பழைய தண்டவாளம் –எஸ்.ராமகிருஷ்ணன்

srபழைய தண்டவாளத்தில் ஆள்கள் தெரிந்தார்கள். சைக்கிளைத் தூக்கிக்கொண்டு தாண்டும்போது நடராஜன் பார்த்தான். நாள்பட்டு நின்றுபோயிருந்த கூட்ஸ் வண்டியின் ஒற்றைப் பெட்டியைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். ரொம்ப நாள்களாகப் புழக்கம் இல்லாத அந்தத் தாண்டவாளத்தில், அந்தப் பெட்டியும் ரொம்ப நாளாகவே கூட இருந்தது.

பேக்டரி ரோட்டில் சைக்கிளை மிதித்தான். கே.எஸ்.முக்கு வரும்போது ஆள்கள் முழுமையாகத தெரிந்தார்கள். நாலைந்து பேருக்கு மேலிருக்கும். தலையில் ஃபைலைத் தூக்கிப் பிடித்தபடி பக்கத்தல் ஒரு ஆள் வேறு நின்றிருந்தான்.

அந்த கூட்ஸ் பெட்டி, அந்தப் புது வீட்டுக்கு வரும்போதே இருந்தததுதான். நடராஜன் ஏழாவது படித்துக்கொண்டிருந்தான். அப்போது ஆள் அரவமற்று, சாக்பீஸ் கோடுகளுடன் நெம்பரோடும் நின்றுகொண்டிருந்தது அந்த பெட்டி.

அந்தப் புது வீடு அப்பா ஒத்திக்கு வாங்கியது. ராத்திரியில் தெப்பத்து ரோட்டு வீட்டைக் காலி பண்ணிவிட்டு இங்கே மாறி வந்தார்கள். நடராஜன் ஒரு சைக்கிளும் அப்பா ஒரு சைக்கிளுமாக பாத்திர மூட்டை ஏற்றி வந்தார்கள். அப்பா தண்டவாளம் வந்ததும் லைட் அடித்தார். வட்டமாய் மஞ்சள் வெளிச்சம் அந்தப் பெட்டி வரை போய்த் திரும்பியது. சைக்கிளை உருட்டி அந்த வீட்டுக்கு வந்தார்கள்.

சின்ன வீடுதான். ஆனால் ஆளுயரச் செங்கல் சுவரிருந்தது. கோட்டைச் சுவர் மாதிரி கம்பி போட்ட கதவுகள். பெரிய இரும்புச் சாவி போட்ட வாசல் கதவு. கோயில் கதவில் இருப்பதைப் போல அடக்கமாயிருந்தது. லைட்டைப் போட்டு ஜன்னலைத் திறந்துவிட்டால் தண்டவாளம் தெரிந்தது. தூரத்தில்-பக்கத்தில் வேறு வீடுகளேயில்லை.

காலையில் கல்யாணியக்கா கூடப் பள்ளிக்கூடம் போகையில் அந்த கூட்ஸ் பெட்டியைக் கிட்டத்தில் பார்த்தான். திறந்து கிடந்தது. உள்ளே பகலிலும் மாறாத இருட்டு, கல்யாணியக்கா அப்போது பத்து படித்துக்கொண்டிருந்தாள். கொஞ்ச நாளைக்குப் பின்னால் காலனி வீட்டில் இருந்து கல்யாணியக்கா கூட ஒரு பெண் பள்ளிக்கூடத்துக்கு வந்தாள்.

அவள் பெயர் கூட ராணிதான். லேசாகப் பல் ஒத்திப் போயிருக்கும். கோணச் சிரிப்பு சிரிப்பாள். ஆனாலும் அழகாயிருக்கும். அவள் தண்டவாளத்தைத் தாண்டும்போது ஓரக்கம்பியில் காலை அழுத்திச் சப்தம் வர வைப்பாள். ட்யுஸ்… டிங் எனச் சப்தம் எதிரொலிக்கும்.

அன்றைக்குச் சாயங்காலம் கல்யாணியக்க வரவில்லை. ஸ்பெஷல் கிளாஸ். ராணி மட்டும் கூட வந்தாள். தண்டவாளத்தைத் தாண்டும்போது லேசாக மஞ்சள் வெயில் அடித்துக்கொண்டிருந்தது. தாண்டாமல் அவள் நின்றுகொண்டேயிருந்தாள்.

