உறக்கம் கொள்ளுமா? -கு.அழகிரிசாமி

ku.azhakirisamy“லலிதா, உடம்பை உழட்டாமல்” தூங்கம்மா என்று சுருண்டிருந்த போர்வையை எடுத்து லலிதையின் உடம்பில் போர்த்தினார் கனகசபாபதி ஐயர். அது அவளுடைய ஜீர வேகத்தை மட்டுப்படுத்த அவர் செய்த அற்ப சாந்தி. ஆனால், உள்ளேயிருந்து குளிர் ஊற்று குபுகுபுடிவெனப் புறப்பட்டு அவளுடைய தேக வெளியில் பாய்வதை அந்தப் போர்வை தடுக்க முடியுமா? எங்களால் தான் என்ன செய்ய முடியும்?

“அம்மா, அதோ, அந்த… ஹீம்… ஹீ, அந்த மரத்திலே… அதோ… இப்படியாக தன் இறந்து போன தாயாரை நினைத்துப் புலம்பினாள்  போலும்!

இதற்குக் கொஞ்ச நேரங்கழித்து, “அம்மா-ஹீ… ராமு… ராமுவோட அப்பா… அப்பா எங்கே… ஹீம்” என்று என்னைப் பற்றி ஏதோதோ நடுக்கத்தினிடையே புலம்பினாள்.

அவள் போர்த்தியிருந்த போர்வை படபடவென்றடித்துக் கொண்டது. அவளுடைய நோயின் கொடுமையை இடைவிடாது அறிவித்துக்கொண்டிருந்தது அந்த அசைவு. அவளது தீனக்குரல் அவள்படும் வேதனையை வெளிப்படுத்தியது. ஓய்வு ஒழிச்சலின்றி ஓடும் யந்திரத்திலிருந்து எகதேசமாய் வெளிப்படும் ஒன்றோடொன்று உராயும் ஒலியைப் போன்று லலிதையின் வாயிலிருந்து தீனமான குரலில் புலப்பம் கேட்கும்.

“தெய்வமே, எனக்கு அளித்த பிஷையைக் கடைசிவரை நீதான் காப்பாத்திக் கொடுக்க வேணும்” என்று பரிவு மிகுந்த குரலில் கடவுளை வேண்டிவிட்டுக் கனகசபாபதி ஐயர் சமையலறைக்குள் சென்றுவிட்டார்.

“லலிதா! நின் செவ்விய பவழவாயால், கொஞ்சிய மதுரமான மழலைக்கும், அழிவு வந்த விட்டதா? “பிள்ளைக் கனியமுதே” என்று நீ பாடிய பாட்டின் இனிமையை இனி அனுபவிக்க எனக்கு அதிர்ஷ்டம் இடம் தருமா?” என்று பலவாறு நினைத்து நைந்தேன்.

மறுபடியும், “ராமு… அப்பா… ” என்றாள் லலிதா. “என்னை யாரென்று தெரியல்லே? இதோ வந்துவிட்டேன் கொஞ்சம் கண்ணைத் திறந்த பார்” என்று, கெஞ்சும் குரலில் சொன்னேன்.

அவளுடைய குளிர் ஜீரத்தின் நடுக்கம் அதிகரித்துவிட்டது.

“மணி நாலரை ஆய்விட்டதே, கொஞ்சம் பஷணம் சாப்பிட்டுவிட்டுக் கொள்றதுதானே” என்று சமையலறைக்குச் சென்று திரும்பிய என் மாமா கனகசாபாபதி ஐயர் சொன்னார். அது என் மன வருத்தத்திற்குப் பயந்த உபசாரம்! அப்பொழுது உபசாரம், பேயைவிட பயங்கரமாகத் தோன்றியது. உபசாரம்! மூன்று மாதமாய்த் தீராத குளிர்க் காய்ச்சலும் இருமலும், வயிற்றில் ஏழு மாத கர்ப்பத்தையும் சுமந்துகொண்டிருக்கிறாள் லலிதை. அவள் ஒவ்வொரு தடவை இருமும்போதும் அவளுடைய விலா எழும்புகள் தோலைக் கிழித்துவிடுவன போலத் துன்னிக்கொண்டு தெரியம். ஒவ்வொரு தடவையும், அவள் இருமும்போதும் எமன் தன் பயங்கர சக்தியை அவள் மீது விட்டு விட்டுப் பிரயோகிப்பது போலிருக்கும். இதில் உபசாரம் வேறு!

“கொஞ்சம் கழிக்கட்டுமே” என்று வெறுப்போடு என் மாமாவுக்குப் பதில் கூறினேன்.

