சில கவிதைகள்

என் டைரியைப் புரட்டியதில் எப்போதோ நான் எழுதிய கவிதைகள் கண்களில் பட்டது. இவைகள் கவிதை என்று சிலர் சொல்லலாம். வேறு சிலர் கவிதை இல்லை என்று சொல்லலாம். எதுவாக இருந்தால் என்ன? என் மனதில் துளிர்த்த சில சிந்தனைகள் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள்.

நீ பொய் சொன்னதால்
உன் மீது எனக்கு
வருத்தமோ கோபமோ இல்லை
என் வருத்தமெல்லாம்
நீ சொன்ன பொய்யால்
நான் பொய்யனாகிவிட்டேன்
என்பதுதான்.

-000-

பல சமயங்களில்
அன்பு
ஆதரவா
ஆக்கிரமிப்பா
என்று தெரிவதில்லை.

-000-

எனக்காக ஆறுதல்
சொல்ல யார் இருக்கிறார்கள்
என்று அழுகிறாய்
நான் இருக்கிறேன்
என்றாலோ
‘நீதான் என் துக்கமே’
என்கிறாய்.

-000-

கவிஞனின்
மரணத்திற்கு பின்
அவனது
பிரசுரிக்கப்படாத
கவிதைகளே பெரிதும்
துக்கமடைகின்றன.

-000-

எல்லோரும் உறங்கும்
வேளையில் நானும் என் கவிதையும்
மட்டும் விழித்திருக்கிறோம்
உறங்காமல்
எனக்காக நான் எழுதும்
கவிதை
யாரோ ஒருவனை விழிக்கவைக்கும்
என்ற நம்பிக்கையில்.

-000-

தினமும்
அதிகாலையில்
எழுந்திருப்பது இல்லை
என்றாலும்
தினமும்
என்னை எழுப்புகிறது
இந்த
சுரணைகெட்ட
அலாரம்.

-000-

கடவுளைப் பார்க்க
உபாயம் ஒன்று கேட்டேன்
நண்பனிடம்
எதற்கு என்றான்
அவரிடம் ஒரு விண்ணப்பம்
எனக்கு மட்டும் ஏன் இப்படி
என கேட்கவேண்டும்
எனக்கும் அப்படித்தான்
என்றான் அவன்
உனக்குமா எனக்கேட்டேன்
எல்லோருக்கும் அப்படித்தான்
என்றான்
என்ன இருந்தாலும்
என் இப்படியும்
அடுத்தவரின் இப்படியும்
ஒரே இப்படியா
என்பதில்  சந்தேகம்
எனக்கு.

-000-

நாளில் எது
நல்ல நாள்
கெட்ட நாள்
நேரத்தில் எது
நல்ல நேரம்
கெட்ட நேரம்
பெயர் சூட்டியவர்கள் நாம்
பெயரிடுவதற்கு முன்
எது நல்ல நாள்
கெட்ட நாள்
எது நல்ல நேரம்
கெட்ட நேரம்.

-000-

காத்திருக்கும் கணங்கள்
கொடியதுதான் என்றாலும்
காத்திருக்காமல் வாழ்க்கை இல்லை
கருப்பையில் கருவான
நாள் முதலாய்
காத்திருப்பின கணங்களுக்கு
கணக்கில்லை வழக்கில்லை

எப்போதும் எதற்கேனும் எங்கேயும்
ஏதேனும் ஒரு காத்திருப்பு
காத்திருப்பின் நேரத்தில்
பொருக்க இயலாமற் போவது
பொறுமை இல்லாததால் அல்ல
அடுத்ததொரு காத்திருப்பு காத்திருப்பதால்தான்

காத்திருந்து காத்திருந்து
இப்போது என் காத்திருப்பு
மரணத்தின் கணங்களுக்காய்.

-000-
Related Posts Plugin for WordPress, Blogger...