November 15, 2013

எது கவிதை? ஏதற்குக் கவிதை?

நம் மனம் பல்வேறு சூழலில் பல்வேறு வகையான வாசிப்பனுபவங்களைக் கோருகிறது. ஒரு சமயம் சிறுகதை நமக்குத் தேவையாகிறது. மற்றோர் சமயத்தில் நாவல் அவசியமாகிறது. மற்றுமொரு சமயத்திலோ கவிதையும் இன்றியமையாததாகிறது. நம் மனம் எந்தச் சூழலில் எதை விரும்பும் என்று நாமேகூட தீர்மானிக்க இயலாது. உணவி்ன் அறுசுவைகளும் நமக்கு அவ்வப்போது தேவைப்படுவது போல் இலக்கியத்தின் அனைத்து வடிவங்களும் நமக்குத் தேவைப்படவே செய்கிறது.

என்னதான் கவிதையைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பினும் அதன் மீதான ஒரு வசீகரம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கூட்டத்தில் 15.04.03 அன்று “நவீன தமிழ்க் கவிதை: வேர்களும் விழுதுகளும்” எனும் தலைப்பில் சுந்தர ராமசாமி ஆற்றிய உரை காலச்சுவடு அக்டோபர் இதழ் 166ல் வெளியாகியுள்ளது. கவிதையை அணுகுவதற்கு அவை உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

அவரது உரையின் ஒரு பகுதியைப் புத்தக அலமாரி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
……..

இரண்டு மகா யுத்தங்களையும் எதிர்கொள்ள நேர்ந்த மனிதன் எப்படிப் பார்த்தாலும் 1914க்கு முற்பட்ட மனிதன் அல்ல. போர் மனித வாழ்க்கையில் நிகழ்த்திய பாதிப்பை நுட்பமாகவும் உணர்வுபூர்வமாகவும் எந்த மனங்களால் உணர்ந்துகொள்ள முடிந்ததோ அந்த மனங்கள்தான் அந்தக் காலத்து வாழ்க்கையின் துக்கத்தைச் சொல்லக்கூடிய கவிதையையும் படைத்துக் காட்டின. அன்று ஏற்பட்ட நெருக்கடிகளை அவனால் ஆத்மீகம் சார்ந்தோ அல்லது லோகாயுதம் சார்ந்தோ தீர்த்துக்கொள்ள முடியவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளின் அளவு கூடிக்கொண்டே போகிறது. ஆனால் மனித துக்கத்தின் அளவை அவற்றால் குறைக்க முடியவில்லை. நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்று சொல்வது சுலபம். ஆனால் எதை நம்பி வாழ வேண்டும் என்ற கேள்விக்கு அன்றையச் சூழலில் நிறைவான பதில் கிடைக்கவில்லை. நேற்றைய ஒழுக்கங்களும் நியதிகளும் அடிபட்டுப் போய்விட்டன. புதியவை மலரவுமில்லை. மனிதனைக் கருப்பு வெள்ளையாகப் பிரித்துப் பார்க்கும் கற்பனை காலாவதியாகி விட்டது. மனிதன் உய்ய வழிகூறும் கருத்துக்களின் தொகுப்பு-அவை சமயம் சார்ந்ததாக இருக்கட்டும் அல்லது அனைவரையும் தழுவிக் கொள்ளும் பொது நீதிகளாக இருக்கட்டும்-அவற்றைக் கற்றறிந்து வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவது சாத்தியம் அல்ல என்ற முடிவுக்கு மனிதன் வந்திருந்தான். அறிவுரை தரும் சகமனிதன் மீது அவனுக்குத் தாங்க முடியாத அலுப்பு ஏற்பட்டிருந்தது. மனிதனிடம் மனிதனுக்குரிய இதயத்தை உருவாக்குவதில் கலைகளும் இலக்கியங்களும் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன என்ற கேள்வி கூர்மைப்பட்டது. காலத்தை வட வேங்கடம் தாண்டியும் உற்றுப் பார்க்கிறவர்களுக்கு இந்த உண்மைகள் தெரியவந்தன. இவற்றைத்தான் நவீனக் கவிதையின் சர்வதேசப் பின்னணியாக நாம் கொள்ள வேண்டும். பிற இலக்கியங்களின் மரபுகளும் நம்மைப் பாதிக்கும் நிலையில் தமிழ் மரபை காற்றுப் புகாத ஒரு இடத்தில் நாம் பூட்டி வைத்துக்கொள்ள முடியாது.

கவிதை என்றால் என்ன என்ற பொதுக் கேள்விக்கு இன்று அர்த்தமில்லை. இரண்டாயிர வருடக் கவிதை மரபையும் உள்ளடக்கிக் கொள்ளும் ஒரு விளக்கத்தை இன்று நாம் அளிக்கவும் முடியாது. விவேகமான கேள்வி, இந்தக் காலத்துக்குரிய கவிதை எது என்ற கேள்விதான். அதற்கான விளக்கத்தை ஏகதேசமாக நாம் நினைவு கூர்ந்து பார்த்துக்கொள்ள முடியும்.

