காந்தியின் கடைசி தினம் -வி.கல்யாணம்

மகாத்மா காந்தியின் அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தவர் வி.கல்யாணம். கோட்சே காந்தியைச் சுட்டபோது காந்திக்கு நெருக்கமாக பின்னால் இருந்தவர். காந்தி சுடப்பட்ட 1948, ஜனவரி 30, வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவர் எழுதிய The last day of Mahatma Gandhi என்ற கட்டுரையை தமிழாக்கம் செய்து இங்கே பதிவிடுகிறேன். எனது மொழி பெயர்ப்பின் முதல் முயற்சி இது.

கல்கத்தாவிலிருந்து 1947, செப்டம்பர் 9, செவ்வாய்க்கிழமை திரும்பிய காந்தியடிகள் அல்பக்கர் சாலையில் உள்ள (தற்போதைய புதிய பெயர் Tees January Marg- 30th January Road) பிர்லா மாளிகையில் தங்கினார். கம்பளம் விரிக்கப்பட்ட, கழிப்பிட வசதிகள் உடைய மிகப்பெரிய அந்த அறை அவரது சகாக்களால் ஒதுக்கப்பட்டது. ஆடம்பரமான மாளிகையின் கீழ் தளத்தில் அமைந்த இந்த அறை பல்வேறு வசதிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. பருத்தியினால் ஆன ஒரு படுக்கையும், சாயந்துகொள்ள பெரிய திண்டுத் தலையணையும், ஒரு மேசையும் அறையின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்தது. அதன் மறுகோடியில் கடிதங்களால் நிரப்பப்பட்ட ஒரு மேசையும், நாற்காலியும் இருந்தது. காந்தி இந்த அறையில் நாள் முழுதும் தங்கியிருந்து கடிதங்கள் எழுதுவதும், சந்திக்க வருபவர்களுடன் உரையாடுவதும், ராட்டையில் நூல் நூற்பதும், மதிய நேரத்தில் கண்ணயர்வதும் வழக்கமாக நடக்கக்கூடியவை. அறையை ஒட்டி இருந்த, முழுதும்  கண்ணாடித் தடுப்பினாலான பால்கனியில், கம்பளம் விரிக்கப்பட்ட தரையில் இரவு நேரத்தில் காந்தி எங்களுடன் உறங்குவார்.

1948, ஜனவரி 30, வெள்ளி வழக்கம்போல் விடிந்தது. அந்த நாள் மாலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாங்கள் யாருமே அறிந்திருக்கவில்லை. அதிகாலை 3.30 மணிக்கு வழக்கமான பிரார்த்தனைக்கு எழுந்திருந்தோம். இந்த நாள், தன்னுள் எத்தகைய விசயத்தை பொதிந்து வைத்திருக்கிறது என்பதை அறியாமலேயே நாங்கள் எங்களது வழக்கமான தனசரி நடவடிக்கையில் ஈடுபட்டோம். காந்தி தன் சகோதரன் மகள் அபாவை எழுந்திருக்கச்சொல்லி, பிரர்த்தனைக்கு விரைந்தார்.

குளித்து முடித்த காந்தி படுக்கை விரிப்பில் மண்டியிட்டு அமர்ந்தார். நாங்கள் அவர் முன்பாக அமர்ந்தோம். காந்தியின் நாட்கள் எப்போதும் பிரார்த்தனையுடன் ஆரம்பிப்பதே வழக்கம். ஒவ்வொரு தினத்தின் காலை நேரத்தைத் திறக்கும் சாவியும், மாலையில் அன்றைய தினத்தைப் மூடும் பூட்டும் பிரார்த்தனைதான் என்று அவர் சொல்வார். எல்லா மதங்களின் ஒற்றுமையையும் முக்கியத்துவத்தையும்  வலியுறுத்துவதற்காக பல்வேறு மத சம்பந்தமான பாடல்களை, குறிப்பாக இந்து இஸ்லாம், படிப்பதாக காந்தியின் பிரார்த்தனை அமையும்.

