பொன் மொழிகள் -ஜி.நாகராஜன்

சில எழுத்தாளர்கள் தங்கள் ‘பொன் மொழிகளை’ தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் ‘பொன் மொழிகளே’ இல்லை என்று ஒரு நபர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில ‘பொன் மொழிகளை’ உதிர்க்கிறேன்.

  1. உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் கிட்டத்தட்ட சம ஆயுள்.

  2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல. அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்.

  3. தன்மான உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் அளவுக்குத்தான் தேசபக்தியைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது.

  4. தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்.

  5. மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய்க் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன.

  6. எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்.

  7. ‘மனிதாபிமான’ உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனித துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்கவல்லது. இல்லையெனில் ‘மெக்பெத்’ என்ற நாடகமோ ‘கலிவரின யாத்திரை’ என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது.

  8. இயற்கையிலேயே பீறிட்டு வெடிக்கும் சமுதாயப் புரட்சியை வரவேற்க வேண்டிய நாம், கனதனவான்கள் பதவியில் இருந்துகொண்டு ‘புரட்சி’ பேசுவதைச் சகித்துக் கொண்டிருக்கிறோம்.

  9. தனது கலைப்படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம் பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்.

  10. மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்.

இன்னும் தேங்காய் துவையல், பெண்ணின் கற்பு, உலக அமைதி, எள்ளுருண்டை, ‘காலி சிந்த்’ புடவை, பல்லாங்குழி ஆட்டம், பொய்ப் பல், இத்தியாதி இத்தியாதி பற்றியும் ‘பொன் மொழிகள்’ தர முடியும்.

ஞானரதம், மே 1972
Related Posts Plugin for WordPress, Blogger...