1. இந்தக் காலத்துக் கவிதையில் உபதேசியோ, அறிவுரைகளை அள்ளித் தெளிப்பவனோ கவிதை வாசகர்கள் அனைவரையும் மாணவர்களாகக் கருதும் பேராசிரியரோ இல்லை என்பதை முதலில் சொல்லிவிடலாம். தமிழில் பெரும்பான்மையான கவிஞர்கள் இந்தப் பொறுப்புக்களை இன்றும் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லை. புரட்சித் தலைவரைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் புரட்சித் தலைவியைப் பற்றியும் அவரவர் ஆட்சி செய்த காலங்களில் பாராட்டிக் கவிதை எழுதியுள்ள கவிஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? இருந்தாலும் மக்களுக்கு அறிவுரை கூறுவதை அவர்கள் விட மாட்டார்கள்.

2. இன்றைய கவிதைகளில் கவிஞன் தனக்குத் தெரிந்தவை, தன் காலத்தில் பிறருக்கும் தெரிந்திருக் கக்கூடும் என்று நம்புகிறான். இந்த நம்பிக்கைதான் அவனுக்கு நாகரிகமாகப்படுகிறது.

3. இந்தக் காலத்துக் கவிஞனிடம் வாழ்க்கைப் பிரச்சனைக்கு ஆயத்த விடை என்று எதுவுமில்லை. நான் காட்டும் வழியைப் பின்பற்றி வாருங்கள், நீங்கள் உய்ய வழி சொல்கிறேன் என்று அவன் நம்மைப் பார்த்துக் கூறுவதில்லை. உங்களைப்போல் நானும் விடை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மிக அற்புதமாகவும் அழகாகவும் நம் மனதில் ஆழ்ந்து பதியும் படியாகவும் அவன் சொல்கிறான்.

4. அவனுக்கு என்று சொல்ல கதைகள் எதுவுமில்லை. கருத்துக்கள் எதுவுமில்லை. இந்த இரண்டு கூறுகளையும் இவற்றின் உப கூறுகளையும் அவன் உரைநடைக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டான். அவனிடம் இன்று இருப்பவை அனுபவங்கள். அவனுக்குச் சரிசமமான மனிதனாக நம்மைக் கருதி அந்த அனுபவங்களை மனந்திறந்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறான்.

5. கவிதை எந்த அனுபவத்தையும் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் வழிகாட்டி நூல்கள்போல் நேராகச் சொல்லி விடுவதில்லை. நேராகச் சொன்னால் இன்னும் எனக்கு நன்றாகப் புரியுமே என்று வாசகன் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறான். பெரும்பாலும் இப்படிச் சொல்லு கிறவர்கள் கவிதைக்கு வெளியே நிற்கும் உரைநடை வாசகர்கள்தான். அவர்களுக்குக் கவிதை தவிர்க்க முடியாத தேவை அல்ல.

6. கவிஞர்கள் கவிதைக்குள் மௌனங்களை வைத்துக்கொள்ள பெரும் விருப்பம் கொண்டவர்கள். தம்பட்டம் அடிப்பதோ, குரலெடுத்துக் கத்துவதோ, கைதட்டல்களை எதிர்பார்த்து வரிகளை அவிழ்ப்பதோ, வெட்கம்கெட்ட புகழ்ச்சிகளில் நம்பிக்கை வைப்பதோ, மேலான கவிதைகளைப் படைக்க விரும்பும் கவிஞனின் செயல்பாடுகள் அல்ல. அவனுடைய குரல், குரல்வளையிலிருந்து வெளிவரவில்லை. அவன் நெஞ்சின் நடுமையத்திலிருந்து வெளிவருகிறது. வாசகனின் மனங்களை அது நேராகச் சென்று தொடுகிறது. அதை Communication என்று சொல்வதைவிட communion என்று சொல்வது பொருத்தமானது.

இதுபோன்ற விதிகள் எல்லாம் 1959 வாக்கில் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த, ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாத இளைஞர்களுக்கு ஏகதேசமாக ஒரேபோல் தோன்றத் தொடங்கியிருந்தன. இவர்கள்தான் புதுக்கவிதைகளை உருவாக்கினார்கள். அதன்பின் புதுக்கவிதைக்கு எத்தனையோ முகங்கள் இன்று வரையிலும் தோன்றி விட்டன. ஒவ்வொரு விமர்சகனுக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் வெவ்வேறு முகங்கள் பிடித்திருக்கின்றன. அது நல்லதுதான். அப்படித்தான் இருக்கவும் வேண்டும். மாறுபட்ட விருப்பங்கள், மாறுபட்ட கோட்பாடுகள், கொள்கைகள், தத்துவங்கள், நம்பிக்கைகள் இவற்றிற்கு இடையே நடைபெறும் இடைவிடாத மோதல்கள்தான் சமூக வளர்ச்சிக்கும் சரி, இலக்கிய வளர்ச்சிக்கும் சரி காரணமாக அமைகின்றன.

உரை முழுவதையும் படிக்கச் சுட்டி காலச்சுவடு, அக்டோபர் 2013
Related Posts Plugin for WordPress, Blogger...