அணுயுகம் –ஜி.நாகராஜன்

g.nagarajan.jpg1

டாக்டர் பியூஜிடா ஒரு சிந்தனையாளன்.

2

டாக்டர் பியூஜிடாவுக்கு அன்று இரவு வேலை. எல்லா வார்டுகளையும் மூன்று முறைகள் சுற்றி வந்தார். வழக்கம் போல ஒவ்வொரு நோயளியையும் தனியாகக் கவனித்தார் -ஒரே ஒரு நோயாளியைத் தவிர. ஆனால் அவர் மனம் அன்று வேலையில் இல்லை. இது அவருக்குப் புதிய அனுபவம். அவர் இதுவரை மனத்தை எங்கோயோ விட்டு விட்டு வேலையைச் செய்ததே கிடையாது. அன்று அவர் மனத்தை உறுத்திக் கொண்டிருந்ததும் ஒரு புதிய விஷயம். தனது மனைவி மாருவாவைப் பற்றி ஊரார் பேசிக்கொள்வதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அவரால் எப்படித் தப்பிக்க முடியம்? “அந்தஸ்துக்கு மேல் கணவன் கிடைத்துவிட்டான் அல்லவா? அவளால் எப்படி சும்மா இருக்க முடியும்?.... அவள் எப்படியும் போகட்டும். ஊரில் இருக்கும் சின்னஞ்சிறு வாலிபர்களை எல்லாம் அவள் எதற்குக் கெடுக்க வேண்டும்?” என்று அரைகுறையாக அவர் காதுகளில் விழுந்த வார்த்தைகளை டாக்டரால் எப்படி மறக்க முடியும்?
டாக்டர் பியூஜிடா தனது ஆபீஸ் அறையில் உட்கார்ந்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்தார்.... மணி பனிரெண்டு இருக்கும். டாக்டருக்கு நல்ல காற்றும் திறந்த வெளியும் என்றால் உயிர். ஆகவே தனது அறையில், மற்ற அறைகளில் இருந்ததைவிட பெரிய சன்னல்களை வைக்க ஏற்பாடு செய்திருந்தார். சன்னல்கள் எல்லாம், திரை விலக்கப்பட்டு திறந்தருந்த. குளிர்ந்த காற்று, ஆஸ்பத்திரியைச் சுற்றி இருந்த தோட்டத்தை நிரப்பி இருந்த பப்பளிமாஸ் பழத்தின் நறுமணத்தை அள்ளிக்கொண்டு வந்து அறைக்குள் நிரப்பிக்கொண்டிருந்தது. வெளியே நல்ல இருட்டு. தூரத்தில் மட்டும் ஒரு புறத்தில், இரண்டு மைல் தூரத்திலிருந்த கிராமத்தில் மின்சார விளக்குகள், விட்டுவிட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அங்கிருந்து, மேற்கே ஒரு மைல் தூரத்தில்தான் டாக்டரின் கிராமம். ஆஸ்பத்திரியிலிருந்துகொண்டு, டாக்டரால் அதன் மின்சார விளக்குகளைக் காண முடியவில்லை. இடையில் ஒரு குன்று. குன்றைத் தாண்டி ஒரு சிறு ஓடை. ஓடைக்கு அப்புறம் அவர் பிறந்து, வளர்ந்து, படித்துப் பெண்ணெடுத்த அவருடைய சொந்தக் கிராமம்-கோபா.

டாக்டரின் கண்கள் குன்றைத் தாண்டி கோபா கிராமத்திலேயே மிகவும் அழகானது என்று கருதப்பட்ட அவருடைய சிறிய வீட்டுக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று கண்டறிய வீணே முயற்சித்தன. மாருவா என்ன செய்துகொண்டிருப்பாள்? படுத்து உறங்கி இருப்பாளா? அல்லது?... சே! இந்தக் குன்று ஏன் அங்கு இருக்க வேண்டும்? அது மட்டும் அங்கு இல்லாவிட்டால், ஆபீஸ் அறையிலிருந்தபடியே தன் சொந்தக் கிராமத்தில் மினுக்மினுக்கென்று எரியும் விளக்குகளையாவது பார்த்துக் கொண்டிருக்கலாமே. மாருவாவுக்கும் கணவன் வெகு தொலைவில் இருக்கிறான் என்ற எண்ணமாவது ஏற்படாமலா இருக்கும்?... டாக்டர் சிரித்துக்கொண்டார். அநதக் குன்று மட்டும் அங்கில்லாவிட்டால், இன்று நிலைமை எவ்வளவோ மாறியிருக்கும்! அவர் அந்நேரத்தில் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டார். மாருவாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கமாட்டாள். அல்லது வேறு எதுவும் செய்து கொண்டிருக்கமாட்டாள். அந்த வீடும் அந்தக் கிராமத்தில் இருக்காது. அந்தக் கிராமமும், அங்கு நீட்டி நெளிந்து படுத்துக் கிடக்காது. பழைய கோபாவின் சரித்திரமே 1945 ஆகஸ்டு ஒன்பதாம் தேதியோடு முற்றுப் பெற்றிருக்கும்! யார் கண்டது? எல்லாமே பழைய முறையில் இல்லாது, புதுமுறையில் நன்றாக இருந்திருக்கும். டாக்டருக்குக் கவலையில்லாமல் போயிருக்கும்!