“டேய் நடராஜா… அந்தப் பெட்டிக்குள்ள என்ன இருக்குன்னு பாப்பமா…”

அவள் கூடைப் பைக்கட்டைக் கொடுத்தாள். பயங்கரக் கனமாயிருந்தது. ஜாமெட்ரி பாக்ஸில் சில நெல்லிக்காய்கள் துருத்திக்கொண்டு இருந்தன. வாயில் வேறு ஒதுக்கியிருந்தாள். அவள் அந்தப் பெட்டிக்குள் ஏறினாள். சின்ன இரும்புப் படியிருந்தது. உள் பக்கமாகப் போனாள். கீழேயிருந்து பார்க்கும்போது ஒண்ணும் தெரியாமல் இருந்தது. தண்டவாளத்தில் பைக்கட்டை வைத்துவிட்டு பின்னாடியே ஏறினான்.

அந்த கூட்ஸ் பெட்டி, மச்சு வீட்டைப் போல இருட்டாயிருந்தது. ஜன்னல் இல்லை. புழுங்கல் வாசம் அடித்தது. இருட்டுக்குள் ராணி நின்றிருந்தாள். ஒரு ஓரத்தில் சில மூட்டைகள் கிடந்தன. காலில் பழைய இரும்புச் சாமான்கள் தென்பட்டன.

”டேய் அந்த ஜாமெட்டரி பாக்ஸில் கவராயம் இருக்கு எடேன்.”

கீழேயிறங்கி எடுத்து வந்தான். அந்த சாக்கை ஓட்டை போட்டாள். வெள்ளைக் கோதுமை பொலபொலவெனச் சிந்தியது. கையைக் குவித்துப் பிடித்தாள். சிந்திக்கொண்டே இருந்தது.

போகும்போது வழியில் தின்றுகொண்டே போனார்கள். கோதுமைப்பால் இனிப்பாயிருந்தது. மறுநாள் கல்யாணியக்கா கூட வாங்கித் தின்றார்கள். அரட்டவேயில்லை. கொஞ்ச நாளில் ராணி வேறு வீடு மாறிப் போய்விட்டாள். கல்யாணியக்கா அந்தப் பக்கமே போகவிடாமல் அரட்டினாள்.

சனிக்கிழமை மதியம் ஏறி உள்ளே போய்ப்பார்த்தான். சுத்தமாயிருந்தது. சில கசக்கி எறிந்த வாழை இலைகளும், சீட்டுக் கட்டுகளும் கிடந்தன. அப்பாகூடச் சொன்னார்.

“கண்ட கழிசடை நாய்களெல்லாம் அந்தப் பெட்டி பக்கமா போகுது… பள்ளிக்கூடத்துக்குப் பார்த்துப் போகணும் தாயி.”

அதுக்கு அப்புறமாக கல்யாணியக்கா படிப்பை முடித்துவிட்டாள். கல்யாணம் உடனே ஆனது. மாறுவீட்டுக்கு வந்திருந்தப்ப சினிமாவுக்குப் போகையில் அக்காதான் சொன்னாள். அந்த இடத்தில் அந்த கூட்ஸ் பெட்டி இருந்தது.

“இங்கே நாங்க முன்னாடி கோதுமை எடுப்போம்… வெள்ளை கோதுமை, இனிப்பாயிருக்கும்.”

“உள்ளே போயா எடுப்பே… பயமாயிருக்காதா?”

“எதுக்கு பயப்படணும்?”

“பின்னே அப்ப மட்டும்… அங்க எதுக்குப் பயந்தே?”

அக்கா கோணினாள். லேசாகச் சிவந்து போயிருந்தது முகம்.

“சீ… போப்பா… இதுக்குத்தான் எதையும் சொல்லக் கூடாது.”

மாமா சிரித்துக்கொண்டே வந்தார். நடராஜனுக்கு எதுவும் புரியாமல் அந்தப் பெட்டியைப் பார்த்துக்கொண்டே வந்தான். ரெண்டு வருஷத்துக்குப் பின்னாடி கூட அதே இடத்தில் பெட்டி அப்படியே இருந்தது.

மழை நாளில் ஜன்னலைத் திறந்து பார்க்கும்போது அந்தத தண்டவாளமும் பெட்டியும் அழகாயிருக்கும். மழைத் தணிணீரில் கருத்துப் போய்… வரிசையாகச் சில நாள்களில் புறாக்களோடு, இரவெல்லாம் தனியாக நின்றிருக்கும்.

