முதலும் முடிவும் –சுந்தர ராமசாமி

su.ra.“வரமாட்டேன் போ! நீ இளு இளுன்னு இளுத்தாலும் வரமாட்டேன்!” அழகு தொண்டை கிழியக் கத்தினாள். தாய் மரகதத்திற்கு கோபம் வந்தது. அடக்கிக்கொண்டாள்.

“ஏட்டி, முரண்டு  பண்ணாதே! போயிட்டு நாளைக்கு வரலாமின்னா? இருட்டிடிச்சி பாரு. அப்பா வந்தா கோவிச்சுப்பாரு.”

“நான் வரமாட்டேன் போ! என்னை இளுக்காதே! எனக்கு நம்ம வீடு புடிக்கல்லே. இந்த வீடுதான் புடிச்சது.”

மரகதத்திற்கு சிரிப்பு வந்தது.

“ஏட்டி, நம்ம வீட்டுக்கு என்ன குத்தமாம்?”

“வீட்டத்தான் பாரு வீட்டெ-நல்லாவேல்லே, இது எவ்வளவு பெரிசா இருக்குது! தரையெல்லாம் பாரு, வெண்ணக் கட்டியாட்டம். நம்ம வீட்டுலெ சாப்பிடச்சே சோத்திலே மண்ணுல்லா விளுது” அழுகையின் இடையே அபிநயத்துடன் சொன்னாள் அழகு.

பட்டுப்புடவைக்காரி நாயகியின் முன், தன் வீட்டை இப்படி வர்ணிப்பதில் குன்றிப்போனாள் மரகதம்.

”நான் ஒன்னெ விட்டுட்டுப் போயிடுவேன், ஆமா.”

“போ போ! நான் இங்கியேருப்பேன்.”

வாசலில் நாயகியின் கணவர் காரில் வருவதைப் பார்த்தாள் மரகதம்.

“அழுதேன்னா உரிச்சுப்போடுவாரு.”

“எனக்கொண்ணும் பயமில்லே அவரெ.”

கையைப் பிடித்துப் பலமாக இழுத்தாள் மரகதம். இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாள். திமிறினாள் அழகு. வில்லாய் வளைந்து கீழே இறங்கினாள். சேலையில் தொங்கினாள். தரையில் விழுந்து புரண்டாள்.

“யெ… ம்… மோவ், நான் வல்லெ.”

மரகதத்திற்கு கோபம் தலைக்கேறிவிட்டது. படபடவென்று குழந்தையின் முதுகில் அறைந்தாள். நாயகி தடுத்தாள். ஒன்றிரண்டு அடி அவள் கையிலும் விழுந்தது. அதைப் பற்றிக் கவலையில்லை மரகதத்திற்கு. குழந்தைகூடச் சொல்லும்படி தன் வீட்டின் முன்னாள் “கொட்டார”த்தை எழுப்பிக்கொண்ட நாயகியின் மேல் அவளுக்கும் உள்ளுரக் கோபம்தான்.

மரகதம் குழந்தையை இழுத்துக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தாள். குழந்தை வீட்டை அடைந்த பின்பும் அதன் அழுகை மட்டும் நாயகிக்குத் தெளிவாகக் கேட்டது.

2

நாயகியின் கணவர் ஆறுமுகம் பிள்ளை புதுப் பணக்காரர். ஏழையை ஆண்டியாக்கிய யுத்தம் ஆறுமுகம் பிள்ளையைப் பணக்காரராக்கிவிட்டது. அவருக்கே தெரியாது அவரிடம் பணம் எப்படிக் குவிந்தது என்று.

செய்து கொண்டிருந்த வியாபாரத்தில் தான் முதன்முதலில் கேட்ட “பிளாக் மார்க்கெட்” என்ற வார்த்தையின் பொருளை செயல் முறையில் பார்த்ததென்னவோ உண்மைதான். இருந்தாலும், “அது” இவ்வளவு சக்தி வாய்ந்தது என்று அவரால் நம்ப முடியவில்லை-இன்று கூட.

புதுப் பணக்காரர்களின் வாழ்க்கையே தனியாக இருக்கும். செய்யும் எந்தக் காரியத்திலும் ஒரு எடுப்பு. எதிலும் ஒரு அலட்சியம். காரில் போவது ஒரு தனித்தினுசு.

அதிலும் காரில் போகும்பொழுது நண்பர்கள் வெயிலில் குடைகூட இல்லாமல் எதிரே வந்துவிட்டால் ஒரே குஷி-ஒரு திருப்தி.

