பகலும் இருளும் -ஜி.நாகராஜன்

ஜி.நாகராஜன் ஆங்கிலத்தில் எழுதிய The Day and the Darkness 1 என்ற சிறுகதையை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

முதியவர் எப்போது இருமத் தெடாங்கினாரோ அப்போதே அவள் எழுந்துவிட்டாள். எழுந்திருக்கும் முன்பு சிறிது நேரம் படுக்கையில் படுத்திருக்க விரும்பினாள். ஆனால் முதியவரின் இருமல் தொடர்ந்தது சகிக்க முடியாமல் இருந்தது. அவருடைய இருமலுக்கு மருந்து தருவதுதான் சரியாக இருக்கும் என்று தீர்மானித்தாள். படுக்கை அறையின் விளக்கை அதிகப்படுத்தி, எடுத்துக்கொண்டு முதியவரின் அறைக்குச் சென்றாள். அவரை எழுந்திருக்க உதவி, அவருடைய உருண்டையான ஆயுர்வேத மருந்தைக் கொடுத்து விழுங்கச் செய்து, மீண்டும் படுக்கையில் படுக்க வைத்தாள்.

இன்னமும் இருட்டாக இருந்த வீட்டின் புழக்கடையில் நின்று தனது பற்களைத் துலக்கியவாறு, வானில் மறைந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தாள். இருபது வாளித் தண்ணீரைக் கிணற்றிலிருந்து இறைத்து, கிணற்றருகே இருந்த பாத்திரத்தில் நிரப்பினாள். அவள் சமையலறையில் காபி தயாரிப்பதில் முனைந்திருந்து போது, அவளது மாமியார் எழுந்தாள். “சுலோசு, அப்பாவுக்கு அவருடைய மருந்தைக் கொடுத்துவிட்டாயா?” என்ற அவளது வழக்கமான கேள்வியைக் கேட்டாள். ”கொடுத்துட்டேன் அம்மா” என்று சுலோசு கத்தினாள். சுலோசு சமையலறையில் காபி தாயரிக்க தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருப்பாள் என்பதை அவள் மாமியார் அறிவாள். காபி தயாராகிக்கொண்டிருந்த இடைப்பட்ட நேரத்தில் சுலோசு பிற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். வீட்டின் முன்புறத்தை, சுத்தம் செய்து மாட்டுச் சாணம் கொண்டு கலந்த தண்ணீரத் தெளித்துக் கோலமிட்டு அலங்கரித்தாள்.

சுலோசு புடவையை உடலில் சுற்றியபடி, வாளிவாளியாக தண்ணீரைக் கிணற்றிலிருந்து இறைத்து,  தனது தலையில் ஊற்றிக் குளித்துக்கொண்டிருந்த போது கிழக்கு வெளுத்தது. முதியவர் இருமல் நீங்கியவராக ஆழந்த தூக்கத்தில் இருந்தார். முதியவள் சமையலறையில் எரிந்துகொண்டிருந்த அடுப்பினருகில் இருந்தாள். சுலோசு உடைகளை அணிந்துகொண்டு, காலை பிராத்தனைகளைச் சொன்னாள்…..