அவர் தனது கண்களை மூடி தியானத்தில் ஆழந்தார். அபா இன்னும் உறங்கிக்கொண்டிருந்தாள். அவர் அவள் இல்லாததை அறிந்தார். அபா இல்லாமலேயே பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனை முடிந்தவுடன், மனு அவருக்கான காலை பானத்தைக் கொண்டுவர விரைந்தாள். சூடான தண்ணீரில் தேனும் எலுமிச்சையும் கலக்கப்பட்ட பானம் அது. அவள் அதை அவருக்குக் கொடுத்தபோது குஜராத்தியில், ”எனது செல்வாக்கைப் பயன்படுத்தி, என்னுடன் நெருக்கமானவர்கள் பிரார்த்தனையில் கலந்துகொள்ளாதது வருத்தமளிக்கிறது. நமது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் துடைப்பம் பிரார்த்தனைதான். நான் பிரார்த்தனையுடன் கொண்டுள்ள முக்கியத்துவத்தை நீ அறிவாய். உனக்கு தைரியமிருந்தால், நான் கொண்டுள்ள அதிருப்தியை அவளுக்குச் சொல். அவளுக்கு பிரார்த்தனையில் கலந்துகொள்ள விருப்பம் இல்லையென்றால் அவளை என்னைவிட்டு விலகியிருக்கச் சொல். அதுவே இருவருக்கும் நன்மை பயக்கும்” என்றார்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் அபா எழுந்திருந்து தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். அவர் அவளிடம் நேரடியாக எதையும் சொல்ல விரும்பவில்லை. நான் அவர் அருகில் அமர்ந்து, அன்றைய தினத்தின் வேலையின் உத்தரவுகளை பெற்றுக்கொண்டிருந்தேன். பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் தான் சேவாகிராமத்தில் பத்து நாட்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார். முந்தின தினம் என்னிடம் எழுதச்சொன்ன, சமூக சேவைக்கும் கிராம முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து திருத்தம் செய்யப்பட் இந்திய தேசிய காங்கிரசின் அரசியல் சாசனத்தின், தட்டச்சுப் பிரதியை அவரிடம் கொடுத்தேன். அவர் அதைப்படித்துப் பார்க்க விரும்பவில்லை. என்னுடைய மேலதிகாரி பியாரிலால்ஜியிடம் கொடுத்து, கவனமாகப் படித்துத் தேவையான திருத்தங்களைச் செய்யச் சொன்னார்.