3

பியூஜிடா கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறியவர். அவருக்கு வயது பதினைந்தாக இருக்கும்போதே வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் பார்த்துவிட்டவர். சுகம், பணம், பதவி, புகழ்-இவற்றுக்கு மனிதர் நடத்தும் அடிதடிப் போராட்டம் அவரது பால்ய உள்ளத்தைச் சம்மட்டி கொண்டு அடித்து, அவரது மனத்தை வாழ்க்கையின் சாமான்ய லட்சியங்களிலிருந்து விடுவித்து. வைத்திய ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. டாக்டராக இருந்துகொண்டு வைத்திய ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும் என்பதுதான் அவரது பால்யக் கனவு. கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டதுதான் தாமதம், அவர் கட்டாய ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டார். அவர் ராணுவத்தில் நேர்ந்து ஒரு வருடம் ஆகவில்லை, அணுகுண்டு வெடித்தது. யுத்தம் நின்றது. பிறகு ஐந்து வருடங்களுக்குப் பியூஜிடாவுக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை. தன் சொந்த நகரமாகிய நாகசாகிக்கே திரும்பி வந்தார். பிணக்குவியல்களின் மத்தியிலே வனாந்தரமாகத் தரை மட்டமாகக் கிடந்த நாகசாகியைப் பார்க்கும்போது, அவருக்கு அவரது சொந்த வாழ்க்கை, அதன் லட்சியம் எல்லாம் அர்த்தமற்றுப் போயின. நாகசாகிக்கு அவர் திரும்பிவந்த ஒரே மாத காலத்தில் உள்ள உணர்ச்சிகள் எல்லாம் அற்றுப்போய், அவர் ஒரு வைத்திய யந்திரமாக மாறினார்.

ஐந்து ஆண்டுகள் கழிந்தன. அவரது உள்ளத்தில் மெதுவாக உணர்ச்சிகள் ஊசலாட ஆரம்பித்தன. அவரைத் தனிமை வாட்டியது. வாழ்க்கையில் எதையோ தவற விட்டுவிட்டோம் என்ற ஏக்கம் அவர் மனத்தில் குடிகொண்டது.

அவருக்கு ஒரு வீடு வேண்டும். ஒரு மனைவி வேண்டும். அவரது வாழ்க்கை குறைபட்டு இருந்தது. அவரது வாழ்க்கையில் மற்றொரு ஜீவன் இடம்பெற வேண்டும். எத்தகைய பெண்ணை மணம் செய்துகொள்வது என்பது பற்றி பியூஜிடா அதிக நேரம் சிந்தனையை வீணாக்க வேண்டியதில்லை. நகர்ப்புறத்து மக்கள் என்றாலே பியூஜிடாவுக்கு பயம். அவர்கள் அன்றாட வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக்க் கையாளும் சிறு பொய், நடிப்பு, புன்முறுவல், அந்தஸ்து கொண்டாடுவது போன்ற எளிய தந்திரங்கள்கூட அவருக்கு பயங்கர ஆயுதங்களாகத் தென்பட்டன. அவர்களது சாமானிய இன்ப வேட்கைகூட அவருக்குக் கட்டுக்கடங்காத வெறியாகத் தோன்றியது. ஆகவே அப்பழுக்கில்லாத கிராமத்துப் பெண் மாருவா அவரிடத்துச் சிகிச்சைக்கு வரவும், டாக்டர் அவளிடத்தில் மனத்தைப் பறிகொடுத்ததில் ஆச்சரியமில்லை. ஆஸ்பத்திரியிலுள்ள மற்ற நோயாளிகள் எல்லாம் ரொட்டிக்கும், பாலுக்கும், பழத்திற்கும் ஆஸ்பத்திரி வேலையாட்களுக்கு லஞ்சம் கொடுத்த நிலைமையில் மாருவா மட்டுமே எல்லாவற்றையும் மிச்சம் பண்ணி, எந்தவித நன்றியறிதலும் எதிர்பாராமல், தனக்கு அண்டையிலிருக்கும் நோயாளிகளுக்குக் கொடுத்து உதவினாள். மற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையில் அது வேண்டும் இது வேண்டும் என்று துடியாகத் துடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவளுக்கு வெறுமனே வாழ்வதே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்த்தாக டாக்டர் கண்டார்.

