ஜெயமோகனுடன் சில நிமிடங்கள்

நேற்று மீண்டும் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.

ஜெயமோகன் இலக்கியமும் வரலாற்றுணர்வும் என்ற தலைப்பில் பேசினார். காலங்காலமாக மேடைப் பேச்சாளர்கள் கலைக் கூத்தாடிகள் போலவே மேடையைப் பயன்படுத்தி மக்களை மகிழ்வித்துவருகிறார்கள் ஆனால் நான் அதற்காக வரவில்லை. எனவே தயவு செய்து யாரும் கை தட்டாதீர்கள். நான் இதுவரை இவ்வளவு பெரிய மேடையில் பேசியதில்லை.  என் உரை பெரும்பாலும் என் வாசகரிடத்தே நிகழ்த்தப்பட்டவை. இங்கே எத்தனை பேர் என் வாசகர்கள் என்பது தெரியவில்லை என்று சொல்லி பேச்சை ஆரம்பித்தார்.

வரலாறு ஒன்று புறவயமானது மற்றொன்று அகவயமானது. அகவயமான வரலாறு நம் ஆழ் மனதில் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக  தொடர்ந்து வருகிறது. அதன் நீட்சிதான் நான். என் முன்னோர்களின் தொடர்ச்சி நான். வெளிப்புறமான வரலாற்றின் துணையோடு நான் அகத்தே இருக்கும் வரலாற்றின் ஆயுளை அறியமுடிகிறது. நான் அந்த வரலாற்றின் நீட்சி என்பதைத்தான் என் படைப்புகள் சொல்கின்றன. என் அனைத்துப் படைப்புகளிலும் உட்கிடையாக விளங்கும் அம்சம் அதுவே என்று பேசினார்.

முன்னரே ஏற்பாடு செய்தது போல் டாக்டர் ருத்ரன் வரவில்லை. அதற்கு பதிலாக வேறோருவர் பேசினார். ஏற்கனவே நிகழ்ச்சி நிரலில் இல்லாத, மாணவர்களின் நடனம், பேச்சு என்று இரண்டு மணி நேரத்தை போக்கிவிட்டார்கள். போதாக்குறைக்கு மழைத் தூரல் வேறு. எனவே ஜெயமோகன் தான் பேசவந்ததை முழுமையாகப் பேசினாரா என்பது தெரியவில்லை.

அவரது வெண்கடல் சிறுகதைத் தொகுதியை வாங்கினேன். அவரிடத்தில் கையெழுத்தும் வாங்கினேன். அவருக்கும் எனக்குமிடையே நடந்த உரையாடல்:

”பெயர் என்ன?” என்று கேட்டார்.

”கேசவமணி” என்றேன்.

”எந்த கேசவமணி? இணையத்தில் எழுதுகிறாரே அவரா?”

என்னை அவர் அறிந்திருப்பார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

”எந்த ஊர்?”

”சொந்த ஊர் அந்தியூர். வேலைசெய்வது திருப்பூரில்”

”நானும் அந்தியூர்காரன் ஆகிவிட்டேன்” என்றவரைப் புரியாமல் பார்த்தேன்.

”அங்கே இடம் வாங்கியிருக்கிறேன்” என்றார்.

”தங்களுக்கு மின்னஞ்சலில் சிறுகதை ஒன்று அனுப்பியிருக்கிறேன்” என்றேன்.

”எப்போது?“

”முந்தா நாள்”

”நான் இன்னும் மின்னஞ்சலைப் பார்க்கவில்லை”

மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கி நின்றேன்.

அதற்குள் கூட்டம் அவரை சூழ ஆரம்பித்தது. நான் அங்கிருந்து கிளம்பி புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன். வாங்கிய புத்தகங்கள்:

  1. வாழ்வின் சில உன்னதங்கள்-விட்டல் ராவ்-நர்மதா

  2. சம்ஸ்காரா-யு.ஆர்.அனந்தமூர்த்தி-அடையாளம்

  3. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்-தமிழவன்-அடையாளம்

  4. கொரில்லா-ஷோபாசக்தி-அடையாளம்

  5. பிரமிள் கவிதைகள்-லயம்

சில எழுத்தாளர்களை நாம் நேரில் சந்தித்ததும் நம் மனதில் உள்ள அவர்களின் பிம்பம் சிதைந்துவிடும் ஆனால் ஜெயமோகனின் பிம்பத்தின் சிதைவு நேரவில்லை என்பது எனக்கு ஆசுவாசமாக இருந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...