நான் அதிக நாள் வாழ விரும்பவில்லை

இந்நாட்களில் டெல்லியில் நிலைமை, வழக்கமான நாட்களைவிட, மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானிலிருந்து பெரும் திரளாகத்  திரும்பிய இந்து அகதிகளால் வகுப்புக் கலவரம் நடைபெற்ற நேரம். பாகிஸ்தானில் முஸ்லீம்களால் அவதிக்குள்ளான அவர்கள் டெல்லியில் உள்ள முஸ்லீம்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எனவே, தலைநகரத்தில் அமைதி திரும்பச்செய்யவது குறித்துப்பேச இரண்டு மதத் தலைவர்களும் ஒவ்வொரு நாளும் அழைக்கப்பட்டனர். அந்தக் குளிர்கால நாட்களில் காந்தி தனது பெரும்பாலான நேரத்தை வெட்டவெளியில் புல்தரையில் விரிக்கப்பட்ட படுக்கையில் அமர்ந்து, சூரியனின் வெப்பத்தில் காய்வதை விரும்பினார். அவரது தினசரி நடவடிக்கைகளின் பட்டியல் ஓய்வில்லாமல் இருந்தது. அவர் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவில்லை. யாரும் அவரைச் சந்திக்காதபோது கூட, குஜராத்தி, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கட்டுரைகளும் கடிதங்களும் எழுதியபடி இருந்தார். மந்திரிகளும் முக்கிய மனிதர்களும் அவரை முன்அனுமதி பெற்று சந்திக்க வந்தபடி இருந்தனர். தனது அலுவலகத்துக்குச் செல்லும்போது, காலை 9 மணிக்கு காந்தியிடம் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பண்டித நேரு. அந்நாட்களில் காந்தியைச் சந்திக்க வந்த பிரபலமான மனிதர்களில் திருமதி ஆர்.கே.நேருவும் ஒருவர். அவர் காலை 6 மணிக்கு காந்தியைச் சந்திக்க வந்தார். அவர் மதியம் அமெரிக்கா செல்வதாக இருந்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ”தாங்கள் ஒரு ஏழ்மையான நாட்டிலிருந்து வந்தவர் என்பதற்கேற்ப, எளிமையான வாழ்வை அங்கு நடத்தவேண்டும்” என்று எழுதி தனது புகைப்படத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்தார். மதியம் இரண்டு மணியளவில் மார்க்கெட் பூரூக் ஒயிட் என்ற புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர், தி லைஃப் பத்திரிக்கையின் பேட்டிக்காக வந்திருந்தார். அவர் தனது உடையாடலில், “நீங்கள் 125 வயது வரை வாழ விரும்புவதாக எப்போதும் சொல்லி வந்துள்ளீர்கள். எந்த நம்பிக்கையில் அப்படிச் சொன்னீர்கள்?” என்று கேட்டார். அதற்கு காந்தி தான் இனிமேலும் அத்தகைய நம்பிக்கையில் இருக்கவில்லை என்று சொன்ன பதில் அவருக்கு வியப்பைத்தர, எதனால் அப்படிச் சொல்கிறீர்கள் என்றபோது, ”ஏனெனில் உலகில் நடக்கும் பயங்கர நடவடிக்கைகள் அதற்குக் காரணம். நான் இருட்டில் வாழ விரும்பவில்லை” என்றார்.

பிர்லா மாளிகையில் காந்தி தனது பெரும்பாலான நேரத்தைக் கடிதம் எழுதுவதிலும், விருந்தினர்களைச் சந்திப்பதிலும், பிரார்த்தனையிலும் கழித்தார். பத்திரிக்கையாளர் சென்ற பிறகு பாகிஸ்தானில் எங்களது உதவிக் கமிஷனராக இருக்கும் பேராசிரியர் என்.ஆர்.மல்கானி, தன்னோடு இரண்டு நபர்களுடன் காந்தியைச் சந்தித்தார். சிந்துவில் உள்ள இந்துக்களின் துயர நிலை குறித்துப் பேசினார். அவற்றை பொறுமையாகக் கேட்ட காந்தி, ”மக்கள் நான் சொல்வதைக் கேட்டால் இந்தத் துன்பம் நேராது. நான் அவர்களை வீட்டுக்குத் திரும்பச் சொல்லவில்லை. மாறாக நான் உண்மை என்று எதை நம்புகிறேனோ அதைத்தான் சொல்கிறேன். நான் காலவாதி ஆகிவிட்டேன் என்பதை அறிவேன்” என்றார்.

எழுதப்பட்ட கேள்விகள் சிலவற்றை காந்தியிடம் கொடுத்திருந்த பிபிசியின் பாஃப் ஸ்டிம்சன் காந்தியை பிரார்த்தனை முடிந்ததும் சந்திப்பதற்காகக் காத்திருந்தார். கத்திவாரிலிருந்து பிரதம மந்திரி யு.என்.தேபர், ரசிக்லால் பர்க்கீஸ், கடந்த சில தினங்களாக காந்தியை பேட்டிக்காக சந்தித்தபடி இருந்த எழுத்தாளர் வின்சென்ட் ஷேன் ஆகியோர், முன் அனுமதி ஏதுமின்றி காந்தியை சந்திக்கும் நம்பிக்கையில் காத்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். பிர்லா மாளிகையின் நுழைவாயிலில் காவலாளி ஒருவர் இருப்பார். ஆனால் சென்ற வருடம் பொதுக்கூட்டத்தில் குரானிலிருந்து பாடல்களைப் படித்ததற்காக எதிர்ப்புக் கிளம்பியது. அதனால் உள்துறை அமைச்சர் என்ற முறையில் பட்டேல், ஒரு தலைமைக் காவலாளி ஒருவரையும், நான்கு காவலாளிகளையும், முன்னெச்சரிக்கையாக நியமித்திருந்தார்.