தனா விரும்பினால் மாருவா தன்னை மணக்கச் சம்மதித்துவிடுவாள் என்பது பற்றி டாக்டருக்கு சந்தேகம் இல்லை. ஏன், அதை ஒரு பெரும் அதிர்ஷ்டமாகவே கருதுவாள். ஆனால் அவர் போடும் ஒரு நிபந்தனைக்கு அவள் சம்மதிப்பாளா? பியூஜிடா மாருவாவோடு நெருங்கிப் பழகினார். மாருவாவுக்குத தனி அறை வசதி செய்து கொடுத்தார். ஒரு நாள் விளையாட்டுப் போக்கில் மாருவாவின் சிவந்த கன்னத்தைக் கிள்ளியவாறு, “நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்வாயா?” என்றும் கேட்டார். மாருவா, முகத்தில் ஆச்சர்யமோ திகைப்போ காட்டிக்கொள்ளாமல் விரிந்த முகத்தோடு, சிரித்து தலையை அசைத்தாள். “ஆனால் மற்றொரு முக்கிய விஷயம் இருக்கிறது. அதை நாளைதான் உன்னிடம் சொல்லுவேன்” என்றார் டாக்டர் கொஞ்சலாக. மாருவாவும் அதை உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையை அடக்கிக்கொண்டு தலையை அசைத்தாள்.

அடுத்த நாள் மாருவாவுக்கு அருகே பியூஜிடா உட்கார்ந்து கொண்டார். மாருவா மரியாதைக்காக எழுந்திருக்க முயன்றாள். பியூஜிடா அவளை படுக்கையிலேயே இருத்தி வைத்துவிட்டு பேச்சை ஆரம்பித்தார்.

“ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால், நாகசாகியிலே குண்டு விழுந்ததே ஞாபகமிருக்கா?” என்று டாக்டர் நிதானமாகக் கேட்டார்.

“ஞாபகமிருக்காவா?” என்று மாருவா வியப்போடு கேட்டாள். அவள் முகத்தில் ஒரு கண நேரம் அச்சமும் சோகமும் தோன்றி மறைந்தன.

“என்ன முட்டாள்தனமாக கேள்வி, பார்... உம்... சரி... வேறு எதையும் நினைத்துக்கொள்ளாதே... அந்தக் குண்டு இருக்கிறதே அது மிகவும் பயங்கரமான குண்டு... அதன் விளைவு இன்னும் நம்மை விட்டபாடில்லை....” என்று பியூஜிடா பேச்சைத் தொடர்ந்தார்.

“ஆமாம், ஆமாம். யமாகுச்சிக்குக் கையும், காலும் இல்லாமே குழந்தை பிறந்தது.. இசாமு மனைவிக்கு ஊமைக் குழந்தை பிறந்தது... எங்கவூர் சோஜிரோ அண்ணன் மனைவிக்கு என்னமோ மாதிரி குழந்தை பிறந்தது...” என்று மாருவா, நிறுத்தி நிதானமாக, நினைவுறுத்திக்கொண்டே அடுக்கிக் கொண்டு போனாள்.

“ஆமாம். அதனாலேதான் சொல்றேன். நாம் கல்யாணம் செய்துகொண்டால், நமக்குக் குழந்தையே பிறக்கக்கூடாது...” என்று டாக்டர் பியூஜிடா சிந்தனையோடு சொன்னார்.

“குழந்தை பிறக்கக்கூடாதா?.... அதெப்படி?” -மாருவா குறும்புத்தனமாகச் சிரித்தாள்.

