ஜெயமோகனின் மூன்று நூல்கள்


நற்றிணை வெளியிட்ட ஜெயமோகனின் இந்த மூன்று நூல்கள் குறித்து சில:

இவர்கள் இருந்தார்கள் (விலை ரூ.630/-)
'இவர்கள் இருந்தார்கள்' கட்டுரைகளில் இடம்பெற்ற மனிதர்கள் அனைவரையும் நான் நேரில் அறிவேன். எளிமையாக அறிமுகம் கொண்ட பலர். நெருக்கமான சிலர். இவர்கள் அனைவருமே ஏதோ வகையில் இலட்சியவாதத்தின் சில அம்சங்களாவது கொண்டவர்கள். அந்த இலட்சியவாதம் வழியாக வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டவர்கள். இவர்களுக்குக் கலையும் இலக்கியமும் சேவையும் அதற்கான வடிவங்களாக இருந்தன. இவர்களின் நினைவை நிறுத்திக்கொள்ள வேண்டியது எந்த ஒரு சமூகத்திறகும் அவசியமானது. இந்நூல் அதற்கான ஒரு ஆவணம்.

சொல்முகம் (விலை ரூ.170/-)
என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாகக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அந்தக் குறிப்புகளை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன். ஆனால் நான் ஒருபோதும் குறிப்புகளைப் பார்த்து வாசித்ததில்லை. எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப் போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்கு தொடக்கம், முடிவு, உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத் திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது. இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம்.

நாளும் பொழுதும் (விலை ரூ.120/-)
‘நாளும் பொழுதும்’ நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே வாழ்விலே ஒருமுறை, நிகழ்தல் போன்ற தொகுதிகளில் என் இத்தகைய எழுத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வாசகர்களுக்கு மிக நெருக்கமானவையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் இவை உண்மையான அனுபவங்கள் என்ற பிரக்ஞை இவற்றுக்கு வாசகரின் நம்பகத்தை உருவாக்கித் தருகிறது. அந்த உண்மையனுபவத்தில் இருந்து எழும் ஓர் உணர்ச்சி அல்லது தரிசனம் வாசகன் எளிதில் தொட்டறியக் கூடியதாக உள்ளது. சிறந்த புனைவுத் தருணங்கள் அளவுக்கு இந்த அனுபவத் தருணங்களும் கலைத்தன்மையை அடைவது இப்படித்தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...