June 7, 2013

எட்டுத் திக்கும் மதயானை –நாஞ்சில் நாடன்

கடைசி வரியைப் படித்து, ஒரு புத்தகத்தைப் முடித்ததும் நம்முள் ஏற்படும் உணர்வுகள் முக்கியமானவை. நமக்குள் எழும் உணர்வுகளை ஒட்டியே அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் உணர முடியும். ஒரு படைப்பு நமக்குள் எத்தகைய எதிர்வினை ஆற்றியிருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே அந்த படைப்பின் முக்கியத்துவத்தையும், வீச்சையும் நாம் அறிய முடியும். ஒரு படைப்பு படிக்க எளிமையானதாக இருக்கலாம் இல்லை கடினமாக இருக்கலாம். அதைப்பொருத்து அப்படைப்பின் தரத்தை நாம் தீர்மானிக்க முடியாது. எளிமையான படைப்புகள் வெற்றியடைவதும், கடினமாக எழுதிய படைப்புகள் சோடை போவதும் இலக்கியத்தின் நிதர்சனமான உண்மை.

இந்தப் பின்னனியில் நாஞ்சில் நாடன் அவர்களின் எட்டுத் திக்கும் மதயானை எத்தகைய பங்கை ஆற்றியிருக்கிறது என்பது பற்றி சிலவற்றை நாம் பார்க்கலாம். நாவலைப் படித்து முடித்ததும் பிரமிப்பு, பாதிப்பு எதையும் இப்படைப்பு ஏற்படுத்தவில்லை. நாவல் நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் சொற்பமானதே. இந்நாவலைப் படிக்கவேண்டும் என்ற நெடுநாள் ஆசை, படித்து முடித்ததும் நிராசையாகிவிட்டது.

எளிமையான நடையில் சரளமாகச் கதையைச் சொல்கிறார் நாஞ்சில் நாடன். தன்னோடு கல்லூரியில் படிக்கும் உயர்ந்த சாதிப் பெண் செண்பகத்தோடு பேசியதற்காக, பூலிங்கத்தை நையப்புடைக்கிறார்கள் பெண்ணைச் சார்ந்தவர்கள். அதனால் அவமானமும் கோபமும் அடையும் அவன் செண்பகம் வீட்டு வைக்கோலுக்கு தீ வைக்கிறான். பிறகு பயந்துபோய் ஊரைவிட்டு ஓடுகிறான். தெரியாத இடத்தில், கையில் காசு இல்லாமல் அவன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை நாவலின் இருநூற்று கொச்சம் பக்கம் பூராவும் விவரிக்கிறார் நாவலாசிரியர். ஆரம்பத்தில் பழக்கடை ஒன்றிலும், சேட்டு ஒருவரிடத்தும் வேலை பார்க்கிறான். பிறகு பாதை மாறி கஞ்சா, சாராயம், கடத்தல் என்று அவன் வாழ்க்கை திசை மாறி பயணிக்கிறது. வீட்டைவிட்டு ஓடிவரும் அனைவருக்கும் இத்தகைய வாழ்க்கையே அமைகிறது என்ற தவறான பிம்பத்தை நாவலாசிரியர் ஏற்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கதையில் இறுதியில் பரமு என்ற சிறுவன் அவனுடன் வந்து இணைவது இதை உறுதிப்படுத்துகிறது.

அவனுக்கும் செண்பகத்துக்கும் தொடர்பு இருப்பதாக ஊரில் செய்தி பரவி, செண்பகத்திற்கு வரன் கிடைக்காமல் திருமணம் நடக்காமல் போகும் நிலையில், பம்பாயில் இருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, பூலிங்கம் இருக்கும் இடத்திற்கே வந்து சேர்கிறாள். அவளது கணவன் ஆண்மையற்றவனாக இருக்கிறான். அது செண்பகத்தைப் பெரிதும் பாதிக்கிறது. பூலிங்கம் அவள் நிலை கண்டு இரக்கப்படுகிறான். பிறகு இருவரும் சேர்ந்து ஓடிப்போகிறார்கள். நாவலின் இந்தப் பின்பகுதி நம் தமிழ் சினிமாவின் செயற்கைத் தனத்தை ஒத்திருக்கிறது. பூலிங்கம், செண்பகம் இருவரின் வாழ்க்கையிலும்  எதிர்பாராமல், தவறாக நடந்துவிட்ட ஒரு சம்பவத்தால், சமூகத்தின் புறக்காரணிகள் அவர்களின் வாழ்க்கையை எப்படி பாதித்திருக்கின்றன என்பதை ஆசரியர் சொல்ல விரும்பியிருந்தால் நாவல் தற்போதிருக்கும் வடித்தைப் பெற்றிருக்காது. இன்னும் சிறப்பான வடிவம் பெற்றிருக்கும் என்று சொல்லலாம்.