சுலோசு வீட்டுக்கு முன்னால் வந்த தெரு வியபாரியிடம் கீரையும் காய்கறிகளும் வாங்கிக்கொண்டு சமையறையில் நுழைந்த போது அவளது மாமியார் தண்ணீர் போதுமான அளவு சூடாகிவிட்டதா என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முதியவர் தீனமான குரலில் சுலோசுவை அழைத்தார். அவரை கழிப்பறைக்கு கூட்டிச் சென்று திரும்பும் போது, அவளது மாமியார் குளித்து முடித்திருந்தாள். இளஞ்சூடான தண்ணிரீல் நனைத்த ஒரு துண்டுத் துணியில் முதியவரின் உடல் துடைக்கப்பட்டது. அவரிடம் எஞ்சியிருந்த சில பற்களும் சுத்தம் என்ற பேரில் துலக்கப்பட்டது. சுலோசு அரிசியை உலையில் கொதிக்கவிட்டு, வீட்டின் தரையைக் கூட்டிக் கொண்டிருந்த போது, ஏறக்குறைய ஆறிப்போன காபியை முதியவர் மெதுவாகக் குடித்து முடித்திருந்தார். அவள் மாமியார் அடுப்பருகே காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள். வாரந்தோறும் வெண்ணை கொண்டுவரும் கிராமத்துப் பெண் வீட்டிற்கு வெளியேயிருந்து  கூப்பிட்டாள். சுலோசு கையில் பாத்திரத்துடன் அவளிடம் விரைந்தாள். முதியவர், தனது முழங்கையை முதலில் படுக்கையில் ஊன்றி, தானாகவே படுக்கையில் படுத்து, அன்றைய தினத்தின் வெற்றிகரமான முயற்சியைச் செய்து முடித்தார். அவர் அப்படிச் செய்யும் போது பலமுறை தனது தலையை வேகமாகத் தலையணையில் மோதிக்கொண்டிருக்கிறார். சுலோசு சரியான நேரத்தில் அங்கே வந்து, விலகியிருந்து தலையணையைச் சரிசெய்தாள். அவளது மாமியார் அரிசிப் பாத்திரம் கொதிப்பதாகச் சத்தம் போட்டாள். சுலோசு அவசரமில்லாமல் சமையலறையில் நுழைந்து சமையல் வேலையைக் கவனித்தாள். சமையலறையிலிருந்து வெளியேறிய அவளது மாமியார், தான் வழக்கமாக முன்னறையில் தெருவைப்பார்த்து அமருமிடத்தில் அமர்ந்து காவலுக்கிருந்தாள்.  சாப்பாடு தயாராகி முதியவருக்கு கொடுக்கும் வரை இடத்தைவிட்டு நகராமல் அங்கேயே அமர்ந்திருந்தாள். அதன் பிறகு சாப்பிடுவதற்காக சமையலறைக்குள் சென்று, சுலோசு பறிமாறிய சூடான உணவை எடுத்தாள். சுலோசு நல்ல சமையல்காரி ஆதலால், அவள் மாமியார் உணவை ருசித்துச் சாப்பிட்டாள். சில சமயம், “அவனுக்குச் சொந்தமாகக் கருதியதை முதியவர்களாகிய நாங்கள் அனுபவிப்பது எத்தகைய சோகம்?” என்பாள்.

பனிரெண்டு மணியளவில், பல வகையான கனவுகளின் தொந்திரவுகளுக்கிடையே, சுலோசு குட்டித் தூக்கம் போட்டாள். அவள் அரிதாகவே தனது கனவை நினைவு வைத்திருந்தாலும், எப்போதும் கனவில் ரயில் வருவதை உணர்ந்திருந்தாள். ஒருவேளை ஒரு மணி ரயிலின், வெறுப்பூட்டும் கிரீச்சென்ற விசில் சப்தம் அவள் தூக்கத்தை கலைப்பது கூட அதற்குக்  காரணமாக இருக்கலாம்.

முதியவர் தனது மருந்துக்காக இருமினார். முதியவள் குறட்டை விட்டு தூங்கினாள். சுவர்க் கடிகாரத்தின் ஓசை அபத்தமாகவும் விடாப்பிடியாகவும் கேட்டது. சூரியன் இரக்கமற்றவனாக இருக்க, அணில் ஒன்று அவனது வெப்பத்தைக் குறித்து புகார் செய்தது. புழக்கடையில் இருந்த தாவரங்கள் தங்கள் தலையைத் தொங்கப்போட்டன. சுலோசு அன்று இரவு தோசை சுடுவதற்கான மாவை ஆட்டாங்கல்லில் அரைத்தாள்.  சௌகரியமாக இருப்பதற்காக தனது சேலையை மேலே தூக்கிக் கட்டிக்கொண்டு இரண்டு கால்களையும் குறுக்காக வைத்து உரலில் உடகார்ந்த போது அவளது வழவழப்பான வெண்மையான கால்கள் தெரிந்தன. பக்கத்து வீட்டு சீதா வராந்திர பத்தரிக்கை ஒன்றைக் கொண்டுவந்து சத்தமாகப் படித்தாள். அவள் அவ்வாறு படிப்பது சுலோசுக்குப் பிடிக்குமாதலால், அதைக் கேட்படியே, ஒரு கை உலக்கையை ஆட்ட, மற்றொரு கையால் மாவைத் தள்ளியபடி தன் வேலையைச் செய்தாள்.

