June 24, 2013

காசியபனின் 'அசடு' –வெங்கட் சாமிநாதன்

காசியபன், ஓர் அபூர்வ மனிதர். அபூர்வம் என்று நான் சொல்வதை நான் இப்போது எழுத வந்த சந்தர்ப்பத்தில்தான். சாதாரணமாக அவர் நம் எல்லோரையும் போலத்தான். ஆங்கிலம் தெரியும், எல்லாப் படித்தவர்களைப் போல. சமஸ்கிருதத்தில் நல்ல பாண்டித்யம். மலையாள தேசத்தில் படித்தாலும், தமிழை இரண்டாம் மொழியாக எடுத்துப் படித்தவர். இதில் எல்லாம் என்ன சிறப்பாக அபூர்வ என்று எடுத்துச் சொல்ல இருக்கிறது? ஓ அப்படியா! என்று கேட்டுவிட்டு நகரலாம். பரிச்சயம் ஏற்பட்டால் பவ்யத்தோடும் மரியாதையோடும் பழக அவரது ஆளுமை நம்மை நிர்பந்திக்கும். ஆனால் அவர் தமிழ் எழுத்துலகில் அடி எடுத்து வைத்ததுதான் அபூர்வ மனிதராக அவரைக் காட்டுகிறது. தனது 53ஆவது வயதில் எழுதத் தொடங்கியவரை, சரஸ்வதியின் அருட் கடாட்சம் பெற்றவராகச் சொல்ல முடியாது. அவரது படிப்புத் தாகமும் பாண்டித்யமும் தான் சரஸ்வதியின் கடாட்சம்.

தமிழ் எழுத்துலகம் பந்தாக்கள் நிரம்பியது. தனது பதிமூன்றாவது வயதில் எழுதிய அலங்கார அலங்கோல வசனத்தையே தனது எண்பத்து நாலாவது வயதிலும் எழுதும் முத்தமிழ் வித்தகர்கள் கோலோச்சும் உலகம் இது. அந்தக் கோலுக்கு அதிகார பலம் உண்டு. அதிலிருந்து தொடங்கி, கோமாளிகள் கட்டளைக்கு வசனம் எழுதிப் பல லட்சங்கள் பெற்ற பெருமையைக் கொண்டாடும் சுய கௌரவம் அற்றவர்கள் பவனி வரும் உலகம் இது. இடையில் குழுமியிருக்கும் சின்னதுகள் சிறுசுகள் அடிக்கும் கொட்டம் சகித்துக்கொள்ள முடியாது. சமீபத்தில் உலக நாயகனுக்கு ஒரு கவியரங்கம் நடந்தது. கவிகள் நாயகனின் புகழ் பாட, நாயகன் அவற்றை ஏற்றுத் தன் பங்குக்கு கவிஞர்களின் புகழ் பாட, ஒரே ரகளை. எல்லோருமே அப்துல் ரஹ்மானின், வாலியின் குளோன்களாகவே உலாவத் தொடங்கியுள்ளது எப்படி?

எதற்காகச் சொன்னேன் என்றால், பந்தா இல்லாத தமிழ் எழுத்தாளரை மிக அபூர்வமாகத்தான் காணமுடியும் இங்கு. நம்மவர்ளுக்கு அலட்டல் அதிகம். என்னென்னமோ இஸம் எல்லாம் இருப்பதாகச் சொல்வார்கள். என்னென்னமோ லத்தீன் அமெரிக்க பேர்களையெல்லாம் உதிர்ப்பார்கள். ஒரு காலத்தில் ஃப்ரெஞ்சுப் பெயர்கள் ஃபாஷனில் இருந்தது. இப்போது அந்த இஸமெல்லாம் போன இடம் தெரியவில்லை. நாமாக ஏன் நாம் இருக்க முடிவதில்லை. நம்மை அறியாமலேயே, நாம் தம்பட்டம் அடிக்காமலேயே ஏன் நம் எழுத்துகள் ஏன் நம்மையும் மற்றவர்களையும் ஆச்சரியப்படுத்திவிடக் கூடாது?