இவர்தான் காரில் வருகிறார் என்று தெரிந்து கொண்டு நண்பர் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்வதும், கார் கண்ணெதிரே வந்தவுடன் ஆவலின் மேலீட்டால் காரினுள் பார்த்துவிடுவதும், அதே தருணத்தை எதிர்நோக்கியிருக்கும் ‘புதுப் பணம்’ தங்கப் பல்லைக் காட்டி ஒரு பெரிய கும்பிடு போடுவதும், கார் மறைந்தவுடன் நண்பர், “நேத்து கணவனும் மனைவியும் மொட்டை வண்டியில் திருவிழாவுக்குப் போனது ஞாபகமிருக்கோ?” என்று கூட வருபவரிடம் கேட்டுவிட்டுத் தன்னையே எமாற்றிக்கொள்ளும் ஒரு சிரிப்பு சிரிப்பதும் சாதாரணமாக நடைபெறும் விஷயங்கள்.

திடீரென்று ஒரு ஆசை பிறந்துவிட்டது. ஆறுமுகம் பிள்ளைக்கு. ‘ஜோக்கா’ ஒரு பங்களாக் கட்டவேண்டுமென்று.

பிள்ளை சென்னை சென்றிருந்தார். வியாபார விஷயமாக துரையைப் பார்க்க வேண்டியிருந்தது.

நல்லமிளகை உள்நாட்டில் வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பும் வியாபாரம் பிள்ளைக்கு-தற்சமயம். நம் நாட்டில் பிறக்கும் நல்லமிளகு, நம் நாட்டு மக்களைவிட அமெரிக்காலிருக்கும் வெள்ளையனுக்குப் பிடிக்கும் பொருளாக அமைந்துவிட்டது பிள்ளையின் அதிர்ஷ்டம்! அமெரிக்கன் யந்திரத்தினால் நல்லமிளகு செய்யும்வரை பிள்ளைக்கு யோகம்தான்!

வியாபாரத்திற்காக சென்னையிலிருக்கும் ஒரு பிரபல ஆங்கிலக் கம்பெனியுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார் பிள்ளை. பிள்ளையைத் துரை கூப்பிட்டுவிட்டார். கடவுள் கூப்பிட்டுவிட்டது போல் ஓடினார் சென்னையை நோக்கி. உள்ளுர் பி.எ.யும் கூட உண்டு, தமிழாக்க வேலைக்கு.

துரை, பிள்ளைக்குத் தான் புதிதாகக் கட்டிமுடித்திருந்த பங்களாவில் ‘கார்டன் பார்ட்டி’ ஒன்று வைத்திருந்தார். ‘பார்ட்டி’ முடிந்ததும் புதிய வீட்டைச் சுற்றிக் காண்பித்தார் துரை. மலைத்துப் போனார் பிள்ளை.

நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மாடிக்குப் போகும் விதமும், சுவரில் அலமாரிகள் முளைப்பதும், ஸ்விட்சைத் தட்டினால் களிர் வருவதும் பிள்ளைக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணின. உடனே மனதில் ஒர சங்கல்பம் செய்துகொண்டார்-ஏறக்குறைய இதைப்போல் ஒரு வீடு கட்டி விடுவதென்று. துரைக்கும் துரைச்சானிக்கும் கையைக் கொடுத்துவிட்டுக் காரில் ஏறிக்கொண்டது முதல் அதே சிந்தனை.

காரை இடிந்து, பொங்கலுக்கு வரிக்குதிரையாகி சித்தாசனின் ‘ஸிக்னேச்சர்’ தாங்கி வணங்காதவன் தலையைப் பதம் பார்க்கும் நிலைகளும், பகலை இரவாக்கும் அறைகளும் அறைக்கு ஒரு தூணும் கொண்ட தன் ஊர் வீடுகளைத் துரையின் பங்களாவுடன் ஒப்பிட்டு ஏளனச் சிரிப்புச் சிரித்தார் பிள்ளை.

ஊருக்கு வந்த பின்பும் ஒரே பேத்தல் இதுதான். துரையின் பங்களாவின் ஒவ்வொரு அம்சத்தையும் வர்ணிப்பார். “அந்தப் பயகளெ குத்தம் மட்டும் சொல்லத் தெரியும். அடி அம்மா! வீடாவா கட்டியிருக்கான் பொட்டி மவன்! அதிருக்கட்டும், அண்ணைக்கு ‘புஸ்கோத்து’ ஒண்ணு வச்சிருந்தானே ‘காட்டன் பாட்டிக்கு’ இங்கிலாந்திலெ செய்தது…”

பக்கத்திலிருந்த பி.எ. குறுக்கிட்டு விட்டான்.