காலந்தவறி ஏதாவது “ஒழுங்கு”க்கு மாறாக நடந்தால் மாப்பிள்ளையின் மனம் வருத்தப்படும் என்று என் மாமா யந்திரம் மாதிரி-தன் குழந்தையின் நோய்க் கொடுமையைத் தன்னைக் கட்டாயப்படுத்தி மறக்கச் செய்துகொண்டு ஓடியாடும்போது உலகத்தில் நான் எடுத்த ஜன்மத்தின் துன்பஞ் செய்யும் சுபாவத் தினுடைய பிதலிபலிப்பைத்தான் பார்த்தேன்.

என் மாமனார் கனகசபாபதி ஐயரின் மூத்த மனைவி வயிற்றில் பிறந்த பெண்தான், என் மனைவி லலிதை. அவள் தன் குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்துவிட்டாள். அவள் தகப்பனார் மறுமணம் செய்த கொண்டார். அன்று லலிதையின் வாழ்க்கையில் ஆரம்பித்த கெட்டகாலம், அவள் என்னை மணந்து மூன்று வருஷங்களாகியும் நீங்கினபாடில்லை. இந்தப் பரந்த உலகத்தில் அவளுக்கு நான் கணவனாக வாய்த்ததே அவளுக்குப் பெருங் கஷ்டம் போலும்! எனக்கும், காலமெல்லாம் கவலை, வாழ்க்கையில் அருவருப்பு, கலக்கம்! என் கடமையில் நான் பிசகினதில்லை. அவளும் கடமையைச் செய்தாள். இரண்டு பேருக்கும் நடுவில் துரதிர்ஷ்டம் ஊசலாடிக் கொண்டிருந்தால்…?

இரண்டு குழந்தைகளைப் பெற்று அவற்றை இழந்துவிட்டாள். இப்பொழுதும் வயிற்றில் ஏழு மாதம். ஒரு வருஷமாக அவளுக்கு இருமல். இப்பொழுது ஜீரம் வேறு துரும்பாய் இளைத்துவிட்டாள். என் வீட்டில் ஒத்தாசைக்கு ஆளில்லாததால் அவளைப் பிறந்தகத்திற்கனுப்பினேன்.

சென்னையில் எனக்கு ஒரு கம்பெனியில் குமாஸ்தா வேலை, மாதம் நாற்பத்தைந்து ரூபாய் சம்பளம். மனித அறிவை மழுக்கி, யந்திரத்தன்மையைக் கொடுத்து ஆட்டுவிக்கும் சுபாவம் குமாஸ்தா உத்தியோகத்தின் பரம்பரைக் குணம். இந்த லஷணத்தில், நான் குடும்பத்தை நடத்தி வருகையில் உண்டான சீர்கேடுதான் லலிதைக்குத் தீரா நோயைத் தேடிக் கொடுத்தது. அந்த உத்தியோகம் கிடைத்த புதிதில் எனக்கிருந்த இயற்கையான மனுஷத் தன்மை அடிமை வெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்துவிட்டது. நானோ எனக்கு மேலுள்ள அதிகாரியின் கைப்பாவை. இப்பொழுது எனக்கும் பத்துநாள் லீவு கிடைத்தது தெய்வச் செயல்!

மறுநாள் காலையில் ஸ்நானத்தை முடித்துவிட்டுக் கோவிலுக்குச் சென்றேன். என்றுமில்லாதவாறு அன்று கடவுள் சந்நதியில் என் குறைகளைக் கூறி ஓலமிட்டுவிட்டேன்! என் வாழ்க்கையின் சாந்திக்குத் தவஞ்செய்தது என் முறையீடு. கோவிலிலிருந்து திரும்பும்போது பாதி வழியிலேயே என்னதை் தேடிக் கொண்டு ஆள் வந்துவிட்டான். அவனுடைய உள்ளம், அது சுமந்துவந்த துக்கச் செய்தியை என் மனத்தில் இடந்தேடித் தள்ளிவிட்டது. அப்பொழுது உண்டான புண்ணின் வடு என்று மறையும்!

“லலிதைக்குக் கடுமையாக இருக்கிறது” என்று திக்கிக்கொண்டே பொய் சொன்னான் வந்தவன்.

“அவள் இறந்துவிட்டாள்” என்ற உண்மையைத்தான் தன் கிழிந்த சாரீரத்தால் அவனுடைய பொய் மறைத்து வைத்தது.

வீட்டுக்கு வந்து பார்த்தேன். லலிதையின் சவத்தைச் சுற்றியும் பெண்களின் கூட்டம். அவள் மீது புரண்டு புரண்டு கத்தினார் கனகசபாபதி ஐயர். அவருடைய இளைய மனைவி, லலிதையின் தலையைத் தன் மடிமீது வைத்துப் புலம்பிக்கொண்டிருந்தாள். அவள் நீடித்த நாளாய் லலிதைக்குச் செய்ய நினைத்துக்கொண்டிருந்த உபசாரம் அதுதான் போலிருக்கிறது.

