June 27, 2013

கள்ளி –தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமனின் கள்ளி என்ற கதை அழகான ஒரு கதை. அழகானது என்று சொல்வதற்குக் காரணம் அதில் நாம் கவனிக்கவேண்டிய பல விசயங்கள் இருக்கின்றன என்பதால்தான். தி.ஜாவின் பெரும்பான்மையான கதைகளைப் போலவே இதுவும் மனித மனதின் விசித்திரத்தைப் பற்றி சொல்லும் கதைதான்.

கிருஷ்ணன் கிராமத்திலிருந்து பட்டணத்திற்கு வந்து வாழ்க்கையைத் தொடங்கியவர். பட்டணம் பிடிக்கிறதோ இல்லையோ, எல்லோரையும் போலவே வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறதே? வீட்டிற்கு திரும்பிய அவரை கசகசவென்ற வியர்வையும் புழுக்கமும் எரிச்சலூட்டுகிறது. வீடு திரும்பியதும் கடன் கேட்டுக் காத்திருக்கும் சுப்பண்ணா வேறு அவர் கோபத்தை அதிகப்படுத்துகிறார். எவ்வளவு சொல்லியும் இந்த மனிதர் விடமாட்டேன் என்கிறாரே? என்ற ஆத்திரம் அவருக்கு. பணம் இல்லை என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லி அனுப்பி விடுகிறார். அப்போது, சாப்பிடுகிறீர்களா என்று கேட்ட மனைவின் மீதும் எரிந்து விழுகிறார்.

“இவன் உயிரை வாங்காதே. வேணுங்கறபோது வந்து சாப்பிட்டுவன்னு சொல்லிட்டுப் போனார்... தொண தொணன்னு யாரு என் சொன்னா என்ன ‘பீடை’  என்று பின் பகுதியை ஆத்மகதமாக முணுமுணுத்துக்கொண்டு, மாடியேறி, சுவரில் சாத்தியிருந்த சாய்வு நாற்காலியை எடுத்து, மொட்டை மாடியில் தடார் என்று பிரித்துச் சாய்ந்து கொண்டார்” என்பதாக அவர் கோபம் வெளிப்படும் விதத்தை நாம் காண்கிறோம். அவரிடம் பணம் இருக்கிறது. இருந்தும் ஏன் கொடுக்கவேண்டும் என நினைக்கிறார். அவரிடம் வாங்கியவர்கள் உரிய நேரத்தில் திருப்பித் தரவில்லை என்ற கோபம் வேறு சேர்ந்துகொள்கிறது.

சுப்பண்ணாவிடம் அவருக்குப் பேசவே விருப்பமில்லை என்பதை கிருஷ்ணனி்ன் உடல் மொழி மூலம் இப்படிச் சொல்கிறார் தி.ஜா: ‘சரி... எங்கிட்ட இருந்தா கொடுத்துப்பிடுவேன்’ என்று கிருஷ்ணன் சொல்லும்போது, அவர் கால் விரல்கள் வீட்டின் உட்பக்கத்தை நோக்கித் திரும்பி நின்றன. எதிராளியிடம் பேசுவதில் ஒருவருக்கு விருப்பமிருக்கிறதா இல்லையா என்பதை உடல் மொழியாளர்கள், அவர்களின் உடல் அசைவை வைத்துத் தீர்மானிக்கிறார்கள். அதை தி.ஜா. கதையில் நுட்பமாகக் கையாண்டிருக்கிறார்.

தான் மாறிவிட்டதாகப் பலர் தன்னைப் பற்றி சொல்லுவனவற்றை நினைத்துப் பார்க்கிறார். தன் மீதே அவருக்குக் கோபம் வருகிறது. அப்போது திடீரென மழை பெய்ய ஆரம்பிக்கிறது. மழை பற்றிய விரிவான வர்ணனை கதையில் வருகிறது.

கிருஷ்ணன் பார்த்தார். தென்னந்தோப்பு குளித்துக்கொண்டிருந்தது. குடிசைகள் குளித்தன. மின்னலும் குளித்தது. கூடல் வாயில் நீர் சுமந்து வெளியே கொட்டிற்று. ஜன்னல் சார்பில் நீர் தோரணம் கட்டித் தாரையாய் விழுந்தது. பட்டணம் முழுவதும் குளித்தது. இப்படி நீளும் வர்ணனை நம்மை வசீகரிக்கிறது. மழையில் நனைந்தது போன்ற உணர்வை இவ்விவரணைகள் நமக்குக் கொடுக்கின்றன. மழையும், இடியும், மின்னலும் எப்போதுமே நம்மை கனவுலகத்தில் சஞ்சரிப்பதான உணர்வையும் அலாதியான மகிழ்வையும் கொடுப்பவை. எனவே அதைப் பற்றிய தி.ஜாவின் மொழியின் இலாவகமும் வீச்சும் வாசிப்பில் நாமே மழையில் குளித்தது போன்ற புத்துணர்ச்சியைத் தருகின்றன.

கிருஷணன் மழையின் ஜாலத்தை ரசித்துக்கொண்டிருக்கும் போது அவர் மகள் மேலே வருகிறாள். தான் வளர்த்து வரும் கள்ளியை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அதற்கு அதிக தண்ணீர் ஆகாது என்றும் சொல்கிறாள். அந்த வினாடியில் அவர் மனதில் ஏதோ சிந்தனை மாற்றம் வருகிறது. கோபமும், புழுக்கமும் கொண்ட அவரது உடலும் மனமும் இந்த மழையால் குளிர்ந்தது போல் தோன்றுகிறது.

எது அழகில்லை? மழை, வெயில், மின்னல், எருமை, மரவட்டை எல்லாம் அழகுதான். பரம்பரையாகக் கால் வயிற்றுக்கில்லாமல் எலும்பும் தோலும் துந்தமுமாக வளர்ந்த பிச்சைக்காரனும் அழகுதான் என்று அவருக்கு எல்லாமே அழகாகத் தெரிகிறது. சட்டையை மாட்டிக்கொண்டு, குடை பிடித்துக் கொண்டு சுப்பண்ணா வீட்டிற்குப் போகிறார். அவர் கேட்ட கடனைக் கொடுக்கிறார். கிருஷ்ணன் வீட்டில் நுழைந்ததற்கும் கடைசியில் கடன் கொடுத்ததற்கும் இடையே என்ன நடந்தது? அவர் மன மாற்றம் எதனால் நிகழ்ந்தது? அவர் மனதிலும் உடலிலும் இருந்த புழுக்கமே அவரைக் கோபமும் எரிச்சலும் அடையச் செய்தன. மழை அவர் உடல் புழுக்கத்தைக் குறைத்தது. அவர் உள்ளத்தைக் குளிர்வித்தது எது? கள்ளிச் செடிக்குத் தண்ணீர் அதிகம் விட்டால் செடி வீணாகிவிடும் என்று மகள் சொல்கிறாள். அதைப் போலத்தான் மனிதனும், பணம் அவனிடம் அதிகமாகச் சேர்ந்தால் அவனும் பிறருக்குப் பயன்படாமல் போய்விடுகிறான் என்று அவர் அந்த நொடியில் உணர்கிறார். எனவே அவர் மனமும் குளிர்ந்துவிடுகிறது. அவரது எரிச்சலும் கோபமும் தணிந்து, இந்த உலகத்தில் எல்லாமே அழகாகத் தெரிய ஆரம்பிக்கிறது.

அழகான கதை என்றால் ரசிக்க வேண்டும்தானே? இந்த கதையில் நாம் ரசிக்க இப்படி பல விசயங்கள் இருக்கின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...