“சேச்சே, அது சக்கரவள்ளிக்கிழங்கிலெ உசிலம்பட்டிலெ செய்யறது மாமா.”

பிள்ளைக்குக் கோபம் வந்துவிட்டது.

“போலெ. அவ்வளவும் தெரியும். செய்யறான் உசிலம் பட்டிலெ சேவநாழி. சும்மா கதைக்காதே.” ஒரு அதட்டல் போட்டார் பிள்ளை.

பங்களாவை ஆறே மாதத்தில் கட்டிமுடித்துவிட்டார் பிள்ளை. வீடு “அப்படி இருக்கு, இப்படி இருக்கு” என்று ஊரெல்லாம் பேச்சு. கார் மாடிக்குப் போவதைத் தன் கண்ணால் பார்த்ததாகக் கூடைக்காரி ஒருத்தி மரகதத்திடம் வந்து சொன்னாள்.

மரகதமும், நாயகியும் பால்ய தோழிகள். ஒன்று அரை மரகத்திடம் கடன் வாங்கும் நிலைதான் நாயகிக்கு அன்று.

குழந்தை அழகுவுடன் புது வீட்டைப் பார்க்கச் சென்றாள் மரகதம். பழைய சிநேகத்தை முற்றும் மறந்து விடாமல் வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள் நாயகி. அழகு வெண்ணக் கட்டித் தூண்களைத் தொட்டுப்பார்த்த வண்ணமிருந்தாள். மரகதம் விளையாட்டாகச் சொன்னாள்,

“அக்கா, ஒருவிதத்திலே நான்தான் இதுக்கெல்லாம் சொந்தக்காரியா இருந்திருக்கணம் தெரியுமா?”

“எப்படி?”

“மொதல்லே அவரு என்னத்தான் ‘பாக்க’ வந்தாரு, நான் கருப்பாருக்கேண்ணு வேண்டான்னுட்டாரு. அப்புறம்தான் இந்தத் துரைச்சானியைக் கெட்டிக்கிட்டதும் இப்பம் போடு போடுண்ணு போடுறதும்.” விரலை நாயகியை நோக்கிச் சுட்டிக் காட்டிச் சிரித்தாள் மரகதம். நாயகி பதில் பேசவில்லை. என்னவோ போலிருந்தது அவளுக்கு.

மரகதம் நாயகியிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள். அதைத் தொடர்ந்துதான் அழகு பங்களாவை விட்டு வர மறுத்து அடம்பிடித்ததும், தாய் மகளுக்கு ‘பூசை’ கொடுத்து இழுத்துச் சென்றதும்.

3

அடுத்த நாள் மாலை தாய்க்குத் தெரியாமல் பங்களா வீட்டை அடைந்தாள் அழகு. வாசல் திண்ணையில் நாயகி உட்கார்ந்துகொண்டிருந்தாள். அழகுடன் கொஞ்சினாள். நேற்று அழுத காரணத்தை மீண்டும் கேட்டாள். அவள் வாயால் சொல்லிக் கேட்பதில் ஒரு சந்தோஷம். திரும்பவும் முன் சொன்னதையே சொன்னாள் அழகு.

“அப்பம் இண்ணைக்கும் போகமாட்டே?”

அழகு பலமாக மண்டையாட்டினாள்.

“போவமாட்டே?”

“ஊம் ஹீம்.”

“உங்கம்மா வந்து கூப்பிட்டாலும்?”

“போமாட்டேன்.”

திடீரென்று புருவத்தை நெளித்துக் கண்ணைச் சுழற்றிவிட்டுக் கேட்டாள் அழகு,

“நான் இங்கேயே இருக்கலாமோ?” சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு.

“தாராளமா இருக்கலாம்.”

அழகுவை இழுத்து அணைத்துக்கொண்டாள் நாயகி. அழகுவுக்கு சொல்லமுடியாத சந்தோஷம்.

நாயகியின் மகன் ராசா பள்ளி விட்டு வீட்டினுள் நுழைந்தான்.

“ராசா வந்தாச்சு” என்றாள் அழகு. இருவரும் விளையாடலாமென்பது பொருள்.

நாயகி, “இங்கேயே இருக்கணுமிங்கியே, நான் ஒண்ணு சொல்வென் செய்வியா?” என்றாள்.

