சிறுகதை: அன்புள்ள நண்பருக்கு,

தங்களை நேரில் சந்தித்து ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். தாங்களும் குழந்தைகளும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் பல கடிதங்களுக்கு என்னால் பதில் எழுத முடியவில்லை. இப்போதெல்லாம் எழுதுவது என்பதே ஆயாசமும் அலுப்பும் தருவதாக உள்ளது. நாட்குறிப்புகளும் அரிதாகவே எழுத முடிகிறது. எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் அவ்வப்போது எழுதி வருகிறேன். தாங்களும் எழுதி வருகிறீர்கள்தானே? அன்று உங்கள் ஊர் புத்தகத் திருவிழாவில்தான் தங்களைச் சந்தித்தேன். அப்போது உத்வேகத்துடன் பல புத்தகங்களை வாங்கிவிட்டேன். ஆனால் அவற்றில் சில தவிர பல புத்தகங்கள் படிக்கப்படாமல் புத்தக அலமாரியில் தூங்குகின்றன. படிப்பது என்பது இயல்பாய் கூடிவர வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆயினும் அப்படி நிகழ்வதில்லை. தினமும் ஒரு மணி நேரம் செலவிடுவது கூட முடியாமலிருக்கிறது. ஏதாவது ஓரு நிர்பந்தம் இருந்தாலொழிய படிப்பது சாத்தியமாயில்லை.

முதன்முதலில் தனக்கு கிடைத்த பணத்தை பாரதி புத்தக மூட்டைகளாக வாங்கி வருகிறார். செல்லம்மாள் அதிர்ந்து போகிறாள். இந்த மனிதருடன் எப்படி குடும்பம் நடத்துவது எனும் சந்தேகம் அப்போதே அவளுக்குள் எழ ஆரம்பித்துவிட்டது. உண்மையில் மனிதன் உறவு கொள்வதே “இவன் எப்படி நமக்குப் பயன்படுவான்” என்ற நோக்கத்திலேயே இருக்கிறது. ஒவ்வொருவரும் பிறருக்குப் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகானதாக இருக்கும்? இன்னும் வரும் காலங்களில் மனிதனின் சுயநலம் மிகப் பயங்கரமானதாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அன்பும் சரி பொருளும் சரி கொடுக்காமல் நாம் வாங்க முடியாது என்ற எளிய உண்மையை ஏனோ மறந்துவிடுகிறோம்.

வெளியே சடசடவென மழையின் சத்தம். மின்சாரம் இல்லை. அவசர விளக்கின் உதவியுடன்தான் இக்கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். மனைவியும் குழந்தைகளும் தூங்குகிறார்கள். மணி இரவு பதினொன்று. காற்று பலமாக வீசுகிறது. பக்கத்து அறையில் ஜன்னல் கதவு காற்றில் படபடவென சப்திக்கிறது. எழுந்து சென்று ஜன்னலை மூடுகிறேன். இடியின் ஓசையைத் தொடர்ந்து மின்னல் வானில் தோன்றி மறைகிறது. வெளியே ஒன்றும் தெரியவில்லை. இருட்டு பூரணமாய் எங்கும் வியாபித்திருக்கிறது. காற்றில் பரவும் மண் வாசனை நாசியைத் தாக்குகிறது. மழை தரையைத் தொடும் ஓசை பலமாகக் கேட்கிறது. நல்ல மழை.

அங்கே எப்போது மழை பெய்தது?