லலிதை! உன் பிணக்கோலத்தில் இதழ்கள் புன் சிரிப்பைத் தாங்கியிருப்பது பொருத்தமாயில்லை. திருமண ஊர்வலத்தில் என் காதலுள்ளத்தைக் குத்திய உன் கடைக் கண்களின் கூர்மையும் ஒளியும் மழுங்கிவிட்டன. இந்த வரண்ட உலகத்தில் நானும் ஒரு பொடி மணல்தானே! அதை அடித்துக் கொண்டு போகச் சக்தியற்ற புயல்தானா உன் உள்ள வெளியில் வீசி என்னை ஆட்டுவிக்கிறது? என் அன்புக்கனியை எனக்கென்றே பழுத்துக் கனிந்த கனியை அக்னிதேவனும் சுவைத்துச் சாரமற்ற சாம்பலாய் ஊதி விடுவானே! என் வாழ்க்கையைச் சோபிக்கச் செய்யவிருந்து விளக்கு அணைந்துவிட்டதே! நான் கனவு கண்டு, நம்பிக்கையோடு எதிர்பார்த்த வாழ்க்கையின் இசையைப் பாடத்தொடங்குமுன்பே, எனக்கு ஒத்தாசையாயிருந்த வீணையின் தந்தி அறுந்துவிட்டது.

அது நடந்து ஒன்றரை வருஷமாய்விட்டது. எனக்குக் குமாஸ்தா உத்தியோகம் போய், அதே கம்பெனியில் வசூல் ஏஜெண்டு வேலை கிடைத்தது. மதுரையில் என் ஜாகையை அமர்த்திக்கொண்டு வேலை செய்துகொண்டிருந்தேன். எங்கள் திருமணக் கேளிக்கைகளுக்கும், உல்லாசத்திற்கும் ஒரு காலத்தில், நிலைக்களனாயிருந்தது இந்த மதுரைதான். என் மனைவியின் ஊருக்குக் காட்டுப்பாதை வழியாக வாடகை வண்டியில்தான் போகமுடியும். மதுரைக்கும் அதற்கும் ஆறுமைல் இருக்கும். இப்பொழுது அங்கே போக எனக்கு ஏன் ஆசை உண்டாகப் போகிறது? என் மாமாவும் தன் மகளைப் பின்தொடர்ந்து விட்டார். நிலங்களையெல்லாம் குத்தகைக்கு விட்டுவிட்டு அவருடைய இளைய மனைவி, தன் சொந்த ஊரில் இருப்பதாகக் கேள்வி. இருந்தாலும் என் வேலையின் நிமித்தம் நான் அந்த கிராமத்துக்குப் போக நேர்ந்தது. அங்குள்ள ஒரு வியாபாரி எங்கள் கம்பெனியின் வாடிக்கைக்காரர். அவரிடம் பாக்கிப் பணத்தை வசூலிக்கப் போனேன்.

இரவு நெருங்கிக்கொண்டேயிருந்தது. இருளைப் பன் மடங்கு எடுத்து காட்டியது மழை மேகம். “பளீர் பளீர்” என்று மின்னும் மின்னல்தான் அந்தக் கிராமத் தெருவில் என்னைத் தடுமாற்றமின்றி நடக்கச் செய்தது. மழை வெகுசீக்கிரம் பெய்து விடும் என்று எண்ணிக்கொண்டே செல்லுகையில், நான் தேடிப்போன வியாபாரி எதிர்ப்பட்டார். மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக் கொண்டோம். உடனே அவருடைய வீட்டை நோக்கி ஓடினோம். என்ன? அவர் குடியிருந்த வீடுதான் என் மாமாவுடையது. எங்கள் வாழ்க்கையின் பல இன்ப-சோக நாடகங்களைக் கண்டதும், அந்த வீடுதான். அந்த வீட்டில் முன்னால் மாட்டியிருந்த படங்களைக் காணோம். எப்படியிருக்க முடியும்? இப்பொழுது முன்னைவிட அதிகமாக அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் அவீட்டைப் பார்த்தால் சுமங்கலி விதவையாக மாறிய மாதிரிதான் இருந்தது. அன்றிரவு கட்டிலில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த எனக்கு உறக்கம் கொள்ளுமா?

ஆனந்த போதினி, 1942.

கு.அழகிரிசாமி சிறுகதைகள், காலச்சுவடு பதிப்பகம் முதல் பதிப்பு ஏப்ரல் 2011, பக்கம் 65-68
Related Posts Plugin for WordPress, Blogger...