“அதுக்கெல்லாம் வழி இருக்கு. அதையெல்லாம் என்கிட்டே விட்டிரு நான் பார்த்துக்கிறேன். நீ மட்டும் நான் சொல்றபடிதான் நடக்கணும். உன் இஷ்டப்படி எதையும் செய்துவிடக் கூடாது. தெரியுமா?”

மாருவா தலையை அசைத்தாள். ஆனால் அவளுக்கு எத்தனையோ சந்தேகங்கள். டாக்டர் எல்லா சந்தேகங்களையும் நீக்கினார்-குறிப்பாக ஒன்றை. மாருவா திருமணத்திற்கு இசைந்தாள்.

4

கல்யாணம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.

5

இரண்டு மாதங்களாக மாருவாவின் நடத்தையை பியூஜிடாவினால் புரிந்துகொள்ள முடியில்லை. மாருவாவுக்குப் புதுப்புது சிநேகிதர்கள் ஏற்பட்டார்கள். இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் டாக்டர் வீட்டில் இல்லாத சமயம் மூன்று நான்கு வாலிபர்கள் மாருவாவோடு வீட்டில் இருந்துகொண்டே இருப்பார்கள். வீட்டிலே தான் இல்லாத நேரத்தில் குடியும் கும்மாளமும் நடப்பதாக பியூஜிடாவுக்கு வதந்தி எட்டியது. ஆனால் பியூஜிடா வீட்டுக்கு வந்துவிட்டால், வீடு வழக்கம் போலதானிருக்கும். வீட்டிலே வேலையாள் கிடையாது. பியூஜிடாவும் மாருவாவும்தான். மாருவா எப்போதும் போலவே பியூஜிடாவோடு பேசிச் சிரித்துப் பழகினாள். அவள் அன்பு எந்த அளவும் குறைந்திருப்பதாகப் பியூஜிடாவுக்குப் படவில்லை. உண்மையிலேயே முன்னைவிட அதிக அன்போடும் பரிவோடும் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்தாள். இரவு நேரங்களில் மாருவா அவரைக் கட்டி அணைக்கும்போது அவளது ஸ்பரிசத்தில் புதிய இன்பத்தைக் கண்டார். அப்படியானால், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் மாருவா ஏன் ஊர் சிரிக்கும்படி நடந்துகொள்ள வேண்டும்? ஏன் அவள் ஊரிலுள்ள வாலிபர்களை எல்லாம் அழைத்துக் கும்மாளம் போட வேண்டும்? பியூஜிடாவுக்கு மாருவாவோடு வெளிப்படையாக விஷயத்தைப் பேசி, சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளத் துணிச்சல் இல்லை. மாருவாவின் குழந்தை உள்ளம் புண்பட்டுவிடும்.

6

இரவு மணி ஒன்றிருக்கும். பியூஜிடா நர்சைக் கூப்பிட்டார். தனக்கு உடல் சரி இல்லை என்று நர்சிடம் கூறிவிட்டு, ஆஸ்பத்திரியை நர்சின் பொறுப்பிலேயே விட்டுவிட்டு, வீட்டுக்கு விரைந்தார். நான் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாக, ஒரு சிறுவனை முன்னே ஓடி, மாருவாவுக்குத் தெரிவிக்கச் செய்தார். வீட்டிலே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மாருவா மட்டும் சோபாவிலே களைத்து உட்கார்ந்திருந்தாள். வீட்டிலே வேறு யாரும் இல்லை.

“இன்னும் தூங்கலே?” என்று பியூஜிடா சாதாரணமாகக் கேட்டார்.

“இல்லை” என்றாள் மாருவா எழுந்து நின்றவாறே.

பியூஜிடா உடைகளை மாற்றிக்கொண்டு, நேராகப் படுக்கை அறைக்குச் சென்றார். அங்கிருந்து கர்ப்பத்தடைப் பெட்டியை வெளிக்கொண்டுவந்து, உள்ளிருக்கும் சாமான்களை ஒவ்வொன்றாக சன்னலின் வெளியே எறிந்தார்.

“அதை எல்லாம் ஏன் வெளியே போடறீங்க?” என்றாள் மாருவா.

பியூஜடா பதில் பேசாமல் தலையைக் குனிந்து, சிரித்துக்கொண்டே பெட்டியைக் காலி செய்தார். பெட்டி காலியானதும், அதைக் காலால் எட்டி உதைத்துவிட்டு, மாருவாவைக் கட்டிக்கொண்டு அணைத்து முத்தமிட்டார்.

