கதைகள் எதற்காக? –ஜெயகாந்தன்

jayakanthanபுது வருஷப் பிறப்பன்று இலக்கியச் சிந்தனை விழாவில் கலந்துகொண்டு, “எதற்காகக் கதை சொல்கிறோம்?” என்ற தலைப்பில் என்னைப் பேசச் சொல்லியிருந்தார்கள்.

இது மாதிரியான கேள்விகளுக்குப் பல சந்தர்ப்பங்களில் நான் பலவிதமான பதில்களைக் கூறி இருக்கிறேன். அவை ஒன்றுக்கொன்று மாறிய பதில்களாக இருந்த போதிலும் ஒன்றை ஒன்று மறுப்பதாக இருந்ததில்லை.

சமுதாய மாற்றம் காணுவதற்காக.

போராடும் புதயுக மனிதனுக்கு என் எழுத்தை ஓர் ஆயுதமாக்கித் தருவதற்காக.

மனித நேயத்தைப் பரப்புவதற்காக -என்றெல்லாம் நான் சொல்லி இருக்கிறேன். அவை பொய்யன்று. ஆனால், அவைதான் நான் எழுதக் காரணமோ?

இவை யாவும், நான் எழுதிய பிறகு கண்டுபிடித்த காரணங்கள் என்று என் மனத்துக்குத் தெரியுமே. நான் மகிழந்திருக்கிறேன். மகிழ்வித்திருக்கிறேன். நான் துன்புற்றிருக்கிறேன். பிறரைத் துன்புறுத்தி இருக்கிறேன். பிறரை மகிழ்வித்து, நான் துன்புற்றிருக்கிறேன். இதெல்லாம் எதற்காக?

நான் இந்த வாழ்க்கையோடு என்னை சம்பந்தப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த வாழ்க்கை என்னைப் பாதிக்கிறது. நானும் இந்த வாழ்க்கையைப் பாதிக்கிறேன். வாழ்க்கை, எனக்கு முடிவும் தொடக்கமுமற்ற நெடுங்கதையாகக் காட்சி தருகிறது. அவ்வப்போது சிதறிச் சிதறி அலைகளாய் என் மீது மோதும் சிறுகதைகளாகவும் பொருள் கொள்கிறது.

வாழ்க்கையில் நான் காண்கிற மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும், மலர்களும், மண்ணும், கடலும், வானும், வண்ணங்களும், ஓசைகளும், எல்லாமே கதை சொல்கின்றன.

என் தாயும், தந்தையும், என் மனைவியும், குழந்தையும் மௌனமாக என்னைப் பார்க்கிற பெண்களும், கோபமாக என்னை வெறுக்கிற ஆண்களும், எனக்குச் சம்பந்தமானவர்கள் என்போரும்- எல்லாருமே எனக்குக் கதைகள்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையே கதைகள்... கதைகள்தான்! யாருமே தங்களின் அனுபவத்தை அப்படியே சொல்ல முடியாமையினால் கதைகளாய்த்தான் சொல்ல நேர்கிறது. சிலர், கதை எழுதுகிறார்கள். சிலர் கதைகளாகவே ஆகிறார்கள். ஆனால், இவை எல்லாம் எதற்கு? என்று சிலர் கேட்கிறார்களே!

எதற்கு...? எதற்காக கதை படிக்கிறோமோ அதற்கு. எதற்காக நாம் வாழ்கிறோமோ அதற்கு.

என் பேச்சு மிகக் குழப்பமாக இருந்தது என்றார் ஒரு நண்பர்.

ரொம்பச் சரி. அதற்கும்தான். தெளிந்தவர்களைக் குழப்பவும், குழம்பியவர்களைத் தெளிய வைக்கவும் நாம் கதை எழுதுகிறோம் என்று இப்போது நினைக்கிறேன்.

(சிந்தையில் ஆயிரம் நூல் தொகுதியில்...)
Related Posts Plugin for WordPress, Blogger...