குண்டு வெடித்தது

ஜனவரி 20ம் தேதி பிரார்த்தனைக் கூட்டத்தில் மதன்லால் என்ற பஞ்சாபி அகதி வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்தான் ஆனால் அது காந்தியைத் தாக்கவில்லை. மாறாக சுவற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. தன்னைக் கொல்லத்தான் அவன் வந்திருந்தான் என்று காந்தி கனவிலும் நினைக்க வில்லை. காஸ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் ஏறுக்குமாறாக நடந்துகொண்டதால் அவர்களுக்குச் சேரவேண்டிய பங்குத் தொகையான ஐம்பது கோடி ரூபாயைக் கொடுப்பதில் இந்திய அரசாங்கம் தாமதித்து வந்ததற்கு எதிராக காந்தி உண்ணாவிரதம் இருந்தார். காந்தியின் உடல் நலனைக் கருதி இந்திய அரசாங்கம் அத்தொகையை உடனடியாகக் கொடுத்தது. இதனால் இந்துக்கள் காந்தியின் அரசியல் அணுகுமுறை குறித்தும், முஸ்லீம்கள் மீதான அவரின் அனுதாபம் இந்துக்களுக்குப் பாதகமாக இருப்பது குறித்தும் கோபமடைந்தனர். அதன் விளைவாகவே அந்த குண்டு வெடிப்பு நடந்தது.

அதனால் பிர்லா மாளிகையின் காவல் அதிகரிக்கப்பட்டது. இதனால் சந்தேகப்படும் நபர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இருந்தும் உள்ளே வரும் அனைவரையும் சோதனையிடுவது பாதுகாப்புக்கு முக்கியம் என்று காவல்துறை நினைத்தது. எனவே காவல்துறை கண்காளிப்பாளர் இது குறித்த தனது கோரிக்கையை என்னிடம் கொண்டுவந்தார். நான் காந்தியிடம் இதைப்பற்றி ஆலோசனை செய்தேன். ஆனால் காந்தி இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை நான் கண்காளிப்பாளரிடம் தெரிவித்தேன். இது உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு, சில நிமிடங்களில் காவல்துறை டி.ஐ.ஜி காந்தியிடம் பேசுவதற்காக அனுமதி வேண்டி அங்கே விரைந்து வந்தார். நான் அவரை காந்தியிடம் அழைத்துச் சென்றேன். காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் ஒவ்வொருவரையும் சோதனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் காவல் துறைக்கு அது கெட்ட பெயராக அமையும் என்றும் அவர் வாதிட்டார்.

