சமூகப்பணி –கோபிகிருஷ்ணன்

கோபிகிருஷ்ணனின் இக்கதையின் வெளித்தோற்றம் நகைச்சுவையாகத் தெரிந்தாலும், பல்வேறு மனிதர்களின் பல்வேறு குணாம்சங்கள் வெளிப்படுவதாகவே கதை அமைந்திருக்கிறது. மேலும் இன்றைய வாழ்க்கையில் சமூகப்பணியை அரசாங்கமும், தனியார் அமைப்புகளும் பரந்துபட்ட அளவில் செய்துவருகிறது. அப்படிச் செய்யும் பணிகள் முறையாக உரியவர்களைப் போய்ச் சேர்கின்றனவா என்பதை நையாண்டியாகச் சொல்கிறார் அவர். அதைவிட முக்கியமானது, மனிதர்களாகிய நாமே சமூகத்தை ஒருபுறம் சீரழித்துவிட்டு மறுபுறம் அதைச் சீர்திருத்தம் செய்யும் அவலத்தைச் சுட்டிக்காட்டுவதுதான் கோபிகிருஷ்ணனின் முக்கிய நோக்கம். ஒரு சமூகத்தில் எந்தளவிற்கு சமூகப்பணிகள் அதிகமாக நடைபெறுகின்றனவோ அந்தளவிற்கு அச்சமூகம் சீரழிந்திருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறார் அவர்.

கதையப் படித்துவரும் போது நமக்கு நகைச்சுவையாகவே கதை தோற்றம் கொள்வதும், படித்து முடித்ததும் மேற்குறித்த சிந்தனைகள் நம் மனதில் எழுந்து, கதை மற்றொரு தளத்திற்கு மாறுவதும் இக்கதையின் சிறப்பு. கோபிகிருஷ்ணன் கதைகள் பிற எழுத்தாளர்களின் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் தினசரி நடவடிக்கைகளே அவர் கதைகளின் பிரதான அம்சம். ஆனால் அவற்றிலிருந்து அவர் நம்மை இட்டுச் செல்லும் பாதை வித்தியாசமானவை. அவை நமக்குத் தரும் வாசிப்பின் அனுபவங்கள் நம்மை வேறுவகையான உலகுக்கு அழைத்துச் செல்லக்கூடியவை.

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“பேரென்ன?”

“சுசீ”

“வூட்டுல கூப்புடற செல்லப் பேரெல்லாம் சொல்லக்கூடாது. முழுப் பேரெச் சொல்லுங்க.”

“சுசீலா தேவி.”

“என்ன சுசீலா தேவி?”

“சுசீலா தேவின்னா சுசீலா தேவிதான்.”

“உங்க இனிஷியல் என்னான்னு கேக்குறன்.”

“ஓ! ஏ.”

“ஓ.ஏ.சுசீலா தேவியா?”

“இல்ல இல்ல. ஓ-ன்னது உங்க கேள்வியப் புரிஞ்சுக் கிட்டதுக்கான அங்கீகார ஒலி. ஏ-தான் இனிஷியல்.”

“அப்ப ஏ.சுசீலா தேவி.”

“ஆமா. அதே ஏ.சுசீலா தேவி.”

“மிஸ்ஸா மிஸஸ்ஸா?”

“மிஸஸ்.”

“அப்பா ஒரு வழியா முழுப் பெயரெச் சொல்லிட்டீங்க. ஒரு பெரிய சாதனெதான். பாராட்டுக்கள்.”

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“பேரென்னங்க?”

“மிஸஸ் ஸ்ரீதர்.”

“உங்க சொந்தப் பேரெயும் சேத்துச் சொல்லுங்க.”

“வேணாங்க. கல்யாணத்துக்கப்புறம் என் சொந்தப் பேரெல்லாம் பறி போயிருச்சி.”

“பராவாயில்ல. சொல்லுங்க, நாங்க இருக்கோம்.”

“மிஸஸ் கமலா ஸ்ரீதர்.”

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“பேரென்னங்க?”

“காமாட்சி அம்மாள்.”

“அம்மாள் நீங்களாகச் சேர்த்துகிட்டீங்களா? உங்க பேரெ மட்டும் சொல்லுங்க போதும்.”

“காமாட்சி. வயசாயிருச்சுன்னா அம்மாள்னு சேர்த்துப்பாங்க இல்லீங்களா? அதான்.. சின்ன வயசுல காமூன்னு கூப்புட்டா, அப்புறமா காமாட்சி, இப்ப காமாட்சி அம்மாள்.”

“பக்திப் பரவசத்துல இருக்குறப்ப காமாட்சி அம்மனா மாற மாட்டீங்களே?”

“…..”

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“சரி, பின்கோட் சொல்லுங்க.”

“சின்ன கிராமமுங்க. அதுக்கெல்லாம் நம்பர் கெடயாதுங்க.”

“!!!?”

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“அட்ரஸ் சொல்லங்க.”

“ஜெகன்னாதபுரம்.”

“மொதல்ல வீட்டு நம்பர் சொல்லுங்க.”

“வீட்டு நம்பருங்களா?”

“ஆமா, வீட்டு நம்பர்தான்.”

“அது வீடில்லீங்க.”

“முக்காவாசிப் பேரோடது வீடு இல்லதான். சண்டெயும் சச்சரவுமா நரகமாத்தான் இருக்கும். இப்போதக்கித் தத்துவம் பேசாதீங்க. வீடு இல்லன்னா நரகத்தோட நம்பர் சொல்லுங்க. நேரம் ஆகறது. உங்க பின்னாடி எவ்வளவு பேர் நிக்கிறாங்க பாருங்க.”