காசியபன் அப்படியெல்லாம் ஏதும் தம்மைச் சுற்றி ஒளிவட்டம் சுழன்று ஒளிவீசுவதாக எண்ணிக்கொள்ளவில்லை. அப்படிச் சொல்லிக்கொள்ளும் ஆளுமை அல்ல அவரது. ஏதோ சகவாச தோஷத்தாலும், சமஸ்கிருத, தமிழ் இலக்கிய உலகில் தம் சிந்தை உலவியதாலும், சரி நாமும் நமக்குத் தெரிந்த, சுவாரஸ்யமான மனிதர்களையும் சம்பவங்களையும் சொல்லலாமே என்று எழுதத் தொடங்கியவர். அதுவும் எப்போது? தன் 53ஆவது வயதில். புகழ் பற்றிய எண்ணங்கள் இல்லை. சம்பாத்தியம் என்பது வெகு சில தமிழ் எழுத்தாளர்கள் ஆசையாகத்தான் இருக்க முடியும். தான் ஏதோ எழுதி விட்டதான கோதாக்களும் இல்லை. தனது எண்பத்து நாலாவதோ, ஐந்தாவதோ வயதில் அவர் மறைந்த போது அவர் எழுதியது ஒன்றும் அதிகம் இல்லை. ஒரு சிறு கவிதைத் தொகுப்பும் நூறு நூற்றைம்பது பக்கங்களுக்கும் அடங்கும் நான்கு சிறிய நாவல்கள். இப்படித்தான் இருந்தது அவர் படைப்பு முழுதும்.

ஆனால் அவர் வாழ்ந்த, இயங்கிய எழுத்தாளர் கூட்டம், திருவனந்தபுரத்தில் மிகச் சுறுசுறுப்பாக இயங்கிய கூட்டம். அந்தச் சுறுசுறுப்பு எத்தகையது என்பதை நகுலனின் எழுத்துகளிலிருந்தும், நீல.பத்மனாபனின் தேரோடும் வீதி புத்தகத்திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அந்தக் காற்று காசியபனின் மீது கொஞ்சம் ஆரம்ப காலத்தில் வீசியிருக்கக்கூடும். நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் அந்தக் கூட்டத்தில் யார் சொல்லி யார் என்ன செய்திருப்பார்கள் என்றும் ஒன்றும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. அப்படி சில உதிரிகள் காற்றில் பறந்து வந்தது எனக்குத் தெரியும். ஆனால் காசியபன் பெயரில் பிரசுரமாகியுள்ளவற்றில் எதுவும் அத்தகையது இல்லை.

அசடு நாவல், தாயில்லாப் பிள்ளை கணேசனைப் பற்றியது. கணேசன் தான் அந்த அசடு. ஆனால் அசடு என்று முழுவதுமாகச் சொல்லிவிட முடியாது. தாயை இழந்த குழந்தையைப் பாட்டி எடுத்து வளர்க்கிறாள். செல்லம் அதிகம். அவன் என்ன விஷமம் செய்தாலும் வசவும் அடியும் படுவது, கூட இருக்கும் பிள்ளைகள். தாயில்லாப் பிள்ளையை ஒன்றும் சொல்லிவிடக் கூடாது. பாட்டி மாத்திரம் இல்லை. எல்லோருமே அப்படித்தான் எண்ணுகிறார்கள். படிப்பு எங்கிருந்து வரும்? படிக்கத் தோணுமா என்ன? 'படிப்பு வந்தாத்தானே?' என்று கணேசனே சொல்லும்படி தன்னைப் பற்றி ஒரு அபிப்ராயம் அவனுக்கு இருக்குமானால் அவனை அசடு என்று சொல்ல முடியுமா? இப்படித் தான் அவனது பல குணாதியசங்களும்.

