கோபிகிருஷ்ணன் கவிதைகள்

1. சொர்க்கவாசி

யேசு வந்தார்
பாவம் ஒழிந்தது

காந்தி வந்தார்
தீண்டாமை ஒழிந்தது

புத்தர் வந்தார்
உயிர்வதை ஒழிந்தது

சாக்ரட்டீஸ் வந்தார்
மூடச் சிந்தனை ஒழிந்தது

மார்க்ஸ் வந்தார்
ஆதிக்க வர்க்கம் ஒழிந்தது

லிங்கன் வந்தார்
அடிமைத்தனம் ஒழிந்தது

பெரியார் வந்தார்
அறிவிலித்தனம் ஒழிந்தது

வேறு யாரோ வந்தார்
தீமை ஒட்டுமொத்தமாக ஒழிந்தது

உல்லாசமாக இருக்கிறேன்
காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு
யார் வருகைக்கோ காத்துக்கொண்டு.

2. இயக்கம்

பிரபஞ்சத்தில் என்றோ
ஒரு துகள்
ஏன் என்று தெரியாது
ஆனாலும்
உருவெடுத்தது.

காலம் உருள,
துகளும் உருண்டது.
பிற துகள்களுடன்
உரசி
மோதி, கலந்து
சில உறவுகள், உணர்வுகள்
பிரமைகள் அர்த்தங்கள் அனர்த்தங்கள்
இலட்சியங்கள் கொள்கைகள் வெறும் மாயைகள்
உணர்வுகளில் சிக்கல்கள்
முரண்படல்கள்
ஒதுங்குதல்
ஒதுக்குதல் சுமுகம் இணக்கம் வித்தியாசம்
அந்தியமாதல்

சிக்கல்கள் உபாதைகள்
சந்தோஷத்தின் சாயைகள் கீற்றுகள்
குழப்பங்கள் தெளிவுப் போலிகள்.
அமைதியாக
சந்தோஷமாக
சார்புகளையும் கறைகளையும்
களைந்து
காலவெள்ளத்தில் கரையும் இத் துகள்.

3. கவலைக்குரிய விஷயம்

கவலைப்படவில்லை
யாரும் நிஜமாகவே
கவலைப்படவில்லை
கவலையில்லாமல் இருந்தது.
கவலைப்பட ஆரம்பித்தார்கள்
கவலைக் கிடமாகிவிட்டது.
கவலையைப் போக்க நினைத்தார்கள்
கவலை வந்து சூழ்ந்தது.
கவலையைப் பற்றி
கவலைப்படாமல் இருந்திருந்தால்
கவலையே இல்லாமல் இருந்திருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...