பேக்டரி வேலையில் சேர்ந்தப்பக்கூட யாரோ சொன்னார்கள். “போகவர இடைஞ்சலா இந்தச் சின்னப் பாதை இருக்கு. அந்த கூட்ஸ் பெட்டியை எடுத்துட்டா வசதியாயிருக்குமென்று.“ நடராஜனுக்கு அது இடைஞ்சலாகவே தோன்றவில்லை. லேசாக அடையாளம் காட்டுகிற மாதிரிப் பிரியமான வஸ்து மாதிரியிருந்தது.

“அந்த கூட்ஸ் பெட்டி நிக்குமே… அது தாண்டின வீடுதானே” என்று கேட்பவர்களுக்கு லேசாக அடையாளம் சொல்லிக் கொள்ளும் வண்ணமிருந்தது. ரொம்ப நாளாகவே எடுக்காமல் இருந்தார்கள். இரண்டு அடிக்குச் செடி முளைத்துப் போயிருந்தது. ராத்திரியில் சிள்வண்டுகளும் சப்தம் போட்டுக்கொண்டேயிருந்தன, அதற்கு அடியில் இருந்து.

ராத்திரியில் மட்டும் ஆள்கள் பயப்பட்டார்கள். புதுசாக முளைச்ச என்.ஜி.ஓ. காலனிக்காரப் பொண்ணு சொன்னதாக அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அந்தப் பெட்டிக்குள்ள சாராயம் விக்காங்க… பொம்பளையப் பார்த்தா கத்துவாங்க.”

ஒருநாள் நடராஜன் கூடப் பார்த்தான். கருப்பு கேன் வைத்துக்கொண்டு படிக்கட்டில் ஒருவன் உட்கார்ந்திருந்தான். பெட்டிக்கு உள்ளே சிரிப்புச் சத்தம் கேட்டது. கொஞ்ச நாளில் அந்த இயக்கம் கூடக் குறைந்துபோனது. பாம்பு நடமாடுவதாகச் சொன்னார்கள்.

நடராஜனுக்கு அந்தப் பெட்டி ஒரு மாறாத வீட்டைப் போலவே தோன்றியது. சில நேரம் உதிர்ந்து, மூளியாகிப் போன கிராமத்து வீட்டைப் போலக்கூடத் தோன்றியது. ராமச்சந்திரன் சார் மகள் சைக்கிளில் வைத்து உருட்டி வரும்போதுகூடக் கேட்டாள்.

“மாமா… எதுக்கு இந்த ரயில் போவே மாட்டேங்குது. எப்பப் போகும்?”

“இது ஓடாத ரயிலுடா… குட்டி வீடு மாதிரி இருக்கில்ல?”

புரிந்தது போலத் தலையை ஆட்டிக்கொண்டாள். சில நாளைக்கு முன்னால் அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள்.

“கூட்ஸ் பெட்டியை எடுக்கப் போறாங்க. புதுக் காலனி திறப்பு விழா வருதுல்ல…”

சொன்னது மாதிரியே எடுத்துவிட்டிருந்தார்கள். சாயங்காலம் வரும்போது அந்த இடம் வெறிச்சென்றிருந்தது. புதுசாக எந்த மறைப்பும் இல்லாமல் வீடு வெட்டவெளியில் தெரிந்தது. அந்தப் பெட்டி இருந்த இடத்தில் போய்ப் பார்த்தான்.

தண்டவாள மரக்கட்டைகளுக்குக் கீழே சில நெல்லிக் கொட்டைகள் காய்ந்து சுருண்டு கிடந்தன. சில உடைந்த வளையல் துண்டுகள், வெளுத்துப்போன ஒரு கம்பி வளையல் எல்லாம் கிடந்தன.

வீட்டுக்குப் போன பின்பு ஜன்னலைத் திறந்து பார்த்தான். வெறுமையாயிருந்தது. பிரியமான பொருளை இழந்ததுபோல இருந்தது. பார்த்துக்கொண்டேயிருந்தான். லேசாக இருட்ட ஆரம்பித்து, தண்டவாளம் இருட்டில் தெரியாமல் போனது.

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், உயிர்மை பதிப்பகம், இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2008, பக்கம் 15-18
Related Posts Plugin for WordPress, Blogger...