August 14, 2013

ஜெயமோகனின் வெண்கடல்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

சென்ற ஞாயிறு ஜெயமோகன் அவர்களின் வெண்கடல் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். கலை, காதல், மருத்துவம், ஆன்மீகம் ஆகிய பலவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ள இக்கதைகளின் ஊடாக புகுந்து வெளியேறும்போது நம் மனம் கொள்ளும் உணர்வுகள் அலாதியானவை. இக்கதைகள் நமக்குள் ஏற்படுத்தும் மனவெழுச்சிகள் இலக்கியம் என்ற கலையின் வீச்சை நாம் அறியச் செய்வதாக  இருக்கின்றன. தற்போது வெளியாகும் பல சிறுகதைகள் இத்தகைய பங்கை ஆற்றுகின்றனவா என்பது சந்தேகத்திற்குரியது.

மனதை லகுவாக்கி தரையிலிருந்து எழும்பி நம்மை வானில் பறக்க வைக்கும் பரவசக் கதைகள், மனதை பாரத்தால் அழுத்தி நம்மை பூமியில் புதையச் செய்து மனதில் துக்கம் கசியச் செய்யும் கதைகள், நம்மை தரையில் இயல்பாய் நிற்க வைத்து ஆசுவாசம் கொள்ளச்செய்யும் கதைகள் என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைகளாக இத்தொகுப்யு அமைந்திருக்கிறது. இக்கதைகள் வழியாக நாம் கண்டடையும் அனுபவங்கள் வாசிப்பின் அற்புதத் தருணங்களாகும். சுருங்கச் சொன்னால் இக்கதைகள் நம்மை நிற்கவும் நடக்கவும் பறக்கவும் செய்ய வல்லதாய் அமைந்திருக்கின்றன.

நுட்பமாகக் கவனித்தால் பிழை என்ற அம்சம் மெல்லிய சரடாக எல்லா கதைகளையும் இணைக்கிறது. ஒன்று பிழையை சரிசெய்ய முயற்சி நடக்கிறது அல்லது அந்த பிழையே சாசுவதமானதாக கொண்டாடத்தக்கதாக அமைந்துவிடுகிறது.

பிழை என்ற கதையில் தவறாக எடுக்கப்பட்ட ஒரு படக் காட்சியைப் பார்த்துப் பார்த்துப் பழகியதால், அது சரிசெய்யப்பட்ட போது அது மனதில் ஏற்படுத்தும் ஒவ்வாமையைச் சொல்கிறது. காலங்காலமாக நம்முள் ஊறிக்கிடக்கும் பல விசயங்களில் தற்போது ஏற்படும் மாறுதல்களை நம் மனம் இப்படியாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறது.

கைதிகள் என்ற கதையில் கைதி ஒருவன்தான் ஆனால் கதையோ பன்மையில் அமைந்து எல்லோரும் கைதிகளே என்ற சித்தரிப்பைத் தருகிறது. அரசாங்கம் என்ற அமைப்பின் அங்கத்தினர் அனைவருமே ஒருவிதத்தில் கைதிகள்தாம் என்று சொல்கிறது இந்தக் கதை.

அம்மையப்பம் என்ற கதை நம்மை மனவெழுச்சிக்கு உள்ளாக்கும் கதை. கிறுக்கன் ஆசாரி என்ற பாத்திரத்தின் சித்தரிப்பு நம்மை வெகுவாகக் கவர்கிறது. கலைஞன் என்பவன் நாம் நினைப்பது போல் சில்லறை விசயங்களைச் செய்பவனல்ல. ஆனால் தரையின் மீதான அவன் வாழ்க்கை அவனை அத்தகைய விசயங்களைச் செய்யவைக்கிறது. அப்படிச் செய்யும்போது அவற்றின் முடிவுகள் கோணலாக அமைந்துவிடுகிறது. அவன் செய்யும் மேலான கலையின் மீது நாம் அக்கறை கொள்வதில்லை.

கிடா, தீபம் இரண்டும் காதலைச் சொல்லும் கதைகள். கிடா கதையின் தொடர்ச்சிதான் தீபம். தீபத்தை கிடாவோடு இணைத்திருக்காலமோ என்று தோன்றுகிறது. காதலைச் சொல்லும் போது அது இன்றும் இனிமையாகத்தான் இருக்கிறது என்று ஜெயமோகன் முன்னுரையில் சொல்வதை இக்கதைகளை வாசிக்கும்போது நாம் அறிய முடிகிறது.

வெறும்முள் கனவின் சாயலில் எழுதப்பட்ட வசீகரம் கொண்ட கதை. நாம் அறியாத ஒரு கற்பனையின் மனவெளியில் நம்மை சஞ்சரிக்கவைக்கும் கதை. நம்மை எங்கோ ஒரு கண்காணாத தேசத்தில் நாடோடியாய் அலைய வைக்கும் கதை. மதுவும் போதையும் நம் மனம் முழுதும் நிரம்பி வழிகிறது. அவற்றினூடாக நம்மை ஆன்மீகத்தை கண்டடையச் செய்யும் கதை.

குருதியும் நிலமும் நிலத்தின் மீது மனிதன் கொண்டிருக்கும் பந்தத்தையும், அதன் பால் அவன் வைத்திருக்கும் உள்ளார்ந்த உறவையும் சொல்லும் கதைகள். குருதி வெறும் பழிவாங்கும் கதையாகத்தான் இருக்கிறது. ஆனால் நிலமோ அத்தைகைய தோற்றத்தை நமக்குத் தரவில்லை. குழந்தை இல்லாமல்தான் அவன் நிலத்தின் மீது பற்று கொண்டவனாக இருக்கிறான் என்பதை அறிவதன் மூலம் நம் மனம் ஒன்றின் எதிர்த்திசையில் நோக்கி நகரும் உளவியல் தன்மையை இக் கதை காட்டுகிறது.

நீரும் நெருப்பும், வெண்கடல் ஆகியன மருத்துவத்தைப் பின்புலமாகக் கொண்ட கதைகள். இவை நம்மைக் கவர்ந்த கதைகள் என்பதைவிட கதையின் வாயிலாக நாம் புதுமையான ஒரு விசயத்தை அறிந்துகொண்டோம் எனும் உணர்வை நமக்குத் தரும் கதைகள்.

விருது என்ற கதையின் சித்தரிப்பு நம்மை வெகுவாகக் கவர்கிறது. விருது என்பது எப்போதுமே தவறான ஒன்றுக்கு தரப்படுவதாகவே இருக்கிறது என்பதை இக்கதை சொல்கிறது. அப்பா என்ற நடிகனின் கதையை அவரது மகன் வாயிலாகச் சொல்வதாக கதை அமைந்திருப்பது இக்கதையின் சிறப்பான அம்சமாகக் கருதலாம். அதன் மூலம் இக்கதை கொள்ளும் வீச்சு அபரிமிதமானது.

மொத்தத்தில் இக்கதைகள் நமக்கு மன நிறைவையும், பல்வேறு உணர்வுகளையும் தருவதாக இருக்கின்றன. கதைகளின் பலசுவைத்தன்மை இத்தொகுப்பை வசீகரமும் வாசிக்கத் தக்கதாகவும் ஆக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் உணர்வது இக்கதைகள் முடியும் இடத்தில் நம் மனதின் பயணம் தொடங்கிவிடுகிறது என்பதுதான்.

Related Posts Plugin for WordPress, Blogger...