“மாருவா, இந்த கர்ப்பத்தடை எல்லாம் எதற்கு?... நான் உன்னை ஒரு தாயாக்கப் போகிறேன்” என்றார் டாக்டர் பெருமிதத்தோடு. மாருவாவின் கண்களில் மகிழ்ச்சியால் நீர் நிறைந்தது.

7

மாருவாவுக்கு வாழ்க்கையே புதிய பொருள் கொண்டது. கருத்தரித்து ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. பிறக்கப் போகும் குழந்தைக்கு டஜன் கணக்கில் சட்டைகளும் குல்லாய்களும் மாருவா தைத்துவிட்டாள்-ஒரு வருடக் குழந்தை, இரண்டு வருடக் குழந்தை எல்லாவற்றுக்கும் அளவெடுத்து.

இப்போது டாக்டர் வீட்டில் இல்லாத சமயம் அவர் வீட்டுக்கு யாரும் வாலிபர்கள் வருவதில்லை. மாருவா மாலை நேரமானதும் தனது சிநேகிதிகள் வீடு ஒன்று தவறாமல் படியேறி இறங்கினாள். குழந்தை ஆணா பெண்ணா? என்ன பெயரிடுவது? –என்ற கேள்விகளை அலசி அலசிப் பேசியும் அவள் உள்ளம் அலுக்கவில்லை. இரண்டு மூன்று தினங்களுக்கு ஒரு முறை நாகசாகி சென்று வருவாள். ஏதாவது விளையாட்டுச் சாமான்கள் வாங்கி வந்து, வீட்டிலே ஒரு அறையையே விளையாட்டுச் சாமான்களால் நிரப்பினாள்.

வைத்தியத் தொழிலை விட்டுவிட்டு, விளையாட்டுச் சாமான்கள் கடை வைக்கப் போவதாக, பியூஜிடா நண்பர்களிடம் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். கர்ப்பத்தாய் பராமரிப்பிலே, பியூஜடா பத்து பாகங்களைக் கொண்ட புத்தகம் எழுதும் அளவுக்கு அறிவும் அனுபவமும் அடைந்தார்.

8

எழாவது மாதத்திலேயே பியூஜிடா மாருவாவை நாகசாகியில் உள்ள ஒரு மருத்துவ விடுதியில் சேர்த்தார். முன் தயாரிப்பாக மூன்று மாதங்கள் “லீவு” எடுத்துக்கொண்டார். ஒருநாள் மாலை மாருவாவுக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி! உடல் எல்லாம்  வியர்த்து நீரோடியது. அவள் அரை மயக்கத்திலே படுக்கையில் கிடந்தாள். ஒரு மணி நேரம் சிரமப்பட்டு வைத்தியர்கள் அவள் வயிற்றுக்குள் இருந்துகொண்டு, வெளியுலகத்திற்கு வரத் தவித்துக்கொண்டிருந்த ஜீவனை வெளியே எடுத்தனர். ஆனால் அது வெளிவரும்போது ஜீவனற்ற உடல் உருவமற்ற பிண்டமாக இருந்தது. டாக்டர் பியூஜிடா தரையில் உட்கார்ந்துகொண்டு மாருவாவின் கட்டிலில் தலைய வைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதார். மயக்கம் தெளிந்து கண் விழித்த மாருவா, தான் ஏழு மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த மாமிசப் பிண்டத்தைக் கண்டதும், “கீச்“ என்று பயங்கரமாக் கத்தினாள். அன்றிரவு முழுவதும் அவள் வாயிலெடுத்தவண்ணமும் “ஓ“வென்று அலறியவண்ணமும் இருந்தாள்.

9

ஆறு மாதங்கள் கடந்தன. அன்று டாக்டர் பியூஜிடாவுக்கு இரவு வேலை. எல்லா வார்டுகளையும் மூன்று முறைகள் சுற்றி வந்தார். வழக்கம் போல ஒவ்வொரு நோயாளியையும் தனியாகக் கவனித்தார் –ஒரே ஒரு நோயாளியைத் தவிர. மணி பனிரெண்டு இருக்கும். வெப்பக் காற்று திறந்த ஜன்னல்களின் வழியாக அடித்துக்கொண்டிருந்தது. நர்சு டாக்டரின் அறைக்குள் நுழைந்தாள். தலையை மேஜையில் வைத்துப் படுத்திருந்த டாக்டர். ஆளரவம் கேட்டதும் தலையை உயர்த்திப் பார்த்தார்.