பாட்டி இறந்து விடுகிறாள். கணேசனை யார் காப்பாற்றுவது என்று சர்ச்சை நடக்கிறது. கடைசியில் அவனது அப்பா கிட்டனிடமே விட்டுவிடுவது என்று தீர்மானமாகிறது. ஊரில் எப்போதும் மீன்பிடித்துக்கொண்டே காட்சி தரும் சம்முகம், கணேசனுக்கு புத்திமதி சொல்கிறான்: "போகிற இடத்தில் எல்லோருடனும் இணைஞ்சு இருக்கணும், தெரியுதா?" என்று. இதற்கிடையில் கிட்டன் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளோடு இருக்கும் ஒரு முரட்டு ஆம்பிளை. கணேசனுக்கு அங்கு யாரிடமும் ஒட்டுதல் இல்லை. சித்தி என்றுமே மூத்தாள் பிள்ளைகளைக் கொடுமைப்படுத்துகிறவளாகத்தானே ஒரு சித்தரிப்பு உலகத்தின் கண்களில். அப்படி இல்லை அவள். இருப்பினும், கோள் சொல்லும் ஒரு அத்தைக்கும் கணேசனுக்கும் அந்தச் சித்தி அப்படித்தான். ஊர் முழுதும் சித்தியைப் பற்றிய ஒரு சித்திரம் பரவுவதற்கு அந்த அத்தை காரணமாகிறாள். கணேசனுக்கு எந்த ஒரு இடத்திலும் அதிக நாள் நிலை கொள்ளாது.

அவனுக்கும் ஏதோ சம்பாத்தியம் வேணுமே, ஏதாகிலும் தொழில் தெரியணுமே, எங்கெங்கோ கடைகளில் சொல்லி உதவியாளாக இருக்கச் சொன்னால், வேலைக்கு வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் கடை வாடிக்கைக்காரர்களுக்கும் உபத்திரவமாக இருந்தால் யார் வைத்துக்கொள்வார்கள்? எங்கும் நிலையாக இருக்க முடிவதில்லை. கோபம் நிறைய பகவான் அருளியிருக்கிறார். மாமாவும் மாணிக்கச் சித்தப்பாவும் இன்னும் ஆண்டி அய்யரும் சொன்னது போல பக்தி அதிகம். தேவதா விஸ்வாசம். இது எப்படி நேர்கிறது? ஒரு நேர்மைக் குணம். ஒரு ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு போனால், அது எப்போதாவது இரண்டு ரூபாயாக மணிஆர்டரில் திரும்ப வரும்.

வருஷங்கள் கழியும். எங்கெங்கோ காசி அது இது என்று வடக்கேயெல்லாம் தீர்த்த யாத்திரை நடக்கிறது. கிழக்குக் கோபுர வாசலில் சிவனே என்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவனிடம் இரக்கம் ஏற்படுகிறது ஆண்டி அய்யருக்கு. தன் ஹோட்டலில் வேலைக்கு வைத்துக்கொள்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் "நீ சும்மா இருந்தால் போறும். ஓண்ணும் வேலை செய்ய வேண்டாம்" என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு அவனிடம் அபிமானம். ஆனால் கணேசனா கேட்பான்? ஓடி விடுவான். பின் திரும்ப ஆண்டி அய்யரிடம் வருவான். எத்தனையோ வருஷம் கழித்துத் தன்னைப் பார்க்க வந்த தன் அப்பாவைப் பார்த்து, "இங்கே எங்கே வந்தீர் ஓய்?" என்று கேட்கும் பிள்ளை அவன்.

தன் தம்பியிடம் பாசம். அவனுக்கு கல்யாணம் செய்து வைப்பது என்று மாணிக்கச் சித்தப்பா தீர்மானிக்கிறார். கணேசனிடம் நிறைந்த அபிமானம் கொண்ட ஆண்டி அய்யரே, "அவனுக்கு தன்னைக் காப்பாத்திக்கவே தெரியலை. இன்னொரு ஜீவனையும் அவனோடு சேர்த்து கஷ்டப்படுத்தவா?" என்று அபிப்ராயப்படுகிறார். கணேசனுக்கும் கொஞ்சம் ஆசை இருப்பது போலத்தான் தோன்றுகிறது. கடைசியில் அவனுக்கு மாணிக்கச் சித்தப்பாவின் தூரத்து உறவுப் பெண்ணைக் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பின்னால்தான் தெரிகிறது, அந்தப் பெண்ணும் சரி, அவளுடைய அம்மாவும் சரி ஒரு மாதிரி என்று. கணேசனுக்கு இதைப் பொறுத்துக்கொள்ளத் தெரிகிறது.