மழை இல்லாத மாலை நேரம், சுலோசுவுக்கு மெல்லிய அச்சம் கலந்த உணர்வை அவளுள் ஏற்படுத்தியது. சூரியன் மறைந்த பின்னரும், இருட்டு முழுமையாக வந்தடையாத நேரத்தில் புழக்கடையில், சற்று நேரத்துக்கு முன்னர் துணி துவைத்த, கல்லின் மீது தனியாக அமர்ந்திருந்தாள். அவளுடைய மாமியார் வெளியே சென்றிருந்தாள். முதியவர் பாதி இருளடைந்த அவரது அறையில், எந்த நம்பிக்கையும் இன்றி, பாழடைந்த சிறையில் இருக்கும் ஒரு கைதியைப் போல் இருந்தார். புழக்கடைக்கடையின் சுவறையும் தாண்டி பையன்கள் சிலர் கத்தும் சத்தம் சுலோசுவுக்குக் கேட்டது. சில நேரங்களில், காற்று அமைதியாக இருக்கும் போது, தூரத்தில் இருக்கும் சினிமா தியேட்டரில் மாலை நேரத் திரைப்படம் போடுவதற்கு முன்பாக ஒலிக்கும் இசை கேட்கும். மாம்பழத்தின் உள்ளேயிருக்கும் சிவப்பு வர்ணத்தைப் போன்று வானம் மேற்கே பிரகாசமான சிவப்பு நிறம் பெற்றதைச் சுலோசு பார்த்தாள். இருள் தொடங்குவதற்கு முன் சிவப்பு நிறம் ஊதாவாக மாறியதையும் பார்த்தாள். வானத்தின் பரந்த வெளி, பிரகாசமான இலையை தீயில் இட்டது போல் நிறம் மங்கியதைப் பார்த்தாள். கூட்டத்திலிருந்து பிரிந்த காகம் ஒன்று, அதற்கான தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக தீனமானக் குரலில் கத்தியபடி அவள் தலைக்கு மேலே பறந்தது. மூழ்கும் இருட்டில் தான் காணாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்தில் அது மிகவும் தாழப் பறந்து சென்றது. அதிகாலை நேரத்தில் மங்கிய நட்சத்திரங்கள் திரும்பத் தொடங்கியதையும், மாற்றமடைந்து வரும் வானத்தையும் சுலோசு வியப்புடன் பார்த்தாள். எல்லா நேரங்களும் ஓரே மாதிரியாக இருக்கும் நிலையில் சூரியன் மறைவதும் உதிப்பதுமான இரண்டு மணி நேரங்களை தான் மிகவும் விரும்புவதாக உணர்ந்தாள். அந்த மாலையில், இருள் கவியும் நேரத்தில், குழந்தைகள் விருப்பமில்லாமல் தங்கள் வீட்டுக்குத் திரும்பும் காலடி ஓசையைக் கேட்ட போது, தான் உயிருடன் இருப்பதான ஒரு விசித்திர உணர்வை அடைந்தாள்.

வீட்டின் விளக்குகளை ஏற்றிய சுலோசு தனது கணவனின் படத்தை வணங்கினாள். முதியவருக்கு கஞ்சி தயாரித்து ஊட்டிவிட்டாள். மங்கிய மண்ணெண்னை விளக்கின் வெளிச்சத்தில் முதியவரின் படுக்கையை சரிசெய்து சுத்தப்படுத்தி மீண்டும் அவரைப் படுக்க வைத்தாள். அந்த சமயத்தில் அவளது மாமியார் திரும்பி வந்தாள். சமையலறையில் இருந்த சுலோசு அவளுக்காக சுட்டுக்கொண்டிருந்த சூடான தோசையைச் சாப்பிட விரும்பினாள். சுலோசு தனது உணவை முடித்த போது அன்றைய தினத்தின் முடிவுக்கு அருகாமையில் இருந்தாள். பாத்திரங்களைக் கழுவி சமயலறையை சுத்தம் செய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக எடுத்துக்கொண்டது. வீட்டின் கதவுகளை உறுதியாக சாத்திவிட்டு, தனது மாமியார் அருகில் அமர்ந்து அவள் கால்களைப் பிடித்துவிட்டாள். சுலோசு படுக்கும் வீட்டின் பெரிய அறையில் மங்கலாக எரிந்துகொண்டிருந்த இரவு விளக்கு, அந்தப் பெரிய வீட்டின் இருட்டில் பரிகசிக்கத் தக்கதாக இருந்தது. துன்பப்பட்டு அலையும் ஆத்மாவைப் போல்  அந்த வீட்டில் குடியிருந்த அமைதி பயமுறுத்துவதாக இருந்தது. நகரத்தின் தூரத்துக் கோடியிலிருந்த அந்த வீடு எல்லாவிதமான சத்தங்களிலிருந்தும் துணடிக்கப்பட்டிருந்தது.