“ஓ செய்வேனே!”

“எங்க வீட்டு ராசாவெக் கெட்டிக்கிடு, இங்கெயே இருக்கலாம்.”

அழகு புரியாதது போல் விழித்தாள்.

“கல்யாணம்டீ! ராசாவெக் கல்யாணம் பண்ணிக்கிட்டா இங்கியே இருக்கலாங்கறேன். தெரிஞ்சுதா?”

“என்னடா, ராசா ஒனக்குச் சம்மதம்தானா?”

ராசா உள்ளே ஓடிவிட்டான். கல்யாணமென்றால் என்னவென்று தெரியாவிட்டாலும் அது ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயமென்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது.

அழகுவுக்கு இது பெரிய ஏமாற்றம். நாயகி சொன்ன வார்த்தைகள் அவள் பிஞ்சு மனதில் வேரூன்றிவிட்டது. எனவே எப்படியாவது ராசாவைச் சம்மதிக்க வைத்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டாள்.

காப்பி குடித்துவிட்டு கொல்லையில் பந்தைக் கீழே தட்டி விளையாடிக்கொண்டிருந்தான் ராசா. மெதுவாக அங்கு சென்றாள் அழகு.

“ராசா, என்னைக் கல்யாணம் பண்ணிக்கடா, ஒன்னெச் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் இந்த வீட்டிலேயே இருக்கலாமாம். அத்தெ சொல்றா.”

“போட்டி இங்கிருந்து, உளறாதே.”

அழகுவுக்குக் கண்ணில் நீர் வந்து விட்டது. தன் ஆசை ஏமாற்றத்தில் முடிந்து விடுமோ?

“ராசா, கல்யாணம் பண்ணிக்கமாட்டியா? இதோ பாரு எனக்கு இங்கெயே இருக்கணும்னு ஆசையா இருக்குடா, செய்வாயா, சொல்லுடா சொல்லு” என்று சொல்லிக்கொண்டே அவன் சட்டையைப் பற்றிக் கொண்டாள் அழகு.

“ஹீஃப்” ஒரு கிழட்டுச் சிரிப்பு பின்னாலிருந்து வந்தது, வேலைக்காரி தாயி நின்று கொண்டிருந்தாள்.

“ஏ கள்ளி, நீ எங்க வீட்டுப் பிள்ளெய வளச்சுப்போடுவாய் போலிருக்கே!” வாயைக் காட்டிச் சிரித்தாள் தாயி.

ராசாவுக்கு வெட்கம் அரித்தது. இதற்கிடையில் அழகு தாயிடம் சிபாரிசுக்கு வந்துவிட்டாள். ராசாவிடம் தன்னைக் கட்டிக்கச் சொல்லவேண்டுமென்று. ராசா ஓடி மறைந்தான்.

4

அழகு பதினைந்து வயதுப் பெண் இப்பொழுது. கிராமிய அழகு அவளிடம் வீசிற்று. இப்பொழுதெல்லாம் பங்களா வீட்டின் மோகமும், அதைத் தொடர்ந்து மற்ற விஷயங்களும் ஞாபகம் வந்துவிட்டால் அவளறியாமலே உரக்கச் சிரித்துவிடுவாள்.

அன்று அவள் ஆசை பங்களாவின் மேலிருந்தது. ராசாவைக் கட்டிக்கொண்டால் அது சாத்தியமாகிவிடுமென்று எண்ணினாள். இன்று பங்களாவின் மேலிருந்த ஆசை குறைந்து ராசாவை மணந்துகொள்ள வேண்டுமென்ற ஆசைதான் தலை தூக்கி நின்றது.

ஆனால் ராசாவுடன் தன் அழகை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது அவள் மனது சஞ்சலப்படும். அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொள்வாள். எல்லாக் கண்ணாடிகளும் சேர்ந்து கொண்டு அவள் நிறத்தைக் கறுப்பாகவே காட்டின. கறுப்பென்றால் அப்படி இப்படியென்று இல்லை. தொட்டுப் பொட்டு இட்டுக்கொள்ளலாம்.

இப்பொழுதெல்லாம் அவள் பங்களா வீட்டுக்குச் செல்வதென்றால் அது ராசாவைப் பார்க்கத்தான். அதற்கு ஏதாவது ஒரு நொண்டிச்சாக்கைச் சொல்லிக் கொள்வாள். ஏதாவது ஒரு சாமானை எடுத்துக்கொண்டு ராசா வீடு சென்று, வரும்பொழுது வேண்டுமென்றே அதை வைத்துவிட்டு வந்து அடுத்த நாள் மறந்து வைத்துவிட்டதை எடுக்கச் சென்று, வரும்பொழுது ஒரு புத்தகம் வாங்கி வந்து அதைக் கொடுக்க அடுத்த நாள் சென்று… இப்படி இப்படி.

