நானும் ஒருவன் –சுரேஷ்குமார இந்திரஜித்

பல்வேறு இதழ்களில் வெளியான 12 கதைகளின் தொகுப்பு சுரேஷ்குமார இந்திரஜித்தின் நானும் ஒருவன். நவீன கதைசொல்லிகளில் முக்கியமானவராக அறியப்படும் இந்திரஜித்தின் கதை உலகம் வித்தியாசமானது. நம் வாழ்வில் நிகழந்த, நாம் உணர்ந்த பல சம்பவங்களின் கலவையாக அவர் கதைகள் உள்ளன. ஆனால் நாம் அவற்றில் கவனிக்கத் தவறிய ஏதோ ஒரு சரடு அவர் கதைகளி்ல் தனித்துவமாக வெளிப்படுகிறது. அதனாலாயே அவர் கையாளும் கருப்பொருள்கள் வித்தியாசமானவையாக நமக்குக் காட்சியளிக்கிறது.

அவர் கதை சொல்லும் பாணி எளிமையானது. கதைகள் சரளமாக படிக்கும்படியாக உள்ளது இத்தொகுப்பின் பலம். படிக்கச் சிரமம் தராதவை என்பதாலேயே அவற்றை மேலோட்டமானவை என்று புறக்கணித்துவிட முடியாது. வாழ்க்கையின் புறத்தை விவரிப்பதன் மூலமாக நம் அகத்தை விழிக்கச் செய்வனவாக இக்கதைகள் உள்ளன.

இத்தொகுப்பில் உள்ள கதைகளை ஒருசேரப் படிக்ககும்போது, “பிம்பங்களின் சிதைவு” என்பதான படிமத்தையே இத்தொகுப்பு வெளிக்காட்டுகிறது. ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் தனக்கான ஒரு பிம்பத்தைப் பேணி பாதுகாத்து வருகிறான். அது சமூகத்தை எதிர்கொள்ள அவன் அணியும் முகமூடி. ஆனால் அவன் சமூகத்தைவிட்டுத் தனியனாகும் போது அவன் தன் முகமூடியைக் கழற்றிவிடுகிறான். எனவே அவனது பிம்பம் சிதைந்து போகிறது. அந்த சிதைந்துபோன பிம்பத்தைக் காட்டுவதாகவே இத்தொகுப்பின் கதைகள் உள்ளன.

“இத்தொகுப்பிலுள்ள கதைகள் மனத்தின் ரகசியங்களையும் வாழ்வின் ரகசியங்களையும் கூறிக்கொண்டிருக்கின்றன”என்று அவரே முன்னுரையில் குறிப்பிடுவது பொருத்தமானதாக தோன்றுகிறது.

காலச்சுவடு முதல் பதிப்பாக டிசம்பர் 2012 வெளியான, 128 பக்கங்கள்கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 100.

Related Posts Plugin for WordPress, Blogger...