யார் மேல் பிசகு? -கு.ப.ரா.

மனித மனம் சதா சந்தேகங்களை உற்பத்தி செய்யும் ஒரு வஸ்து. சந்தேகம் ஏன் ஏற்படுகிறது என்றால் பயத்தால் ஏற்படுகிறது. பயம் ஏன் எனில், நாம் விரும்பும் ஒரு பொருள் அல்லது நேசிக்கும் ஒரு உறவு நம்மைவிட்டுப் போய்விடுமோ என்பதால் எழுகிறது. நாம் பொருள் அல்லது உறவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக் குறைபாடே இவற்றிற்கு மூல காரணமாக அமைகிறது. இந்த நம்பிக்கைக் குறைபாடு நம் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் நிகழ்வது. இது மித மிஞ்சிப் போகும்போது, மனிதன் நிரந்தரமாக நம்பிக்கை இழந்தவனாக, பயப்படுபவனாக, சந்தேக வயப்படுபவனாக மாறுகிறான்.

மனித மனத்தின் இந்த உளவியல் தன்மை அற்புதமாக வெளிப்படும் ஒரு கதைதான் கு.ப.ராவின் யார் மேல் பிசகு என்ற கதை. கு.ப.ராவின் கதைகள் அனைத்தும், சினமா மொழியில் சொல்வதென்றால், உள் அரங்குகளில் நடக்கும் கதைதான். அவருக்கு வீட்டின் ஒரு அறை மட்டுமே போதுமானது! அதிலிருந்து மனித மனத்தின் ஆழம்வரை ஊடுருவிப் பார்த்து கதைகளை எழுதும் ஆற்றல் கொண்டவர் அவர். மனிதன் வீட்டினுள் இருந்தால் என்ன? வெளியில் இருந்தால் என்ன? எங்கே இருந்தாலும் அவன்தானே அவனுடன் இருக்கப் போகிறான். முதலில் மனித மனத்தை ஊடுருவி அவனைச் சரிசெய்தால், வெளியே மொத்தச் சமூகமும் சரிப்பட்டுப் போகாதா என்ற சித்தாந்தத்தின் அடிப்படையே அவர் கதைகள்.


யார் மேல் பிசகில் என்ன நடக்கிறது? கதையைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அதைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அதில் உள்ள நுட்பங்களைப் பற்றியே நான் சொல்ல விழைவது. ராஜம் ஒரு பி.ஏ. படித்த பெண் என்று கு.ப.ரா சொல்கிறார். அவளை ஏன் படிக்காத ஒரு பெண்ணாக அவர் சித்திரிக்க விரும்பவில்லை? அதுவும் சாதராண படிப்பல்ல. பி.ஏ. அவள் ஒரு படிக்காத பெண்ணாக இருந்திருந்தால் கதையில் வெளியாகும் சூழ்நிலையை எதிர்கொள்ளும் மனோதிடம் இல்லாது போயிருப்பாள். மேலும் கதை அவளை மையமாக வைத்து நிகழ்வதால், கதையின் இறுதியாக மூன்று பாத்திரங்கள் உணரும் யார் மேல் தவறு என்ற கேள்வி எழாமல் கதையின் போக்கு மாறியிருக்கும்.

ராஜத்தின் கணவன் பட்டு, உயர் கல்வி கற்று, பெரிய உத்தியோகத்தில் இருப்பவன்தான். ஆனால் சந்தேகம் என்பது படித்தவன் படிக்காதவன் என்று பார்த்தா வருகிறது? தன் நண்பனைத் தன் வீட்டில் தங்கவைத்தவன் அவன்தான். ஏதோ ஒரு நாள் அவர்கள் நெருக்கமாக இருப்பதாக ஒரு சந்தேக விதை அவனுக்குள் முளைக்கிறது. எல்லோரும், “எடுக்கவா அல்லது கோர்க்கவா?” என்ற துரியோதனாக ஆக முடியாமா? பிறகு அது மரமாகி வளர்ந்து, இருவரையும் சோதித்துப் பார்க்கும் நிலைக்குப் போகிறது.

கதையின் இறுதியில் ராஜம் அழுகிறாள். அவள் ஏன் அழவேண்டும்? காலங்காலமாக சமூகம் பெண்ணின் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையின் வெளிப்பாடுதான் அவள் அழுகை. அவள் எவ்வளவுதான் படித்திருந்தாலும் என்ன? ராமனின் சீதையே சந்தேகத்திலிருந்து தப்பாத போது பிறறைப் பற்றி என்ன சொல்ல?

மனித மனங்களைக் கு.ப.ரா நெருக்கமாக, நுணுக்கமாக, அணுகி ஆராய்கிறார் என்பதற்கு இந்தக் கதை மற்றொரு சான்று.


Related Posts Plugin for WordPress, Blogger...