அன்று எதிர்பாராமல் அந்தச் சந்திப்பு நேர்ந்தது-தனிமையில்-வீட்டில்  வேறு ஒருவருமில்லை, ராசாவைத் தவிர.

ராசா அவள் பக்கத்தில் வந்து நின்றான். அவள் முகத்தை அள்ளிப் பருகுவதுபோல் பார்த்தாள். அழகுவுக்கு நெஞ்சு படபடத்தது. ராசா இன்னும் கொஞ்சம் நெருங்கினாள். அழகு அசையவில்லை-முடியவில்லை. அவள் தோள் மேல் கை வைத்தான் ராசா. எதிரே இருந்த பெரிய நிலைக்கண்ணாடியைப் பார்த்தாள் அழகு. அதில் அவர்கள் இருவரும் தெரிந்தார்கள்-பௌர்ணமியும் அமாவாசையும் ஒரே நாள் ஏற்பட்டது போல்.

ஒரு சந்தர்ப்பத்தில் காதலர்கள் துணிந்து சந்தித்துக் கொண்டுவிட்டால் பின்னால் அவர்களுக்குத் தைரியம் வந்துவிடும் போலிருக்கிறது. ராசாவும் அழகுவும் இப்படித்தான் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள்.

ராசாவுக்குக் காதலைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வயது ஒன்றும் அப்படி ஆகிவிடவில்லை. பிஞ்சு வயதில் ஊறும் ஒரு இனம் தெரியாத ஆசைதான் அவனுக்கு ஏற்பட்டது அழகுவின் மேல். அதனால்தான் அழகு கூட அவன் கண்களுக்கு அழகாகப் பட்டாள்.

எப்பொழுதாவது, தான் கறுப்பாக இருப்பதை அழகு குறிப்பிட்டாலும்கூட, “கஸ்தூரிகூட கறுப்புத் தானே அழகு? எனக்குக் குணம்தான் பெரிசு” என்று ஏதோ நாவலில் படித்ததை ஒப்புவிப்பான் அவளிடம்.

5

ராசாவுக்கு உள்ளுரில் படிப்பு முடிந்து விட்டது. மகன் வெளியூர் சென்று படிக்க வேண்டுமென்ற ஆசை ஆறுமுகம் பிள்ளைக்கு. தாய்க்கு விருப்பமில்லை. இருந்தாலும் ராசா பட்டணம் செல்வது என்று தீர்மானமாகி விட்டது.

ராசா புறப்படுவதற்கு முந்தின நாள் இரவு ஒன்பது மணி, ராசாவும் அழகுவும் அழகுவின் வீட்டுக் கொல்லையில் சந்தித்துக் கொண்டார்கள்-பேசி வைத்திருந்தபடி. ராசா படபடவென்று ஏதேதோ பேசினான். தான் படித்து முடித்து டாக்டராக வந்து அழகுவைக் கட்டிக்கொள்வதாகச் சொன்னான். “நாலு வருஷம் எப்படியும் பொறுத்துக்கொள் அழகு. நான் வந்து யாரு என்ன சொன்னாலும் சரி…” வார்த்தையை முடிக்கவில்லை. உணர்ச்சி மேலிட்டு விட்டது. அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். இருளோடு இருளாய் இருவரும் ஒன்றினர்.

அழகு கண்ணீர் வடித்தாள். இருந்தாலும் சிரித்து விடை கொடுத்தாள்.

6

நான்கு வருடங்கள் சென்றன. ஒரு நாள் ராசாவிடமிருந்து ஆறுமுகம் பிள்ளைக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்தைப் படித்துவிட்டு எகிறிக் குதித்தார் பிள்ளை. தான் வடநாட்டுப் பெண் ஒருத்தியைக் காதலிப்பதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் பம்பாய் சென்று பதிவு மணம் செய்துகொள்ளப்போவதாகவும் எழுதியிருந்தான். நாயகி, பிள்ளை இறந்துவிட்டதுபோல் அழுதாள். உடனே ஊர் புறப்பட்டு வர வேண்டுமென்று தந்தியடித்தார் பிள்ளை. பதிலில்லை. ராசா வரவுமில்லை. பம்பாய்ப் பத்திரிக்கையில் அவன் கல்யாணப் போட்டோ வெளி வந்தது. போட்டோவை அழகுவும் பார்க்க நேர்ந்தது. அழுது பயனில்லை. கொடுத்துவைத்தது 'அவளுக்குத்'தான் என்று மனதைத் தேற்றிக்கொண்டான். ராசாவினருகே நின்றுகொண்டிருந்தவள், அவளைவிட எவ்வளவோ அழகுதான். ஒன்று மட்டும் அவளுக்குப் பிடிக்கவில்லை. ராசா அழகு சுந்தரனாகப் பக்கத்தில் நிற்கும் பொழுதே தலையில் எதற்கு முட்டாக்கு?