பாதுகாப்பு வேண்டுவோர் வாழவே உரிமையில்லாதவர்

காந்தி அவரிடம் நேரடியாக, தனது வாழ்க்கை கடவுளின் கைகளில் இருப்பதாகவும், தான் இறக்கவேண்டும் என்பது நிச்சயமானால் எந்த ஒரு முன்நடவடிக்கையும் தன்னைக் காப்பாற்றாது என்றார். ”யார் ஒருவர் தான் சுதந்திரமாக இருக்க பாதுகாப்பு வேண்டுகிறாரோ அவர் வாழவே அறுகதையற்றவர்” என்று கூறினார். ஒவ்வொருவரையும் பரிசோதிப்பதை விட இந்த பிரார்த்தனைக் கூட்டத்தை நிறுத்திவிடுவது மேலானது என்றும் சொன்னார். எனவே காந்தி பிரார்த்தனைக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் அவரைத் தாக்காமலிருக்க, சீறுடை அணியாத காவலாளிகள் கூட்டத்தில் உள்ள சந்தேகப்படும் நபர்களைக் கண்காணிக்கும்படி செய்யப்பட்டது. மதியம் இரண்டு மணியளவில் அபாவும் மனுவும் காந்தியின் அனுமதியுடன் சில நண்பர்களைப் பார்க்கச் சென்றனர். மாலை பிரார்த்தனைக்கு திரும்பிவிடுவதாக உறுதியளித்துச் சென்றனர். காந்திக்கு மாலை உணவு வழங்கும் பொறுப்பு என் தலையில் விழுந்தது. இந்திய அரசாங்கம் ஏற்பட்டு ஐந்து மாதங்களே ஆன நிலையில், காந்திக்கும் பட்டேலுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளை செய்திப் பத்திரிக்கைகள் மிகைப்படுத்தி வந்தன. காந்தி இந்த பொய்யான செய்திகளைக் கண்டு அதிருப்தி அடைந்ததோடு அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் நினைத்தார். பட்டேலை விலகச் சொல்லிவிட்டு, நேருவையே இப்பிரச்சினைகளைச் சுதந்திரமாகக் கையாளச் செய்யவேண்டும் என்றும் கருதியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. விவாதம் ஒன்றிற்காகப் பட்டேலை மாலை 4 மணியளவில் காந்தி அழைத்திருந்தார். பிரார்த்தனை முடிந்ததும் இதைக்குறித்து பட்டேலிடம் பேசவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை. காந்தி தனது மதிய உணவை எடுத்துக்கொண்டிருந்த போது பட்டேல் தன் மகள் மணிபன்னுடன் வந்து சேர்ந்தார். அவர்கள் உரையாடிக்கொண்டிருந்த போது அபாவும் மனுவும் வந்து சேர்ந்தனர்.

பட்டேலுடன் கடைசி சந்திப்பு

பிரார்த்தனை சரியாக மாலை 5 மணிக்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் பட்டேலுக்கும் காந்திக்கும் இடையேயான விவாதம் 5 மணியைக் கடந்தும் நீடித்தது. விவாத்தின் முக்கியத்துவத்தையும் தீவிரத்தையும் உணர்ந்து யாரும் இடையே குறுக்கிடத் துணியவில்லை. பெண்கள் இருவரும் பட்டேலின் பெண்ணிடம் சைகையில் தெரிவித்த பின்னர் அவர்களின் விவாதம் ஒருவாறு 5.10க்கு முடிவடைந்தது. கழிப்பறைக்குச் சென்று திரும்பிய காந்தி 30-40 அடிதாண்டி உள்ள பிரார்த்தனை இடத்தை நோக்கி நடந்தார். நான்கைந்து படிகள் இறங்கியதும் ஒரு நீண்ட புல்வெளி. காந்தி தனது பிரார்த்தனைக்கு 15 நிமிடங்கள் தாமதமானார். அவருடைய வரவுக்காக 250 பேர் ஆவலுடன் காத்திருந்தனர். நான் தூரத்திலிருந்தே அவர்கள் அனைவரின் கவனமும் ஒருமித்ததாக காந்தியின் அறையை நோக்கியே இருந்ததைப் பார்க்க முடிந்தது. காந்தி இறங்கியதும், 'காந்தி வந்துவிட்டார்' என்ற குரல்கள் கேட்டன. அந்தக் குரலைக் கேட்டதும் எல்லோருடைய தலையும் திரும்பி காந்தி வரும் திசையைப் பார்த்தன. காந்தி வழக்கம்போல் வேகமாக, தலையைக் குனிந்தபடி, தரையைப் பார்த்தபடி, அபா அனுவின் தோள்களின் உதவியுடன் நடந்தார். நான் அவருக்கு இடப்புறத்தில் நெருக்கமாகத் தொடர்ந்தேன்.

பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டதை தனக்குச் சுட்டிக்காட்டாத அந்த பெண்களை அவர் கடிந்துகொண்டதை நான் கேட்டேன். அவர்கள்தான் தன்னுடைய நேரக்காப்பாளர்கள் என்று சொன்னார். “நான் தாமதமாகிவிட்டேன். நான் இதையெல்லாம் விரும்பவில்லை” என்று தொடர்ந்தார். அப்போது மனு, பட்டேலுடன் விவாதித்த விசயத்தின் தீவிரத்தைக் கருதி குறுக்கிடவில்லை என்றாள். அதற்கு காந்தி, “செவிலியரின் பணி நோயாளிக்குச் சரியான நேரத்தில் மருந்து கொடுப்பதுதான். அதில் ஏற்படும் தாமதம் நோயளியைச் சாகடிக்கும்” என்று பதிலளித்தார்.

 நாதுராம் கோட்சே சுட்டபோது

பிரார்த்தனைக்கான இடத்தை நோக்கி நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். மக்கள் பலர் குவித்த கரங்களுடன் நின்றிருந்தனர். காந்தி அவர்களுக்கு தன் வணக்கத்தைத் தெரிவித்தார். 25 அடிகள் தள்ளி இருந்த மேடையை அடைய கூட்டம் வழி ஏற்படுத்திக் கொடுக்க, ஒரு அடி உயரமுள்ள அந்த மேடையில் அமரச் சென்றார். அந்தக் கூட்டத்திடையே நாதுராம் கோட்சே தனது பையில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்தான். காந்தி ஐந்து அல்லது ஆறு அடி நடந்தபோது, கோட்சே விரைவாக நான்கைந்து முறை நெருங்கிச் சுட்டது அவரது மரணத்திற்கு உடனடியாக வழிகோலியது. காந்தி ஏராளமாக வெளியேறிய ரத்தத்துடன் அப்படியே பின்னால் சாய்ந்து விழுந்த கலவரத்தில் அவரது கண்ணாடியும், செருப்பும் சிதறி விழுந்தன. நான் மிக்க அதிர்ச்சியடைந்து என்னசெய்வது என்று புரியாமல் நின்றேன். பிறகு, தனிமையில் என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

செய்தி வேகமாகப் பரவியது. சில நிமிடங்களில் கூட்டம் திரளாக பிர்லா மாளிகையின் முன் கூடியது. யாரும் உள்ளே நுழையாமல் நுழைவாயில் மூடப்பட்டது. பட்டேல் ஏற்கனவே சென்றிருந்தார். நான் எனது அறைக்கு வேகமாகச் சென்று நேருவின் அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அந்த நாட்களில் பிரதம மந்திரியின் வீட்டுடன் தொடர்பு கொள்வதற்கு எங்களுக்கு வசதியிருந்தது. நான் கூட்டத்திடையே வழி ஏற்படுத்திக்கொண்டு, காத்திருந்த டாக்சி ஒன்றைப் பிடித்து, விரைவான ஐந்து நிமிட பயணத்திற்குப் பின் பட்டேலின் வீட்டை அடைந்து நடந்த விபரீதத்தைச் சொன்னேன்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் காந்தியின் உடல் அவரது அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாயில் கிடத்தப்பட்ட அவர் உடலைச் சுற்றிக் கூட்டம். காந்தி உறங்குவது போன்றே தோன்றினார். அவரது உடல் சில நிமிடங்களுக்கு வெதுவெதுப்பாகவே இருந்தது. இரவு நேரம் துன்பத்துடனும் கண்ணீருடனும் கழிந்தது. அந்த இரவு, யாரோ குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எந்த லட்சக்கணக்கான மக்களுக்காக அவர் வாழ்ந்து மடிந்தாரோ, அவர்கள் அனைவருக்கும் துன்பகரமான இரவாயிற்று.