ஆரம்பப் பக்கங்களில் நாவல் சுவாரஸ்மாகவே செல்கிறது. நாவலின் கதைக்களமும், நாஞ்சில் நாடனின் கதை சொல்லும் திறனும் நம்மை ஈர்க்கவே செய்கிறது. நாமும் நாவலினூடான பயணத்தில் ஒன்றி பயணம் செய்கிறோம். ஆரம்ப கட்டத்தில் வரும் இரயில் நிலையமும், பழமண்டி வியாபாரமும் நம் மனதில் பெரும் கற்பனையைத் தோற்றுவிக்கிறது. ஆனால் போகப்போக நாவலின் வீரியம் குறைந்து நாவல் நீர்த்துப்போகிறது. நாவல் இட்டுச்செல்லும் திசையில் ஏதாவது நிகழும் என்று எதிர்பார்த்துச் செல்கிறோம். ஆனால் அலுப்பும் சலிப்புமே மிஞ்சுகிறது. பூலிங்கத்தைத் தவிர எந்தக் கதாபாத்திரமும் அழுத்தமாக சித்தரிக்கப்படவில்லை. பூலிங்கத்தின் முன்னர் விரியும் வாழக்கைக்கும் அவனுக்குமான மனப் போராட்டத்தை ஆசிரியர் நுட்பமாக சித்திரித்திருந்தால் நாவல் வலுப்பெற்றிருக்கும். மாறாக அவனது வாழ்க்கை அனுபவத்தை எட்டுத்திக்கும் விவரிக்கவேண்டும் என்பதிலேயே ஆசிரியரின் முனைப்பு வெளிப்படுகிறது. ஒரே ஒரு திக்கின் தரிசனத்தை முழுமையாகக் காட்டியிருந்தாலும் நாவல் சிறப்பானதாக இருந்திருக்கும். பூலிங்கம் நாவலினூடாக பெறும் அனுபவங்கள் நம் அனுபவமாக மாறவில்லை. அவை நமக்கு அன்னியமாக இருப்பதோடல்லாமல் அவற்றோடு ஒன்றி அதிலிருந்து நாம் பெறும் தரிசனம் நம்மை எந்த வகையிலும் பாதிப்பதாக இல்லை.

நாவல் காட்டும் காலம், பல காலம் உழன்ற அனுபவத்தை நமக்குத் தரவில்லை. தென்னிந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலிருந்து வடக்கே பம்பாய் வரை நீண்டு செல்கிறது நாவல். ஆனால் அந்த பல்வேறு கதைக்களன்களின் தாக்கத்தையும், காலத்தின் கோலத்தையும் சரியானபடி நம்முள் பதியுமாறு நாவல் புனையப்படவில்லை. கதை சொல்லும் உத்தியிலும் எந்தப் புதுமையையும் நாஞ்சில் நாடன் கையாளவில்லை. போகிற போக்கில் நாவலின் கதையைச் சொல்லிச் செல்கிறார். எனவே நாவலின் முப்பரிமாண வடிவம் சிதைந்துபோய் பல இடங்களில் தட்டையான ஒரு உணர்வை நாவல் நமக்குத் தருகிறது. நாவலின் எல்லாவிடத்தும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான அனுபவங்களே கதையின் நாயகனுக்குக் கிடைக்கிறது. எனவே நாவலின் பக்கங்களைக் குறைத்திருந்தால் நாவல் செறிவாக இருந்திருக்கும் என்று எண்ண இடமிருக்கிறது. நாவல் ஒற்றை சரடு ஒன்றை பற்றிக்கொண்டு அதனூடே பயணிக்கிறது. எனவே வாசக இடைவெளிக்கோ ஊகங்களுக்கோ இடமில்லாதிருக்கிறது தன் அனுபவங்களின் ஊடாக நாயகன் பெறும் அனுபவங்களின் சாரம் ஆசிரியரின் வாய்மொழியான கருத்துக்களாக அந்நியமாக பல இடங்களில் ஒலிக்கிறது. புனைவின் திறம் போதுமான அளவில் இல்லை என்பதையே இது சுட்டுகிறது.  நாயகனின் அனுபவங்களிலிருந்து அவற்றை வாசகன் தனது ஊகத்துக்கு எடுத்துச் செல்லும் சாத்தியக்கூற்றை இவைகள் தடுத்துவிடுகின்றன. எனவே மேலான தரிசனத்தை தரும் சாத்தியத்தை இப்படைப்பு இழந்து நிற்கிறது.

நாஞ்சில் நாடனின் மிதவை நம்முள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட இந்நாவல் ஏற்படுத்தும் தாக்கம் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இப்படைப்பு தரும் வாசக அனுபவம் இன்றைய வாசகனுடைய பசிக்கு போதுமானதாக இராது என்பதும் வெளிப்படை. இது நாஞ்சில் நாடனின் ஆறாவது நாவல் என்பதால் அவர் முழு வீச்சுடன் செயல்படவில்லை என்று நாம் நினைக்குமளவிலேயே இப்படைப்பு உள்ளது. தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும் போன்ற சிறந்த படைப்புகளின் மூலம் நம்மை ஆக்ரமித்த நாஞ்சில் நாடனை இந்நாவலில் நாம் பார்க்கமுடியவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...