மழை வரும்போதெல்லாம் தங்கள் வீட்டு மொட்டை மாடிதான் நினைவுக்கு வருகிறது. நானும் நீங்களும், சந்திரன், கோபால், சரவணன் எல்லோரும் தங்கள் வீட்டு மாடியில் உள்ள அறையில் படிக்கக் கூடும் கல்லூரி வாழ்க்கையின் நினைவுகள் மறக்க முடியாதவை. விவாதங்களில் ஈடு படுவது உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தந்த நாட்கள் அவை. இரவின் அமைதியில், மங்கிய வீதி வெளிச்சத்தில் ரோட்டோரம் இருக்கும் கடைக்கு டீ சாப்பிடச் சென்றபடியே நம் விவாதங்கள் அனல் பறக்க நடக்கும். படிப்பை சாக்காகக் கொண்டு அந்த இரவின் அமைதியை, விவாதத்தை நாம் ரசித்த காலகட்டங்கள் அவை. இன்று விவாதிக்க ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நம் வாழ்க்கை அறையிலிருந்து வீடுக்கு மாறிவிட்டதுதான் நம் அனைத்தின் துயரத்திற்கும் காரணேமோ? எனக்கு அறை நண்பர்களுக்கு வீடு என்ற சி.மோகனின் கவிதைத் தொகுப்பு வாசித்தேன். என் பழைய நாட்குறிப்புகளையும், கடிதங்களையும் நினைவு படுத்துவதாக இருந்தது. அவற்றையெல்லாம் ஏதோ ஒரு மன அவசத்தில் எரித்துவிட்டேன். இன்று ஏன் அப்படிச் செய்தேன் என்று வருந்துகிறேன். முப்பது வருடங்களாக நான் வாழ்ந்ததற்கான சான்றுகள் அவை. என் கடந்துபோன நாட்களைப் போலவே அவற்றையும் திரும்பப் பெறுவது சாத்தியமில்லாது போய்விட்டது.

என் வசிப்பிடம்
வீடாக இருந்தபோதிலும்
அறை என்றே அழைக்கிறார்கள்
நண்பர்கள்

அவ்வப்போது நான் திருத்தினாலும்
அப்போதைக்கு வருத்தம் தெரிவித்து
அதன் பிறகும் அவ்வாறே
அழைக்கிறார்கள்

சுபாவமான பேச்சில்
அறை என்றே சொல்கிறேன்
நானும்
தனித்து வசிக்கும் ஆணின் இடம்
அறைதான் போலும்

கண்காணிப்புகளாலும் கட்டுப்பாடுகளாலும்
கட்டமைக்கப் பட்டது வீடெனில்
சேட்டைகளும் சோம்பலும்
சொகுசாய் குடியிருக்குமிடம் அறை.

கொஞ்சம் அலங்கோலமானது
அறையெனில்
சற்றே துலக்கமானது வீடு.

ஓர் அறையின் சுகந்தத்தை சுவாசித்தபடிய
என் வசிப்பிடத்தை
வீடாக பாவித்து
நேசத்தோடு குடியிருக்கிறேன்
நான்.

வீடுகளுக்குள் கட்டுண்டு கிடக்கும்
தங்கள் போக்கிரி ஆசைகளுக்கு வசதியாக
என் வசிப்பிடத்தை
அறை என்றே அழைக்கிறார்கள்
நண்பர்கள்.

நண்பர்களுடன் கூடித்திரிந்த அந்த நாட்கள் காணாமல் போய்விட்டன. அன்று வாழ்க்கை எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது. இன்றோ அவரவர் பிரச்சினை அவர்களுக்கு. பிரச்சினைகளின் வெம்மை தணிவிக்க வெந்து தவிக்கும் காலமிது. நாளுக்கு நாள் சிக்கல்கள் பெருகுகின்றனவே அன்றி குறைவதாகத் தெரியவில்லை.

மழை குறையாமல் பெய்கிறது. கடிகாரத்தின் டிக்டிக் ஓசை காதில் துல்லியமாகக் கேட்கிறது. இது வேறு கடிகாரம். முன்னர் இருந்த கடிகாரம் பழுதடைந்துவிட்டது. அதைச் சரிசெய்ய முடியவில்லை. சரிசெய்யதாலும் ஓடுவது நிச்சயமில்லையாம். நாமும் கடிகாரத்தைப் போலவே பழுதடைந்து கொண்டிருக்கிறோம். உடல் பருமன் கூடிக்கொண்டே போகிறது. தினமும் தவறாமல் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்கிறேன். உடல் நலத்தைப் பேணாமல் அசட்டையாக இருந்தது குறித்து இப்போது வருந்துகிறேன். மீண்டும் அந்த பழைய உடல் கிடைக்காதா என்ற ஏக்கம் மனதை வாட்டுகிறது. ஒன்றை இழந்த பின்தான் அதன் அருமையை நாம் உணர்கிறோம். நாளை நான்கு பேர் தூக்குவதற்கு இலகுவானவனாக நான் மாறியாக வேண்டும்.