காந்தியின் உடல் அவரது அறையைவிட்டு வெளியேற்றப்பட்ட உடன் பலர் காந்தியின் நினைவாக ஏதாவதை எடுக்க விரைந்தனர். அவர்கள், அவர் சுடப்பட்ட இடத்தில் தரையிலிருந்து கையளவு மண்ணை எடுத்ததனால் சில மணி நேரத்தில் அந்த இடத்தில் பெரிய பள்ளமே ஏற்பட்டது. உடனடியாக அந்த இடம் நினைவுச் சின்னமாக்கப்பட்டு, அந்த இடத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டது.

இது தொடர்பாக உள்துறை மந்திரி பட்டேல்,“நான் தனிப்பட்ட முறையில் பாபுவிடம் வாதாடி காவல்துறை தங்கள் கடமையைச் செய்ய அனுமதிக்குமாறு வேண்டிய பிறகே அவருக்குப் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் அது வெற்றி அடையவில்லை. காந்தியின் மறைவுக்கு நான் எனது ஆழந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவு நமது தேசத்துக்கும் உலகுக்கும் சரிசெய்முடியாத பேரிழப்பு. நானும் காவல்துறையும் எதைப் பாதுகாப்பின் முக்கிய ஓட்டையாகக் கருதினோமோ அதையே கொலையாளி வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது, 'நான் சாகவேண்டுமெனில் எந்தப் பாதுகாப்பும் அதைத் தடுக்க முடியாது' என்ற அவரின் தீர்க்கதரிசனமான வார்த்தை உண்மையானது” என்றார்.

காந்தி சுடப்படும்போது ஹேராம்என்று சொல்லவில்லை

காந்தி சுடப்பட்டபோது ஹேராம் என்று சொன்னதாகப் பரவலாக அறியப்படுகிறது. ஆனால் அவ்வாறு சொல்லும்படியான சாத்தியம் நேரவில்லை. ஆனால் அவர் அடிக்கடி வெளிப்படையாக, இறக்கும்போது ராமனின் நாமம் எனது உதடுகளில் உச்சரித்தபடி உயிர் விடவேண்டும் என்று சொன்னதுண்டு. இந்த ஊகமான செய்தியைச் சில பத்திரிக்கையாளர்கள் பரப்பிவிடப்பட்டு பெருமளவில் பணம் சம்பாதித்திருக்கிறார்கள். அதனுடைய நம்பகத்தன்மையைக் குறித்து யாரும் சரி பார்க்கவில்லை. உண்மையின் சீடனாக இருந்த காந்தியின் பேரில் திணிக்கப்பட்ட ஒரு தவறான நினைவாக அது ஆகிவிட்டது. அவர் உடல் நலமில்லாதபோதோ, படுத்த படுக்கையிலோ நிச்சயமாக ராம நாமத்தைச் சொல்லியிருக்க முடியும். ஆனால் இங்கே அவருக்கு அந்தச் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுவிட்டது. அவருடைய கொலையைப் பற்றி அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன், காந்தி சுடப்பட்ட அந்த தினத்தில் எங்களில் யார் அவருடன் மிக நெருக்கமாக இருந்தார் என்பதைக் கூட விசாரணை செய்யவில்லை என்பது மிகவும் விநோதமாக இருக்கிறது.

தனது கடைசி சில நாட்களில், பிரார்த்தனைக்குப் பிந்தைய உரையில்,  நாட்டில் நடக்கும் அசுரத்தனமான கொடுமையைக் காணும் மௌன சாட்சியாக நான் இருக்க விரும்பவில்லை எனவே கடவுள் என்னை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். கடவுள், இந்தக் கொலையின் மூலம் அவரது பிரார்த்தனைக்கு பதிலளித்திருக்கிறார் என நினைக்கிறேன். படுக்கையில் கிடந்து அவர் சாகவில்லை மாறாக கடவுளை நோக்கிய அவரின் வெற்றிப் பயணத்தில் நேர்ந்த மரணமிது.   சில நிமிடங்களில் நேர்ந்துவிட்ட வேதனையில்லாத மரணம் இது.

எனது இந்தக் கட்டுரை காந்தி-இன்று தளத்தில் வெளியாயிருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...