“நா அந்த விதத்துல சொல்லலீங்க. என்னோடது வீடில்ல. குடிசைங்க.”

“சரி குடிசெ நம்பர் சொல்லுங்க.”

“குடிசெக்கி ஏதுங்க நம்பரு!”

“சரி, அப்ப அட்ரஸ் சரியாத் தெரியல்ல.”

“இல்லீங்க. ஜெகன்னாதபுரத்துல வந்து எம் பேரெச் சொல்லி விசாரிச்சீங்கன்னா சொல்லீருவாங்க.”

“சரி, நீங்க போங்க, விடிஞ்சது.”

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“வீட்டுக்காரரு இருக்குறாருங்களா?”

“இல்லீங்க.”

“எங்க?”

“வெளியூரு போயிருக்காரு.”

“என்ன டூருக்குப் போயிருக்காரா?”

“இல்ல வீட்ட விட்டுப் போயிட்டாருங்க.”

“எவ்வளவு வருசமாச்சி?”

“ரெண்டு நாளாச்சிங்க.”

“!!!?”

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“கணவனால கைவிடப்பட்டவங்களுக்கு இங்க உதவி செய்யறாங்கன்னு சொன்னாங்க. அதான் கண்டுகிட்டுப் போகலாம்னு வந்திருக்கேன்.”

“விட்டுப் போயி எவ்வளவு வருஷமாச்சி?”

“முழுசா ஒரு மாசமாகுது.”

“ஏம்மா ஒரு ஆறு மாசமாச்சும் டைம் குடுக்க மாட்டீங்களா? இவ்வளவு உடனேயே வந்திரணும்? என்னவோ எப்ப விட்டுட்டுப் போவார்னு காத்துக்கிட்டிருக்குற மாதரி… ஒரு ரெண்டு மாசம் கழிச்சித் திரும்பி வந்துட்டார்னா என்ன பண்ணுவீங்க? இன்னுமொரு ரெண்டு மாசம் பொறுத்துக்கிடுங்க. அப்புறமா வந்து பாருங்க. சரியா?”

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“வீட்டுக்காரரு இருக்காரா?”

“இல்லீங்க.”

“இல்லேன்னா? விட்டுட்டுப் போயிட்டாரா, இல்ல செத்துட்டாரா?”

“அவரு ஏங்க சாகுறாரு! குத்துக்கல்லாட்டமா இருக்காரு ஒரு சிறுக்கிய வச்சிக்கிட்டு. என்னெத்தான் விட்டுட்டுப் போயிட்டாரு.”

(“விட்டுட்டுப் போனாலும் பாசம் போறதா, சனியன்!“)

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“வீட்டுக்காரரு இருக்காரா?”

“இல்லீங்க. விட்டுட்டுப் போயிட்டாரு. இன்னொருத்தி மேலெ ஷோக்கு.”

“சரி, அந்தம்மா கிட்டயும் சொல்லி வைங்க. அவங்க மேலே இருக்கிற ஷோக்கு போனதுக்கப்புறம் அவங்களையும் இங்க வந்து விண்ணப்பம் குடுக்கச் சொல்லுங்க. உங்க வீட்டுக்காரரு அபலைங்கள உற்பத்தி பண்ணிகிட்டே இருப்பாரு போலிருக்கு. எங்களுக்கும் நெறய பேருக்கு உதவி பண்ற புண்ணியம் கெடெக்கும்.”

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“வீட்டுக்காரரு இருக்காரா?”

“இல்லீ்ங்க. எறந்துட்டாரு.”

“பிள்ளைங்க எத்தினி?”

“நாலு பசங்க.”

“எதுனாச்சும் வேலெவெட்டி செய்றதா?”

“இல்லீங்க, எல்லாம் சின்னச் சின்னப் பசங்க.”

“நீங்க என்ன வேலெ பாக்குறீங்க?”

“வீட்டு வேலெ.”

“உங்க வீட்டுலயேவா?”

“இல்லீங்க ஒரு பங்களாவுல.”

“எவ்வளவு வருது?”

“நூறு ரூபா தர்றாங்க, ரெண்டு வேளெ சோறு போட்டு.”

“இறுக்குறது வீடா குடிசெயா?”

“குட்செங்க.”

“வாடகெ எவ்வளவு தர்றீங்க?”

“தொண்ணூறு ரூபா.”

“உங்களுக்கு யாருனாச்சும் உதவி செய்யறாங்களா?”

“சாமி சத்தியமா வேற யாரும் உதவி செய்யலீங்க.”

“குடிசெ வாடகெ போக பத்து ரூபாயில மாசம் பூராவும் நீங்களும் உங்க குழந்தெகளும் சாப்புட்றீங்க, அப்படியா?”

“ஆமாங்க.”

“!!!?“

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

“உங்க வீட்டுக்காரர் இதய அதிர்ச்சியில செத்துட்டாருன்னு விண்ணப்பத்துல எழுதியிருக்கீங்க.”

“இல்லீங்க, அவரு ஹார்ட் அட்டாக்குலதான் போயிட்டாரு.”

“ஓ. அப்ப விண்ணப்பத்துலதான் ஏதோ தப்பு இருக்கு. நா சரி பண்ணிக்கிறேன்.”

“சரிதாணுங்க.”

-000-

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சமூகப்பணிச் சா.

ஜிங்கடி ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கடி ஜிங்கா.

ஜிங்கடி ஜிங்கா ஜிபூம்பா ஜிங்கடி சமூகப்பணி ஜிங்கா.

“அடுத்தது வாங்கம்மா.”
Related Posts Plugin for WordPress, Blogger...