பாட்டியின் உடல் நிலை மோசமாகத்தான் இருக்கிறது. மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகிறாள். தாத்தாவிற்கு பின் அவள் முற்றாக மாறிவிட்டாள். அவளின் பாதியை தாத்தா எடுத்துச்சென்றுவிட்டார். போன வாரத்தில் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கவேண்டி வந்தது. அதன் பிறகு எல்லாமே படுக்கையில்தான். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை தாத்தா, பாட்டியுடன்தான் இருந்தேன். அப்பா, அம்மாவைவிட பாட்டியும் தாத்தாவும்தான் எனக்கு நெருக்கமானவர்கள். என் வாழ்வின் பொன்னான தருணங்கள் அவர்களுடன்தான் கழிந்தன. என் மீதான பாட்டியின் பிரியங்கள் அலாதியானவை. எது செய்தாலும் எனக்கென்று தனியாக எடுத்துவைத்திருந்து கொடுப்பாள். எனக்கு உடல் நலமில்லையெனில் அவள் தாங்கமாட்டாள். இப்போதோ அவளே அவளைத் தாங்க முடியாமல் விழுந்து கிடக்கிறாள். தன் வாழ்வின் கடைசிப் பயணத்திற்காக அவளின் மூச்சு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் தன் எதிர்காலத்தின் நம்பிக்கையிலேயே வாழ்ந்தவள் அவள். வாழ்வின் கடைசியான இத்தருணத்தில் அவளிடம் எஞ்சியிருப்பது கடந்த கால நினைவுகள் மட்டுமே. ஒரு நாளும் அவள் நிகழ் காலத்தின் கணங்களை ஸ்பரிசிக்கவே இல்லை.

நாளை என்ன நடக்கும் என்ற புரியாத கவலை பயம் மனிதனை மிகவும் துன்புறுத்துகிறது. ஒவ்வொரு நாளும் நாளைய பற்றிய பயத்துடனும் நேற்றைய பற்றிய அதிருப்தியுடனேயே மனிதன் கழிக்கிறான். கையில் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் இன்றய தினமாகவே நமக்குக் கிடைக்கிறது என்பது அவனுக்கு ஏனோ புரிவதில்லை. வாழும் கணங்களைவிட எனக்குப் பின் என்ன என்ற சிந்தனையும் மனிதனை வெகுவாக அலைக்கழிக்கிறது. “நாளை நானே இல்லாத போது என்ன நடந்தால் என்ன?” என்பது அவனுக்கு ஏன் புரியவில்லை? தன்னிடம் இருப்பதைவிட இல்லாதவையே அவனுக்குப் பெரிதாய்த் தெரிகிறது. அதை மட்டும் அடைந்துவிட்டால் போதும் வேறொன்றும் தேவையில்லை என்ற அவனுக்கு தோன்றுகிறது. ஆனால் அடைந்த பின்னரோ வேறு ஒன்று அவனை அலைக்கழிக்கிறது. இப்படியே இருக்கும் காலங்களைத் தவறவிட்டு இல்லாத காலத்திற்காக அவன் ஏங்குகிறான்