இரண்டு முறை திருட்டு நடந்திருந்த போதிலும் முதியவருக்கு அங்கேயிருந்து வேறிடம் செல்லும் எண்ணமேதும் ஏற்படவில்லை. நல்ல காற்று வசதிக்காகவும், நெரிசல் இல்லாத இடத்தில் இருப்பது தனது மகனின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையிலும் அவர் அந்த வீட்டை வாங்கியிருந்தார். அப்போது விளக்குகள் போடவும் உத்தேசித்திருந்தார், ஆனால் பிறகு அதற்கு அவசியமில்லாது போயிற்று என்பதை உணர்ந்தார்.

பெரும்பாலான இரவுகளில் சுலோசவுக்கு இயற்கையாகவே உறக்கம் வந்துவிடும். ஆனால் சில நாட்கள் அப்படியில்லை, வேலையின் பளு அவளது தூக்கத்தை நிராகரித்துவிடும். வெளியில் நிலா காயும் போது, புழக்கடையில் துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்து, மகிழ்ச்சி என்று ஏதாவது இருந்தால் அதை விரும்பி உட்கார்ந்திருப்பாள். நிலா இல்லாத போது, கடந்த காலத்தில் நடந்தவைகள், அவளை வஞசம் தீர்க்கத் தீவிரமாக அவள் மனத்தை வந்து தாக்கும் போது, நிர்க்கதியாய் படுக்கையில் விழுந்து கிடப்பாள். அவளைவிட பத்து அல்லது பதினொன்று வயது குறைவான தம்பி ஒருவன் அவளுக்கிருந்தான். அவளது அப்பா இறந்த நாளிலிருந்து அவன் ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வந்தான். அவனோ நிலையாக ஓரிடத்தில் நில்லாமல் ஊர் ஊராக, ஓட்டல் ஓட்டலாக, எதைத் தேடி அலைந்தானோ அதைக் கடவுள்தான் அறிவார். அவளது திருமணம் முடிந்த கையோடு, முன்னறே திட்டமிட்டது போல் அவள் கணவன் படுத்த படுக்கையாகி சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். அவன் அவளிடம் சொன்னான், “உனது அப்பா ஒரு முட்டாள். அவனுக்குத் தெரியாதா நான் சீக்கிரமே இறந்து போவேனென்று? நானும் ஒரு முட்டாள்தான். நான் என் அம்மாவின் கட்டளையை மறுக்க முடியவில்லை.” அதற்குப் பிறகு அவளது அப்பா ஓடும் ரயிலின் முன் விழுந்து தன் வாழக்கையை முடித்துக்கொண்டது நடந்தது. அபரிமிதமாக சாப்பிடும், மனமுவந்து சிரிக்கும் பெரிய ஆகிருதி உடையவர் அவர். கொஞ்சம் சிக்கனமாக அவர் இருந்திருந்தால் தனது ஓட்டல் வியபாரத்தில் முன்னேறி இருக்கலாம். ஆனால் அவரது தேவைகளைக் கட்டுப்படுத்தி வாழ முயற்சித்தும் முடியாது போயிற்று. சீட்டாட்டத்தில் ஐம்பது ரூபாயை இழந்த அவர் சிரித்தபடியே, “நாளை பெரும் பணம் வரப்போகிறது” என்றார். அவர் தனது நம்பிக்கையான குரலில், “சுலோசு அந்தப் பையனை எனக்குப் பிடித்து விட்டது. அவனைப் போன்றவர்கள் தோற்றத்தைத் தாண்டி ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். அவன் நல்ல நடத்தையும், நல்ல படிப்பும் உடையவன். முற்றிலுமாக அவனிடம் எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லை. நீ மிக அதிர்ஷ்ட்டக்காரப் பெண், மகளே, அவனை மணந்துகொள்ளும் மிகமிக அதிர்ஷ்டசாலி பெண்.” என்றார். ஆனால் மிக விரைவில் ஆழந்த இருளைக் கிழித்தபடி, ரத்தக்கறையுடன், இரக்கமற்றதாக, காது செவிடாகும்படி ரயிலின்  தடதட ஓசை அவள் காதுகள் முழுதையும் நிரப்பியது.

1. ஜி.நாகராஜன் ஆக்கங்கள், காலச்சுவடு பதிப்பகம், பக்கம் 597-600.
Related Posts Plugin for WordPress, Blogger...