ஜோ.டி.குரூஸின் ‘கொற்கை‘க்கு 2013 சாகித்ய அக்காதமி விருது

2013-ம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது ‘கொற்கை‘ நாவலுக்காக ஜோ.டி.குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எழுத்தாளர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே கௌரவிக்கப்படுவது அர்த்தமுள்ளது. அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. எத்தனையோ தகுதியற்ற பல படைப்புகளுக்கு இதுவரை விருதை அளித்த சாகித்ய அக்காதமி தற்போதுதான் சரியான பாதையில் பயணிக்கிறது என்பதை நினைத்து மகிழ்வாக இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜோ.டி.குரூஸ் சென்னை இராயவரம் பகுதியைச் சேர்ந்தவர். பொருளாதாரத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். கப்பல் போக்குவரத்துத் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். “புலம்பல்கள்” எனும் கவிதை நூல் 2003ல் வெளியாகியுள்ளது. இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த புதினம் எனும் பரிசு பெற்றிருக்கிறது.

இவர் எழுதிய கொற்கை, ஆழி சூழ் உலகு ஆகிய இரு நாவல்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை. மேலும் ‘மரியான்‘ திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். எழுத்துப் பணி மட்டும் அல்ல ஆவணப்படம் எடுப்பதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். ‘விடியாத பொழுதுகள்‘, ‘எனது சனமே‘ என்கிற இரு ஆவணப்படங்களைத் தமிழில் தாயாரித்திருக்கிறார். ஆங்கிலத்தில் ‘டுவர்ட்ஸ் டாவ்ன்‘ என்கிற ஆவணப்படத்தை இயக்கி உள்ளார்.

தான் பிறந்து வளர்ந்த எழில் கொஞ்சும் கடற்கரை கிராமமான உவரி பற்றிய நினைவுகளாக பின்வருமாறு சொல்கிறார்:

''என்னுடைய இன்றைய வளர்ச்சியின் ஆணிவேராக இருப்பது, என் தாய் மண்ணான உவரி கிராமம்தான். நான் சிறுவனாக இருந்தபோது, பெரும் கடலோடியாக இருந்த என் தாத்தா தொம்மந்திரையார், கொழும்பு துறைமுகத்தில் வேலை செய்த பப்பா (அப்பாவின் அப்பா) தோமாஸ் ஆகியோரிடம் இருந்து ஆளுமையைக் கற்றேன். கடல் ஒரு பிரமாண்டம். கரையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் கட்டுமரங்கள், கடற்கரை நோக்கி ஓடிவரும் அலைகள் எனக் கடலின் அழகே தனி.

கடற்கரை சுடுமணலில் உருண்டு உடல் முழுவதும் வெண்மணல் அப்பிக்கொள்ள... நட்பும் பாசமுமாக ஓடித் திரிந்த கடற்கரையும் அதை ஒட்டிய சாலையும் இப்போது கடலுக்குள் போய் விட்டது. ஆனாலும், அந்த நினைவுகள் அப்படியே நெஞ்சுக்குள் பொதிந்துக்கிடக்கின்றன. எங்கள் ஊரின் கடல், வெயில் அடிக்கும்போது ஒருவிதமாகவும் வாடைக்காற்று வீசும்போது வேறொரு விதமாகவும் ஆர்ப்பரித்து பொங்குகையில் இன்னொரு விதமாகவும் இருக்கும். ஆனால், அதைப் பார்த்து பயந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

ஊருக்குள் தொழில் பிரச்னை, சமூகப் பிரச்னை அல்லது பக்கத்து ஊருடன் பிரச்னை என்றால், தீர்வு காண ஊர்க் கூட்டம் நடக்கும். பள்ளிக்கூடம் அல்லது கோயில் முன்பாக நடக்கும் இந்தக் கூட்டத்தில் மக்கள் பல அடுக்குகளாக அமர்ந்திருப்பார்கள். முதல் சுற்றில், வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த, வயதானவர் இருப்பார்கள். அடுத்த சுற்றில் தொழிலுக்குச் செல்லக்கூடியவர்களும் அதற்கு அடுத்ததாக இளைஞர்களும் அமர்ந்து இருப்பார்கள்.

எட்டாவது வரை ஊரில் படித்துவிட்டு அதற்குமேல் படிக்க இடையன்குடியில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளிக்குப் போனேன். கடற்கரையில் இருந்துவிட்டு தேரிக்காட்டு வழியாகப் புத்தகத்துடன் போகும்போது கொத் துக் கொத்தாக மாங்காய், குலை குலையாய் வாழைப்பழம், மரத்தில் காய்த்துத் தொங்கும் பலாப்பழங்கள் என, அது புது விதமான உலகமாக இருந்தது.

நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது, புயல் வருவதாக அரசு அறிவித்தது. அதனால் மக்கள் எல்லோரும் ஊரைக் காலி செய்துவிட்டு கையில் கிடைத்த பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு இடையன்குடி கிராமத் துக்குச் சென்றபோது, வீடுகளில் கருப்பட்டிக் காபி மணக்க எங்களை எல்லாம் ஆரத்தழுவி வரவேற்றார்கள். அந்த அன்பும் பாசமும் எப்போதும் நினவில் இருக்கும். அதே போல, எங்கள் ஊரில் அந்தோணியார் கோயில் திருவிழா நடக்கும்போது, ஆசாரிப்பள்ளம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து மணிச் சத்தம் முழங்க மாட்டு வண்டிகளில் சாரை சாரையாக மக்கள் வருவார்கள். அவர்கள் தங்குவதற்காக எங்கள் ஊர் மக்கள் தங்கள் வீடுகளைக் கொடுத்து உதவுவார்கள். அவர்களோ தாங்கள் கொண்டுவரும் வாழைப்பழத்தைத் தார் தாராக வெட்டிக் கொடுப்பார்கள். அந்தச் சமயத்தில் ஊர் முழுக்கக் கருப்பட்டி மணம் கமகமக்கும்.

சிறு வயதில், எத்தனையோ விஷயங்களைச் சொந்த மண் எனக்குக் கற்றுக்கொடுத்து இருக்கிறது. நாம் என்ன பாடுபட்டாலும் பரவாயில்லை எனக் காட்டுக்கு மீன் சுமந்த ஆத்தாமாரையும் தோள் எலும்புத் தேயத் தேய பேரப்பிள்ளைகளைப் பள்ளிக்குத் தூக்கிச் சுமந்த தாத்தாமாரையும் நினைத்தாலே நெஞ்சில் ஒரு பாரம் வந்து அப்பிக்கொள்கிறது. இவர்களுக்காக என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ண அலைகளே எப்போதும் என்னைத் துரத்திக்கொண்டு இருக்கின்றன. இன்று நான் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்பதற்குக் காரணம், இந்த வேர்களின் தியாகமன்றி வேறென்ன?''

தொடர்புடைய பதிவுகள்:


தி இந்து பேட்டி
Related Posts Plugin for WordPress, Blogger...