“அந்த நோயாளியை நாளை காலையில் அமெரிக்க அணு வியாதி ஆராய்ச்சி சாலைக்கு எடுத்துச் செல்லுகிறார்களாம். அதன் டைரக்டர் அரசாங்கத்திடமிருந்து அனுமதி வாங்கி இருக்கிறாராம். தகவல் கொடுத்துவிட்டிருக்கிறார்கள்” என்றாள் நர்சு.

“சபாஷ்! உம். இரண்டு நாட்களிலே உன் பெயர் பத்திரிக்கைகளில் அடிபடும். பத்து வருடங்களுக்கு முன்னால் வெடித்த அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி நேற்று மாலை உயிர் துறந்தாள். அவளை மூன்று மாதங்களாக் காத்து வந்தது திருமதி ஷிபாடா என்னும் நர்சு... எப்படி செய்தி?” என்றார் பியூஜிடா ஏளனமாகச் சிரித்துக்கொண்டே.

ஷிபாடாவுக்கு மனம் “திக்“கென்றது. பியூஜிடா இதற்கு முன் இப்படி பேசியதே கிடையாது. சிரித்ததும் கிடையாது. ஷிபாடா டாக்டரை உற்று நோக்கினாள். டாக்டர் நாற்காலியை விட்டுத் தள்ளாடி எழுந்து வந்து ஷிபாடாவின் முதுகின்மேல் கையைப் போட்டார்.

“என்ன புது தினுசாக இருக்கிறதே என்று பார்க்கிறாயா?” என்று கேட்டுக்கொண்டே பியூஜிடா தனது இரு கரங்களையும் கொண்டு ஷிபாடாவை அணைத்து அவளது கன்னத்தருகே தனது உதடுகளைக் கொண்டு போனார். ஷிபாடா வெடுக்கென்று அவரது பிடியிலிருந்து விலகி அகன்று சென்றாள்.

டாக்டர் கோரமாகச் சிரித்தார், “உம்... பழைய பழக்கம் போகவில்லை?... இல்லே... என்னருமை ஷிபாடா, இது அணுயுகம்! பத்தாம்பசலிக் கருத்துகள் எல்லாம் இந்த யுகத்துக்கு உதவாது. ஆண்களைக் குஷிப்படுத்துவதுதான் பெண்களது ஒரே வேலை.... இனி பத்து மாதம் சுமக்க வேண்டாம். பிள்ளை பெறவேண்டாம். வளர்க்க வேண்டாம். குழந்தைகள் வேணுமென்றால் ஆயிரக்கணக்கிலே நம்ம ‘லேபரேட்டரி’யில் உண்டாக்கிவிடலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதே... என்னைக் குஷிப்படுத்த, நீ. உன்னைக் குஷிப்படுத்த நான்... நமக்கு வேறு வேலை கிடையாது. உம் சும்மா பக்கமா வா... குழந்தையே இல்லாதபோது புருஷன் யாரு? தகப்பன் யாரு? ஹி... ஹி... ஹி... என் மனைவி எவ்வளவு முன்னேறிவிட்டாள் தெரியுமா? என் வீட்டுக்குப் போ.... போய்ப் பாரு. நாலைந்து காலிகள் இருப்பாங்க... அவள் அவளது கடமையைச் செய்கிறாள்!” டாக்டர் தடுமாறினார். அவர் வாயிலிருந்து சாராய வாடை ‘குப்’பென்று அடித்தது. அவர் உடைகள் எல்லாம் வியர்வையில் நனைந்திருந்தன. அவரது விழிகள் கண்ணின் ஒரு மூலையில் சொருகிக் கிடந்தன. மேஜையையும் நாற்காலிகளையும் உதறித் தள்ளிக்கொண்டு டாக்டர் ஷிபாடாவை நோக்கி விழுந்தடித்து நடந்தார். ஷிபாடா எட்டிப் பாய்ந்து அறையை விட்டுத் தலைதெறிக்க ஓடினாள்.

ஜனசக்தி, ஜீன் 1957.

______________________________

ஜி.நாராஜன் ஆக்கங்கள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு ஜீலை 2011, பக்கம் 187-195
Related Posts Plugin for WordPress, Blogger...