கை விரல்கள் பேனாவை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தபோதிலும் மறத்துவிட்டது போல் ஒரு உணர்வு. எதை எழுதுவது எனத் தெரியாமல் நினைவுகள் தறிகெட்டு ஓடுகின்றன. அவற்றை பிடித்து நிறுத்துவதும், ஒழுங்குக்குக் கொண்டுவருவதும் சிரமமாக இருக்கிறது. வாழ்வின் சிரமங்கள் தீராதிருப்பது, வாழ்க்கையின் மீதே கசப்பை ஏற்படுத்துகிறது. வாழ்வின் கசப்பின் மீது தடவப்பட்ட இனிப்பாகவே புத்தக வாசிப்பு இருக்கிறது. அதுவே நாக்குக்கு சற்றே ருசியைச் சேர்க்கிறது. வாழ்க்கை முழுதும் போராடவே நமக்கு லபித்திருக்கிறது என்று உணரும்போது மனம் கொள்ளும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. சரவணின் மரணம் என்னை உலுக்கிவிட்டது. அவன் மரணத்தைக் கேள்விப் பட்டதும், நாமனைவரும் சென்ற கந்தா ஆஸ்ரமம் என் நினைவில் வந்தது. சலசலத்து ஓடும் ஊற்றிடையே நடந்து சென்ற அனுபவம் மறக்க முடியாதது. அப்போது நம் எல்லோரையும் விட அவனே அதிக சந்தோஷமாக இருந்தான். இப்படி ஒரு விபத்து அவனை வாரிக்கொண்டு போகும் என்று கனவிலும் கருதவில்லை. அந்த ஒரு மாத காலத்தில் என்னால் அவனை நினைக்காமலிருக்க முடியவில்லை. அதை மறக்க ஏராளமாக படித்தேன். என்ன என்ன படித்தேன் என்று நினைவில்லாமல், நான் ஒரு புத்தகமாகவே மாறிவிட்டிருந்தேன் என்று சொல்லுமளவிற்குப் படித்தேன்.

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாத்து என்பது உண்மைதான். நம் நண்பர்களின் வட்டம் மிகச்சிறியது. எல்லோருமே ஒத்த சிந்தனையுடையவர்களாக இருந்திருக்கிறோம். ஆனால் சந்திரன் பூரணமாக நம்மிடம் ஒன்றியிருக்கவில்லை. அவனிடம் ஏதோ ஒரு குறைபாடு இருந்தது. அது என்னவென்று கடைசிவரை நமக்குத் தெரியாமலே போயிற்று. தெரிந்திருந்தால் இன்றும் அவன் நம்முடன் இருந்திருப்பான். அன்றொரு நாள் சந்திரனை புத்தகக் கடை ஒன்றில் பார்தேன். ஆனால் அவன் என்னைப் பார்க்கவில்லை. நானாக அறிமுகப் படுத்துவதில் தயக்கம் இருந்தது. அவன் நம்மிடமிருந்து எப்போது எப்படி விலகிச்சென்றான் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றும் பிடிபடவில்லை. அவனின் திருமணத்திற்குப் பின் அவன் நம்மை விட்டு நீங்கிவிட்டான் என அனுமானிக்கலாம். நான் அவன் கண்ணில் படாமல் சென்றுவிட்டேன். தாங்கள் கூட அவனை ஒரு முறை எங்கோ பார்த்து ஒதுங்கிவிட்டதாகச் சொல்லியுள்ளீர்கள். அவன் ஏன் அப்படி இருக்கிறான் என்பது நமக்குப் புரியாததாகவே இருக்கிறது. மீண்டும் அவனை நம்மோடு இணைப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

கனவுகளுக்கு விளக்கம் கொடுப்பது எவ்வளவு கடினமான காரியமோ அதைவிட கடினமானது ஒவ்வொரு மனித மனத்திற்குள்ளும் செல்வது. நாம் ஒன்றை சொல்ல அவன் ஏன் வேறு ஒன்றாக எடுத்துக் கொள்கிறான் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. நான் சொல்ல வந்தது நீ நினைப்பது அல்ல என்று எவ்வளவுதான் கத்தினாலும் அது அவன் காதில் ஏற மறுக்கிறது. உறவுகளின் உன்னதங்கள் இதனால் அழிந்து வருகின்றன. எல்லா உறவுகளும் இதனால் சிக்கலாய், தத்தம் தனித்தன்மையைப் பெரிதும் பேணுவதாய் அமைந்துவிட்டது. நான் என்பதைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான் மனிதன். நான் என்பது அழியாத வரை நீ என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். நான் என்பது அழியாத வரை நாம் கடவுளையும் காண முடியாது உறவுகளில் உன்னதங்களையும் தேட முடியாது.