ஏதோ பலகாரம் செய்து தெருத் தெருவாகச் சுத்தி விற்று மாலையில் வீடு திரும்பும் பிழைப்பு. குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு நாள் அந்தப் பெண் வேறு யாரோடோ ஓடிப் போய்விடுகிறாள், குழந்தைகளோடு. கணேசனுக்கு இது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எப்போதாவது தம்பியைப் பார்க்க வருவான். குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருப்பான். அவர்களுக்கு பூந்தானை நம்பூதிரியின் 'ஞானப் பானை" பாடல் புத்தகத்திலிருந்து குழந்தைகளோடு சேர்ந்து பக்திப் பரவசத்தோடு பாடுவான். "நான் போன ஜன்மத்திலே நிறைய பாவம் செய்திருக்கிறேன். அதனால் தான் கஷ்டப்படுகிறேன்" என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வான். பிறகு ஒரு நாள் "எத்தனை நாள் தான் இங்கே இருக்கிறது?" என்று சொல்லிக்கொண்டு போய்விடுவான். எங்கெங்கோ பார்த்ததாகச் செய்திகள் வரும். ஒரு நாள் "உனக்குத் தெரியாதா? அவன் போய்ச் சேர்ந்துட்டான்" என்று தகவல் வருகிறது.

கணேசனும் சரி, அவன் தம்பியும் சரி, கிட்டன், பாட்டி, மாணிக்கச் சித்தப்பா, ஆண்டி அய்யர் இப்படி எத்தனையோ பேரை சந்திக்கிறோம். யாரும் விசித்திரமானவர்கள் இல்லை. நாம் அன்றாடம் தோளுரசிச் செல்லக் காண்பவர்கள்தான். இப்படி ஒரு உலகை, மனிதர்களைக் காசியபனால் எழுத்தில் உருவாக்கிக் காட்டிவிட முடிகிறது. எண்பது சொச்சம் வருடங்கள் வாழ்ந்தவர், பல மொழிகளில் பரிச்சயமும் பாண்டித்யமும் உள்ளவர், தான் பார்த்த அனுபவித்த உலகை நம் முன் வைக்கிறார். திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தன் பழங்காலத்தைச் சொல்லும் தாத்தாக்களின் வாய்மொழி மரபு, அல்லது சாயங்காலம் கூடத்தில் கால்நீட்டி பேரப்பிள்ளைகள் சூழக் கதை சொல்லும் பாட்டிகளின் வாய்மொழி மரபு தான் இங்கு காசியபனின் எழுத்தில் தொடர்ந்துள்ளது. சுவாரஸ்யமாக படிக்க முடிகிறது. நல்ல எழுத்து.

கடைசி வரையில் இலக்கிய புகழ் வேண்டும், பரிசுகள் வேண்டும், எப்படியாவது, எப்படிக் கிடைத்தாலும் என்ற டிபிகல் தமிழ் எழுத்தாள பிராண்ட் ஆசைகள் அவருக்கு இருந்ததில்லை. 1978இல் முதலில் பிரசுரமான இந்த நாவலை விருட்சம் இரண்டாம் பதிப்பாக 1994இல் வெளியிட்டது. இப்போது 2007-08இல் மறு பதிப்பு கொண்டு வர அழகிய சிங்கருக்கு ஆசை. இது ஏதோ அமர காவியம் என்றோ, அல்லது சுஜாதா, பாலகுமாரன் போல் மார்க்கெட்டில் இதற்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கிறது என்றோ இல்லை. காசியபனிடம் அழகிய சிங்கருக்கு ஒரு ஒட்டுதல். அவர் உயிருடன் இல்லை இப்போது. திரும்ப இதை வெளியிட வேண்டும் என்று அழகிய சிங்கருக்கு ஏதோ காசியபனுக்கு கடமைப்பட்டுள்ளது போல் ஒரு எண்ணம். இத்தகைய ஒரு பந்தம் அழகியசிங்கரைப் பற்றியும் சொல்கிறது. காசியபனைப் பற்றியும் சொல்கிறது. பந்தா இல்லாத படாடோபம் இல்லாத ஒரு எழுத்தை, முப்பது வருடங்களுக்குப் பின்னும் சுவாரஸ்யத்தோடு படிக்க முடிகிறது. அதில் உலவும் மனிதர்களோடு பரிச்சயம் கொள்ள முடிகிறது. அதுவே காசியபனின் எழுத்துக்கு ஒரு வெற்றி. அபூர்வ மனிதர்தான்.

நன்றி: www.heritagewiki.org
Related Posts Plugin for WordPress, Blogger...