கவிதை வாசிப்பு: சில புரிவும் புரியாமையும்

கவிதையை வாசிப்பு என்பது எப்போதும் சோர்வுதரும் காரியமாகவே இருந்துவருகிறது. அதன் புரிபடாத் தன்மையே கவிதையிலிருந்து நம்மை அந்நியமாக்குகிறது. கவிதையுடன் உறவு கொள்வது என்பது எப்போதும் இறுதியில் பிணக்கிலேயே முடிந்துவிடுகிறது. சில கவிதைகள் முதல் வாசிப்பிலேயே புரிந்துவிடும். ஆனால் கவிஞன் சொன்ன அதே பொருளில்தான் நாம் புரிந்துகொண்டோமா என்பதைச் சொல்வது கடினம். சில கவிதைகள் படிக்கப் படிக்கப் புரிவது போல் இருக்கும். ஆனால் படித்து முடித்ததும் அது நம்மைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிடும். சில கவிதைகள் என்னதான் இழு இழு என்று இழுத்தாலும் நம்மிடம் வரவே வராது. இப்படியாக கவிதை வாசிப்பின் அனுபவங்கள் என்னைப் போல் பலருக்கும் இருக்கும்.

கவிதையை முன்பின் நாம் அறியாத ஒரு குழந்தைக்கு ஒப்பிடுகிறார் சுந்தர ராமசாமி. முன்பின் நாம் அறியாத குழந்தை எடுத்தவுடன் நம்மிடம் வருமா என்ன? அதனுடன் சற்று நேரமாவது பழகவேண்டும். தாஜா செய்யவேண்டும். அப்போதே குழந்தை நம்மிடம் வரும். கவிதையும் அதுபோலத்தான் முதல் வாசிப்பிலேயே தன்னை அடையாளம் காட்டும் என்று சொல்லமுடியாது. அதனுடன் நாம் பழகவேண்டும். பழகப் பழகத்தான் கவிதை நம்மிடம் வரும் என்கிறார் அவர். அவர் சொல்வது என்னமோ உண்மையென்றாலும் வராத குழந்தையை என்னதான் செய்ய?

இருப்பினும் கவிதையை வாசிப்பது என்பது எப்போதும் வசீகரம் கொண்டதாகவே இருந்துவருகிறது. அதன் வசீகரத்திற்குக் காரணம் கவிதையின் பறக்கவைக்கும் குணம்தான். கவிதை எப்போதும் நம்மிடம் எழச்செய்யும் உணர்வு பறத்தல்தான். நம்மைச் சட்டென எம்பி வானத்தில் பறக்கச்செய்ய கவிதையால் மட்டுமே முடியும். உரைநடையில் பக்கம்பக்கமாக செய்யும் காரியத்தை ஒரு சில வரிகளில் கவிதை செய்துவிடுகிறது.

கவிதையின் அழகில், வார்த்தைகளின் லாவகத்தில் நம் மனம் லயித்து மயங்கிவிடுகிறது. அடுத்த வினாடி நம் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துவிடுகிறது. உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தர கவிதையால் மட்டுமே முடியும். பாரதியின் கவிதைகள் இன்றும் நமக்கு உத்வேகத்தைத் தருகின்றன என்பதை நாம் அறிவோம். உணர்வுகளை நுட்பமாகவும் அழகுணர்ச்சியோடும் வெளிப்படுத்த கவிதையைப் போல் ஏற்ற வடிவம் ஏதுமில்லை.

பிரமிள் அவர்களின் பிரசித்த பெற்ற காவியம் கவிதை எல்லோருக்கும் தெரியும்.

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

இக்கவிதையின் நீண்ட வடிவம் கல்யாண்ஜியின் இறகாகும் நான் கவிதை எனலாம். ஆனால் பிரமிளின் கவிதையோடு ஒப்பிடுகையில் இறகாகும் நானில் இருக்கும் அழகுணர்ச்சியும், தாக்கமும் குறைவானதுதான்.

பூமித் தோலில்
அழகுத் தேமல்

பரிதி புணர்ந்து
படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ

வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி.

பிரமிளின் விடிவு என்ற இக்கவிதையின் ஓசை நயம் நம்மை வெகுவாக்க் கவர்கிறது. பிரமிளின் எளிமையான கவிதைகளான இவை நம் மனதில் உற்சாகத்தையும் அழகுணர்ச்சியையும் சேர்க்கிறது. இவைகள் நமக்கு எளிதாகப் புரிவதால்தான் அவற்றின் அழகும் தாக்கமும் தெரிகிறது.

