில் இன்னும் எஞ்சும் நம்பிக்கை. இந்த மனித குலத்தை இதுகாறும் நிலை நிறுத்திவரும் பெருவல்லமையே அதுதான். மனிதன் மனிதனிடம் கொண்டிருக்கும் ஆதார உறவு. தன்னைப் போன்ற ஒருவனிடம் பசிக்காக கைநீட்டும்போது, முன்பின் தெரியாத ஒருவனிடம் அடைக்கலம் கோரும்போது மனிதனில் உருவாகும் எதிர்பார்ப்பு. எத்தனை ஆயிரம் நூற்றாண்டுகளாக மானுட இனம் அந்த உணர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகியிருக்கும். எத்தனை கோடி இக்கட்டுகளில் அதை பொத்திப் பேணி எடுத்திருக்கும்!

‘எங்கிருந்து? இந்த கீழ்த்தரமான குரங்குக்கூட்டம் எங்கிருந்து அந்த மேன்மையை பெற்றுக்கொண்டிருக்கும் மின்னலில் தீ வந்து மண்ணில் விழுந்தது போல அதுவும் வானத்திலிருந்து வந்ததா? அதனால்தான் ஒவ்வொரு பெருந்துயரிலும் அது வானை நோக்கி ஏறிடுகிறதா? விளங்கிக் கொள்ளமுடியாத, மகத்தான, ஆனால் மிகமிக மென்மையான ஒன்று தன்னிடமிருப்பதை அது அறிந்திருக்கிறது. ஒவ்வொரு உச்சகட்ட அபாயத்தையும் அதைக்கொண்டுதான் மனிதன் தாண்டிவந்திருக்கிறான். அது கடவுளின் கண்ணீர்த்துளி. இதோ நான் அதன்மேல் கால்வைத்து நடந்து விலகுகிறேன். கடவுளின் முகத்தில் இதயத்தில் அடிவயிற்றில் என்னுடைய கனத்த சப்பாத்துக்கள் பதிந்து நசுக்கிச் செல்கின்றன.‘

ஏய்டன் கண்கள் இருட்டி வந்தன. மண் அவனை நோக்கி எழுவது போலத் தோன்ற அனிச்சையாக கையை நீட்டியபடி தள்ளாடி விழப்போனான். ஜோசப் அவன் தோளைப்பற்றிக் கொண்டான். “நன்றி” என்று ஏய்டன் சில கணங்கள் மண் ஆட அப்படியே நின்றான்.

பின்பு, தன்னை விடுவித்துக்கொண்டு கால்களைத் தூக்கி வைத்து நடந்தான். ஒவ்வொரு காலடியிலும் மண்ணை ஓங்கி மிதித்தான். ஓர் எலும்பு மண்பாண்டம் போல நொறுங்கியது. பின்பக்கம் அந்த முனகல்கள் இப்போது உரக்கவே கேட்டன. “தொர தொர”

வெள்ளை யானை, ஜெயமோகன். எழுத்து முதல் பதிப்பு 2013. பக்கம் 200-207
Related Posts Plugin for WordPress, Blogger...