நாயகி துரும்பாக இளைத்துப்போனாள். மகனின் வருங்காலத்தைப்பற்றி எவ்வளவோ 'கோட்டை'கள் கட்டி வைத்திருந்தாள். இந்த எதிர்பாராத சம்பவத்தால் அவள் மனம் முறிந்துவிட்டது. பொதுவாகவே பலவீனம். கூட இப்பொழுது ஒரு இருமல். படுத்த படுக்கைதான். திடீரென்று ஒரு நாள் நாயகிக்கு அதிகமாகி விட்டது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிற்று. பக்கத்தூருக்குக் கார் பறந்தது-டாக்டரை அழைத்து வர. நாயகி வீட்டில் ஊர் கூடிவிட்டது. அழகு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

டாக்டர் அரைமணி நேரம் சோதித்துவிட்டு பிரயோஜனமில்லையென்று கையை விரித்தார். தன் வருகை பிரயோஜனப்பட இரண்டு ஊசிகள் போட்டுவிட்டப் போய்ச்சேர்ந்தார்.

கூடியிருந்தவர்கள் ஒப்பாரியை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய தருணம் வந்தவிட்டது. சிறிது நேரத்தில் நாயகியின் ஆவி பிரிந்தது. கூடியிருந்தவர்கள் எல்லோரும் அழுதார்கள். நாயகியின் 'சண்டை'க்காரிகள் கூடத் தங்கள் சொந்தத்தில் இறந்தவர்களை நினைத்தக் கொண்டாவது அழுது தீர்த்தார்கள். நாயகியின் பிரிவில் உண்மையான துயரம் அடைந்த ஒரு ஆத்மா அங்குண்டு. அவள்தான் அழகு.

7

பெரிய வீட்டில் தனியாக வாழ்க்கை நடத்துவது மரண வேதனையாக இருந்தது பிள்ளைக்கு. இரண்டு வருடஙக்ள் பொறுத்துப் பார்த்தார். ரொம்பக் கடினமாயிருந்தது. வயது காலத்தில் படுக்கையில் விழுந்துவிட்டால் யார் 'தண்ணி' தருவது?

கி.மு. தணிகாசலம் தன் நண்பரான பிள்ளையிடம் ஒரு அருமையான யோசனை சொன்னார். பிள்ளை முதலில் சிறிது தயங்கினாலும் கடைசியில் ஒப்புக்கொண்டார். அதன்படி கி.மு. மரகதத்துடன் பேசினார். மரகதத்துக்கு வேறு போக்கு?

ஒரு நல்ல நாளில் அழகுவை ஆறுமுகம் பிள்ளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

மறு நாள் அந்திவேளை, அழகு பங்களாவின் திண்ணையில், நாயகி தன் மகன் ராசாவுக்கு அழகுவை முடிபோட்ட அதே திண்ணையில் உட்கார்ந்து, சிந்தனையில் ஆழந்திருந்தாள்.

வேலைக்காரி தாயி அங்கு வந்தாள்.

“இருந்தாலும் நீ பொல்லாதவதான். அண்ணைக்கு இந்த வீட்டிலெதான் இருப்பேன்னு அடம்பிடிச்சே, அதையே சாதிச்சுப்புட்டியே” என்று சொல்லி அழகுவின் நெற்றயில் கை கொடுத்து உருவிவிட்டு விரலைச் சொடுக்கி திருஷ்டி கழித்தாள்.

அழகுவின் கண்களில் நீர் சுரந்தது.

“ஆனந்த பாஸ்பம்” என்றாள் தாயி.

புதுமைப்பித்தன் நினைவு மலர் 1951.

சுந்தர ராமசாமி சிறுகதைகள், க்ரியா முதல் பதிப்பு 1991, பக்கம் 1-8
Related Posts Plugin for WordPress, Blogger...