உறவுகளில் இணக்கம் என்பது முற்றாக இல்லை. பல்வேறு வடிவங்களில் பிரச்சினை தலை தூக்குகிறது. தம்பிகளுடனான சிக்கல்கள் நாளுக்கு நாள் வலுக்கிறது. அம்மாவும் அப்பாவும் ஒரு சார்பாக இருக்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்குத் தெரியவில்லை. நான் முன்னதாக தனியாக வெளியேறியவன் என்பதால் நான் எப்போதுமே புறக்கணிக்கப்படுகிறேன். என் பக்கத்து நியாயங்களுக்கு யாரும் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இது இப்போதுதான் என்றில்லை எப்போதுமே நடந்துவரும் ஒன்றாகவே இருக்கிறது. ஆரம்பத்தில் இது பற்றி நிறைய கவலைப்பட்டு என்னை நானே வருத்திக் கொண்டிருக்கிறேன். தூக்கம் வராத பல இரவுகளுக்கு இதுவே காரணமாக இருந்திருக்கிறது. இப்போது அதுபற்றி கவலை கொள்வதைத் தவிர்க்க முடிகிறது. அதுவரை சந்தோஷம்தான்.

உண்மையில் சந்தோஷம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அதைத் தேடத்தேடத்தான் அது நம் கையில் சிக்காமல் பறந்துகொண்டே இருக்கிறது. அது நம்மை வந்தடையும் தருணம் எது என்று அறியும் திறனில்லாதவர்களாக நாமிருக்கிறோம். அது அரிதாகவே எப்போதாவது நம் கைகளில் வருகிறது. ஆனால் அது வந்தடைந்த மறுவினாடி நம் கைகளில் மரணித்துவிடுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மரண பயம் நம்மை ஆட்டிப்படைக்கிறது. அதனிடமிருந்தும் வாழ்க்கையிடமிருந்தும் நாம் ஒடுகிறோம். சென்றடையும் திசையும் இடமும் புலப்படவில்லை.

பின்னங்கால் பிடரியில் படும் படியான அசுர ஓட்டம். எப்போது இந்த ஓட்டம் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. நினைவுக்குக் கொண்டுவருவது சிரமமாக இருக்கிறது. எப்படியோ ஏதோ ஒரு கணத்தில் ஆரம்பித்துவிட்டது. இனி நிறுத்த முடியாது. ஓடியே ஆகவேண்டும். பின்னால் கண்ணுக்குத் தெரியாத ஒன்று துரத்துகிறது என்று அறிய முடிந்தது. ஆனால் திரும்பிப் பார்க்க அச்சம். அப்படியும் திரும்பிப் பார்த்து ஆகப்போவதென்ன? மூச்சிரைக்க தாகம் வாட்ட ஓட்டம். பாதையின் இருபுரமும் சீராக எழுப்பப்பட்ட சுவர்கள். நேரான பாதையில் ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை. இந்தப் பாதையைத் தேர்ந்தது யார்? நானா? எனக்கு நினைவில்லை. நினைவில்லாமல் பாதையைத் தேர்ந்தது எவ்வளவு பெரிய மடத்தனம்? யோசிக்கவோ சிந்திக்கவோ இனி நேரமேது? நிற்காமல் ஓடுவது ஒன்றே நான் செய்யக்கூடியது.

செய்யவேண்டிய காரியங்களைப் பற்றி சிந்திக்கும்போது மனம் தடுமாறகிறது. எவ்வளவோ ஆசைகளும், ஏக்கங்களும் மனம் முழுதும் ததும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த நம்பிக்கையைக் கொண்டு எதைச்செய்ய? எல்லா நம்பிக்கைகளும் மொத்தமாகப் பொய்த்து அவநம்பிக்கை மேலிடுகிறது. வாழும் கணங்களின் பாரம் பிறப்பின் மீதே வெறுப்பை ஏற்படுத்துகிறது. இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பது புரியும்போது சற்று ஆயாசமாகவே இருக்கிறது. நம்மை நாம் விரும்பிய விசயங்களில் ஈடுபடுத்திக்கொள்ள நமக்குக் கிடைக்கும் நேரம் சொற்பமானதாகவே இருக்கிறது. வாழும் தருணங்களை விட நாம் பிழைக்கும் கணங்களே நம் நேரத்தை அதிகமும் எடுத்துக்கொள்கிறது. இதுவே எல்லா மனிதர்களுக்குமான பொதுவிதியாக இருக்கிறது. அதிலிருந்து விலக்கு பெற்றவர்கள் பாக்கியவான்கள். அடுத்த பிறவியாகினும் பிழைக்கும் நேரங்களே வாழும் காலங்களாகவும் இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