பின்வரும் ஆத்மாநாமின் விடுதலை என்ற கவிதையைப் பாருங்கள்:

கண்ணாடிச் சிறைக்குள்
கண்ணாடிச் சிறை
அக்கண்ணாடிச் சிறைக்குள்
நான்

அக்கண்ணாடிச் சிறையைத்
திறந்து
வெளி வர முயல்கிறேன்

திறக்கும் வழியே இல்லை

எரிச்சலுற்று
உடைத்து வர
நினைக்கிறேன்
உள் மனப் போருக்குப் பின்
முயற்சியை விடுத்து
சும்மா இருக்க முடிவெடுக்கிறேன்

கண்மூடித் திறக்குமுன்
கண்ணாடிச் சிறையைக் காணோம்
எங்கும் முன்பிருந்த அதே ஒளி.

படிக்கும் போது எளிமையாக கவிதைப் புரிந்துகொண்டே வருகிறது. ஆனால் கடைசி வரியைப் படித்ததும் மனம் குழம்பிவிடுகிறது. கவிதையின் தலைப்போ விடுதலை. இரண்டையும் பொருத்திப் பார்க்கும் போது ஏதோ ஒன்று புரிவதுபோலத்தான் இருக்கிறது. ஆனால் நான் புரிந்துகொண்ட அதே பொருளில்தான் கவிதை எழுதப்பட்டது என்று சொல்லமுடியுமா?

ஆத்மநாமின் நிஜம் என்ற கவிதை இது:

நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமே நிஜமோ நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்.

நிஜமாக எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு?

கா.சு.நாகராஜனின் இந்தக் கவிதை நீர் குடித்த பின்பும் புரியவில்லை.

நீரறியா மானிடர்கள்
கரைப்பார் கரைத்தால் உப்பும் கரையும்
என்றியம்ப,
நீர் கண்ட மானுடனோ,
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
என்கிறான்
நீர்த்துவிட்ட எண்ணங்கள்தமை
நீரில் கரைத்து நீரறிவீர்-நீரறியா
மானிடரும், நீர் கண்ட மானுடனும்
நீரேயன்றி வேறில்லை.

இப்படி, படித்ததில் புரியாக் கவிதைகள் அநேகம். அவற்றுடன் நமக்கு இல்லை சிநேகம். நாம் புரிந்த கவிதைகளைவிட நம்மைப் புரிந்த கவிதைகள் கொஞ்சம். அவற்றுடன் மட்டுமே நாம் அடைவோம் தஞ்சம்.

கல்யாண்ஜியின் வலி பற்றிய கவிதை:

இப்படியா அப்படியா
எப்படி இருந்த்து என
நாலைந்து சொற்களை
அவரே தந்து
வலியினைச் சொல்லுடன்
பொருத்தச் சொன்னார்
உச்ச மகிழ்வுக்கும்
உச்ச வலிக்கும்
அனுபவிப்பவனிடம்
அடைமொழி இல்லை.
எம் வலி ஆகாது
உம் வலி.

இதில் வரும் வலிக்கு பதில் கவிதை என்பதைப் பொருத்திப் பார்த்தால் அதுவே கவிதை பற்றிய புரிதல் என்று தெரியவரும்.

கவிதை என்பது சிதறிக்கிடக்கும் முத்துக்கள். நாம்தான் கோர்த்து மாலையாக்க வேணடும். நாம் உள்வாங்கும் தன்மைக்கேற்பவே கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. கவிதையின் ஈர்ப்பு அதன் புதிர்த்தன்மைதான். நாம்தான் புதிரை விடுத்துக் கண்டடைய வேண்டும். கவிதையுடன் நம் உறவு சுமுகமாக இருக்க கவிதையை நேசத்துடன் அனுகவேண்டும். அதனுடன் நாம் கொள்ளும் விரோத பாவம் நம்மை அதனிடமிருந்து விலக்கிவிடும். கவிதை தரும் வாசிப்பனுபவம் அந்தரங்கமானது. அதன் புரிந்துகொள்ளும் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. கவிதையை வாசித்துவிட்டு நாம் காத்திருக்கவேணடும். நமக்குக் காத்திருக்கத் தெரியுமென்றால் முடியுமென்றால் கவிதைப் பூ மலர்ந்து மணம் வீசத் தயாராய் இருக்கிறது.

நான் வாங்கிய கவிதைப் புத்தகங்கள் பல படிக்கப்படாமல் புத்தக அலமாரியில் தூங்குகிறது. அவ்வப்போது அவற்றை எடுத்துப் புரட்டுவது உண்டு. அப்படிப் புரட்டும்போது கண்ணில் படும் சில கவிதைகள் மனவெழுச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். அப்படியாக தற்போது கவிதையை புரட்டியதால் என் மனம் புரண்டதின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.

Related Posts Plugin for WordPress, Blogger...