வாழக்கையில் ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய செயல்களின் பட்டியலோடு நாம் திரிந்துகொண்டிருக்கிறோம். வாழ வேண்டிய தருணங்கள் ஏனோ நம் நினைவுக்கு வருவதே இல்லை. அவை விடுமுறை நாட்களில் மட்டுமே என்றாகிவிட்டது. அப்போதும் கூட செய்யவேண்டிய வேலைகளின் பட்டியல் நம்மைத் தொடர்வதை நாம் தடுக்க சக்தி இல்லாதவர்களாகவே இருக்கிறோம். நம் வாழ்க்கையில் அனைத்துமே செய்வது என்று ஆகிவிட்டது.

வாழ்வதற்கான பயிற்சியை யாருமே கற்றுக் கொடுப்பதில்லை. மாறாக வாழ்கையோடு போராடுவதற்கான பயிற்சியையே அனைவரும் கற்றுத்தருகிறார்கள். உண்மையில் வாழ்வதற்கு பயிற்சி ஏதும் தேவையில்லை. போராடுவதற்கே தேவைப்படுகிறது. வாழ்க்கையின் ஆகப்பெரிய நோக்கம் வாழ்வது மட்டுமே. அதில் லட்சியங்களோ குறிக்கோள்களோ எதுவும் தேவையில்லை. அவைகள் நம் வாழ்க்கையை சிக்கலாக்க நாம் வைத்துக்கொண்ட வேறு பெயர்கள் அன்றி வேறொன்றுமில்லை. சொல்லப்போனால் லட்சியங்களும் குறிக்கோள்களும் எதை மையமாக வைத்து இயங்குகின்றன எனில், பணம் ஒன்றை மட்டுமே அவை முக்கியமானதாகக் கருதுகின்றன. லட்சியம் அல்லது குறிக்கோள் பணமாக இல்லாதபோது, அவைகள் லட்சியங்கள் அல்ல என்றே நம் சமூகம் நமக்குக் கற்றுத்தருகிறது. கடவுள் கூட காசு இல்லாமல் நமக்குக் காட்சி தருவதில்லை. மனிதனின் நாகரிக வளர்ச்சியின் உச்சபட்ச வியபாரம் கடவள்தான். எதையுமே வியபாரமாக பார்க்கும் நம் மனோபாவம் கடவுளையும் விட்டுவைக்கவில்லை என்பதை நினைக்கும்போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. மனிதன் தன் துன்பங்களுக்கு ஓடும் இடம் இரண்டே இரண்டுதான். ஒன்று மருத்துவமனை மற்றொன்று கோவில். ஆனால் இரண்டுமே இன்று மிகப்பெரிய வியபார ஸ்தலங்கள் ஆகிவிட்டன. இதைவிட மனிதனுக்கு வேறு கொடுமை இருக்கமுடியாது.

படிக்கப் படிக்க எழுதவேண்டும் என்ற ஆவல் எழுகிறது. முயற்சி வேண்டும் நமக்கு. முதல் வாசிப்பைவிடவும் இரண்டாவது வாசிப்பிலேயே நாம் புத்தகத்தை நோக்கி நகர முடியும். ஆனால் நம் வாசிப்பு (ஒரு சில தவிர) எல்லாமே ஒரு முறை மட்டுமே நிகழந்திருக்கிறது. அதிலும் சில வாங்கியதோடு சரி. ஏன் இவ்வாறு நிகழவேண்டும்? இது சரிசெய்ய வேண்டிய அவசியமான ஒன்று என நினைக்கிறேன். ஆயத்தங்களிலேயே கழியும் நம் வாழ்வு ஆயாசம் தருவதாகவே உள்ளது. உற்சாகம் என்பது முற்றாக மறந்துவிட்டது. உற்சாகம் என்பது உள்ளே இல்லாமல் பிறரிடம் போடும் வேஷம் என்றாகிவிட்டது. ஒவ்வொரு மனிதனும் உள்ளே உற்சாகமின்றியே நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறான். தன் இயல்பை முற்றாக மறைத்து வெளி வேஷம் போடுவதில் மனிதனை யாரும் மிஞ்ச முடியாது. ஆனால் தன் இயல்பே உற்சாகமாக இருப்பதுதான் என்பது ஏனோ அவனுக்கு உறைப்பதில்லை.

ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஆளுமையைப் பார்க்கும்போது வியப்பே ஏற்படுகிறது. எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்கள். அவர்களை எழுதத் தூண்டியது எது? ஏன் அவர்கள் எழுதினார்கள்? யாருக்காக எழுதினார்கள்? சொல்லப்போனால் அவர்கள் அவர்களுக்காகவே எழுதினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். வெறும் காசும் புகழும்தான் அவர்களை எழுத வைத்தது என்று சொல்வது சரியாக இருக்காது. அதையும் தாண்டி எதுவோ அவர்களை எழுத வைத்தது. மனிதன் வெறும் ரொட்டியினால் மட்டும் வாழ முடியாது என்று சொல்வது சரிதான்.

மழை குறைந்துகொண்டு வருகிறது. நேரம் ஒரு மணி. கடிகார ஓசை இப்போது காதில் கேட்கவில்லை. மாறாக அமைதியைக் கிழித்துக்கொண்டு எங்கோ தொலைதூரத்தில் நாய் ஒன்று ஊளையிடும் ஓசை. தற்போது சி.மோகன் மொழிபெயர்த்த ஓநாய் குலச்சின்னம் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னை நான் மறக்கவும் கற்றுக்கொள்ளவும் புத்தக வாசிப்பு அவசியம் என நினைக்கிறேன்.

மனிதனை பாதிப்பதில் திரைப்படங்கள் முக்கியமான சாதனம் என்று பெர்க்மென் சொல்கிறார். எனக்கோ புத்தகங்களே திரைப்படங்களைவிட பெரிதும் மனிதனை பாதிப்பவை என்று கருதுகிறேன். திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காட்சியை மட்டுமே முன்னிறுத்துகிறது. புத்தகங்களோ மனிதனின் எல்லையற்ற மனவெளியில் அவனை சஞ்சாரம் செய்ய வைக்கிறது. வாசிப்பினூடாக அவன் பெரும் பரவசத்தை வேறு எந்த சாதனமும் அவனுக்குத் தர முடியாது என்று நிச்சயமாக சொல்லலாம். யாருமற்ற ஒரு தீவில் புத்தகங்களுடன் சில நாட்களை கழிப்பதாக கற்பனை செயது பாருங்கள்! எவ்வளவு சுகமாக இருக்கிறது! பசிக்கும் போது சாப்பிட்டு தூக்கம் வரும்போது தூங்கி எழுந்தால் எவ்வளவு சுகமான அனுபவமாக இருக்கும். நம்மைச் சுற்றி கடல் மரங்கள் மணல்வெளி புத்ககங்கள் எழுத ஒரு டைரி. கடவுளே என்ன அற்புதத்திலும் அற்புதம் அது! வாழ்க்கையின் அர்த்தம் அப்போதே புரிபடும்.

தங்கள் வியாபாரம் எப்படி போகிறது? நம் வருமானத்தின் போதாமை அல்லது ஆசைகளின் பெருக்கம் இன்றைய சமூகத்தின் சிக்கலாக மாறிவருகிறது. இதனால் தவறுகள் எங்கேயும் பரந்து பரவி வருகிறது. இதற்கு விதிவிலக்காக யாருமே இருக்க முடியாது. நானும் நீங்களும் உட்பட.

குழந்தைகளின் பள்ளி விடுமுறையில் கட்டாயம் ஊருக்கு வரவேண்டும். நான் வருவது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. முடிந்தால் முன்னிட்டுச் சொல்கிறேன். நம்மை நாம் ஆசுவாசப் படுத்திக்கொள்ள நம் சந்திப்பு உதவும்.

மற்றவை நேரில்,

உங்கள் நண்பன்.
Related Posts Plugin for WordPress, Blogger...